அகலிகை என்பது
ஒரு பெண்ணின் பெயர். இது அகல்யா என்றும் இன்னொரு வடிவம் கொள்ளும். இன்னும் “அகலியை”
என்றும் சிலர் எழுதுவர்.
இந்தப் பெயரை அமைத்த
புலவர் தமிழறிந்தவர். தமிழிலிருந்து ஒரு சொல்லை எடுத்து அம்மொழி அறியாத பாகதங்கள் பேசும்
மக்களிடை பரப்பினால் அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. இப்போது பல நோய்களுக்கு இலத்தீன்
மொழியிலிருந்து ஒரு சொல்லை எடுத்து அதிற் சில விகுதி முதலியவற்றை இணைத்துச் சொல்லாக்கி.
“அந்த நோய் தான் உம்முடைய நோய்” என்று மருத்துவர் கூறவில்லையா? அதைக்கேட்டு மருண்டு
நாமும் மகிழ்ச்சியுடன் காசைக் கொடுத்துவிட்டு அயர்வுடன் வீடு திரும்புவதும் அன்றாட
வாழ்க்கையில் உள்ளதாயிற்றே. அதே போன்ற மதிப்பைத்தான்
குறிப்பிடுகிறோம். இத்தகைய தனி மதிப்புக்கு நீங்கள் ஒரு பெயரைச் சூட்டி மகிழுங்கள்
- முன்னரே பெயரிடப் படாமை காணின்.
அகலிகை என்ற பெயரால்
குறிக்கப்பட்ட பெண் வேறொரு பெயரில் இருந்து வாழ்ந்து மறைந்திருக்கலாம். கதையில் ஆசிரியர்
அந்தப் பெயரையே போடாமல் “அக்லிகை” என்று பெயரிட்டுப் பெருங்கவி யானார் பிற திறங்களும்
வந்து உதவி நிற்கும்படியாக..
அகலியைபற்றி ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் குறிப்பிடுவதாய்ப்
புலவர் கொள்வர். அந்நூல்கள் உரைக்கும் பொருளை இங்குத் தவிர்ப்போம்.
இனி நம் ஆய்வு:
அ+கல்+இயை:
கல்லாக இருந்து,
பின் கல் என்ற நிலையிலிருந்து மாறிப் பெண்கள்
குமுகத்தில் இயைந்தவள்.
இயை (இயைதல்) என்ற
வினைச்சொல், பின் யா என்று திரிந்தது.
அ என்பது எதிர்மறை: அல் என்பதன் சுருக்கம். (கடைக்குறை). “அல்லாத”.
கல் என்பது பாறையிற்
சிறியது.
அகல் (அ + கல்
) என்பதில் வல்லெழுத்து மிகவில்லை.
இயை > இகை.
ய- க திரிபு. பழைய எம் இடுகைகளில் விளக்கம் காண்க.
அகல் + இயை
: இன்னொரு பொருள்.
அகல் - அகலுதல்.
(கணவனை அகன்று, இந்திரனிடம் போய் )
இயை : மீண்டும் கணவனிடமே வந்தவள்.
கதை விளக்கம்:
அகலிகை ஒரு பத்தினி
1
இவள் கெளதமன் சொன்ன
கொள்கைகளிலிருந்து மாறி இந்திரன் கொள்கைகளைப் பின்பற்றினாள். பத்தினி தம் இறைவனாகிய
கணவனையே பின்பற்றவேண்டும். மத நம்பிக்கைகளில்
கூட மாறக்கூடாது.. இது கணவனின் கட்டுப்பாடு
.
இந்திரன் கொள்கையைப்
பின்பற்றியதால் கற்பிழந்தவளுக்கு ஒப்பானாள். ( உடல் தொடர்பில்லை. ).
இது இக்காலத்தில்
அரசியல் கட்சி மாறுவதற்குச் சமம்.
பலர் அவள் செய்ததை
ஒப்புக்கொள்ளாமல் அவளை வைதனர். அவர்கள் ஏச்சுக்களை அவள் பொருட்படுத்தவில்லை. ஆகவே எதையும் கேட்காமையால் “கல்” எனப்பட்டாள்.
இராமனின் போதனையால்
மீண்டும் கணவன் கொள்கைக்கே மாறினாள்.
ஆகவே கல் என்ற
திண்மை நிலையிலிருந்து தன்னை மாற்றிக்கொண்டு மீண்டும் நல்ல மனைவி ஆனாள். ( கல் என்ற நிலையில் மாற்றம்)
இவை தொழுகைக்கொள்கை
தொடர்பான நிகழ்வு ஆதலால் உடலால் அவள் என்றும் பத்தினிதான். மனத்தால் கொஞ்சக்காலம் தன்
பற்றினி (பத்தினி)த் தன்மை இழந்து இகழ்ச்சிப்பேச்சுகளைக்
கேளாத கல்லாகி மீண்டு நல்லுணர்வு பெற்றதால் மீண்டும் நல்ல பெண்ணாகி மனத்தாலும் பத்தினி
ஆகிவிட்டாள்.
உடலெல்லாம் குறியானது
பிற கொள்கையில் அவள் கொண்டிருந்த முழுமையான ஈடுபாடு, மும்முரமான உள்ளாழ்வு.
அவள் பத்தினித்
தன்மை மாறாமல் கதை முடிவதற்குக் காரணம் இது உடல்தொடர்பான பற்று அன்மைதான்.
கொள்கை மாற்றமும்
உடல் மாற்றத்திற்கு ஈடாக வைக்கப்பட்டது.
அகலியை - அகன்று இயைந்தவள்.
இந்திர வணக்கத்திற்கு
எதிர்ப்பு இருந்தமையை மறைத்துக் கதைசொல்லும் உத்தி இதுவாகும்.
தமிழ் நாட்டிலும் இந்திர விழாக்கள் நடைபெற்றன. இந்திர வணக்கம் இருந்தது. நாளடைவில் மறைந்தது. எதிர்ப்பில் ஆதரவு குறுகி ஒழிந்ததே காரணம். இந்திர வணக்கக் கொள்கை என்பதென்ன? மற்றவகை வழிபாடுகளின் கொள்கை என்ன? வேறுபாடுகள் என்ன? போராட்டங்கள் எப்படி நடந்தன? எப்படித் தோற்றனர்? வென்றனர்? இவையெல்லாம் வேண்டாத விடயங்கள் என்று கதையை வெட்டிவிட்டார் ஆசிரியர். (வால்மிகியாராய் இருக்கலாம்). அகலிகை சோரம் போனாள் என்று கதையை மாற்றிப் பின் கல்லானாள் என்று பிறவற்றை மறைத்து, இராமரால் திருப்பம் அடைந்தாள் என்பதைச் சொல்லி அதனை ஆசிரியர் கோடிட்டுக் காட்டியது பெருந்திறல் ஆகும். சோரம் போன பெண் பத்தினியாகவே தொடரமுடியுமோ? முடியாது. ஆகவே அது சோரமில்லை. அது மனச்சோரம். பிற கொள்கைப் பற்று. உடலால் அவள் பத்தினிதான் என்பதை உறுதிப்படுத்த, இறுதியில் அவளைப் பத்தினியாகவே வைத்துக் கதை முடிக்கிறார்.
இதைப் புரிந்துகொள்ள நமக்குத்தான் அறிவு வேண்டும். புத்தி வேண்டும்.
------------------------------------------
1 (பற்று + இன் + இ). பற்று > பத்து ; இது பேச்சுத் திரிபு. ).
.