ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

correction

Correction

A comment made 5 months ago.

In part,  it reads:

"......despair that has fallen up an elected leader......."

It should read:

"despair that has fallen upon an elected leader....."

We could not locate the comment.

If you come across the comment, please read as amended.  Apologies for this error.

அவன் என் காலில்:

விறலி:     அம்மணி , உங்கள் தலைவர்  அடிக்கடி "லீலை "  என்ற பரத்தையின் வீட்டுக்குப்  போய்வருகிறார்.

தலைவி:  அப்படியா .

விறலி:  "என்னை விட்டு எங்கே போனார்  எங்கே போனார் என்று   நீங்கள்தாம் அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறீர்கள் .

தலைவி:  ஏன்  என்னிடம் முன்பே தெரியப்படுத்தவில்லை ? 

விறலி:  உங்களிடம் இரகசியமாய் தெரிவிக்க வேண்டுமென்றுதான்.  தருணம் பார்த்திருந்தேன்.

(விறலியிடம்  ஒரு பணமுடிப்பை வீசுகிறாள் தலைவி. அதை  விறலி  புன்முறுவலுடன் பற்றிக்கொள்கிறாள்.)

தலைவி:  அதை வைத்துக்கொள். உனக்கு வேறு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.. உன்னை நான் மறக்கமாட்டேன்.!  போய்வா!"

இப்படித்  தலைவனை அம்பலப்படுத்தியது பரத்தை லீலைக்கு தெரிந்துவிடுகிறது.  லீலை விறலியை எதிர்கொள்கிறாள். 

"எங்கள் உறவை அம்பலப்படுத்தி நீ பரிசு பெற்று, ஊருக்குள்  விழா க்கொண்டாடி உன் கூட்டம் கள் குடித்து ஆடியது எனக்குத் தெரியாதென்றா  நினைத்துவிட்டாய்?  அடியே!  அவரை என்னிடமிருந்து எக்காலத்திலும் நீ பிரித்துவிட முடியாது.  அவர் மாலை எப்போதும் எனக்குத்தான் . வேண்டிய போதெல்லாம் அது என் கழுத்தில் வந்து விழும். உன்னால் என்னை அசைக்க முடியாது. "

என்று பரத்தை லீலை ஆர்ப்பரிக்கிறாள்.

புலவனின் பாடல் இப்படி அமைந்தால்,  அது பெருந்திணை,  பரத்தை கூறல் 
என்னும் துறை. பாடல் இதோ:

பலவுரைத்துக் கூத்தாடிப் பல்வயல்  ஊரன் 
நிலவுரைக்கும் பூணவர்  சேரிச் -----  செலவு உரைத்து 
வெங்கள்  களியால் விறலி விழாக்கொள்ளல் 
எங்கட்கு  அவன் தார்  எளிது !    (பு .வெ . மாலை.  பெருந்திணை . 31)

பல் வயல் ஊரன் :  நில  புலங்களை உடைய தலைவன்.
நிலவு உரைக்கும் பூண்+அவர் :  நிலவொளி பட்டு வீசும் நகைகளையும் மணிகளையும் பூண்ட  (அணிந்த)  பரத்தை.
சேரிச் செலவு:  பரத்தை வீட்டுக்குத் தலைவன் போதல்.
வெங்கள் :   வெம்மையான கள். 
களி :  மகிழ்ச்சி  ஆட்டம் 
விழாக் கொள்ளல் :  பரிசு பெற்ற   விறலி  தம் உறவினர் நட்பினருடன் கொண்டாடியதை  "அப்படிச் செய்யாதே!"  என்கிறாள்.
எங்கட்கு:  பரத்தையராகிய எங்கட்கு.
தார் =  மாலை.

அவன் என் காலில் கிடக்கிறான் என்னாமல் "அவன் மாலை எங்கட்கு  எளிதில் கிட்டும் " என்றது  அதையே சற்று நயத்துடன் பாடியதாகும்.


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

eyes and flowers அவள் கண்கள்

மலர்காணின் மையாத்தி  நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று

என்பதோர் அழகிய குறள்.

மலர் காணின் -   நீ மலரைப் பார்த்தால்;
மையாத்தி -    மயங்கி நிற்காதே!
நெஞ்சே  -  என் நெஞ்சமே!  (இப்போது காதலன் தன் நெஞ்சிடம் பேசிக்கொண்டிருக்கிறான்)

இவள்கண் -   என் காதலியாகிய இவள்  கண்கள்;
பலர் காணும் -  பலரும் கண்டு பார்வையால் சுவைக்கும்;
பூ ஒக்கும் என்று -  மலர்வனத்தில் உள்ள பூவிற்கு இணையானது என்று.

அவள் கண்கள் யாவரும் கண்டு களித்தற்கு உரியவை அல்ல!
அவனுக்கே உரியவை.  அவன்மட்டும் கண்டு சுவைப்பான்!  ஆகவே செடியிலுள்ள மலர்கள் அவள் கண்களுக்கு எப்படி இணையாக முடியும்.

ஆகவே ஒப்புமை சொல்லலாம்;  அது உருவொற்றுமை;  அதனின் மிக்க பொருத்தமொன்றுமில்லை.  இவள் கண்கள்  நாளை வாடிப் போவன அல்ல .