ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இறைவன் வருவான்.


இறைவன் வருவான்.





(தெருள்பெற்றாரிடம் அருளுருவான இறைவன் வருவான். அல்லாத விடத்து? }

இது முன் பாடப்பெற்ற ஒரு கவிதையின் தொடர்ச்சி.


அல்லா விடத்து வருதலோ இல்லையே.
நில்லா தவனாய் அறவழி நீங்கியோன்
கல்லான் எனினும் கலைவிண் எனினுமே
செல்லான் இறைவனின் சீரடிப் பாங்கே.

அறம்திறம் பாதோர் ஆழியின் முத்தாம்
புறம்செல வீழ்ந்தோர் புவனம் நி றைத்தார்
பரம்பொருள் உள்வழி பாவித் தவரே
தரம்தரு மாந்தர் சிலரே சிலரே.

தீதில் முகிழ்த்தோர் தினம் நீர் புகட்டினும்
யாது நிலையிலும் யாண்டுமே ஆட்படார்
சாதல் வரினும் சதைசிதை வாயினும்
மோதி அறச்சுவர் முட்டி அழிபவர


மொழி நடை கடினமாகிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற நினைப்புடன் தான் எழுதுகிறேன். மரபுப் பாக்களில் சில வேளைகளில் தவிர்க்க முடியவில்லை.

நான் எழுதியதன் பொருள்:

அல்லா விடத்து = இறைவனைப் பற்றிய தெளிவை அடையாத இடத்தில்; வருதலோ இல்லையே.= அவன் வருவதில்லை;
நில்லா தவனாய் = அற நெறியில் நில்லாதவனாக , அறவழி நீங்கியோன் = அந்த வழியிலிருந்து நீங்கியவன்;

கல்லான் எனினும் = படிக்காதவன் என்றாலும், கலைவிண் எனினுமே = படிப்பில் உயர்ந்தவன் என்றாலும்,
செல்லான் - போய்ச்சேரமாட்டான், இறைவனின் சீரடிப் பாங்கே.= இறைவனின் சீரான திருவடிகளின் பக்கத்திலே.




அறம்திறம் பாதோர் = அற வழியினின்று மாறிச் செல்லாதோர்;

ஆழியின் முத்தாம் = கடலினின்று கிடைக்கின்ற முத்துப்ப்போன்றவர்கள்;

புறம்செல வீழ்ந்தோர் = வேறு வழிச்சென்று வீழ்ச்சி அடைந்தவர்கள்;

புவனம் நி றைத்தார் = உலகெங்கும் நிறைந்துள்ளனர்;

பரம்பொருள் உள்வழி = கடவுள் உள்ளானெனச் செல்லும் வழி, பாவித் தவரே = பின் பற்றியவர்கள்;

தரம்தரு மாந்தர்= உலகிற்கும் தமக்கும் ஒரு தரத்தை, அல்லது உயர் நிலையை வழங்குவோர், சிலரே சிலரே.= சிலர் என்பதில் ஐயமில்லை.


தீதில் முகிழ்த்தோர் = தீமையில் தோன்றியவர்கள்;
தினம் நீர் புகட்டினும் = ஒவ்வொரு நாளும் நீங்கள் அறிவு ஊட்டினாலும்;

யாது நிலையிலும் = எத்தகைய நிலையிலும்; யாண்டுமே ஆட்படார் = என்றுமே கடைப்பிடிக்க மாட்டார்;
சாதல் வரினும் = மரணம் வந்தாலும்; சதைசிதை வாயினும் = தம் உடல் அழிந்தாலும்;


மோதி அறச்சுவர் = அறமாகிய திண்ணிய சுவரில் சென்று இடித்துக்கொண்டு, முட்டி = அதில் திரும்ப வழி அறியாராய் மேலும் அடிபட்டு, அழிபவர் =, என்றவாறு.

என் தாழ்மையான உரையைப் படித்து, கவிச்சுவை காண்பீர்கள் என்று நம்புகிறேன்.

வியாழன், 14 அக்டோபர், 2010

ஆண்டு பலசெல்லும்

ஆண்டு பலசெல்லும் ஆனாலும் பிள்ளையே
ஆண்டவர்க்கு நீ இதை ஆழ்ந்துணர்ந்தால் --- வேண்டுமோ
தீண்டி அடையும் தெருள்சேரா இன்பமதைத்
தாண்டி மனம்நிறுத்து வோம்.



கிட்டிய தெல்லாம் கிழமும் இளைஞனுமாம்
மட்டிலா மாவொளியின் மாணருளே --- ஒட்டியுயிர்
உள்ள பொழுதே உவந்து வணங்கியே
கள்ளம் இலாவாழ்வு காண்.



மன்னும் அகந்தன்னில் மாசில் மணவழகன்
தன்னைத் தலைதாழ்ந்து போற்றியும் --- தன்னையே
தானறிந் துள்ளடங்கித் தாரணியில் வாழ்வாரை
ஏனணுகும் துன்ப மினி



நிறைவாழ்வோ கற்பின் நெறிகெட்டால் நித்தல்
சிறைவாழ்வே சீரழிவின் சேர்க்கை --- முறைசேர்
இறையுணர்வில் தோய்ந்தே இனிக்கும் இசையில்
கறைபுகல் இல் வாழ்வில் கனி.


கலம்குறை நீராய்வீண் காலம் கழிப்பன்
விலங்கினமும் வெல்லும் நரனை--- நலங்கள்
பலபெற்று வாழ்வனவோ பார்மனக்கண் முன்னே
வலம்வருமே வாய்க்குமோ சான்று?

புதன், 7 அக்டோபர், 2009

ON LEAVE TILL JANUARY.

I will be moving from my present location. Hence busy packing up for the removal.

I shall meet my friends after the new year.

I shall try to visit in between if time permits.

Till then: Bye-bye

SIVAMAALAA.