வியாழன், 21 நவம்பர், 2024

Photographer Shamini catches Mani welcomed by dog.

ஒரு வீட்டுக்கு வருகை புரிந்த போது:



அரசப் பணிவு வழங்கி   ஏற்கும்

அழகு குட்டி நாய்!

இரைசல் செய்யா திணக்கம் சேர்க்கும்

இளைய இனிய சேய்.


பிள்ளை நல்காப்  பீடம் தந்து

பிணைப்பை உறுத்தித்,  தான்

கொள்ளும் நட்பில் பேதம்  இன்றிக்

குலவும் காட்சி பார்.  


அரும்பொருள்:

அரசப் பணிவு  -  ராஜமரியாதை

இரைசல் -  குரைத்தல் முதலிய ஒலிகள்

சேய் -  பிள்ளை போல்

பிள்ளை - மனிதப் பிள்ளை

பீடம் - உயரிய இருக்கை

குலவும் - அன்பு காட்டும்

இரைசல் -  இரைச்சல் என்பது குறுக்கப்பட்டது.

(  தொகுத்தல் )


 

புதன், 20 நவம்பர், 2024

பாறை என்ற சொல்.

 கல் ஒரு மலையாய்ச் சற்று உயரமாய் வளர்ந்துள்ளது, என்னுடன் வந்தவர்கள் இது கல்லுமலை என்றனர். யாம் ஒரு கவிதை வடிக்குங்கால் கல்லுமலை என்பது சொல்லில் நீட்சிகாட்டுகிறது என்று நினைத்தால் அதை வெட்டி ஒட்டிக் கன்மலை என்று சொல்லிவிடலாம். அப்போது ல் என்ற ஒற்று ன் என்று மாறிவிடும். படிப்பவர்க்கு நூல்களிலிருந்து ஆதார மேற்கோள்கள் ஏன் காட்டவில்லை என்று கேட்கலாம்.  இது  ஆனா ஆவன்னா மாதிரி அடிப்படையானது. இதற்கு ஆதாரங்கள் காட்டப்படா. பலரும் அறிந்திராத ஒன்றைச் சொன்னால் அதற்கு ஆதாரம் காட்டுவதுதான் முறை. கற்போருக்கு அது உதவியாய் இருக்கும்.   எதற்கும் ஒரு கரட்டுவரைப் புத்தகத்தில் தொகுத்து எழுதிவைத்துக்கொள்ளுங்கள். இது போலும் விதிகளை நினைவுக்குக் கொணர இத் தொகுப்புகள் உதவும். ஒரு பாறைமலை, உடைந்து பெரிய துண்டாகிவிட்டால் அதைப் பாறை என்றுதான் சொல்கிறோம். பாறை என்ற சொல் வந்த விதம் அறிவோம்.
பெரும் மலைக்கல், பகுந்து அறுபட்டு  ஒரு பெருந்துண்டாகி உருண்டு கீழே விழுகிறது.  பகு என்பது நீண்டு பா என்று ஆகும்.  இதைப் பாதி என்ற சொல்லில் நீங்கள் காணலாம்.  இந்தப் பாதி அறுபட்டது என்பதைக் காட்ட,  பா+ அறு + ஐ  என்ற இறுதி இரண்டும் ( சொல்லும் விகுதியும்) இணைக்கப்படுகின்றன. அறு என்பது ஆறு என்று நீண்டு ஐ  பெற்று ஆறை ஆகின்றது. பா+ ஆறை > பாறை ஆகும்.  சடைவாறுதல் என்பது போலுமே இச்சொல்.   ஆறை என்பது முதனிலை நீண்டு ஐ விகுதி பெற்றது. நதி குறிக்கும்  ஆறு என்ற  சொல்லும் நிலத்தை இரு கூறாக அறுத்துக்கொண்டு நீர் ஓடுதலையே குறிக்கிறது.  ஆறு என்பது அறுத்தல்.

பாளம் என்ற சொல்லின் பகுதியும் பாள் என்பதே.  பாறை என்பதன் உட்கருத்து பகு என்பதானால்  இதைப் பாள் என்பதிலிருந்து விளக்கிவிடலாம்.  பாள் > பாறு> பாறை என்று எளிதாய் முடிபுகொள்ளும். பாளக்கட்டி, பனிப்பாளம் என்ற வழக்குச்சொற்களைக் காண்க.

துள் > துளி,  துள் > தூள் > தூறு, தூறுதல் என்பவற்றை நோக்குக.

குள் > குட்டை;  குள் > குறு> கூறு  ( கூறுபோடுதல்).

