கீழுள்ள அதிகாரி ஊழல் செய்து
கிளறியது மேலெழவே வழியில் லாமல்
வாழில்லம் வளம்பண்ணிச் செல்வான் ஆயின்
வாய்மைதனை வேண்டுவதும் வெற்றுப் பேச்சாம்!
மேலுள்ள மந்திரியின் கண்ணில் பட்டு
மிதிபட்டு மடியாத கலையில் வல்லான்
நூலுள்ளும் நீதிக்கும் பிறழ்ச்சி தந்து
நுனிக்கொம்பில் கொடிகட்டிப் பறக்கக் கண்டீர்.
மந்திரியும் எதை எதைத்தான் பார்த்துக் கொள்வார்
மாண்புமிக்க அவருக்கும் தோன்றா வண்ணம்
தந்திரரும் கையூட்டில் ஊன்றிப் பெற்றால்
மந்திரியின் தலைக்கன்றோ போகும் கல்லும்?
மந்திரியும் என்செய்வார்!மக்கள் சேர்ந்து
மாற்றிடலாம் மந்திரியை!ஊழல் செய்த
தந்திரியை மாற்றிவிடத் தக்க பாதை
தந்திடுமோ அமைப்பாட்சிப் போக்குத் தானே
நூல் உள்ளும் = சட்ட நூல்களின் படி செல்கின்ற.
உள்ளுதல் = எண்ணுதல்,
தந்திரர் என்றது தந்திரம் உடைய ஊழல் பேர்வழிகளை. தந்திரி என்றும் வரும்.
மந்திரிக்குத் தேர்தல் வருகிறது கீழதிகாரிக்குத் தேர்தல் இல்லையே என்றபடி