செவ்வாய், 29 மார்ச், 2016

புலவர் பெற்ற அதிகாலைச் செய்தி (புற நானூறு.....).

முடியுடை மூவேந்தர்களில் ஒருவரல்லாத  குறு நில மன்னர்களில் ஒருவன் எவ்வி.  வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் என்னும் புலவர் பாடிய பாடல் இதுவாகும்.  புறப்பொருளில் இது பொதுவியல் துறை. கையறு நிலைத் துறை. அதாவது அவனுக்கு மரணமாகிய துன்பம் நேர்ந்தது எனக் கேட்டு அது பற்றிப் பாடிய துயரப் பாடல்.

எவ்வி பாணர்கள் கூட்டத்துக்குப் பெரிய நண்பன்.  அவர்களின் தலைவன் என்று கொண்டாடத் தக்க புகழுடன் வாழ்ந்தவன். இரும்பாண் ஒக்கல் தலைவன் என்று பாடல் அவனைப் புகழ்கின்றது.  அவனுடைய படை, வியக்கத் தக்க ஆயுதங்கள் பூண்ட, போரில் பகைவனைத் தண்டிக்கத் தகுதியுடைய படை.
பாடல் பாடிய போது,  அவன் மார்பில் போரில் விழுப்புண்கள் பல ஏற்பட்டு வீழ்ந்தான் என்று அதிகாலையில் புலவர் கேள்விப்படுகிறார். அச் செய்தி அவருக்குச் சொல்லொணாத் துயரை விளைத்தது. "இந்தக் குரலில் எனக்குக் கிடைத்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா...."  என்று அவர் மனம் கவல்கின்றது.

யானை நடக்கும்போது அளவிட்டதுபோல கால்களை வைத்து நடக்கின்றது.  இது பாவடி என்று குறிக்கப்பெறுகிறது. பகு அடி ‍  பகுத்து ப் பகுத்து வைப்பது போலும்  காலடி  பாவடி. அத்தகைய யானைகளைப் பரிசிலர்கட்கு (பாணர்களுக்கும் புலவர் பெருமக்கட்கும்) தருகின்ற சீர் சான்ற வேள் ‍இந்த எவ்வி. அவனை எதிர்த்துப் போரிட்ட அகுதை ஏவிய இரும்பு ஆயுதங்கள் பொருந்திய திகிரி பாய்ந்தது என்று சொல்வ‌து பொய்யாய்ப் போகட்டும் என்கிறது பாடல்.

இத் திகிரி வட்டமான ஓர் ஆயுதம்.  சக்கரம் அல்லது ஆழி எனவும் படும்.
பொன் புனை திகிரி என்றதனால்  அந்த வட்டக்     கருவியுடன்  வேறு
இரும்பு ஆயுதமும் பூட்டப்பெற்று விடப்பட்டது என்று அறிகிறோம்.  தமிழர்கள் போரிட்ட ஆயுதங்களின் மாதிரிகள் ஏதும் இதுபோது எங்கும் காட்சிக்குக் கிடைக்கவில்லை. கிட்டினால் அவற்றை எட்டுங்கள்.  பொன் என்பது இரும்பை.  தங்கம் எனப்படும் பொன்னினும் பெரிது இரும்பு. அதானால் அதற்கு இரும் பொன் (பெரும்பொன்) என்ற பெயர் வந்தது.
இதுபின் இரும்பு என்று இறுதி குறுகிற்று என்பது அறிக.   இரு  - ‍ பெரிய‌

 இது புற நானூற்றுப் பாடல் 233.  பாடல் இப்போது:

பொய்யாகியரோ பொய்யாகியரோ
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்தாள்  அகுதைகண் தோன்றிய‌
பொன்புனை திகிரியின் பொய்யாகியரோ
இரும்பாண்  ஒக்கல் தலைவன்  பெரும்பூண்
போர் அடு தானை எவ்வி மார்பின்
எஃகு உறு விழுப்புண் பல என‌
வைகுறு விடியல் இயம்பிய குரலே


திகிரி விடப்பட்டால் சுற்றிக்கொண்டு போய் எதிரியைத் தாக்கும். அதில் வேறு பொன் (இரும்பு) புனையப்பட்டால் அது சுற்றுவதற்கு ஏற்றபடி அமையவேண்டும். சிறு கோவைகளாக எடையைச் சீராக்கிப் பொருத்தினாலே சுற்றும். "திகிரியின் பொய்யாகியரோ" என்றதனால், இந்தப் பொய் போல, எவ்வியின் ,மறைவுச் செய்தியும்   பொய்யே ஆகுக  என்பார் புலவர். " திகிரியின்" என்பதற்கு இது பொருளாகும்.


