வெள்ளி, 12 செப்டம்பர், 2025

அதிருஷ்டம் என்பதன் தமிழ்மூலம்

 அதிருஷ்டம்  என்ற சொல் எப்படிப்  புனைவுண்டது என்று இன்று தெரிந்துகொள்வோம்.

திருஷ்டம் என்ற ''வடசொல்''  தெருள் என்று வழங்கிற்று.   இதன் அடி,  தெர் என்பதுதான். 

தெர் >  தெரி.

தெர் + உள் >  தெருள்.   உள் என்பது ஒரு விகுதி.  கடவுள் என்பதிற்போல   : ( கட + உள்).  இயவுள் என்பதிலும் உள் விகுதி இருக்கிறது.    ஆ + உள் >  ஆயுள் என்பதில் உள் விகுதி என்று பொருள்.  ''  ஆகிவிட்ட ( ஓடிவிட்ட)  காலம்'' என்பது பொருள். வேறு பொருண்மைகளும் பொருத்தப்படலாம்.  

தெருள் என்று சொல் அமைந்தபின்பு,  இது வினைச்சொல்லாய் ''  தெருளுதல்''  என்ற வடிவில் காட்டப்பெறுகிறது.  தன்வினை பிறவினை வடிவங்கள் எனின், தெருளுதல்.  தெருட்டுதல்  என்று  வரும்.  தெருள்வித்தல் என்பதும் ஏற்புடையதே ஆகும்.

இனி, தெருட்டு (வினைப்பகுதி), தெருட்டு+ அம் >  தெருட்டம்,   தெருட்டம்>  திருட்டம் >  திருஷ்டம்,  (திருஷ்டாந்தம்) என்பன காண்க.  திருட்டம் என்று  திரிந்தது  திருஷ்டம் என்று மாறாவிடில்  ஏற்புடைய வடிவமாகாமை காண்க.  இதுபோல்வதே கஷ்டம் என்ற சொல்லும்.  கட்டு+ அம் > கட்டம் என்பதனோடு கடு+ அம் > கஷ்டம்  என்பதை ஒப்பிட்டு அறிந்துகொள்க.  கண்ணால் பார்த்து வரும் ஊறு,  கண்திட்டி,  இதுவும் திருஷ்டி என்று மாறியது சொல்லிணக்கத்தின் பொருட்டு. திருட்டி என்பதில் ருகரம் நீக்கியது திருட்டு என்ற சொல்லினோடு அதற்கிருந்த அணிமையை விலக்குதற்பொருட்டு. ருகரத்தை வைத்துக்கொண்டு ட் என்னும் டகர ஒற்றை நீக்கி ஷ்  இட்டு வேறுவிதமாக வேறுபடுத்தினர்.   இதற்கு வடவொலி உதவியது என்னலாம்.  இதில் கருத்துவேற்றுமை இருக்கக்கூடும்.

அதிருஷ்டம் என்பதில்  அதி என்பது முன்னொட்டு.   திருஷ்டம் என்பது சொல். அதி திருஷ்டம்  வெகுவிளக்கமாக வந்த ஒரு இலாபம்  அல்லது  வரவு என்று  பொருளுரைக்க. நேரல் வழிகளில்  வாராதது என்று கூறினும் ஒக்கும்.  நேரல்வழி எனின் நேர்மை அல்லாத வழி.

தெருள் > தெருட்டம் என்பது இப்போது வழங்கவில்லை.  ( தெருட்டு+ அம்).  அம் விகுதி இணைக்க  தெருட்டம் என்பது  தானே போதரும் .  வேண்டின் மீளுருச்செய்க.

தெருள் என்ற சொல் பிற வட்டங்களில் வளம் சேர்த்தது காண்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது. 



கருத்துகள் இல்லை: