திங்கள், 25 பிப்ரவரி, 2013

மாதமொன்று வெண்பா

மாதமொன்று வெண்பா மதிபெறப் பாடினும்
சாதனை யாகிடும் சின்னாளில் -- யாதொன்றும்
தீதில்லை தென்மொழியின் தேனைப் பருகிடத்
தோதில்லை என்பதோ பொய்.

கவிதையில் மட்டும் மாதமோர் வெண்பா என்று வருவதில் இழுக்கில்லை என்றாலும் இங்கு மாதமொன்று என்று பாடப்பெற்றுள்ளது. அந்த விதிவிலக்கு தேவையற்றதாகிவிடுககிறது.




ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

தத்தித் தொடரும்,,,,,,

  இது  ஒரு கவிக்கு உற்சாகமூட்ட எழுதியது. 28.11.11.


தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
ஒழுகுசீ ரோடே உடன்.

கண்ணுக்குள் காதலி


கண்ணுக்குள் காதலி சென்றமர்தல் கற்பனையே 
பெண்ணுக்குப் பேதலிப்பு ஏற்படுத்த -- மண்ணுலகில்
ஆடவர்செய் தந்திரம் அஃதென்றே நான்சொல்வேன்
ஓடுவளோ பெண்ணவர்கள் பின்.

போராட்டம்

கூடத்தில் தங்கிக் குளத்தில் குளித்துவிட்டு
மாடத்தில் நின்று மகிழாமல்----வீடகன்று
போராட்டம் ஏனோ? புகைவீச்சு துன்புறுத்தத்
தாலாட்டும் ஆழிபுக் கார்.

புக்கார்  -  புகுந்தார் ;  ஆழி  - கடல் ,

போராட்டத்தில் ஈடுபடுவது துன்பம்  தருவது என்பது  கருத்து 
 புகை  என்றது கண்ணீர்ப்புகையை ,

புதன், 20 பிப்ரவரி, 2013

thumb drive fault

விரலகை வென்பது வேலைசெய் யாமல்
வரவிய லாதுபோ யிற்றே == பரல்களாய்
நீங்கள் வரைந்தவை நின்றன நேர்த்தியாய்!
தேங்குதல் உற்ற பிற,

அண்மையில் எனது தம்ப் டிரைவ்  (or flash drive) என்னும் விரலகைவு கெட்டுவிட்டதால் நானெழுதியவை பல தொலைந்துவிட்டன, இதன்காரணமாக  ஒரு கவிதை அரங்குக்குச் செல்லமுடியாமல் போய்விட்டது. அதைப் பற்றிய பாடல் இது.

வரவிய லாதுபோ யிற்றே என்பதை  வர இயலாது  போயிற்றே என்று வாசிக்கவும்  வெண்பாவின் அசை சீர் காட்டுவதற்காக  இப்படி எழுத
நேரிடுகிறது. ( வகையுளி)

 விரல் அகைவு என்பதில் அகைவு என்பது    :   அகைத்தல்  drive.

இதில்  "நீங்கள் " - வேறொரு  கவிஞரைக் குறிப்பது,

பரல்  என்பது சிறு கல், விதை முதலியவை குறிக்கும் . விலையுயர்ந்த  கற்களையும் குறிக்கும். மணிப்பரல் என்றும் பொருள்படும்.



A praise

மடை திறந்  தன்ன கவியருவி !  நைகரா  !
கிடைதிறம்  கண்டு கிளர்வுற்றார்  பல்லோர் 
நடையில் அலங்காரம் நன்மொழிகள் இன்னும் 
உடையதாம் இஃதிங்  குரை 

This was written to praise someone who was writing poems well. But was not communicated to him thereafter.

நைகரா -   நயாகரா நீர்வீழ்ச்சி, கிடைதிறம்  -  கிடைக்கப்பெறும் தன்மை . பல்லோர் -  பலர் 



  

யாவருக்கும் இடமுண்டு

கற்பனை பாவின்  கலையே   அதன் நிழலில்
 நிற்பன பாவலர்தம்  நெஞ்சங்கள் ---- வெற்பென
ஓங்கும் உயர்நிலையில் நின்றோரை, மற்றோரைத்
தாங்கும்  நிலத்தாய் மடி .




