வியாழன், 26 ஏப்ரல், 2018

சொற்களைக் கடன்வாங்குதல்.

இப்போது எல்லா நாடுகளிலும் பல இன மக்கள் குடியிருக்கின்றனர்.  இப்படிப் பல மொழியினரும் அடுத்தடுத்து வாழ்வது ஒருவகையில் உலகப் புரிந்துணர்வுக்கு முதன்மையான வாய்ப்பு என்று சொன்னால் அது மிகையாகாது.

சிங்கப்பூரில் சீன மொழி பேசுவோரே மிகுதியாய் உள்ளனர். அவர்கள் தம் மொழியைப் பேசும்போது தொலைப்பேசி, உந்துவண்டி முதலியவற்றுக்கு ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவது மிகவும் குறைவு.  உந்துவண்டிக்கு "ஹோங்க் சியா" என் `கிறார்கள்..இவர்களுக்கு ஆங்கிலச் சொல்லான "கார்" என்பது தெரியாமல் இல்லை. ஆங்கிலம் பேசும்போது கார் என்ற சொல்லைப் பயன்படுத்துவர்.

மலாய்க் காரர்களும்  உந்துவண்டிக்கு " கிரேய்த்தா"  என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.  ஆனால் தொலைப்பேசிக்கு வேறுசொல் மொழியில் இல்லாத காரணத்தால் "தலிப்போன்" என்பார்கள். எழுத்தில் எழுதும்போதும் இச்சொல் ஒலிபெயர்த்துத்தான் எழுதப்படுகிறது.  மொழியில் சொல் இல்லாதபோது அயற்சொல்லைப் பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. சொந்தமாக மொழியில் சில சொற்களை அமைக்கப் பெரிதும் இடர்ப்பட வேண்டியிருந்தால் அயற்சொற்களையே சில வேளைகளில் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் ஏற்படலாகாது.

தமிழைப் பொறுத்த மட்டில் சொந்தச் சொற்களை உண்டாக்கிப் பயன்படுத்திக்கொள்ளும் வசதி நிரம்பி வழிவதாகவே சொல்லவேண்டும்.  பழஞ்சொற்களை ஆய்ந்துகாணும்போது இவ் வசதி மிக்கத் தெளிவாகவே நமக்குப் புலப்படுகிறது.  இலத்தீன் மொழி உருவெடுத்த காலை தமிழ் நாட்டுப் பண்டிதர்கள் அங்கு சென்று தம்மால் இயன்ற உதவிகளைச் செய்திருக்கின்றனர். நன்னூல் முதலிய நூல்களைப் படித்த வெள்ளைக்காரர்கள் அதனை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தது மட்டுமின்றி இலக்கணம் எப்படி அமைப்பது என்பதையும் கற்றுக்கொண்டனர். இதனால் ஆங்கிலமொழி பிரஞ்சு முதலானவை வளம்பெற்றன. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் காணப்பட்ட இலக்கணங்களை ஒட்டியே அவர்களும் அமைத்துக்கொண்டனர்.  பாணனாகிய பாணினியும் காப்பியக் குடியைச் சேர்ந்த தொல்காப்பியரும் சொன்னவற்றிலிருந்து மொழிநூல்  என்னும் கலையையும் உருவாக்கும் ஊக்கம் அவர்களுக்கு உண்டாயிற்று.

பகுதி, விகுதி. சந்தி. இடைநிலை. சாரியை என்றும் எல்லாம் உணரும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியது.  தோன்றல், திரிதல், கெடுதல், குறைகள், மிகைகள் என யாவும் உணர்ந்துகொண்டனர்.  சுப்ரதீபக் கவிராயரின் மாணாக்கரான வீரமாமுனிவர் என்ற பெஸ்கியும் பின் போப்பையர் போன்றவர்களும் தமிழில் பெரும்புலமை பெற்றனர்.  பெஸ்கி பாடிய தமிழ் விருத்தப்பாக்கள் கம்பன் கவியின் சாயலை ஒத்து நின்று மிளிர்கின்றன.

எல்லாவற்றையும் படித்துக்கொண்டே இருந்தால் நீங்கள்தாம் புலவர்.
பிறமொழிச் சொற்களைக் கடன்பெற்று உரையாடும்  நிலையும் குறைந்துவிடும்.  ஆங்கிலம், இலத்தீன், சமஸ்கிருதம்  முதலியன படிக்கும்போது  அவ்வம்மொழிகளையே தூய்மையாகப் பயன்படுத்துங்கள்.
மலாய் பேசும்போது தமிழைக் கலக்கவேண்டியதில்லை.

