இந்த இடுகைக்கு நல்ல தலைப்பு எது என்று சற்று சிந்தித்தேம். "ஓருமை பன்மை மயக்கம்" என்பது சரியான தலைப்பு என்றாலும், இதில் வரும் "மயக்கம்" என்பது புரியாமல் போய்விடும் என்னும் தடை எண்ணம் வந்தது. இலக்கணம் அறிந்தாரும் சிலவேளைகளில் தெரிந்தே அதை மீறவேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக:
"கண்ணல்ல தூங்கம்மா - நீ என்
கண்ணல்ல தூங்கம்மா"
என்ற மக்களுக்குப் புரியும் பாட்டில், கண் அன்றோ தூங்கம்மா என்றிருக்கவேண்டும் என்று மாறுபடலாகும். இதற்குக் காரணம், கண் ஒருமை; அல்ல என்று முடித்தல் ஆகாது என்னலாம். ஆனால் அப்படிச் சொல்வதும் சரியில்லை. இதன் முழு வாக்கியம், " நீ என் கண் அல்லளோ" என்பது. ஆகவே, அல்லளோ என்று முற்றுறுவதே சரி என்னலாம். ஆனால் அதுவுமே ஏற்கத் தக்கதன்று; "நீ என் கண் அல்லையோ" என்பதே மிக்கச் சரியானது என்று எதிர்த்தெழலாம்.
தமிழ்ச்சான்றோர் எவ்வாறு எழுதினரோ - பேசினரோ அவ்வாறு எழுதுவதே சரியான இலக்கணம் (மரபு). என்று ஒரு விதியை முன்வைத்துப் போற்றுதல் வேண்டுமென்பது சரியான கொள்கையே. அதன்படி,
நீ அல்லை;
நீர் அல்லர்.
யான் அல்லேன்
யாம் அல்லேம்
யாங்கள் அல்லோம்
நீம் அல்லீம்
நீர் அல்லீர்
நீவிர் அல்லீர்
நீங்கள் அல்லீர்கள்
என்பவும் இன்ன பிறவுமே போற்றி எழுதுதலே சரி என்று சொல்லவேண்டும்., இவையெல்லாம் சரியே என்றாலும் இவற்றில் பாதிக்குமேல் மொழியிலிருந்து ஒழிந்துவிட்ட வடிவங்கள். "விளங்காததை யாரும் படிக்கமாட்டார்கள்" என்பதே சரி. மொழி என்பது ஒரு கருத்தறிவிப்புக் கலையே ஆதலின், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த மொழிநிலையை மீட்டெடுத்து அதன்படி எழுதினால் எவனுக்கும் புரியப்போவதில்லை என்பது உண்மை. ஆ.எல். ஸ்டீவன்சன் கூறியபடி, நாம் எழுதுவது அடுத்தவனுக்குப் புரியவில்லை என்றால் குற்றம் நமதே ஆகும். அவன் என்ன செய்வான் பாவம். அந்தச் சுமை, அறிவிக்க முயல்வோனுடையது ஆம்.
விளக்கிச் சொல்லிப் புரியவைக்கலாம். ஆனால் சில வேளைகளில் அது முடியாதது ஆகிவிடுகிறது. செய்தியறிக்கை வாசிப்பவர் கடினச் சொற்களைப் போட்டு வாசித்தால், கேட்பவன் அகரவரிசையைக் கையில் வைத்துக்கொண்டு கேட்கவேண்டும். சொல்லைத் தேடிக் கண்டுபிடித்து அறிவதன்முன், செய்தியறிக்கை முடிந்துவிடும்.
ஆனால் எழுதும்போது நிலைமையைச் சற்று சரிப்படுத்திக்கொள்ள வசதி இருக்கிறது என்றாலும் அதற்கும் ஓர் எல்லை உள்ளது.
புறநானூறு முதலியவற்றில் எத்துணை அழகிய கவிதைகள் உள்ளன. அதனில் ஒரு பாட்டு:
இரவலர் புரவலை நீயும் அல்லை
என்று தொடங்குகிறது. கேட்பதை வழங்கி அறம் செய்வோன் என்று எண்ணி அவன்பால் நண்ணி இரந்து நிற்பவனுக்கு அப்பொருளை வழங்கி அவனைக் காப்பவன் நீ 'அல்ல' என்பதே இதன் பொருள்.
இதைப் பாடிய தமிழ்ப் புலவன் நாலே சொற்களில் அதைச் சொல்லிவிட்டான்.
"நீயும்" என்பதில் வரும் உம், ஈதல் செய்யார் பட்டியலில் உன்னையும் சேர்க்கவேண்டும் என்று இடித்துரைக்கிறது.
இதை இங்கே எழுதக் காரணம், "அல்லை" என்ற சொல்தான். இதுபோல் சொல் வடிவங்கட்கு அகரவரிசையில் பொருளறிதல் கடினமே. நீ அல்லை என்பதே சரி. நீ அல்(?/?) என்ற பிறவடிவங்கள் வழுவாம், பழைய இலக்கணப்படி.
"எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
இன்பமே ஓடிவா"
என்பது ஒரு பாட்டு வரி. இதைப் படிக்க நேர்ந்த ஒரு தமிழ்ப்புலவர், எந்தன் என்ற சொல் தவறு என்றார்.. உண்மைதான். எந்தன் என்பது எம்+தன். எம் என்பது பன்மை. தன் என்பது ஒருமை. இதுதான் ஒருமை paன்மை மயக்கம் என்பர். இது ஒரு வழூஉச்சொல் ஆனாலும் இக்காலத்து அது ஏற்கப்படுமாயின் வழுவமைதி ஆகிவிடும். ஒருமையில் என்றன் என்றும் பன்மையில் எந்தம் என்றும் இருக்கவேண்டும்.
"அவர்தானே என் ஆருயிர் வாழுந்தெய்வம்,
அடியாள் என்னை ஆட்கொண்ட காதல் தெய்வம்".
அவர் - ஒருவரைக் குறிப்பின் பணிவுப் பன்மை. தானே என்பது ஒருமை. இங்கு அவர் என்பது வடிவில் பன்மையாய் இருப்பினும் பொருளில் ஒருமையே ஆதலின் தானே என்ற ஒருமை பொருந்திற்று என்னலாம். என்றாலும் அவர் என்பது பன்மை ஆதலின், வழுவமைதி என்று முடிப்பதே நன்று எனலாம். இங்குப் பணிவின் பொருட்டு அவர் என்று வந்தமை சுட்டிக்காட்டுவர்.
எனவே:
என்+தன் = என்றன் ( சரி)
உன் +தன் = உன்றன் (சரி).
எந்தன் உந்தன் என்பவை தவறான சொல்வடிவங்கள் எனினும், வழுவமைதிகளாகக் கொள்ளலாம்.
ஒருமை பன்மை இல்லாத மொழிகள் உலகில் உள்ளன. அவற்றுக்கு இந்தத் தொல்லை எழவில்லை. இலக்கணம் அதிகமிருந்த மொழிகள் சில இறந்துபட்டன. கன்னித்தமிழ் இன்னும் மாறாத மாண்பின் ஆட்சியைச் செலுத்திக்கொண்டுள்ளது. மாறிவிட்டவை சில.
தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.