வெள்ளி, 19 ஜூலை, 2019

ரகமா இரகமா ( இரு அகமா)?

ஈண்டு ரகமென்னும் பதத்தை உன்னி உணருவோம்.

ரகமென்பது  ஆங்கிலத்தில் உள்ள "kind"  ( type )  என்ற பொருளில் பயன்பாடு காண்கிறது.

ஒரு பொருளின் தன்மை என்பது அதன் உள்ளுறைவைப் பொறுத்தது ஆகும். தேனில் உள்ளுறைந்திருப்பது அதன் இனிமை. ஒரு குறித்த கருமஞ்சள் நிறத்தில் குழம்புபோல் சற்று இறுக்கமாக இருக்கும் இளகுநிலை. அதிகம் உண்டால் தெவிட்டவும் செய்வது.

உந்து வண்டிக்கு இடும் உயர்தர உருளையெண்ணெய்   ( சிலிண்டர் எண்ணெய்) தேன்போன்ற நிறத்திலும் குழம்பு வடிவிலும் இருந்தாலும் சுவையாலும் நிறத்தாலும் பயன்பாட்டினாலும் வேறுபட்டதே.  அதன் ரகமே வேறு.

இத்தகைய பொருள் உள்ளுறைவினாலே இரகம் ஏற்படுகின்றது.

தன்மையானது பொருளுடன் இயைந்து நிற்பதால் இதனை ரகம் என்றனர்.  அகத்து இருப்பதாகிய தன்மை.

இங்கு அகமென்றது கண்ணால் அறியத்தக்க உள்ளியைபுகளும் கண்காண முடியாத, பிற பொறிகளால் அறியத் தக்கவுமான உள்ளியைபுகளும் ஆம்.

இதைக் குறிக்க எழுந்த இரகம் என்பது எளிமையுடனமைந்த சொல்லே.

இரு அகம் >  இரகம் என்று அமைத்தனர்.

நம்ம பையன் முருகன் ஒரு ரகம்;  அடுத்த ஆத்துக் கிருட்ணன் இன்னொரு ரகம்.

ஆக ரகம் என்பது வகை எனலும் ஆம்.

திராவிட மொழிகள் ஒரு ரகத்தவை;   சீனத் திபேத்திய மொழிகள் வேறு ரகத்தவை.

ரகத்தை உள்ளுறைவால் உள்ளியைபுகளால் அறிக.

அகத்தில் இருக்கும் தன்மை என்பதை மறுதலையாகப் போட்டு இரகம் என்ற சொல் அமைந்தது.

இப்படித் தலைமாற்றாக அமைந்த சொற்கள் பல பழைய இடுகைகளில் விளக்க[ப் பட்டுள்ளன.   அவற்றைப் படித்துத் தமிழுணர்வு மேம்படுத்திக் கொள்வீர். 

7.3.2020 சில தட்டச்சுப்பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன.

வியாழன், 18 ஜூலை, 2019

குணமென்னும் சொல்.

குணம் என்ற சொல்லின் அமைப்பையும் அது எவ்வாறு பண்பு என்னும் பொருளை அடைந்தது என்பதையும் தெரிந்துகொள்வோம்.

குணித்தல் என்பது இதற்குரிய மூல வினைச்சொல்.

குணித்தல் என்பது கணித்தல் என்பதன் வேறன்று.   கணி என்பது குணி என்றும் திரியும்.

ஒரு மனிதன் எவ்வாறான நடவடிக்கைகளை உடையவன் என்பதும் ஒவ்வொரு நிகழ்விலும் எப்படி நடந்துகொள்கிறான் என்பதும் பிறரால் கணிக்கப்படுகிறது அல்லது அளவிடப்பட்டு அறிந்துகொள்ளப்படுகிறது.

வாசலுக்கு வந்து உணவு கேட்டு இரந்து நிற்பவன் ஒருவனுக்கு வீட்டிலிருப்பவன் பரிந்து ஏதேனும் உண்ணக் கொடுக்கிறான். இதைப் பார்ப்பவர்கள் அவன் இரக்க குணம் உடையவன் என்று கணிக்கிறார்கள் அல்லது குணிக்கிறார்கள்.  (  கணி =  குணி முன்னர் கூறப்பட்டது.  )

குணி +  அம் =   குணம்.

அம் விகுதி சேர்க்க,  குணி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு,  குண் + அம் =  குணம்   ஆகின்றது.

குணி என்ற வினைச்சொல்லைத் தருவிக்காமல் குண் என்ற அடிச்சொல்லினின்றே குணம் என்னும் சொல் அமைதல் கூறினும் அதுவும்  ஏற்புடைத்ததே ஆகுமென்பதறிக.

