புதன், 3 ஜூன், 2020

மூதாதையர் - சொல்வடிவம்.

எந்த மொழியிலும் ஒன்றைத் தவறான 
சொல், சரியான சொல் என்று வகைப்
படுத்துவதினும் 
புரியும் சொல்,
புரியாத சொல் என்று வகைப் 
படுத்துவதே ஏற்புடைத்தாகும். புரியாத 
சொற்களால் பயன்பாடு இல்லை. ஓட்டைச்
சட்டியாய் 
இருப்பினும் கொழுக்கட்டை
வெந்து எல்லோரும் உண்பதற்கு உதவுவது
 போன்றதே  சரியான சொல் 
எனலாகும்.
 புரியாத சொற்கள் எனப்படுபவையும்
ஒருசார் மக்கட்குப் புரிந்து இன்னொருசார்
குழுவினர்க்குப் புரியவில்லை எனில்,  

புரிந்தோர் புரியாதோருக்கு சொல்லிக்
கொடுத்து உதவலாம்.இதன்மூலம் 
புரிதல் விரிதல் அடைந்து பயன்
 ஆழ்ந்துசெல்லுதல் கூடும். இவ்வலைப்
பூவின் நோக்கங்களில் இதுவும் ஒன்று 
என்று கொள்க.

தாத்தா என்பது விளிவடிவம். அதாவது
கூப்பிடும்போது சொல் மேற்கொள்ளும்
வடிவம். அதன் இயல்பான வடிவம் 
தாதை என்பதுதான். இதை எழுவாய்
வடிவம் என்பர்.  எழு - சொல் எழுந்த
முதல் நிலையில்,  வாய் - அவ்விடத்து,
வடிவம் - அமைப்பு. (வடிதல் என்பது
அமைத்தல். ( எ-டு:  வேல்வடித்தல், 
செய்யுள் வடித்தல்,  இன்னிசை வடித்தல்
என்று எதை எதையெல்லாம் அமைக்க
இயலுமோ அதையெல்லாம் நன்றாகவே
வடிக்கலாம்,    சோறுவடித்தல் உள்பட.)
வடிக்கை > வாடிக்கை: எப்போதும் வந்து
வாங்கிக்கொள்ளுபடி வணிகர்கள் 
ஏற்படுத்திக்கொள்வது .  

நம் தாத்தாவுக்கு முன் பல தாத்தாக்கள்
இருந்தனர்.  தாத்தாவுக்குத் தாத்தாக்கள்
அவர்கள்.  அவர்களை எண்ணித்தான்
பார்க்கமுடிகிறது. அவர்களை நாம் அறியோம்.
அவர்களும் நம்மை அறியார். அவர்களை

அழைத்துப் பேசும் சில முறைகளை அறிந்த
ஆன்மிக ஆசிரியர்கள்
உள்ளனர் என்று
கேள்விப்படுகிறோம். யாம் சந்தித்ததில்லை.


இந்த முன்னிருந்த தாத்தாக்களைத் தாம் 
நாம் "மூதாதையர்" என் கின்றோம்.  மூ = 
மூத்த அல்லது முன்னிருந்த;  தாதை - தாத்தா'
அர் - அவர்கள்.

இப்போது சங்கு என்ற சொல்லைப் பார்ப்போம்.
இது ஓர் உயிர்வாழ் பொருளை அல்லது 
உயிரியைக் குறிக்கிறது.  அது குடியிருக்கும்
கூட்டுக்கும் சங்கு என்றுதான் பெயர். இந்தச் 
சொல் தங்கு என்ற சொல்லிலிருந்து திரிந்தது.
தங்கு என்பதோ  தம்+ கு என்பதிலிருந்து 
உருவாயிற்று.

தான் > தன் ( இது ஒரு மனிதனைக் குறிப்பது)
இரண்டு தான் கள் சேர்ந்துகொண்டால் அவர்கள்
தம்  ஆகிறார்கள். அதாவது தாம் > தம்.

இவ்வாறு இரண்டு தம் ஒன்றானால்
அது தம் + கு
= தங்கு. இவ்வாறே ஒரு
கூட்டில் ஓர் உயிர் இருந்தால்

அது தம்+கு = தங்குகிறது.  தகரம்
சகரமாகவும்
திரியும்.   ஆகவே தம் > சம்
என்று திரிந்து " இணைந்தமை" காட்டுகின்றது.
 ஆங்கில மொழியில் இருக்கும் சம்
(கணக்குக் கூட்டுதல் ) 

என்னும் சொல்லும்  இதன் வடிப்பே ஆகும்.

தம் > சம் > சங்கு.
தம் > சம் > சங்கு >  ~+ அம் = சங்கம்.

தன் என்பதில்  0ன் என்னும் ஒற்று ( மெய்) 
ஒருமை. அது பன்மை ஆகும்போது தம்
என்று மாறுகிறது. இந்த "ம்" இருக்கிறதே,
அது தொல்பழங்காலத்தில்
பன்மை
விகுதியாய்,  "கள்" விகுதிபோல் இருந்தது.

இந்த "ம்", உம் என்பதன் முதற்குறை ஆகும். 
அவனும் இவனும் என்பதில் உம் சேர்க்கை
அல்லது இரண்டு ஒன்றாதல் குறிக்கிறது.
தான் > தம் ஆனதிலும் பன்மையே
காட்டுகிறதே. இந்த ம்-மும்

உம்-மும் மொழியில் இன்னுமிருப்பது
நமது
நற்காலமே ஆகும். அம் என்னும்
விகுதி அமைதல்
என்பதன் அடிச்சொல்
லாகவும்  சொல்லமைப்பு விகுதியாகவுமாய்
விளங்குகின்றது.


