By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வியாழன், 23 செப்டம்பர், 2021
புதன், 22 செப்டம்பர், 2021
உயிர் காக்கும் தமிழர் க.லா. பழனிசாமி பால்.
இங்குப் படத்தில் காணப்படுபவர் க. பழனிச்சாமி பால். சிங்கப்பூர் ஆயுதப் படையில் முப்பது ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், அப்போது தாம் பெற்ற அறிவின் மூலம் உலகில் தொல்லையுள்ள இடங்களுக்கெல்லாம் சென்று கண்ணிவெடிகளையும் மற்ற வெடிபொருட்களையும் அகற்றும் பணியைச் செய்துவருகின்றார். சில ஆப்ரிக்க நாடுகளிலும் நண்ணில ( மத்திய)க் கிழக்கில் பல நாடுகளிலும் சென்று இவர் தம் குழுவினருடன் இப்பணியை மேற்கொள்ளுகின்றார். இதை எழுதும் இவ்வேளையில் இவர் ஈராக்கில் இருந்து இப்பணியினை மேற்கொண்டு வருகிறார். இவர்தம் சேவையைச் சில குழும்புகள் நிறுவனங்கள் ஆகியவை பெற்றுவருகின்றன.
இவர் செல்லுமிடங்களிலெல்லாம் இவருக்கு நிறையக் கூட்டாளிகள் - பெரியவர்களும் குழந்தைகளும் இவர்களுள் அடங்குவர். மேலே படத்தில் இவர் சிரியாவில் குழந்தைகளுடன் காணப்படுகின்றார்.
இவர் செய்யும் வேலையில் ஆபத்து இருந்தாலும் தம் நுகர்வறிவு மூலம் வெடிமருந்துகளை நல்லபடி கையாண்டுள்ளார். " எப்போதும் கவனமாக இருக்கிறேன்" என்று இவர் கூறுகிறார்.
நண்ணிலக் கிழக்கின் வரலாற்றினை நல்லபடியாக அறிந்துவைத்துள்ளார். புத்தகத்தில் படிக்கும் வரலாற்றுக்கு விளக்கங்கள் வேண்டுமானால் அவற்றை இவரிடம் பெற்றுக்கொள்ளலாம். இவர் இதில் ஒரு நடமாடும் கல்லூரி ஆவார்.
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு அகற்றும் பணியில் இருந்தவர். இதற்கு ஆங்கிலத்தில் "டிமைனிங்" என்று சொல்வர். {Process of removing landmines and explosive devices }. மிக்க ஆபத்தான இடர்மிக்க நிலப்பகுதியாக இவர் ஆப்கானிஸ்தானையே குறிப்பிடுகிறார்.
இவர் சிங்கப்பூர்ப் படையில் இருந்தபோது படைஞர் வேலைக்குப் பயிற்றுவிப்பாளராக இருந்ததால், இவரை இங்குப் பலரும் ( சீனர், மலாய்க்காரர் தமிழர் ஆகிய படையில் தொடர்புடையோர்) அறிந்துவைத்துள்ளனர். அவர்களுக்கு நாமெழுதுவது அறிந்ததைச் சொல்வதாகவே முடியும். அவர்கள் இந்த இடுகைக்கு மேலும் பல விவரங்களைத் தெரிவிக்க வல்லவராய் இருப்பர். கண்டகார் விமானப் படைத்தளத்தில் அமெரிக்க மற்றும் நேசநாட்டுப் படைகள் இருப்பிடத்தில் பணிபுரிந்த நாட்களை இவர் தம் தோழர்கள் பற்றிய பல விவரங்களுடன் நினைவு கூர்பவர். அப்போது தாலிபான்கள் சுட்ட பல எறிபடைகள் இவர்கள் தளத்தில் வந்து விழுந்து வெடித்ததுண்டு. ஆனால் இவர் வாழ்விடத்தில் நல்லவேளையாக எதுவும் வந்து விழவில்லை.
அச்சமில்லையா என்றால், இருக்கத்தான் செய்யும். பொறுமையுடன் தான் பணிபுரிய வேண்டியுள்ளது என்பார். கவனம் முதன்மைத் தேவை என்று சொல்கிறார். கண்ணிவெடிகளை அகற்றுவது எளிது, ஐ இ டி எனப்படும் வீடுகளில் வனையப்பட்ட வெடிகள் அகற்றுவதற்குச் சற்று கடினமானவை என்று சொல்கிறார்.
இவருடன் வேலைசெய்த சிலர் போய்விட்டனர் (மேலுலகம்). அவர்களைக் கண்ணீருடன் தான் நினைவுப்படுத்திக்கொள்ள முடிகிறது. சிலர் சிரித்துப் பேசிப் பழகிய அரிய நண்பர்கள்.
இவர் தமது தொழில் தொடர்பான வரலாற்றை வெளியிட்டுள்ளார். தாமும் தம் போன்ற சிலரும் இத்தொழிலில் இல்லையென்றால் இன்னும் ஏராளமான மக்கள் மரணம் அடைந்திருப்பர். அவர்களைக் காப்பற்றத் தாம் இத்தொழிலைத் தொடரவேண்டியுள்ளது என்று கூறுபவர் இவர்.
இவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளப் பின்னூட்டம் இடலாம். அவர் அதன்மூலம் உங்களிடம் தொடர்பு கொள்ளுவார்.
உயிர்காக்கும் தமிழர் வாழ்க. மக்கள் இடர்நீங்கி உலகில் வாழ்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்பு
குறிப்பு: "தாலிபான்கள் என்று எழுதினால் அது மென்பொருள் மூலம் தாலிபாங்கள் ஆகிவிடுகிறது. திருத்துவோம்.