அரசவைகளில் அரசு போற்றும் அறிஞர்கள் சிலர் இருந்தனர். இவர்கள் அறம் எது, அறம் அல்லாதது எது, செயற்பாலது எது, செய்யாது நீக்கத் தக்கது எது என்று யாவருமறிய விளம்பினர். இவர்களில் நாவு,"அறம் கரை நாவு" என்று சொல்லப்பட்டது. இவர்கள் ஒரு வகையில் சொற்பொழிவுகள் செய்து. கேள்விக்குப் பதில் எடுத்துரைத்திருக்கலாம்.
கரைதல் - எடுத்து உரைத்தல். கரைதல், ஒலித்தல் என்னும் கருத்து அடிப்படையை உடைய சொல்.
அறம் என்பது ஒன்று. மற்றபடி, பொருள், இன்பம், வீடு என்ற துறைகளும் உண்டு. அவற்றைப் பற்றியும் பேசுவதுண்டு. ஆனால், அறமே பெரிதும் பேசப்பட்டது என்று தெரிகிறது. அதுவே சிறப்பு உடையதாயிற்று.
அறங்கரை நாவினரே இந்த நான்கு துறைகளையும் கவனித்து ஆலோசனை வழங்கி வந்தனர்.
அத்தகைய ஒருவரே அதங்கோடு ஆசான்.
அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றுள், அறம் முன்னுரைக்கப் பட்டதால், பொருள்,இன்பம், வீடு என்பன தொடர்வன ஆகும்.
இவற்றைக் கூறும் நூல்கள் மறைகள் எனப்பட்ட ன . பிற அரிய நூல்களும் மறைகளே. இசை நூல், இசை மறை ஆகும்.
தொல்காப்பியப் பாயிரம், அதங்கோடு ஆசானைப் பற்றி நமக்குத் தெரிவிக்கின்றது.
அதங்கோடு > திருவதங்கோடு > திருவாங்கூர் என்பர் சிலர். அன்று, அது வேறொன்று என்பாரும் உளர்.
இவ்வூர் கேரளாவில் உள்ளதென்பர்.