திங்கள், 30 ஜூன், 2014

Real Lover branded as possessed.. (Sangam)

சங்க காலப் புலவர் பெருஞ்ச்சாத்தனார் பாடிய ஓர் அழகிய பாடலைப் பாடிப் பொருளை அறிந்து இதுபோது மகிழ்வோம்.    சங்க இலக்கியச் சுவை கண்டு சின்னாட்கள் கழிந்துவிட்டன.

மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇச்
செல்லாற்றுக் கவலை பல்லியங் கறங்கத்
தோற்றமல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க்  கொளீஇயள் இவளெனப் படுதல்
நோதக்  கன்றே தோழி  மால்வரை
மழை விளையாடு நாடனைப்
பிழையேம் ஆகிய நாம்இதற் படவே .      குறுந் 263.   

அருஞ் சொற்கள்:

மறி = ஆடு . குரல் =  குரல்வளை.  பிரப்பு  =  படையல் பாத்திரம். இரீஇ = படையலிட்டு .  செல்லாற்றுக் கவலை  -   ஆற்று நடுவில் உள்ள திட்டு .
பல்லியம் = பலவகை வாத்தியங்கள்.  கறங்க =  இசைக்க. தோற்றம் =  இங்கு முருகன்,  அல்லது =  அல்லாமல்.;  நோய்க்கு =  காதல் நோய்க்கு ; மருந்து ஆகா:= தீர்வு தரும் மருந்து ஆகமாட்டாது. வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி  = மற்ற தெய்வங்களுக்கு வாழ்த்து , வெறுப்பில்லை ; அவை பலவும் போற்றினோம் என்றபடி .

பேஎய்க்  கொளீஇயள் இவளெனப் படுதல் =  இவளுக்குப் பேய் பிடித்துள்ளது என்று சொல்வதும் நடந்துகொள்வதும் ;  நோ = வருத்தம். தக்கன்று = (அடையத்)  தக்கது .  மால் வரை =  பெரிய மலை இடத்து ;  மழை = மழை (தரும் முகில்கள் ).  நாடன் =  நாடுடையோன்  (அவனை )

பிழையேம் =  மாற மாட்டோம் ; ஆகிய  =  (என்று)  நடப்பில் காட்டிய ; நாம் = (தலைவி தோழி ஆகிய)  நாம்.  இதற் படவே =  இந்தப் பேய் விரட்டில் பங்கு பெறவே .  இதற் படவே = இதன் +படவே ,  இதனில் படவே.

பேய் விரட்டு நிகழ்வுகள் இப்போது சில இடங்களில் இன்னும் நடத்தல் போலவே சங்க காலத்திலும் .நடைபெற்றன . மலை  நாட்டுக் காதலன்பால்  மனம்  பறிகொடுத்த தலைவி முருகப் பெருமானிடம் வேண்டி அக்காதல் நிறைவேறும் நாள் எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்னையோ  இக்காதலின் ஆழம் உணராதவளாய்,  தலைவிக்குப் பேய் பிடித்துவிட்டதாக நம்பிக்கொண்டு,  ஆற்று நடுவில் உள்ள திட்டில் பேய் விரட்டுப பூசை போடத் துவங்கி விட்டாள்.
பூசைகளுக்குத்  தேர்வாவன   பெரும்பாலும் பாடலில் வரும்  இதுபோலும் .இடங்களே.  தெய்வங்கள் வாழ்விடம் .இவை என்ப .( சீரங்கம் இத்தகையதே. அரங்கன் அமர்விடம்.)   இந்நிகழ்வால் தலைவியும்  தோழியும் வருந்தினர். எங்ஙனமாயினும் காதலைக் கைவிடாள்  தலைவி.  மழைமுகில்கள் கொஞ்சும் நாடனைப்   "பிழையேம்"  என்கிறாள். பேய் விரட்ட ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் பங்கு பெறுதல்போல் நடந்து`கொள்ள வேண்டியதுதான்.

பிரம்பினால் பின்னப்பட்ட பாத்திரத்தில் படையல் செய்தனர் . இது  பிரப்பு   எனப்பட்டது,  பிரம்பு > பிரப்பு .  (வலித்தல் ) தினை  என்பது  ஒரு கூலம்.

முருகன் சிவனின்  தோற்றம் எனவே,  "தோற்றம் "  என்றார் புலவர்.  அருணகிரியாரும் இங்ஙனமே பாடினார்.

முருகன்தான் காப்பாற்ற வேண்டியவன் . மற்ற  தெய்வங்கள் வாழ்த்தப் பெறும். என்றாலும் காதலுக்குக் கைகொடுக்க வரும் கடவுள் முருகனே. என்பது தலைவி தோழி ஆகியோர் துணிபு.  வாதாடும் குறவரிட வள்ளிப் பங்கன் ஆதலினாலோ?

அளபெடைகள்  அழகுடையான.