எமது மலாய் ஆசிரியர்களில் ஒருவர் பின் ஓய்வுபெற்ற மலாய்மொழிப் பள்ளிக்கூடங்களின் ஆய்வகர்.  அவரிடமிருந்து தமிழனான அப்துல்லாவின்
"ஹிக்காயாட் அப்துல்லா"  முதலியவற்றையும் சில இலக்கியங்களையும் கற்று அறிந்துகொண்டேம் .  தொலைகாட்சியில் சீன நிகழ்ச்சிகளையும் மலாய் நிகழ்ச்சிகளையும் ஆங்கிலத்தையும் பாருங்கள்.

இந்தோனேஷியப் பாடகி பாரமிதா பாடிய ஒரு மலாய்ப் பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்துக் கவிதையாக எழுதியிருந்தேம்.  அது கள்ள மென்பொருள் தாக்கியதால் அழிந்துவிட்டது.  எமது கரட்டுவரைவுகளில் எங்கேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தால் வெளியிடுவேம். இந்தோனேசிய பாம்பாட்டிப் பாடகி மரணம் பற்றி ஒரு கவிதை எழுதினேம். அதுவும் காணவில்லை.

Crohn's Disease  என்பதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த நோய் உள்ள ஒரு உறவினரை மருத்துவமனையிற் சென்று கண்டேம். இப்போது அதைப்பற்றி மேலும் அறிந்துகொண்டிருக்கிறேம்.   நாம் தினமும் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
தினம் என்ற சொல்லின் அடிச்சொல் தீ என்பதுதான் என்று ஒரு தமிழ்ப்பேராசிரியர் ஆய்வுசெய்து முடித்திருந்தது இப்போது நினைவுக்கு வந்துவிட்டது.

சில வேளைகளில் பிற நாடுகளின் தளங்களிலும் சென்று பின்னூட்டம் செய்துள்ளேம். ஒரு தலைமை நீதிபதி வேலைப்பட்டியல் இடுவதில் நடத்தைக்கேடு தோன்றுமா என்பதுபற்றிய இந்தியாவில் ஏற்பட்ட வாதம் படிக்க இனிமையாகவிருந்தது.  சில தாளிகைகளில் தளங்களில் சென்று பின்னூட்டம் இரண்டு வெளியிட்டேம்.

நாம் வாழும் உலகில் பல இன மனிதர்களும் பல மொழிகளும் பல ஆய்வுக் கருத்துகளும் உள்ளன.

மீண்டும் சந்திப்போம்.

திருத்தம் பின்பு.

கச்சடா என்ற சொல்.

கச்சடா என்ற சொல் தமிழானால் அதற்கு ஒரு தமிழ் மூலமிருக்கவேண்டும். இதற்கு மூலத்தை அறியுமுன் சில தொடர்புடைய சொற்களைக் கவனிப்போம்.  சொற்களுக்கும் மூலமும் உறவு முறைகளும் உண்டு என்பதை
சில சொற்களைக் கொண்டே நீங்கள் தாமே அறிந்துகொள்ளலாம்.

கஞ்சல் என்ற சொல்: அழுக்கு, குப்பை, கூளம், எளியது ( அதாவது உயர்வு ஏதும் இல்லாதது ) என்று பொருள்படும். உலக வழக்கில் அருகியே காணப்படுகிறது. கஞ்சன் என்ற சொல் கஞ்சல் என்பதற்கு அணுக்கமாகத் தோன்றுவதாகும். இது
உலோபி,  முடவன் , குள்ளன் என்று பொருள்தருமேனும்  முன்சொன்ன பொருளிலேதான் பெரிதும் உலகவழக்கில் அறியப்படுகிறது,  கச்சா என்பது தாழ்வானது என்று பொருள்படும்.  கச்சா எண்ணெய் என்பது தூயதாக்கப்படாத கல்லெண்ணெய். (பெட் ரோல் ).   கசடு என்பது திருக்குறளில் வரும் சொல். கற்க கசடற கற்பவை என்கிறார் திருவள்ளுவர்.  கசடற என்றால் குற்றமில்லாமல், ஐயம் திரிபு அற என்று ஆசிரியர்கள் நமக்கு அறிவித்திருக்கிறார்கள்.

இனிச் சொல்லமைப்புகளைக் கவனிப்போம்:

அடிச்சொல் :  கச.