எதையும் கணிப்பதோ குணிப்பதோ கண்களினால் அறிந்துகொள்வதே ஆகும். பின்னர்தான் மனம் அதை உருவப்படுத்துகிறது.  ( மனம் என்ற ஒன்று இல்லை என்பது அறிவியல் ).  உடல் முழுமைக்கும் இரத்தம் ( அரத்தம் )  என்னும் குருதியினை ஈர்த்து வெளிப்படுத்தி ஓடச்செய்யும் இருதயம் (  ஈர் + து + அ + அம் ) மனம் அன்று.   அது அரத்த ஓட்டம் ஏற்படுத்தும் ஓருறுப்பே ஆகும்.  இந்த இருதயம் என்ற சொல்லின் வினையடி ஈர்த்தல் என்பதே.  ஈர் என்பது இர் > இரு என்று குறுகிற்று.  தோண்டு >  தொண்டை,  சா > சவம் என்பன போலுமே ஆம்.

கண்களே  முதல் அறிகருவி ஆதலின்,   கண் > கணி > கணித்தல் என்று சொல் அமைந்தது.   கணித்தல்,  கணக்கு, கணிதம் என்னும் பல்வேறு  சொற்கள்  கண் என்பதனடிப் பிறந்தன அறிக.  கண் என்பதில் இகரமாகிய வினையாக்க விகுதி இணைந்து,  கணி என்பது அமைந்தது.   இகரம் இங்கனம் வினையை உண்டாக்குவது   அளைஇ,  நசைஇ  என்னும் பழஞ்சொற்களின் வாயிலாகவும் அறிந்தின்புறலாம்.

அகரத் தொடக்கத்தன இகர மாதலும்  பின்னது முன்னதாதலும் திரிபில் உளது  என்பதுணர்க.  எடுத்துக்காட்டு:  அண்ணாக்கு -  உண்ணாக்கு;   அம்மா> உ(ம்)மா.

குணம் என்பதுபோல் அமைந்ததே கணமென்னும் சொல்லும்.  கணம் என்பதற்குப் பல பொருளுண்டு.  எனினும் அடி கண் என்பதே.   அதைப் பின்னொரு நாளில் நுணுகி அறிவோம்.

குணமென்பது பல மொழிகளிலும் புகுந்து சேவை கண்ட சொல் ஆகும்.  இதுவும் தமிழர்க்குப் பெருமை தருவதே. 

தட்டச்சுப் பிழை தன்திருத்தப் பிழைகள் பின்னர் கவனிக்கப்படும்.


சனி, 13 ஜூலை, 2019

ஆரூடம் என்பதென்ன? சொல் அமைப்பும் உண்மையும்

இன்று ஆரூடம் என்பதென்னவென்று அறிந்துகொள்வோம்.

ஆர்தல் என்ற தமிழ்ச்சொல்லுடன் ஊடு, அம் என்ற பிற தமிழ்ச்சொற்களும் இணைந்து உருவான சொல்லே ஆரூடம் ஆகும்.  இவற்றுள் ஊடு என்பது துருவிச் செல்லுதல்போல புகுந்து செல்லுதலைக் குறிக்கும்.  ஊடகம் என்ற சொல்லில் இந்த ஊடு என்ற சொல் முன் நிற்பதை அறிந்திருப்பீர்கள்.  ஊடுருவுதல் என்ற சொல்லிலும் இச்சொல் இருக்கின்றது.

அம் என்பது பல சொற்களில் இறுதிநிலையாய் இருப்பதனால் அதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றோம்.

ஆர்தல் என்பதை அறியவேண்டியது அகத்தியமாகிறது.

நுகர்தல் அல்லது அனுபவித்தல்;
அன்புகாட்டுதல்
நிறைதல்
உண்ணுதல்
பொருந்துதல்
அடைதல்
குடித்தல்
ஒத்தல்
தங்குதல் 
அணிதல்

இதன் பிறவினை ஆர்த்தல் என்பது.  இது அணிதல், ஆட்டுதல், ஆரவாரம் செயல், ஒலித்தல். கட்டுதல் , பொருதல், பொருத்துதல், தொகுத்தல், ஒளிவீசுதல், மின்னுதல் என்றும் பொருள்தரும்.

மொத்தத்தில் ஆர் என்பது உயர்செயல்களைக் குறிக்கும்.  ஆரியர் என்ற சொல்லும் இதனின்று வந்ததாக பிற தமிழறிஞர் கூறியதுமுண்டு.

வந்தார், சென்றார் என்பன போலும் வினை முற்றுக்களில்  வரும் ஆர் விகுதி இச்சொல்லே ஆகும்.  ஒரு வினைச்சொல் விகுதி என்னும் தகுதி பெறுவதென்றால் அச்சொல் மொழியில் மிக்கப் பழமை தொட்டே வழங்கி வந்துள்ளது என்பது சொல்லாமலே புரியும்.  