நோ  தக்கன்றே :  இங்கு  "தக்கன்றே "  என்பதைப் பிரித்துப் பார்ப்போம்.

தகு + அ +து =  தக்கது.

தகு + அன் + து  = தக்கன்று.

தகு ​+ அ + து =  தகுவது .

இவை ஒரே பொருளன . இங்கு அன் எதிர்மறைப் பொருளில் வரவில்லை.
செய்தனம் என்ற வினைமுற்றிலும்  finite verb அப்படியே.

நில்லன்மீர் =  நில்லாதீர். இங்கு .எதிர்மறை..  அல் > அன் .


புலவர்  பெருஞ்ச்சாத்தனார் இங்கு தலைவியை ஓர் இறைவணக்கப் பண்பாடு உடைய பெண்மணியாகக் காட்டியது அறிந்து போற்றத்தக்கது ஆகும். அவள் நம்பிக்கையுடன் வேண்டிகொண்டது முருகப் பெருமானிடம். பூசையோ மற்ற தெய்வங்களுக்கும் நடைபெறுகின்றது.  வேற்றுப் பெருந்தெய்வங்கள்  அவளுக்கு உதவும் என்ற நம்பிக்கை இல்லை என்றாலும்,
அவற்றையும் வாழ்த்த அவள் தவறவில்லை. இதுவே நல்ல நாகரிகம் என்பதும் இறைக்கொள்கை நல்லிணக்கம் என்பதும் இங்குக்  கோடிட்டுக் காட்டவேண்டிய  உயர் பண்புடைமை ஆகும்.

edited
edited again: 19.2.2019 some letters (alphabet) missing. Inserted.














"கவ்வை" என்பது. கவ்விக்கொள்வது.



சில நிகழ்வுகள் நம்மையும் நம் நேரத்தையும் "கவ்விக்" கொண்டுவிடுகின்றன. கவ்வுதல் என்றால் என்ன? அது இரண்டாகப் பிளந்து நம்மை அகப்படுத்தி, இறுகப் பிடித்துக் கொள்கின்றது . விடுபாடு என்பதோ கடினமான காரியம் ஆகி விடுகிறது.

இப்போது கிசுகிசுப்புகள் என்று சொல்லப்படும் பேச்சுகளும் ஒருவாறு கவ்வுதலைச் செய்வனவே. இக் "கவ்வுதலில்" அகப்பட்டுக்கொள்வதும் மன உளைச்சல் தருவதேயாம். அலர் எழுதலும் அப்படியே. இன்னும், துன்பம், துயரம், ஆழ்ந்த எதிர்பார்ப்பு, பொறாமை முதலியவையும்   ஆம்.

இவை எல்லாவற்றுக்கும் ஒரு சொல் என்றால், அதுதான் "கவ்வை" என்பது.
கவ்விக்கொள்வது, அல்லது கப்பிக்கொள்வது.

கவை, கவடு, கபடம்,கபாடம் எல்லாம் பிறகு காண்போம்.

Some matters consume you, others swallow you up.

ஞாயிறு, 29 ஜூன், 2014

Possibly the Guru of Ilayaraja and ARRahman

 இசை வல்லுநர்  தஞ்சை தன்ராஜ்
                                          
                                          -செ.அ.வீரபாண்டியன் –
http://musicdrvee.blogspot.in/                                    http://musictholkappiam.blogspot.in/

  ‘தமிழிசையின் இயற்பியல்’ (Physics of Tamil Music) என்ற எனது முனைவர் பட்ட ஆய்வு தொடர்பாக, 1990‍- களில் நான் பயன்படுத்திய அரிய நூலகங்களில் ஒன்று , சென்னை திருவான்மியூர் கலாசேத்ரா அருகில் உள்ள 'உ.வெ.சா நினைவு நூலகம்'.

அந்நூலகத்தில் சுமார் 30 பக்கங்களுக்குள் இருந்த ஒரு மிகச் சிறிய புத்தகம் என்னை  அதிர்ச்சி இன்பத்திற்குள்ளாக்கியது. சிலப்பதிகாரத்தில் உள்ள வட்டப்பாலைப் படத்துடன் ‘இசை விதி -> 1800 ->  பிரம்ம மேள பிரமாணம்’ -  தஞ்சை தன்ராஜ்’   என்பதை தலைப்பாகக் கொண்டு அப்புத்தகம் என்னை ஈர்த்தது. உடனே எடுத்து படித்தேன். 