கச  -  கசப்பு   (கைப்பு, வெறுப்பு, சில மூலிகைகள்)
கச  -  கசலை   (துன்பம்).
கச -   கசனை (   ஈரம்,  காவி  இன்னும் சில)
கச -   கசாகு  ( விரோதம்,  பாம்பு)
கச -  கசாகூலம்  ( குப்பை,  கூளம், சாதிக்கலப்பு)
கச -  கசிதல்  : ( ஊறிவழிதல்,  வேண்டாத வழிதல் . இரங்குதல்  இன்னும்  )
கச -  கசமலம் ( அழுக்கு,  கெட்டது)
கச -  கசம்  ( அழுக்கு :  கசம்பிடித்தவன் )
கச -  கசமாலன்  :   (கெட்டவன் )
கச -  கசமாலி  ( மேற்படி)
கச -  கச்சம்  ( ஊற்று,  இன்னும் பல)
கச - கச்சல்  ( வெறுப்பு , கசப்பு,  ஒல்லி)
  • கச - கச்சளம்  ( இருள்)

இது இன்னும்  பல வடிவங்கள் கொள்ளும்.

கஞ்சல் என்பதும் உள்ளது. ( அழுக்கு முதலியவை).

அஞ்சுதல் அச்சம் என்றும் எஞ்சுதல் எச்சம் என்றும் அமையும்.

இவற்றிலிருந்து  ஞ்ச > ச்ச திரிபும் உணரலாம்.

பெரும்பாலும் கச என்பது வெறுப்புக்குரியதைக் குறிக்கிறது.

கச + அடை = கச்சடை >  கச்சடா  என்றாகும்.

அடு > அடை.
அடு > அடா.  ( ஆ விகுதி ).

கச்சல் என்பதனுடன் தொடர்புள்ள சொல்.

கச்சடா என்பது அடர்வான அழுக்குப் படை என்று பொருள்.

சில சொற்களே தரப்பட்டன.  வேறொரு சமயத்தில் மற்றவை அறிவோம்.

kasa  original meaning:   bitter.  Note:  cha > sa softening pronunciationwise 
kasa  derived meaning:  something detestable.  not likable.
To note:  jcha > chcha  word corruption. eg:  anjchu > achcham.

Extra dots inserted by hacker have been removed.
Will review

புதன், 25 ஏப்ரல், 2018

சிங்கப்பூர்க் கரடி நோத்துயர் மறைவு

பாவம் துருவம்  ஒருவிப் பிறந்த
காவல் மிகுந்த துருவக் கரடி.

செய்பனிச் சூழலில் செம்மை செழிக்க
உய்வுற வளர்ந்த ஒண்மை வளர்ப்பு!

இருபத் தேழு எழில்நல் ஆண்டுகள்
அரும்பதிச் சிங்கை விலங்கியல் தோட்டத்துச்

செல்லக் கரடியாய்ச் சீர்பெறு வாழ்நாள்
உள்ளுதொ றினிக்கத் துள்ளும் துடிப்புடன்

தந்து  நிறைத்தது  தாழ்விலா வாழ்வதே.
உந்திப் பலருளம் உவகையில் மேற்செல

மங்கையர் சிறுமகார் மாணுடை ஆடவர்
சிங்கையர் யார்க்கும் சேர்த்தது மாற்றம்.

நன்மருத் துவர்கள் நாடி அரில்தபப்
பொன்மனங்  கொண்டு பொருத்திய முடிவால்

தானியற் கைதனை வீண்வலி அகற்ற
மேனிலைப் படவே எய்தி மறைந்தது.

இருக்கலாம் இனியே பெருக்குறு நோயுடன்
உறுத்தும் மாத்துயர் மலையுயர் வருத்தம்.

என்றினிக் காண்போம் இனுக்காக் கரடியே?
மென்றுணை புரந்தாய் நீயே
நன்றினி நினைத்துப் புலம்புவ தன்றியே.

 அரும்பொருள்:

துருவக் கரடி :   polar bear
ஒருவி :  விலகி,  நீங்கி.
This bear was Singapore born.
செய்பனி : செயற்கைப் பனிச் சுற்றுச்சார்பு.
உய்வுற :  மேலோங்கும்படி
ஒண்மை : ஒளி பொருந்திய தன்மை
அரும்பதி :  அழகிய நகரம்
உள்ளுதொறு இனிக்க: நினைத்தாலே இனிமை
 சேர்க்கும்படி
மாற்றம் : வாழ்க்கையில் மாற்றம்.
அரில் தப -  ஒரு குற்றமும் இன்றி;
பெருக்குறு நோயுடன்:  நோய் மிகும் நிலையில்
மாத்துயர்: பெரும் துன்பம்.
இனுக்கா : கரடிக்கு வைத்த பெயர்.
மென்றுணை:  மெல்லிய துணை.


https://www.straitstimes.com/singapore/singapore-zoos-inuka-the-polar-bear-put-down-at-27-on-humane-and-welfare-grounds