சனி, 23 ஜூலை, 2011

புறநானூறு "நெடும்பல்லியத்தனார்" பாடல் (64.)

சங்கப் புலவரிற் சிலர், பல்வேறு வாத்தியங்கள் வாசிக்கும் திறமுடையோராக விருந்தனர். அத்தகைய ஒரு புலவரே "நெடும்பல்லியத்தனார்". இயம் என்ற பழந்தமிழ்ச்சொல், வாத்தியத்தைக் குறிப்பது. மணவிழாக்கள் போன்றவற்றில் வாழ்த்தி இசைக்கப்படுவது : வாழ்த்தியம்> வாத்தியம். பல்வேறு இயங்கள் இயக்கப்படின், அது பல்லியம் ஆகும். பல்+ இயம் = பல்லியம். பல்+இயம்+அத்து +அன்+ஆர் = பல்லியத்தனார். அத்து என்பது சாரியை. அன், ஆர் என்பன விகுதிகள்.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை பல்லியத்தனார் பாடியுள்ளார். வா! நம் கோமான் வழுதியைக் கண்டுவரலாம்....என்று விறலியை அழைக்கின்றது இப்பாடல். தண்ணீரும் கஞ்சியும் உண்டு வாழும் இவ் ஏழை வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிடுவோம்.
உன் வாத்தியக் கருவிகளை மூட்டை கட்டிக்கொள். வா
என்கிறார் புலவர்.
விறலியின் ஏழ்மை, அவள் அணிந்துள்ள ஒன்றிரண்டு வளையல்களினால் நன்கு புலப்படுகின்றதே! "சில் வளை விறலி!" என்று விளிக்கின்றார் புலவர்.

புற நானூறு: பாடல் 64.

இனிப் பாடலைப் பார்ப்போம்.

"நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி
செல்லாமோதில் சில்வளை விறலி
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்ப
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமான் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே."

யாழ் சிறந்த இசைக்கருவியாதலின், " நல்யாழ் " எனப்பட்டது. ஆகுளி என்பது ஒரு சிறிய பறை. துயர நிகழ்வுகளின்போது வாசிக்கப்பட்டது போலும். (ஆகுலித்தல் = துயர்ப்படுதல் லி >ளி )
பதலை = ஒரு புறமே வாசிக்கப்படும் ஒரு பெரிய பறை. செல்லாமோ தில் = விழைந்து போகமாட்டாமோ?

களிறு+ கணம் = களிற்றுக்கணம்.களிறு = யானை. கணம் = படைப்பிரிவு, பொருத = போரிட்ட. கண்ணகன் = இடமகன்ற. பறந்தலை - போர்க்களம். விசும்பு = ஆகாயம். ஆடு = பறக்கின்ற. எருவை = பறவை; கழுகுகள். பசுந்தடி = பச்சை ஊன் அல்லது தசை. பகைப்புலம் மரீஇய = பகைவரை வீழ்த்திப்பெருவெற்றி பெற்ற. தகைப் பெருஞ் சிறப்பின் = தக்க உயரிய சிறப்பிற்குரிய. குடுமிக் கோமான் - முதுகுடுமிப் பெருவழுதியை; கண்டு = சென்று சந்தித்து ; நெடுநீர் புற்கை = உண்ணும் நீரும் கஞ்சியும்; நீத்தனம் = இனிமேல் நீக்கிவிடுவோம் ; வரற்கே = வருவதற்கே.

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

Elizabeth Taylor

எட்டுமுறை மணவிலக்கு -- இதற்கே
என்னென்ன காரணமோ?
ஒட்டிவாழும் முனைமுகத்தில் -- எதையும்
வெட்டிப்பேசும் தோரணையோ?

ஆடவனை அடைந்தபின்பே -- அவன்
அசடுவந்து குடைந்ததுவோ?
பாடிவந்த காதல் தேனீ --- வீசும்
பனிக்காற்றில் தெலைந்ததுவோ?

மரணத்தின்பின்தான் சொர்க்கம்
மகிழ்வாய் நீ இனியுறங்கு.

வழக்கு, செய்யுள்

1. எந்த ஆய்வுக்கும் வழக்கு, செய்யுள் ஆகியவற்றை நுண்மா-
ண் நுழைபுலம் கொண்டு நாடுதல் வேண்டும்.

வழக்கு = மக்களிடையே வழங்குவது. (புலவர் வழக்குத்தான் வழக்கு
என்று சிலர் வாதிடுவர். அவர்கள் கிடக்கட்டும்).
செய்யுள் = இலக்கியத்தில் காணப்பெறுவது.
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் எனப்பெறும்.

செந்தமிழ் (திருந்திய தமிழ்) வழங்கும் நிலப்பகுதிகளிலிருந்து இவை
நாடப்பெறுதல் வேண்டும்.

நாம் மக்களிடை வழங்குவது மக்கள் வழக்கு என்றும் செய்யுளில்
வருவது செய்யுள் வழக்கு என்றும் இருகூறாக்கி உணர்ந்து கொள்ளல்
நலமாகும்.

பனம்பாரனார் பாடல் இதை இப்படி விவரிக்கிறது (=விரித்து
வரிகளாக்குகிறது).


தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
(தொல். பாயிரம்.)


cheyyuL and vazakku


தொல். சொல்லதிகாரம். 67

இதனையும் கருத்தில் கொள்க:-

செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம்
பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல்.