தந்தை என்பதில் அப்பனைக் குறிக்கும்
 சொல்
"தை" என்பதுதான்.  விளியில்
தா என்றாகும்.
தாத்தா அல்லது தாதை =
 தந்தையின் தந்தை ஆகும்.


சந்திப்போம். ( இதில் சம் - தம்மிலிருந்து 
திரிந்த சம் - ;  தி என்பது வினையாக்க 
விகுதி;  இதில் அடிப்படை வினையாக்க
விகுதி இ என்பதுதான்.  இங்கு, இப்போது
என்றெல்லாம் பொருள். த்  என்பது ஓர்
இடைநிலைதான். பின் விளக்குவோம்.




செவ்வாய், 2 ஜூன், 2020

பள்ளிக்குச் செல்வதோ துள்ளும் சிறுகிளிகள்?


நேரிசைவெண்பா.

துள்ளிக் குதித்தோடும் துய்ய சிறுகிளியைப்
 பள்ளிக் கனுப்புவதோ பண்ணாமோ------உள்ளந்தான்
நோய்க்கடவை தாண்டா நுடங்கு நிலையினால்
தாய்க்கப் பனுக்குச் சுழல்.




அருஞ்சொற்கள்

துய்ய -  தூய்மையான ( நோயில்லாத )
சிறுகிளி -  சின்னப்பிள்ளை, பள்ளிப்பிள்ளை.
பண்ணாமோ - பொருந்துமோ, தகுமோ-  முறையோ
கடவை - வாயிலில் உள்ள தாண்டவேண்டிய தரைத்தடை.
நுடங்கு  -  முடக்கம். நோய் ஏற்படுத்தியுள்ள தடை(நிலை.)
தாய்க்கப்பனுக்கு -  தாய்தந்தையர்க்கு
சுழல் -  (  மனச்) சுழற்சி. தீர்மானிக்க இயலாமை.


இது சிங்கப்பூரின் நிலை.  நோய்த்தொற்று வருமோ
மிகுமோ என்ற அச்சம்.இதைப் பற்றிய செய்திக்குறிப்புக்கு
இங்கே சொடுக்கவும்:-

http://theindependent.sg/ong-ye-kung-urges-parents-against-keeping-their-kids-out-of-school-as-circuit-breaker-ends/

While some parents are keeping their children home despite the reopening of schools, due to fears over the risk of COVID-19 transmission, Education Minister Ong Ye Kung has asserted that keeping students home for long will impact their development.


வாழ்க்கை என்பதில்  அச்சம் ஏற்படுவது இயற்கைதான்.
ஆனால் அச்சமே வாழ்க்கை ஆகிவிட்டாலும்  
எப்படி வாழ்வோம் இனிமேல் இப்புவியில்?
ஏதாவது ஓர் எல்லையில் அச்சம் தவிர்க்கவேண்டியதுதான்.



திங்கள், 1 ஜூன், 2020

பதுங்கிடுக வீட்டில்


பரவிவிட்ட இடங்களிலே குறைவுபட்ட தென்று
பலரும்விட்ட குளறுபடிக் கூற்றுசெவி ஏற்றி
உறவினரை உறுதோழர் தமைத்தேடிச் சென்றே
ஒளிந்திருந்த நோயணுவைச்  சுமந்துவிரி கூட்டித்
திறமுணர மாட்டாத தேய்மதியால் தன்னைத்
தேறுவழி இல்லாத நோய்வாய்க்குள் தள்ளிப்
பரமனடி போய்ச்சேரும் வரம்வரவே வீழ்ந்து
பாழ்படவும் துணிவீரோ பதுங்கிடுக வீட்டில்.

( ஒரு தோழிக்குப்  புத்திமதி )


பொருள்:

பரவிவிட்ட இடங்களிலே - ( மகுடமுகி என்னும் நோய்நுண்மி (வைரஸ்) த் தொற்று விரிந்துள்ள தலங்களில், குறைவு பட்ட தென்று - அதன் தாக்கம் குன்றி விட்டது என்று,

பலரும் விட்ட குளறுபடிக் கூற்று - வதந்திகள் பரப்புவோர் வெளியிட்ட குழப்படியான பேச்சு,

செவி ஏற்றி - காதில் வர, அதை மனத்துள் மேற்கொண்டு,

உறவினரை உறுதோழர் தமைத்தேடிச் சென்றே-  சொந்தக்காரர்களையும் நெருங்கிய நண்பர்களையும்
இருக்குமிடம் கண்டு போய்ப்பார்த்து,

ஒளிந்திருந்த நோயணுவை சுமந்துவிரி கூட்டித் - தன் அறிகுறிகளை வெளியிற் காட்டாமல் உடலுக்குள் மறைவாக இருந்த கிருமிகளைப் போய் தன்னுடலில் ஏற்றிக்கொண்டு நோயின் பரவலை விரிவாக்கி,

திறமுணர மாட்டாத தேய்மதியால் - நிலைமையை ப் புரிந்துகொள்ளாமல்அறிவுக்கூர்மை இன்மையால்,

தன்னைத் தேறுவழி இல்லாத நோய்வாய்க்குள் தள்ளி- 
தன்னை, மீளமுடியாத நோய்த்தொற்றில் மாட்டிவிட்டுக்கொண்டு,

பரமனடி போய்ச்சேரும் வரம்வரவே- நோய் முற்றி மரண இடர் நெருங்கவே,
வீழ்ந்து பாழ்படவும் துணிவீரோ பதுங்கிடுக வீட்டில். - இறக்கவும் துணிச்சல் கொள்ள முனைவீரோ, வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே இருந்துவிடுங்கள்.