அப்புத்தகத்தில் சிலப்பதிகாரத்தில் உள்ள வட்டப்பாலை முறை, மேற்கத்திய இசை முறை, மேளகர்த்தா ராக அமைப்பு உள்ளிட்ட கர்நாடக இசை ஆகியவற்றினை பற்றிய அரிய ஆராய்ச்சி முடிவுகள் இருந்தன. இப்படிப்பட்ட அரிய நூலை பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, , எனது முனைவர் பட்ட ஆய்வில் அந்நூலைக் குறிப்பிட்டுள்ளேன். அதன் பின் அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டவற்றை கீழே தொகுத்து குறிப்பிட்டுள்ளேன். இவை எந்த அளவுக்கு நம்பத் தகுந்தவை என்பதை இனிவரும் ஆய்வுகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

1. தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிறித்துவ பாதிரியரால் அனாதையாகக்(orphan) கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்.
2. இசையில் நிபுணராகும் அளவுக்கு அவர் பெற்ற இசை தொடர்பான கல்வி பற்றி எந்த தகவலும் இல்லை.

3. சென்னை மைலாப்பூர் தெப்பக்குளம் எதிரேயுள்ள சாய் லாட்ஜில்(Sai Lodge)  பிரம்மச்சாரியாக, சாகும் வரை ஒரு அறையில் வாழ்ந்து, இசை வகுப்புகள் நடத்தி வந்துள்ளார்.

4. இளையராஜா, ஏ, ஆர், ரகுமான் உள்ளிட்ட இசை அமைப்பாளர்கள் அவரிடம் இசை பயின்ற மாணவர்களில் அடங்குபவர் .

5. குடிப்பழக்கம் உள்ளவர். விஸ்வநாதன்‍ - ராமமூர்த்தி திரை இசையில் கொடி கட்டி பறந்த காலத்தில்,  இரவில் அவரது அறைக்கு சென்று,  ' ஸ்காட்ச் விஸ்கி'(scotch whisky)  பாட்டிலைக் கொடுத்து, அவரிடம் இருந்து, இசை நோட்ஸ்களைப்(Music Notes)  பெற்று தமது திரை இசையில் பயன்படுத்தியுள்ளனர்.

6. இளையராஜா பிரபல திரை இசை அமைப்பாள‌ரான பின்னரே அவர் மறைந்தார். அவரது இறுதிச் சடங்குகளை தமது செலவில் இளையராஜா செய்து முடித்து, அவர் அறையிலிருந்த 'அனைத்தையும்' தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

7. அவர் இசை தொடர்பாக எழுதிய குறிப்புகள் பற்றி இளையராஜா எதையும் வெளிப்படுத்தவில்லை. அதைப் பற்றி பேசுவதையும் விரும்புவதில்லை.

8. அவரின் இசைக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இளையராஜா திரை இசையில் கொடி கட்டி பறந்தார். அவை முடிந்தவுடன், அவர் 'ஹிட்'(Hits) பாடல்கள் கொடுப்பதும் முடிந்து விட்டது.

திருவாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன்,இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் போன்று அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தான்,  மேலேக் குறிப்பிட்டுள்ளவை எந்த அளவுக்கு சரி, அல்லது தவறு என்று தெளிவுபடுத்த வேண்டும்.  

தன்ராஜ் பற்றிய எனது முயற்சிகளைப் பற்றி கேள்விப்பட்ட பத்திரிக்கையாளர் நாகார்ஜுனன் (பெயர் எனது நினைவில் உள்ளபடி) சென்னையில் மாநிலக்கல்லூரியில் நான் பணியாற்றிய காலத்தில் என்னை சந்தித்தார். தன்ராஜின் இசைக் குறிப்புகள் என்னிடம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டார். நான் உ.வெ.சா நூலகத்தில் படித்த அந்த புத்தகத்தைப் பற்றி சொன்னேன். இளையராஜவிடம் அது பற்றிய தகவலைப் பெற பலர் முயன்றும் ஒன்றும் பலனில்லை என்று வருத்தத்துடன் என்னிடம் சொல்லி, விடை பெற்றார்.

தமிழ்நாட்டில் மேற்கத்திய இசை, கர்நாடக இசை, தமிழ் இசை பற்றிய ஆழ்ந்த புலமையுடன் வாழ்ந்து மறைந்த இசை வல்லுநர் அவர். உ.வெ.சா நூலகத்தில் உள்ள அந்த புத்தகம் மட்டுமே அதற்கான சான்று. கூடுதல் சான்றுகளை அவரிடம் இசை ப‌டித்த மாணவர்களும்,தொடர்பில் இருந்தவர்களும் தான் வெளிப்படுத்த வேண்டும். அது 'குருவிடம்' காண்பிக்க வேண்டிய நன்றியுமாகும்.

தன்ராஜின் இசைக்குறிப்புகள் கிடைத்து, அவற்றை புத்தகமாக வெளியிடும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால், அவற்றைத் தொகுத்து தரும்(Editing)  பணியை எந்த கட்டணமுமின்றி (without remuneration) நான் செய்து தர விரும்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்


(Reproduced without  any amendment or modification.  The writer and not the Blogger Sivamala is responsible for the contents. Any query or objection is to be referred to the writer. Blogger Sivamala excludes any liability)