ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

பனம்பாரனார்

இவர் தம் இயற்பெயர் அறிகிலேம்

இந்தப் பெயரே மிக்க அழகான பெயர்.  அதாவது பனை மரங்கள் மிகுந்த பரந்த நிலப்பகுதியினின்றும் போந்தவர் என்று பொருள்படுகின்றது. காரணப்பெயர்,
இவர் தொல்காப்பிய நூலுக்கு ஒரு பாயிரம் தந்துள்ளார்.  பாயிரம் எனின் முன்னுரைபோல் தரப்படும் ஒரு பாடல். தொல்காப்பியத்துக்கு நாம் போய் அப்படி ஒரு பாடலை எழுதமுடியாது, தொல்காப்பியரை அறிந்த இன்னொரு புலவர் ,  அவருடன் படித்த இன்னொரு புலவர்தான் அதைச் செய்யக்கூடும். யார்யார் பாயிரம் தரலாம் என்பதற்கு இலக்கணம் இருக்கின்றது,

பர > பரத்தல்.  விரிவாதல்.
பரம் : கடவுள்,  எங்கும் பரந்திருப்பவன்,
பரம்பொருள் :  கடவுள்>
பரம்>  பரன்.

சிற >  சீர் என்று முதனிலை நீண்டு பெயராகும்.  ரகர றகர வேறுபாடு
இங்கு தள்ளுபடி,

பனை பழம் : பனம்பழம் போல பனை பார் =  பனம்பார் ஆனது,
அன் விகுதி சேர்ப்பின் பனம்பாரன்1   ஆகும்,

1. Error rectified.   Reason for error unknown.  Original draft did not have this error.


சனி, 29 ஏப்ரல், 2017

கரப்பான்பூச்சி

கரப்பான்பூச்சிகளையும் கடவுள்தான் படைத்தார்.  ஆனால் ஏன் படைத்தார் என்று புரியவில்லை. வீடுகட்குள்  வந்தேறி பலவிதப் பொருள்கேடுகளையும் விளவிக்கின்றன. இவற்றை அவர் படைக்காமல்
இருந்திருந்தாலும் ஒன்றும் மோசமில்லை என்கிறார்கள்.

இரு பெண்கள், அவர்களில் ஒருவர் ஒரு பிள்ளையைத் தூக்கிக்கொண்டு
மருத்துவரின் கடைக்குச் சென்றுகொண்டிருந்தனர். பிள்ளை அழுது கத்திக்கொண்டிருந்ததால், அதை எப்படி அமைதியாக்குவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சட்டென்று ஓர்  ஓரப் பொந்திலிருந்து
ஒரு கரப்பான்பூச்சி அங்கு வந்துவிட்டது. அந்தப் பெண்களில் ஒருவர், உடனே: " பார், கரப்பான் பூச்சி வந்துவிட்டது, நீ இன்னும் கத்தினால்
வந்து கடிக்கும்" என்றார். உடனே பிள்ளை அடங்கிவிட்டது. இதைக்
கவனித்துக்கொண்டிருந்த யான், " கடவுள் ஏன் கரப்பான் பூச்சியைப்
படைத்தார்  என்று இப்போது புரிந்துவிட்டது"  என்று அருகிலிருந்த‌
தோழியிடம் சொன்னேன். இதுதான் காரணமாக இருந்தாலும் இருக்கலாம்.

நிற்க, கரத்தல் என்றால் ஒளித்தல். கரப்பு என்பது ஒளிந்திருத்தல்
என்று பொருள்தரும். இந்தப் பூச்சிகள் பெரும்பாலும் ஒளிந்துகொண்டு
இருளில் வாழ்பவை. இரையை, நீங்கள் உறங்கச்சென்றபின் வெளிவந்து அலைந்து  தேடும். ஆனுதல் என்பது நீங்குதல்
என்று பொருள்தரும். கரப்பு = ஒளிந்திருந்து, ஆன் = நீங்கிவரும், பூச்சி =~  என்பது பொருத்தமாக உள்ளது.

கரப்பான் என்று ஒரு தோல்நோய் வகையும் உள்ளது; ஆனால் இப்பூச்சிக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

வேண்டாதவற்றைத் தின்று அப்புறப்படுத்த இவற்றைப் படைத்தான்போலும்.  ஆனால் வேண்டியவற்றையும் இவை கெடுத்துவிடுகின்றன.



வெள்ளி, 28 ஏப்ரல், 2017

உரொட்டிக் கடைகள்


பழங்காலத்தில் (அதாவது இரண்டாம் உலகப் போரின் முந்திய காலத்தில் ) உரொட்டிக் கடைகள் வைத்திருந்தவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானியர்கள் என்று தெரிகிறது. சிங்கப்பூரில் அவர்கள் நடத்திய‌  சுடுமனைகள்(bakeries)பலவிடங்களில் முன்னிருந்திருப்பினும் இப்போது அவை மூடப்ப்பட்டு அவ்விடங்கள் வேறு கடைகளாகவோ அடுக்குமாடி வீடுகளாகவோ மாறிவிட்டன. அவர்களில் பலர், பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டனர் அல்லது அவர்களின் பின்னோர் வேறு தொழிலர்கள்
ஆகிவிட்டனர்.

ஜொகூர்பாருவில் ஜாலான் டோபி என்னும் வீதியில் இன்னும் ஒரு கடை இருக்கிறது. இங்கு இன்னும் பழைய காலப் பாணியில் உரொட்டிகள் மற்றும் கறியுப்பிகள் (CURRYPUFFS) சுட்டு விற்கிறார்கள். யாம் சைவ‌ உணவினியாதலின், வெறும் உரொட்டியை இங்கிருந்து வாங்கியதுண்டு.

