சனி, 4 ஏப்ரல், 2015

உபத்திரவம்

இனி உபத்திரவம் என்ற "சமஸ்கிருதச்" சொல்லை   ஆய்ந்தறிவோம்.

முதல் வேலையாக இது சமஸ்கிருத அகரவரிசையில் உள்ளதா என்று பார்த்தல் கடனாகும்.

எமக்குத் தெரிந்தவரை   நாம் கருதவேண்டிய "உபத்ர...."  எனல் தொடக்கத்துச் சொற்கள் இரண்டே  அகரவரிசையில்  உள்ளன.  அவை வருமாறு:-

1 உபத் ர ட் .
2 உபத்ற்ண்ய 

உபத்ரட்  என்பது  துளைத்தல் என்று பொருள்படும்.   இதிலிருந்துதான் வந்திருக்குமோ?  காலை கையை உடலை. மனத்தைத் துளைக்கின்ற விடயம் என்கிற பொருளில்  நேரடியாகக் கடன்பெறாமல், அதிலிருந்து பொருள் பெறப்பட்டு  அமைந்த சொல்லாய் இருக்குமோ?

உபத்ரண்ய என்பது பாம்பு குறித்தது.  பம்புபோல் நெளியும் விடயம் என்றபடி வந்திருக்குமோ? அப்படியானால் அது இன்னும் வந்துசேராத உபத்திரவத்தைக் குறித்திருக்குமோ?  இது பொருத்தமில்லையே!

சமஸ்கிருதத்தில் "உப" என்பதன் பொருள் இருக்கட்டும்.  தமிழைப் பொறுத்தவரை,  உவ-  என்றால்  முன்னிருப்பது.  இது உகரச் சுட்டடிச் சொல்.  ஆனால் உது,  உவன் என்பன இலக்கண நூல்களில்மட்டுமே கணப்படுவது .  வழக்கொழிந்துவிட்டது.

ஆனால் அது அவன், இவன் இது என்பன இன்னும் உள்ளன. சுட்டுக்கள் மூன்று, அவை அ, இ, உ ஆகும்.

உபத்திரவம் என்பதில் திரவம் என்பது உண்மையில் துருவுதல் என்னும் வினையிலெழுந்த துரவம் ஆகும்.  துருவு> துருவு + அம் = துரவம்  (ரு >ர  திரிபு ) ஆம்.   துருவம் என்பது அதே அடிப்பிறந்த இன்னொரு தொடர்புடைய சொல் ஆகும்.

ஆக,துருவு+அம் = துருவம்  (இதில் "வு " என்பதன் உகரம் கெட்டது .)
துருவு+ அம்  = துருவம் >  துரவம் > திரவம் . முழுச்சொல்லின் பகுதியாய் வருகையில்  துருவம் என்ற பகுதிச்சொல்  இத்திரிபுகளை அடைந்தது. 


 உவ + துருவம் =  உவத்துருவம் > உவத்திரவம்> \
 உவத்திரவம்    என்றால்  உங்கள் முன் தோன்றி உங்களைத் துளைக்கும் துன்பம்

ஏனைச் சொற்களைப்  பிரித்தல் போல்   உப + திரவம்  என்பது  பிறழ்பிரிப்பு ஆகிவிடும்.   அப்படிப் பிரித்தால்  கிடைக்கும்  பொருள்  supporting liquid என்பது. அது பொருளன்று. .

உவத்  துருவு  :இதுவே சமஸ்கிருதத்தில் உபத்ற்ட்  என்று திரிந்து நிற்கின்றது.

பேச்சு வழக்கில்  ஒவத்திரியம் என்றும் வழங்கும் 

----------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
ப - வ  திரிபு:  என் முன் இடுகைகள் காண்க.   உப = உவ. இந்த உப என்பது  "துணை"  என்னும் பொருள் உடையதன்று.

துருவுதல் =  துளைத்து வெளிப்படல்.

இது பேச்சு வழக்கிலிருந்து சங்கதம் சென்றது.  மிகத் திரிந்துவிட்டது.

வியாழன், 2 ஏப்ரல், 2015

பரிதியும் நிலவும்


பரிதிலீ  குவான்யூவும் மறைந்த போதும்
பாரிலொளி ஏற்றொளிரும் நிலவாய் நின்றார்
அரிதினீ டுலகுபெறு செல்வ மான
அவர்பெற்ற நன்மகனார் என்றால் உண்மை
சுருதியோ டிழைகின்ற இலயம் போலும்
சூழ்தருவ தனைத்தும்நன் கிணக்கிச் செல்வார்
கருதியோர் சிங்கையுல கின்முன் செல்லும்
காண்பரொரு நாடிதனில் ஐய முண்டோ.

அரும்பொருள்:


பாரில் ஒளி  ஏற்று ஒளிரும் :  அச் சூரிஅனின் ஒளியைப் பெற்றதனால்  குளிர்ந்த  ஒளி வீசுகின்ற;

நிலவாய் நின்றார் : அரசியலில் ஒரு மதியாக நிலை கொண்டார்.