ஆரியர் என்ற சொல் ஆங்கிலத்திலுள்ள "ஏரபல்"  என்ற சொல்லுடன் இலத்தீன்வழித் தொடர்புடையது என்று வரலாற்றாசிரியர் ரோமில தாப்பார் கருதுகிறார்.  ஏர்த்தொழில் தொடர்புடைய ஏர் என்ற தமிழ்ச்சொல்லும் ஆர் என்பதனுடன் தொடர்புடையதாய் இருந்தால் அதில் வியப்பில்லை.  ஏர்த்தொழில் ஒரு காலத்தில் மிக்க உயர்வானதாகக் கருதப்பட்ட தொழில். இதற்குக் காரணம் அது மக்களுக்கு உணவளிக்கும் தொழில். உணவின்றேல் மனிதர் மடிவர்.

ஆர் என்ற சொல் தரும் பல பொருள்களில் பொருந்துதல் அல்லது நிறைவு என்ற பொருளைக் கருதுவோம்.  ஆர  ( நிறைவாக ) ஊடு சென்று கண்டுபிடித்துச் சொல்லும் திறனே ஆரூடமாகும். ஆரூடத்திலுள்ள மூன்று  துண்டுச்சொற்களும் தமிழே ஆகும். உதாரணமாக வீட்டில் கெட்டுப்போன சாமான்`களை வைத்திருந்தால்  அவற்றிலுள்ள ஒரு மறைவான ஆற்றல் வெளிப்பட்டு நன்றாக இயங்குபவையும் கெட்டுப்போகும் என்பது ஆரூடம்.  இது சீனாவில் "ஃபோங்க்  ஸ்வே" என்று சொல்லப்படுகிறது.  இதைப்பற்றி எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. உங்கள் உந்துவண்டியின் கெட்டுப்போன பகுதிகளை அதன் பின்னடைப்பில் போட்டு வைத்துக்கொண்டிருந்தால் உங்கள் வண்டி மேலும் மேலும் கெட்டுப்போகும் என்பது  சொல்லப்படுகிறது.  இது மூட நம்பிக்கை என்று நீங்கள் நினைத்தால் நாலைந்து கெட்டுப்போன சாமான்`களை வண்டியின் பின்புறத்தில் போட்டுவைத்து ஓட்டிக்கொண்டிருங்கள்.  அடிக்கடி கெட்டுப்போனால் அது ஆரூடத்தில் ஏதோ உண்மை இருப்பதைப் புலப்படுத்தக்கூடும். இன்றிலிருந்து இதை நீங்கள் ஆய்வுசெய்யுங்கள். அப்புறம் முடிவு மேற்கொள்ளுங்கள். வீட்டில் மின்`குமிழ் எரிந்துவிட்டால் உடனே சிலர் மாற்றிவிடுவர். இதுதான் காரணம் என்று சொல்வர்.  கெட்டுப்போவதைச் சீர்ப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை ஆரூட அறிவாளிகள் சொல்கிறார்கள்.  நாம் முற்றிலும் அறியாதவையும் உலகில் இருக்கக்கூடும் அன்றோ?   அம்மையார் ஒருவர், கோவில் பூசைக்காக நூற்றைம்பது வெள்ளிகள் கேட்டார். என்னையும் சேர்ந்துகொள்ளும்படி கேட்டார்.  நான் உடனே அதைக் கொடுத்துவிட்டேன். அது அப்படி இது இப்படி என்று சாக்குப்போக்குச் சொன்னால் நாளை ஒரு சளிக்காய்ச்சல் வந்து அது செலவாகிவிடத்தான் போகிறது.  ஆகும் என்பதுதான் ஆரூடம். நோய்க்குச் செலவிடுவதைவிட ஒரு பூசைக்குச் செலவிட்டால் நன்மை விளையும் என்பதும் ஒருவகை ஆரூடமே.  கடன்பத்திரங்களைச் சேமித்து வைத்துக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தால் மேலும்  கடன்பல வரக்கூடும்.  இதுவும் ஆரூடமாகும்.

இப்போது ஆரூடம் என்பதை நன்றாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.இவற்றிலெல்லாம் சிந்தனை செலுத்தி அதை  ஓர் ஆய்வுக்கலையாக்கி உள்ளனர்.

எனவே  ஆர = நிறைவாக;  ஊடு = உள் நுழைந்து மறைந்துள்ள ஆற்றல்களை;  ----அறிந்துகொள்வதே ஆரூடம் .  அம் விகுதி என்பது முன்னரே சொல்லப்பட்டது. 

வீழ்ச்சி வருவதாயின் அது வரத்தான் செய்யும். சில முன்னறி குறிகளைக் கண்டு அவற்றை விலக்கிக் கொள்வது அறிவுடைமையே ஆகும்.

சில பொருள்கள் நிறைவலைகளை ஏற்படுத்துகின்றன;  சில பொருள்கள் அழிவலைகளை ஏற்படுத்துகின்றன.  இவை கண்காணா அலைகள். இப்போது இவற்றை உணரத்தான் முடிகிறது.  பின்னொரு காலத்தில் கண்டுபிடித்துப் பயன் பெருக்கும் அறிவை மனிதர்கள் அடையக்கூடும்.  யான்  அறியேன். இன்று நாமறிந்துள்ள பலவற்றை ஆயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்த மனிதர் அறிந்திருக்கவில்லையே.