திகிரி பற்றிய கூற்று பொய்யானது போல எவ்வியின் மறைவும் பொய்யாகுக‌

 An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss   

cannot edit. will do later.

  

திங்கள், 28 மார்ச், 2016

கழுதை

கழுதை  என்பது ஒப்பொலிச் சொல் (Imitative)

அது காழ்  காழ்  என்று கத்துகிறது  என்பர் ,  இது  குறுகிக்   "கழு" என்றானது.

இப்படிக் குறுகிச் சொல்லமைதல் இயல்பு .(    அடிக்கடி நிகழ்வது )

எடுத்துக்காட்டாகக்  குயில் என்பதைக்  குறிப்பிடலாம்.   கூ கூ என்பது  கு என்று குறுகிற்று.

தை என்பது விகுதி .

விழுதை பழுதை என்ற சொற்களில் தை விகுதி வருதல் போல.

இனி. கழுதை என்ற சொல்

உதைக்கும் தன்மை உடைய விலங்கு என்பதால்  கழு+ உதை என ஓர் உகரம் கெட்டுப் புணர்ந்து  கழுதை என்றாயது எனினும் பொருத்தமே.

இங்ஙனம் கூறுவார்:

குதி + இரை =  குதிரை;  ( அதிகம் இரை உண்பது)
கு +  இல் =  குயில்  (இல்லம் அமைப்பது )

என்று பொருத்தம் காணலாம் எனினும்  சில சொற்களில் இப்பொருத்தம் அமையவில்லை.  எல்லாம் இரை உண்பன எல்லாம் கூடு கட்டுவன என்று மறுப்பு எழக்கூடும். சொல்லிறுதிகளை விகுதி எனில் அதில் மேலும் கேள்வி எழாது.

காரணப் பெயர்கள்
இடுகுறிப் பெயர்கள்
காரண இடுகுறிப் பெயர்கள் .






புரு, பொரு என்ற சொல்லடிகள்

புல்லுதல்  அல்லது "புல்" என்பதொரு வேர்ச்சொல்யாம் வேர்ச்சொல் என்று குறிப்பது, சில பல அடிச்சொற்களைப் பிறப்பிக்க வல்ல தாய்ச்சொல்.

புல் என்பதிலிருந்து புரு, பொரு என்ற சொல்லடிகள் எழுந்தன.

புல் > பொரு.
புல் > புரு.

இந்த இரண்டை மட்டும் இன்று ஆய்வோம்பலவற்றையும் கொண்டுவந்தால் வாசிப்போரில் சிலர் குழப்பம் அடையக்கூடும்.

-து என்பது வினையாக்க விகுதியாகவும் வரும்.

பொரு > பொருந்து.
பொரு > பொருத்து (பிறவினை).

இன்னோர் உதாரணம்திருந்துதிருத்து என்பன.


புரு என்பதும் இங்ஙனமே ஒரு விகுதி பெறும்.  (டு)

புருபுருடு.

டு என்பது ஒரு சொல்லாக்க விகுதியே.   கரடுமுரடு, திருடு, வருடு

நெருடு என வினை பெயர்  இரண்டிலும் இது வரும்  சொற்கள் பலவாகும்.

புருடு என்பதன்மேல் அன் விகுதி ஏறி,    புருடன் ஆயிற்று.

பேச்சு வழக்கில் புரு> புருசு > புருசன் என்று அமைந்தது.

புருசன் / புருடன் >  புருஷ என்றானது.

புரு என்பது பொருந்து என்னும் பொருளது ஆதலின், புருடன் என்பவன்
பெண்ணுடன் பொருந்தி வாழ்பவன் என்று பொருள் தருவதாயிற்று
.

புரு> புருவு > புருவம்.

இச்சொல்லும் புரு என்பதினின்றே பிறந்ததாதலின், புருடன் கண்ணாகிய பெண்ணுடன் பொருந்திய புருவம் போன்றவன்  அவளைக் காப்பவன் என்ற பொருள் கொள்ளுதல் ஏற்புடைத்தே. அங்ஙனமாயின், கணவன் கண்ணாக இருந்த நிலை மாறி (எது முதலில் படைக்கப்பட்ட சொல் என்பது ஆய்தற்கு உரியது)  இச்சொல்லில் புருவமாக உணர்த்தப்பெறுகிறான் எனலாம்.  இது பெண்ணியத்துக்கு ஏற்ற கருத்து ஆகும்.

An error occurred and no preview and edit are possible  Will edit later

.