உலகில் சில விரைந்து வருபவை; ஓடிவரும் என்று சொல்லலாம். சில மெதுமெதுவாக வருபவை. தீமை முதலியவை வேகமாக வருகின்றனவா அல்லது மெல்ல மெல்ல வருகின்றனவா என்பதை நீங்கள் உங்கள் பட்டறிவினின்று எமக்கு விளக்கும் வல்லமை உள்ளவர்கள்.
கொடுமை என்ற சொல் வளைவு குறிப்பது. கொடியது என்றால் வளைந்தது என்றுதான் பொருள். பண்டைத் தமிழனுக்கு அறவழியே நேரியது; அதாவது வளைவு ஒன்றும் இல்லாதது. அறமல்லாதது வளைவுடையது; கோணல்மாணல் எல்லாம் அறத்தின்பால் பட்டனவாக பண்டைத் தமிழன் எண்ணவில்லை.
தனக்கு இரு கொய்யாக்கனி கிட்டினால் ஒன்றை பக்கத்து மரத்தில் வாழ்ந்தவனுடன் பகிர்ந்து உண்பது பிறனுக்குத் தருவதாகிய அறமே. அதனால் அது தருமம் என்று எண்ணினான். அறமென்பது விரிந்த பொருள் உடையது; தருமம் என்பது பல அறச்செயல்களில் ஒன்று. பிறனுக்கு ஒன்று தந்து மகிழ்வது.
தர்ம என்ற சங்கதச் சொல் அறநூல்களால் அறுதி செய்யப்பட்ட நல்லவை என்ற விரிந்த பொருளுடைமையால் அச்சொல்லின் பொருள் வேறு.
விளக்குவோர் சிலர் அறம் எனின் தருமம் என்பர். சொல்லமைப்பின்படி பார்த்தால் தருமம் என்பது பிறனுக்கொன்று அன்புடன் வழங்குவதுதான். அறத்தின் ஒரு சிறு பகுதியே அது. ஆனாலும் பெரிதாய்ப் பேசப்படுவது. ஈதல் எண்ணம் பலருக்கு இல்லையாதலால் அவ்வெண்ணம் உள்ள சிலர் புகழ்ந்து பேசப்படுவது இயல்புதான்.
அறம் : இச்சொல்லின் பொருள் வரையறுக்கப்பட்ட நற்செயல்கள் என்பது. அறு+ அம் = அறம். (வரை)அறுக்கப்பட்டவை. தருமம்: வினைச்சொல் தருதல். ஈதல், ஈதல்: ஈதல் அறங்களில் ஒன்று. ஆதலின் "ஈதலறன்" என்றார் ஒளவையார். (கொடுத்தல், தருதல், ஈதல் என்பவற்றின் பொருள்வேற்றுமை இங்கு கருதப்படவில்லை).
பிறரை மிகுந்த கொடுமையுடன் நடத்துவது என்பதுதான் கொடூரம் என்பதன் வழக்குப்பொருள், இது அமைந்த விதம்:
கொடு + ஊர் + அம் = கொடூரம்;
ஊர்தல் என்பது மெல்ல வருதல் என்று பொருள்பட்டாலும், கொடூரம் என்னும்போது மிகுந்த கொடுமை என்ற பொருளே வழக்கில் தென்படுகிறது.
"கொடூரக் கொலை" என்னும்போது கொல்வது மட்டுமன்று, ஒருவன் உடலை அறுத்து வீசுவது போலும் செயல்களைச் செய்வது என்று மிகுந்த கொடுமையைக் காட்டுகிறது இச்சொல்.
மெல்ல மெல்லக் கொடுமை செய்தல் என்று சொல்லமைப்பினால் பொருள்பட்ட இச்சொல் நாளடைவில் மிகுதியான கொடுமை செய்தல் என்று பொருள்படலாகக் காரணம், கொடுமை செய்தோர் வரவரக் கொடுமைகளை மிக்குச் செய்தகாரணமே ஆகும்.
கொடுமையில் எது மிகுதி; எது மென்மை என்பது அறிந்து சொல்வோனின் மனத்தைப் பொறுத்ததாகிறது. கொடுமையில் மென்மை இல்லை என்று சொல்வோருமுண்டு.
எனவே வழக்குப் பொருள் அமைப்புப் பொருளினின்றும் சற்று விலகி நிற்கிறது. இப்படிப் பல சொற்கள் மொழியில் உள்ளன.
கொடூரம் என்பதில் இடைநிலையாய் நிற்கும் ஊர்தல் வினை, மெல்லச் செய்தல் என்பதிலிருந்து மிகவே செய்தல் என்று மாறிப் பொருள்தரும்.
ஊர்ந்து வருவனவற்றை உடன் அறிதல் சற்றுக் கடினம் எனவே மிகுந்த கொடுமை ஆயினும் உடன் அறியப்படாத கொடுமை என்ற பொருளும் இருத்தல் சிலரால் கருத்தில் வைக்கப்படவும் கூடும்.
நிட்டூரம் ( நிஷ்டூரம் ) என்பது நெடிது ஊர்ந்து வரு துன்பம். நெட்டு+ ஊர்தல். இது பின் நிட்டு என்று முதல் திரிந்தது.
இன்னும் ஊர்தல் இடைநிலை வந்த சொற்களை ஆய்வு செய்வீராக.
மறுபார்வை செய்யப்பெறும்.