உரொட்டி சுடும் தொழில் இப்போது பெரிய குழும்பினர்களில் companies கைகளில் சென்றுவிட்டபடியால் பாக்கிஸ்தானியர் கடைகள் ஒருசில‌ மலேசியாவின் நகரங்களில் ஆங்காங்கு இருக்கலாம். இவர்கள் விட்டுப்போன இத்தொழிலைச் சில சீனர்கள் தொடர்ந்து வருகின்றனர். 

உரட்டி என்பது ஒருவகை அப்பமாகும். இதிலிருந்து திரிந்து ரொட்டி என்ற சொல் அமைந்தது என்பதை 2009க்குப் பின் வெளியிட்டு விளக்கமும் கொடுத்திருந்தோம்.1


ஓர் உருவாக அட்டு எடுத்தலால் அது உரு+ அடு + இ = உரட்டி ஆனது. 2 அடு என்பது இகரத்தின்முன் இரட்டித்தது. அட்டாலும் என்றால் சுட்டாலும் என்று
பொருள். அட்டு = சுட்டு (எச்சவினை). ஓர் உருவாகப் பிசைந்துகொண்டு சுடுதட்டில் ஒட்டி வேகவைத்து எடுப்பதாலும் உரு+ஒட்டி = உரொட்டி என்றாகி, தலையிழந்து ரொட்டி என்று வழங்கிற்று. இது பின் பிறமொழிகளிலும் பரவியது தமிழின் திறத்தை நமக்குக் காட்டுவதாகும். சொற்களை அமைக்க ஏற்ற எளிதான மொழி தமிழே ஆகும்.


சொல்லமைக்க வகர யகர உடம்படுமெய்கள் தேவையில்லை யாயின.


சொல்லமைந்த விதம் இங்ஙனமாக, பிரட் என்ற ஆங்கிலச்சொல், புரு (வடித்தெடுத்தல்) என்பதிலிருந்து வந்ததாக ஆய்வாளர் கருதுகின்றனர்.
ஐரோப்பிய மொழிகள் பலவினும், பர, ப்ரு என்றுதான் உரொட்டியின் பெயர்
தொடங்குகிறது.


புரத்தல் என்ற தமிழ்ச்சொல்லும் புர என்றபடியே தொடங்குகிறது. புரட்டுதல்
என்ற சொல்லும் புர என்றே தொடங்குகிறது. அவ்வராய்ச்சியாளர் இவற்றை
அறியாமையால், இவற்றைக் கருத்தில் கொண்டிலர். பலவகை அப்பங்களையும் புரட்டிப்போட்டுத்தான் சுடவேண்டியுள்ளது. இதிலிருந்தும் புரு என்ற மூலச்சொல் முளைத்திருக்கலாம் என்பதை அவர்கள் ஆராயவில்லை.

புரட்டா என்ற சொல்லும் இங்ஙனம் அமைந்ததே. பரோடா என்ற பாக்கிஸ்தான்
நகரத்தில், புரட்டா என்ற ரொட்டி இருந்ததில்லை என்று அறிந்த பஞ்சாபியர்
கூறுவதனால் அது அங்கிருந்து வரவில்லை. புரட்டா என்பது பஞ்சாபியர்
உணவன்று என்று அவர்கள் கூறுவர். பரோடாவிலிருந்து வந்ததனால் அது
பரோடா என்று பெயர்பெற்றதெனில், அது இங்கு வருமுன் அதற்கு அங்கு
என்னபெயர்? இவ்வகை ரொட்டிகளை ஆக்கியவர்கள் நம் தென்னிந்திய‌ முஸ்லீம்களே. அதை அவர்கள் ஆக்கியவிடம் சிங்கப்பூர் மலேசியா ஆகும். இங்கிருந்து அது இந்தியாவிற்குப் பரவிற்று. ஆனால் சிங்கப்பூர் ஜுபிளி உணவகம் உண்டாக்கிய மரியம் ரொட்டி பரவாது போய்விட்டது. இறைச்சி பெரட்டல் (புரட்டல்), கோழி பெரட்டல் என்றெல்லாம் சிலர் உண்பதனால், புரட்டுதல் உணவுவகையுடன் தொடர்புடைய சொல்லே ஆகும்.

------------------------------

அடிக்குறிப்புகள் :

1.   அவை அழிவுண்டன. இரண்டு உலாவிப் பொருத்திகளில் மென்பொருள் நிபுணர்களைக் கொண்டு மாற்றங்கள் செய்து எங்கள் உலாவியுடன் இணைத்து, அவை ஒவ்வொரு முறையும் யாம் உலாவியைப் பயன்படுத்தும்போது பல இடுகைகளையும் அழித்துவிட்டன. இவைகள் எதிரிகளால் செய்யப்பட்ட தாக்குதல்கள். கணினிக்குள் இருந்தவையும் பல‌
அழிந்தன.

2.   மாவை உருட்டிச் சுட்டுச்  செய்யப்படுவதால்   உருட்டி > உரட்டி >  ரொட்டி
என்பது இன்னொரு விளக்கம் .

3    புரத்தல் -  பாதுகாத்தல்.  உடலைப் பாதுகாத்தல் . புரதச் சத்து  என்பதில்
புரத்தல்  என்னும் சொல்  காண்க . 

will review and reedit