இருபதணை இருபத்து நான்கே வாவா!
இருக்கின்றார் அனைவர்க்கும் மேன்மை தாவா!
பொருவதனைப் பொருந்தாத புகழே தாவா,
புதுமனைகள் இலார்க்கெங்கும் போற்றித் தாவா!
அறிந்தநிலை அரசியலார் வணிகவலர் ஓங்கும்
செறிந்தவள நாடுகளே புவிமிசையே வேண்டும்
தெரிந்துணர்ந்த பெருமக்கள் வருந்துவறம் கூரார்
நிறைந்தநில வாழ்வுதனை நீவழங்க. வேண்டும்
யாவருக்கும் எமதினிய மூவெட்டு வருடும்
நாவினிக்கும் நல் வாழ்த்து உரித்தாக்கு கின்றோம்
நோவுநொடி யாதுமிலா இன்பவாழ்வு மேவி
யாவினிலும் நனிசிறந்த நல்வாழ்வு வாழ்க
பொருள்:
1
இருபதணை இருபத்து நான்கே வா-வா! - வருட எண்ணிக்கையில் இருபதை அடுத்து எழுதப்படும் 24ம் ஆண்டே வருக. அணைதல் - அடுத்து இருத்தல்.
இருக்கின்றார் அனைவர்க்கும் மேன்மை தாவா!- யாவருக்கும் உயர்வு தருவாயாக
பொருவதனைப் பொருந்தாத புகழே தாவா, - போர் நடத்துதலை இல்லாத ஒரு உயர்வைத் தருவாயாக
புதுமனைகள் இலார்க்கெங்கும் போற்றித் தாவா! - வீடில்லாதவர்களுக்கு
வீட்டைக் கட்டிக் கொடுப்பாய்.
2
அறிந்தநிலை அரசியலார்- அரசாளத் தெரிந்த அரசியல்
சேவையாளர்கள்.
வணிகவலர் - வணிகத்தில் சிறந்தோர்
ஓங்கும் - மேவி நிற்கும்
செறிந்தவள நாடுகளே புவிமிசையே - வளமான நாடுகள்
தெரிந்துணர்ந்த பெருமக்கள்-- அறிவார்ந்த மக்கள்
வருந்து வறம் கூரார் - வறுமைப் பிடியில் இல்லாதவர்கள்.
வறம்கூர்தல் - வறுமை அடைதல். வறம் - வறுமை.
இவர்களுக்கு:
நிறைந்தநில வாழ்வுதனை நீவழங்க. வேண்டும் - நிறைந்த புவி வாழ்வு
கொடுக்கவேண்டும்.
3.
எமதினிய---எமது இனிய
மூவெட்டு ----மூன்றெட்டு, மூ+ எட்டு
வருடும் - பெருக்கலில் வரும். 24 எண்.
நாவினிக்கும் - நாவு இனிக்கும், சுவையான
நல் வாழ்த்து அன்பான நற்செய்தி
உரித்தாக்கு கின்றோம் - உரியதாய் ஆக்குகின்றோம்.
நோவுநொடி யாதுமிலா இன்பவாழ்வு மேவி - நல்ல உடல் நலத்துடன் இருந்து
யாவினிலும் நனிசிறந்த நல்வாழ்வு வாழ்க- மிக்க இனிமையாக வாழ்க என்றபடி
அறிக மகிழ்க.