இந்த ஆரம்பம் என்னும் சொல், பல் பிறப்பி ஆகும். இதைப் பல வழிகளில் துருவிச்சென்று பல்வேறு பொருண்முடிபுகளை உரைக்கலாம். இதை இப்போது இன்னொரு கோணத்திலிருந்து பிரித்து அறிவோம். மனிதன் தன் தொடக்க காலத்தில் கோவணமும் கட்டத் தெரியாமல் இலை தழைகளைக் கட்டிக்கொண்டு காட்டில் சஞ்சரித்தவன். நெய்தல் தொழிலுடையோர் ஆடைகள் செய்யத் துணிசெய்து கொடுத்து அவனை மானம் காத்தனர். அவன் சிறிது சிறிதாகவே பலவற்றையும் அறிந்து இன்று பல கோள்களுக்கும் சென்றுவரும் நிலையை அடைந்திருக்கிறான். உரோமாபுரி ஒருநாளில் அமைக்கப் பட்டதன்று என்றபடி அவன் முன்னேறிவந்துள்ளான் என்பதே உண்மை. சீலை என்ற சொல்லே சீரை என்பதன் திரிபு. தமிழ் என்ற பண்டை மொழியின் மூலம் இது மரப்பட்டையைக் குறிக்கும் என்பதும் இப்போது சீலை சேலை என்று மாறி அழகிய காஞ்சிபுரச் சேலையையும் காசிபுரச் சேலையையும் குறிக்கிறது என்பதையும் தமிழ்மொழிச் சொல்லாய்வு நமக்குத் தெரிவிக்கிறது.
ஆரம்பம் என்ற சொல்லின் உள்ளில் உள்ள சொற்பகவுகளைப் பட்டியலிடுவோம்.
அரு - தொலைவு குறைதல்.
அண் - இதிலிருந்து அண்முதல் என்ற வினைச்சொல் வருகிறது. "செயலுக்கு நெருக்கம்" உணர்த்தும் சொற்பகவு,
பு - புகுதல், தொடங்குதல்.
இ - இது வினைப்படு விகுதி. இதை வினையாக்க விகுதி என்றும் குறித்துமுள்ளோம்.
அம் - அமைப்பு குறிக்கும் விகுதி.
அரு + அண் + பு + இ + அம் > ஆரண்பம். > ஆரம்பம் ( இது இறுதி அல்லது இப்போது இருக்கும் திரிபுச்சொல்)
இதன் பொருள்: தொலைவு கடந்து நெருங்கிப் புகுந்து அமைதல் என்பதாகும்.
துவங்குதல் தொடங்குதல் என்பதுதான் முற்ற அறியும் பொருள்.
ஆரம்பம் என்ற சொல் ரம்பம் என்று முடிந்தாலும் இதில் ரம்பம் எதுவும் இல்லை.
ஆரம்பி என்பது வினைச்சொல்.
நிலவை ஆராயும் மனிதன் அவன் தன் ஆய்வுக்கருவி அமைப்பினை நிலவில் இறக்கினாலே ஆராய முடிகிறது, அருகிற் செல்வது வேண்டப்படுவது என்பதை இச்சொல் காட்டுகிறது, உண்மையும் அதுதான். மனிதனுக்கும் ஆய்படு பொருளுக்கும் உள்ள இடைத்தொலைவு குறைதல் முதன்மை ஆகும். இதை அரு ( அரு, அருகுதல் ( தொலைவு குறைதல்) , அருகில் என்ற சொற்கள் தெரிவிக்கும். அரு என்ற சொல் அடுத்துவரும் அண் என்ற சொல்லின் முன் ஆர் என்று திரிதல் தமிழின் செம்பான்மையைக் காட்டுகிறது. அண் என்பதும் வேண்டிய சொல்லே ஆகும். அண்மித்துப் புகுதல் என்பது இச்சொல்லால் வலியுறுத்தப் படுவதொன்றாம். அண்பு என்பது அம்பு என்று இயைக்கப்படுகிறது. இதுவும் நல்ல திரிபே ஆகும்.
அறிக மகிழ்க/
மெய்ப்பு பின்.