அரிதின் ஈடு உலகு பெறு:  உலகம் அரிதாக  ஈடாக ப் பெறுதலை உடைய

கருதியோர் :  சிந்தனை செய்வோர்

சிங்கை உலகின்முன் செல்லும் நாடு; கருதியோர் இது காண்பர்; இதில்  ஐயம் உண்டோ என்றபடி மாற்றுக

புதன், 1 ஏப்ரல், 2015

ராஜ ராஜன் படை -சதுப்பு நிலத்தீவான சிங்கப்பூருக்கு

(Numbers refer to footnote numbering)

சுமத்திராவில் பாலிம்பாங்கில்  வெற்றியை  ஈட்டியபின்  இராஜராஜனின்  படையணி ஒன்று சதுப்பு நிலத்தீவான  சிங்கப்பூருக்கு வந்து கரை தொட்டது.  அந்த அணியின் தலைவன்  நீல உத்தம சோழன்.   இவன் ஓர்  அழகிய மலாய்ப் பெண்ணைக் கட்டிக்கொண்டு இங்கேயே  தங்கிவிட்டான் என்கிறார்கள். 1  மலாய் வரலாற்றில் Sang Nila Utama   'பணிதற்குரியவர்".  ( சங்க் )  2

சதுப்பு நிலங்களை மீட்கும்பணி  கிழக்கிந்தியக் குழும்பின் (கம்பெனியின்)  காலத்திலிருந்து சிங்கையில்  நடைபெற்றுக்கொண்டு வந்திருக்கிறது. 1950-வாக்கில்  கொலம் ஆயர் பகுதியில் ஒரு பேரடுப்பு  (Incinerator)  இருந்தது.  நகரத்தில் எடுக்கப்படும்  குப்பைகள் இங்கு கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டு அவற்றின்  சாம்பலை அடுத்திருந்த  சதுப்பு நிலங்களில்  கொட்டிக்கொண்டிருந்தார்கள்.  இந்த அடுப்பு தொடர்பான வேலைகளில்  ஈடுபட்டோர் பலர் அருகிலுள்ள சிற்றுரில்  (kampong) தங்கள் குடும்பங்களுடன்  வாழ்ந்தனர்.  கோழி, ஆடு, மாடு முதலியவற்றையும் வளர்த்து வந்தனர்.  நாளடைவில் இந்த சதுப்பு நிலம் மீட்கப்பட்டது.

நில  மீட்பு நல்லதுதான்.  அங்கு நண்டு மீன் பிடித்து  குழம்பு வைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த பல குடும்பங்கள் அருகில் இருந்த மெக்பர்ஸன்  சந்தையில்  இவற்றைக்  காசு கொடுத்து வாங்கவேண்டிய தாயிற்று.  ஆண்டு:  1952.

வளர்ச்சிக்கும் ஒரு விலை கொடுக்கவேண்டுமே !

தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் படிக்க மெய்யப்ப செட்டியார் சாலையில் உள்ள பள்ளிக்குப் போகவேண்டிய திருந்தது.  அந்தப்பகுதிக்குத் தமிழர் :  மண்ணுமலை என்றனர். மலய் மொழியில் "போத்தோங்  பாசிர்." 3  அங்கு ஓடும் ஆற்றுக்குச் செங்கமாரி ஆறு என்றனர். ஆங்கிலத்தில் காலாங் ரிவர். (Not a translation of the term "SengkamAri"). மண்ணுமலைப் பகுதியில் எருமைகள் குளிக்க நல்ல வசதிகள் இருந்தன.

அப்போதும் அப்பர் சிராங்கூன்  சாலை  வண்டிகள் அதிகம்  ஓடும்  சாலைதான்.
இப்போது இங்கு மின் தொடர்வண்டி  நிலையம்  உள்ளது.
(அறிந்தோர்வாய்க் கேட்டு எழுதப்பட்டது.)


------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:

1.  இதை ஒரு சீனச் செய்தியாளர்  தம் ஆங்கிலக் கட்டுரையில்  குறிப்பிட்டு
எழுதியது  நினைவிற்கு வரும்.  (சிங்கப்பூர்  வானவூர்தி 1ஒன்று பாலிம்பாங்க்
(சுமத்திராவில்) விழுந்து நொறுங்கியபோது.  பாலிம்பாங்குக்கும்  சிங்க்கப்பூருக்கும்  தொடர்பு  நீங்கவில்லை  என்பதாக  எழுதியிருந்தார். )

2.  சங்க்  :  சம்ஸ்கிருதம் - சாந்த்   saint.  "Sant Fateh Singh"  :  this usage of the word can be a modern example.
There was a Malay Secondary School in the name of  Sang Nila Utama.

3  மண்ணுமலை .     Potong -   வெட்டு,   பாசிர் =  மணல்.   மண்ணுமலை என்பது
மக்கள் மொழிபெயர்ப்பு. மலாய்த்  தொடருக்கு  "மணல்வெட்டி  மலை" என்று பொருள்.  இங்கு அமைந்த  புது நகரில்தான்  "சிவ துர்க்கா  ஆலயம் "  உள்ளது,
4 செங்கமாரி  ஆறு  இப்போது தூய்மைப் படுத்தப்பட்டு  அழகு பெற்றுள்ளது.  எருமைகள்  போய் வெகு  காலம் சென்றுவிட்டது.
ஆ ற்றில் மீன் உண்டு என்கிறார்கள்.

Recommended reading for old history of Malaysia and Singapore

மலாயா   தேச சரித்திரக் காட்சிகள்:.   பிரமச்சாரி  கைலாசம் ,  இராமகிருஷ்ண  மடம்  வெளியீடு.