புதன், 4 ஜனவரி, 2017

புட்டாமா. face powder

தமிழ் நாட்டில் பேசப்படும் தமிழ் ஒரு கலவைத் தமிழ். பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்தித் தம் கருத்தை வெளிப்படுத்துகின்றனர் தமிழ்நாட்டு மக்கள். சென்டிமன்ட்ஸ், எஞ்சாய்மென்ட் முதலிய ஆங்கிலச் சொற்கள் தாராளமாய்ப் பயன்பாடு காண்கின்றன.

பொட்டலம் என்ற சொல், தமிழ்நாட்டின் சிற்றுண்டியகத்தில் திகைப்பை ஏற்படுத்தியது.  தமிழ் வித்துவானுக்கு விளங்கிப் புண்ணியமில்லை.
பொட்டலம் வழக்கில் இல்லாத சொல். தமிழ்நாட்டுக்குப் போகும் வெளிநாட்டுத் தமிழன், அங்கு என்னென்ன தமிழ்ச்சொற்கள் வழக்கில் இல்லை என்று முதலில் தெரிந்துகொண்டு அப்புறம் தமிழ்ப் பேசவேண்டும். பொட்டலம் என்னாமல் பார்சல் என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தினாலே இட்டிலி மடிப்பவன் புரிந்துகொள்வான்.

முகத்துக்குப் பவுடர் உதட்டுக்குச் சாயம்
மூக்குக்கண்ணடி மாட்டி,
முடிசூடாத மகாராணிபோல் நடக்கிறாள் சீமாட்டி
ப்யூட்டி நடக்கிறாள் சீமாட்டி;
சீமாட்டி கையிலே ராட்டினம் ஆடும் சிங்காரப் பையி ப்ளாஸ்டிக்
(.....பையைத் ) திறந்து பார்த்தால்
பணங்காசில்லே சீப்புக் கண்ணாடி லிப்ஸிடிக்....
ஸ்னோ கிரீம் ஐடெக்ஸ்.....

என்று திரைப்பாடல் வருவதால், முகமாவுக்கு பவுடர் என்றுதான்
தமிழ் நாட்டில் சொல்கிறார்கள் என்று தெரிகிறது.

மாவு என்பது தோசை மாவு, ஆட்டா மாவு என்பன போலும் பொருள்களைக் குறிக்க வழங்குவதால், இதை முகப்பூச்சுக்கு வழங்குவதில் மனத்தடை இருக்கிறது போலும். ஆனால் ஆங்கிலத்தில் பேஸ் பவுடர், கறி பவுடர் என்று உணவு பிற‌ என்ற பேதமின்றி வழங்குவதில் தடையேதும் இல்லை. இது
வாங்கிப் பேசிய மொழியில் இல்லாத வரையறவு ஆகும்.

நிற்க 40 50 களில்  சிங்கப்பூர் மலேசியாவில் வாழ்ந்த தமிழர் முகப்பூச்சு மாவுக்கு புட்டாமா என்று சொன்னார்கள் என்று அறிகிறோம்.

முன்பு முகப்பூச்சுகள் கட்டியாகவே சீனா முதலிய நாடுகளிலிருந்து
வந்தன. இப்போது கட்டிப் பூச்சுகள் அருகிவிட்டன. இவற்றைத் தேய்த்து முகத்தில் பூசிக் கொள்ளவேண்டும். இக்கட்டிகள் பிட்டால் (பிட்டு எடுத்தால் ) மாவாகிப் பூசத் தயாராகிவிடும்.

பிட்டால் மாவு > புட்டால் மாவு > புட்டாமா.

புட்டாமா இப்போது குறைவு.





செவ்வாய், 3 ஜனவரி, 2017

முயற்சி வெல்லும்

புத்தாண்டே வந்திடுக புன்மை நீங்கி
புத்துலகம் கண்டிடுமோர் ஊக்கம் கொண்டே
இத்தரையோர் உய்திடத்தொண் டாற்றுங் காலை
எத்துயரும் பனிஎல்லோன் முன்போல் நீங்கும்
அத்தனையும் வெற்றிபெற ஆன்றோர் கண்ட‌
அணியாகும் பண்புகளே ஓங்கி நிற்க!
முத்தமிழர் பெற்றுநலம் மூவா ஞால
முன்னணியோர் தம்முடனே நிற்பார் முன்னே.


