திங்கள், 17 ஏப்ரல், 2017

யானை கட்ட ஆலானம் வேண்டும்.

ஆலானம் என்ற சொல் இப்போது இயல்பான வழக்கில் வருவதில்லை என்றாலும்  ஆனை (யானை)ப் பாகர்கள் அறிந்த சொல். பிறருக்கு ஆனையினுடன் வேலைத்தொடர்பு ஒன்றும் இருப்பதில்லை ஆகையால் அவர்கள் அறிந்திரார்.

யானை கட்டும் கயிற்றுக்கு ஆலானம் என்று பெயர்.மெதுவாக‌
முயற்சி செய்து யானைகளைக் கட்டிவைப்பவர்கள் பாகர்களே.

யானை கட்டும்போது கயிற்றைக் கொஞ்சம் அகலவிட்டுக்
கட்டவேண்டும், அது பெரிதாகையால் கொஞ்சம் நடமாட‌
இடம்விட்டுக் கட்டுவர். ஆகையால் ஆலானம் என்ற சொல்லில்
முன் நிற்பது "ஆல்" என்பது.

ஆல் என்பது அகல் என்ற சொல்லின்  திரிபு.

அடுத்த சொல் ஆனை என்பது. இது ஐகாரம் கெட்டு. விகுதி
முன் "ஆன்" என்று  நின்றுவிட்டது.

ஆகவே ஆல்+ஆன்+ அம். இறுதி அம் என்பது விகுதி. இது
"ஆலானம்" ஆகிறது.

அரசரின் காலங்களில், யானைகள் மிகுதியான இருந்து,
யானைப் படையில் சேவை புரிந்தன. அப்போது இந்தச் சொல்
புழக்கதில் இருந்திருக்கும். தேவையான சொல்லாகவும்
இருந்திருக்கும். காலம் மாறி, பழைய அரசர்காலமும் போய்,
யானைகளை விலங்கு காட்சிசாலைகளில் காண நேர்கின்ற‌
இக்காலத்தில், இது பழம்பாடல்களில் வரும். அப்போது பொருளை
உணரலாம்.

புதிய சொற்களைப்  படைப்போர்,  இதில் கையாண்ட முறையைக் கைக்கொள்ளலாமே.  அதற்காக இதை அறிந்துகொள்ளுங்கள் .

யானை கட்ட ஆலானம் வேண்டும்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

"ஞாலம்." எப்படி வந்தது?

ஞாலம்.

ஞாலம் என்பதற்கு உலகம் என்பது பொருள்.

இந்தச் சொல் எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம்.

ஞாலுதல் என்பது தொங்குதல் என்றும் பொருள்தரும். இதிலிருந்து
உலகம் என்று பொருள்படும் சொல் ஏன் வந்தது?

சிலர் உலகம் உருண்டையானது அல்லது வட்டவடிவம் உடையது என்று நினைத்தது போலவே வேறுசிலர் அது அண்டவெளியில்
தொங்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தார்கள். அதனால்
ஞால்+ அம்= ஞாலம் என்று ஒரு சொல்லால் உலகத்தைக் குறித்தனர்.

ஞாலம் என்பது வழக்கில் உள்ள சொல்லாகும்,

நீலம் (  நீலவானம் ) என்று ஒரு பாட்டெடுத்தால், அடுத்து
ஞாலம் ( ஞாலமீதில் ) என்று எழுதப் பொருத்தமான சொல்லாகும்.

ஞால என்பது தொங்க என்று பொருள்தரும்.


-------------------------


==============

ஞாலுதல் என்பது நாலுதல் என்றும் திரியும். நாலுதலும்
அதே பொருளை உடையது. தொங்குதல் என்பதே பொருள்.
நாலுதல் என்பது நாலல் என்றும் வரும். இந்த நாலுதலில்
உள்ள நால் என்ற அடி சி விகுதி பெற்று  நாற்சி என்றும் வரும்.
சி என்னும் விகுதி தொழிற்பெயரில் வருதற்கு இதுவும் ஓர் உதாரணம். (உது+ஆர்+அணம்). நாலுதல் தன்வினை; அது பிறவினையாக நாற்றுதல் என்று ஆகும். (  நால்+து+தல்).எனின்
தொங்கவிடுதல்.

நானிலம் என்பது பூமியைக் குறிக்கும். இதற்கு,  ஐந்து வகை நிலங்களில் பாலை நீங்கிய பிற நான்குமே சிறப்புடையது என்பதால் இவற்றை உள்ளடக்கி " நானிலம் " என்ற சொல் அமைந்தது என்பர்.
(  அறிஞர் க. ப. சந்தோஷம் ( மகிழ்நன் ) ).  எனினும் நால்+ நிலம் என்பது தொங்கு நிலம் என்றும் பொருள்கொள்ளும் என்பதறிக. இப்படி
நோக்கின், ஞாலம் என்பதே அதற்கும் பொருள் ஆகும்.

பூணூல் என்பது தோளிலிருந்து தொங்குநூலாதலால், அதற்கு நானூல்
என்றும் பெயர்.

நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய காலத்தில்
மூன்று ஆரிய வேதங்களே  (ஆரிய, சிறந்தோர்; அறிவாளிகள் ). நான்காவது இன்னும் எழுதப்படவில்லை. அல்லது புனையப்படவில்லை.  எனினும் நானூலாரால் பயலப்பட்டமையின்
நான்மறை என்றனர்.  எனினும் குலை முதலியன ஒன்றாய்த் தொங்குவதுடையது.  தொகு (தொகை நூல் ) என்பது இடைவிரிந்து
தொங்கு ஆகும்.  பின்னர் நான்காகி   எண்ணிக்கை  நிறைவு பெற்றது.




‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍



சனி, 15 ஏப்ரல், 2017

ஆலானம் கொண்டே அடித்துப் பிணைத்தாலும்

ஆலானம் கொண்டே  அடித்துப் பிணைத்தாலும்
கோலானைத் தான்திருப்பிக் குத்தவரும் ‍‍‍==== கேளாக்
கொரிய வடக்கினர்க்குக் கோதில் அமைதி
தெரியுவழி தேர்ந்து செயல்.


ஆலானம்: இச்சொல்லின் விளக்கம் இங்கு வெளிவரும் . 
இது யானை காட்டும் கயிறு.

கோலான்:  கோல் பிடித்திருப்போன்.

கொரிய வடக்கினர் : வடகொரியர்.

கோதில்: குற்றம் இல்லாத.