பாறுதல் -  அழித்தல் என்பது பெறுபொருள் ஆகும். பலவாறு பகுபட்ட பொருள் தன் நிலையழிதலால். நிலை என்பது முன்னிருந்த நிலை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


செவ்வாய், 19 நவம்பர், 2024

பிணம் என்பது சென்றுசேர்ந்தது என்று பொருள்

 தமிழறிஞர்கள் பலரும் பலவாறு சிந்தனை செய்து  ஆங்காங்குப் பொருள் கூறியிருப்பார்கள். அவை இப்போது தேடும் சமயத்தில் கிடைப்பதில்லை இல்லாவிட்டால் கைவிடப்பட்டிருக்கலாம்.  ஆனவற்றையே சேர்த்து வைக்காத நம் தமிழன் இவைபோன்ற பக்கச்சார்பில் உள்ளவற்றை எங்கே சேர்த்து வைக்கப்போகிறான்?  தேடிப் பாருங்கள். கிட்டினால் பட்டைப்போல் பாதுகாத்துக் கொள்வோம். எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் கூட கட்டுப்பாட்டுடன் கன்னித் தமிழ் வளர்த்த சாமிநாதையர் போன்றோர் செய்த திருவினைகளில் ஒருவினையாகும்.

பிணைத்தல் என்பது ஒன்று சேர்த்தல் பொருளது ஆகும். ஒருவனைப் பிணையில் எடுக்கும்போது விடுதலையாகச் சென்று அவனை மீட்கும் உம்முடன் அடுதலையாக அவனையும் அனுப்பிவைத்தல் என்றே பொருள்படும். உம்மை அடுத்துநிற்பவராக அவரும் பிணைத்து அனுப்பப்படுவதை அறியலாம். அடு என்பதற்கு அண்டு, சுடு என்று பல்பொருள் உள. இவற்றுள் அடு என்பதற்கு ஈண்டு அடுத்துவரல் என்பதே பொருளாம். உம்முடைய விடுதலை வசதியுடன் அவனும் தன்னை இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறான். கொஞ்ச காலத்துக்குச் சட்டப்படி உம்முடைய அடுசரணையிலோ அனுசரணையிலோ இருக்கவேண்டியிருக்கும்.

அடுத்து உம்முடன் சரியாக நிற்பதால் அடுசரணை என்றோ அனுசரணை என்றோ சொல்லலாம்.  அடு+ சரி + அண்+ஐ,  அனு + சரி + அண்+ ஐ.  ஐ என்பது விகுதி. உயர்வும் குறிக்கும்.  அனு(கு) = அணுகு.  

பிண்>  பிணை.   பிண்> பிணை> பிணைத்தல். இப்போது பிணையில் எடுத்தல் என்பதன் பொருள் ஓரளவு தெளிவாம்,

பிணம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

பிணத்துக்குரிய உயிராயிருந்த நல்ல மனிதர் இப்போது இங்கில்லை. அவர் விண்ணோருடன் சென்று சேர்ந்துவிட்டார். காற்றுடன் கலந்துவிட்டது அவர்தம் மூச்சு. முன்பிரிந்த மூச்சுகள் பல அவருடன் சேர்ந்து உலவிக்கொண்டிருக்கும். மேலும் இவருடல் எரிப்புக்குத் தயாராகிவிட்ட பிரிந்தார் பிறருடன் தொகுதியாகிவிடும்,

பிண்.> பிணை.  பிண்> பிணம். பிணை> பிணைத்தல். பிணை எனினும் இணை எனினும் சரி.

பிணம் என்றால் அவர் உம்முடன் இல்லை; வேறிடம் இணைந்துவிட்டார் என்று பொருள்.

பிணம் என்பதை நாம் சரிவர உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகிறோம் என்றாலும் சொல்லாய்வின்படி அவர் பிறவிடம் பிணைந்தவர்.

நல்ல உயர்வான பொருள். இழிவு சுழிவு கழிவு என்று ஒன்றுமில்லை.

இனிப் பிண்டுபோதல் என்பதிலிருந்து விடுபடுதல் என்றும் விளக்கலாம். தமிழ்ச்சொற்கள் எல்லாம் பன்முகம் கொண்டவை. குறைந்தது இருவகையிலாவது பொருள்விளக்கம் பெறலாம்.  பிடு> பிண்டு வி.எச்சம்  

பிண்டகம் -  பிண்டு பிண்டு தனித்தனித் துண்டுகளாகவும் துகள்களாகவும் இருக்கும் சாம்பிராணித் தூள். பிண்டு  அ  கு :  பிண்டு பிண்டு அங்கு சேர்ந்திருக்கும் தூள்.  அ -  அங்கு;  கு= சேர்ந்து.  இது இனிய பொருள் தரும் சொல் ஆகும்.

சம் > சாம்:  சேர்ந்திருப்பது,  பிரி.  - பிரிந்திருப்பது.   அண் -  தூளாய்க்கலந்திருப்பது,  இ இறுதிவிகுதி  சாம் பிரி அண் இ >  சாம்பிராணி. வேறு வழிகளிலும் விளக்கலாம்.  சாம் - சாம்பல் என்பதோடும் தொடர்பு உள்ள சொல்.  அடுப்புச் சாம்பலும் சேர்ந்திருப்பதுதான்,  பிரிந்து காற்றுடன் பறந்தால் அது தூசு ஆகிவிடும்.  தனித்தனியாகத் தேடிப்பிடித்துச்  சாம்பிராணி என்ற பெயருக்குப் பொருந்தாது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்