அலைவந்து கரைதனையே அணைத்து மீளும்
அந்நேரம் அறிந்திடவே கணித்துக் கூறான்;
குலைவின்றிப் புத்தழகில் ஆண்டு கூடும்
கோலமுறு நாளுரைக்கும் திறத்தைக் கண்டோம்!
நிலக்கோளின் நல்லமைப்புக் கார ணத்தால்
நேரமது நாடுதொறும் வேறு வேறே!
அலைக்கழிக்கும் துன்பமின்பம் வேறு வேறே
ஆனாலும் முயற்சிவென்று தேனாம் காணீர்.

முயற்சி  வெல்லும்

திங்கள், 2 ஜனவரி, 2017

MAHAMAYA




Wednesday, July 20, 2016


மகாமாயா

இன்று ஒரு வகைத் திரிபுபற்றி  உரையாடி மகிழலாம். சொல்லிறுதியில் ளகர ஒற்றில் முடியும் ஒருசொல், யகர ஒற்றாய்ச் சில வேளைகளில் முடியும் என்பதே அது.  இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு:

மாள் > மாய்

என்பதாகும்.

இச்சொல் வடிவங்கள் இங்ஙனம் மட்டுமின்றி  மடி, மரி என்றும் வருதலை உணரலாம்.  மாள்தல், மாய்தல், மடிதல், மரித்தல் என்று ~தல் தொழிற்பெயர் விகுதி பெற்றும் வரும்.

மடிதல், மரித்தல் என்று மகரக் குறிலில் தொடங்கிய சொல் மாகாரமாக முதனிலை நீண்டு திரிந்தும் சொல்லாவது கவனிக்க வேண்டியதொன்றாகும்.

இவை அனைத்தும் பொருள் மாறாமல் இன்றுகாறும் வழங்கி வந்திருத்தலை அறியும்போது தமிழ்ச் சொற்கள் பிற மொழியின்   சார்பின்றித்  தாமே திரிந்து தமிழ்மொழி உருவாக்கம் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம்.  பொருள் மாறியிருந்தால் நாம் ஒரு வேளை கண்டுகொள்ள இயலாது போயிருத்தல் கூடும்.

இந்த நாலு சொற்களும் மகரத்திலேயே தொடங்கின..

இவற்றில் சில பிற மொழிகளுக்குள் தாவிச் சென்றன,

கேட்க இனிமையாகவும் சொல்ல எளிமையாகவும் விளக்கமாகப் பொருள்படுத்தும் திறமும் உடைய சொற்கள் பிறமொழிகளில் சென்று
வழங்குவது நாம் கண்டு களிக்கத் தக்கதே என்போம். மிக்கப் பழங்காலத்திலேயே நம் பேச்சும் சொற்களும் தெளிவு பெற்றிருந்தமையை இத்தகைய தாவல்கள்  நமக்கு அறிவிக்கின்றன.

உடல் மாய்தலே மனிதன் தொடக்கத்தில் உணர்ந்த மாய்தல். இதன் பின் வெகுகாலம் கழித்தே  அவன்  ஒருவற்கு  அறிவு  மாய்ந்துபோய் மனிதன் மடைமை அடைகிறான்  என்பதை  உணர்ந்துகொண்டிருத்தல் தெளிவாகி றது. மொழிநூலில் அணியியல் வழக்குகள் காலத்தால் பிற்பட்டவை. பொருள் உண்டாகி உறுதியடைந்த பின்னரே அதனை அழகுபடுத்தும் வகைகளும் கலைகளும் தோன்றுதல் கூடும். குயில் தோன்றிய பின் தான் அது பறக்கவும் பின் பாடவும் அறிந்துகொள்ளும்.

மாய் என்பதிலிருந்து மாயம் மாயை மாயா முதலிய சொற்கள் பிற்காலத்தில் உருப்பெற்றன.  அறிவு மாய்தல் என்னும் விரிவு பின்பு  உணரப்பட்டது.   மாயம் செய்வோன் மாயன், மாயக்காரன் என்றும் குறிக்கப்பெறுவானா யினன். மாய் என்ற சொல் தமிழில் தோன்றி ப்  பல ஆயிரம் ஆண்டுகளின் பின் தான்  மாயா என்ற சமயக் கருத்தும் மாமாயா என்னும்  மகாமாயா ஆகிய  அம்மனின் பெயரும் உருப்பெற்றிருத்தல் கூடும். இவை அணிவகையில் ஏற்பட்டவையாகக் கருதவேண்டும்.-

to edit
Post a Comment