பாவின் கலையே =  கவிதைக்குரிய கலையாம் ;   வெற்பென -  மலைபோல  ;

நிலமானது  கற்பனையில்   வாழ்வோரையும்  பிறரையும்   தாங்கிக்கொள்கிறது  யாவருக்கும்  இடமுண்டு  என்பது என்பது  கருத்து
  

சின்னஞ்சிறு கிளிகள்

சின்னஞ்  சிறுகிளிகள்   சீரும்  அழகேதான்
 பன்னிவரும்  சொல்லசைகள்  தாமும்  பயிலமுதே
தின்னவொரு வண்பழமாம் தேனாம் மயங்காமல்
உண்ணப்பே ரூற்றாம் உரை

இது சிறுபிள்ளைகள் பற்றியது

அசை   சீர்    தளை  முதலியவற்றைக்  பாவலர்கள்  பாட்டெழுதும்போது  கவனித்துச்  சுவைத்து  எழுதுவர் .  ஆனால்   சின்னப் பிள்ளைகளின்  பேச்சிலே இவையெல்லாம்  உள்ளன,  அவர்களின் பேச்சில் வரும்   சீர்களும் அழகுதான். அவர்கள்  பன்னிப் பன்னிப்  பேசுகையில் வரும் அசைகளும் பயிலும் அமுதமே, பழம், தேன் . நீரூற்று  என்பவையெல்லாம் அவர்களிடம் பேசுகையில்  காணலாம் .  எத்துணை  இனிமை !!    




Moon trapped by gravity of earth

 நிலமகள்  நீள்கவர்ச்சி நேர்ப்பட்ட  நிலவும்
உலவும் சுழல்சுற்றின் உண்மை ---சொலவும்
அறிவியலார் முன் நிற்க ஆங்குப்பா வல்லோர்
 நெறிவியக்க நீங்கிற்றே காண்


இதன் பொருள் :நிலமகள்  -  பூமியின்,  நீள் கவர்ச்சி -நீண்ட இழுப்புச் சக்தி ;
நேர்ப்பட்ட  -  வழிப்பட்ட ;  நிலவும் - சந்திரனும் ;  சுழல் சுற்றின் = சுழன்றுகொண்டும்  சுற்றிக்கொண்டும்;   உலவும் உண்மை -  நடைபெறுகின்ற தென்ற சரியான நிலையை ;  சொலவும்  = சொல்லவும் ;  அறிவியலார் = விஞ்ஞானிகள்  ; பா வல்லோர் -  கவிவாணர்கள் ;  நெறி  = பாடும்  முறைகள் ; வியக்க -  நாம் வியக்கும்படியாக ; நீங்கிற்றே காண்  -  அவறிவியலார் வழியினின்றும்  நீங்கிச் செல்கின்றதே , காண் = கண்டுகொள்ளுங்கள் 

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

.the nature of moon

தண் பாலாய் வானில் தகதகக்கும் தட்டனைய
மண்கோளும் ஆகுமே மந்த நிலா ---பண்பாடும்
வண்கவிகள்  வாய்ப்பட்டு நின்றோம்   வரைபாவின்
நுண்ணெறிகள் நூற்றின்  மிகும்

தண்பாலாய்  =  பால் நிறத்தில் ' தட்டனைய - ஒரு தட்டுப்போல் தோன்றும்;
மண்கோள்  - மண்ணாலான உருண்டை; மந்த - குறைந்த ( ஒளி ')
பண்பாடும் = பாடல்கள் இயற்றும்; வண்கவிகள் = சிறந்தகவிகள்;
வாய்ப்பட்டு - இடத்தில் அகப்பட்டு; நுண்ணெறிகள்  - நுட்பமான வழிகள்;
நூற்றின் = நுற்றின் பலவாய்.

 கவிகள்  நிலவினைப்  புகழ்ந்து பாடுகிறவர்கள் .  நாம்  அவர்களின் வாய்ப்பட்டு நிற்கின்றோம்  வாய் = இடம் . அதாவது  அவர்களின் கற்பனை வலைக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்  அவர்களின் பாக்களில்  பற்பல சொற்பயன்பாட்டுத் தந்திரங்களை அவர்கள் கையாளுகின்றார்கள் ஆகவே வரைபாவின் நுண்ணெறிகள் நூற்றின் மிகும் எனப்பட்டது 


பூமி உதயம் The rising earth



நிலவில்போய் நின்றிமை பூக்கவிப் பூமி
புலர்வதும் என்னே பொலிவாம்  --- சிலவாகும்
இத்தகு ஓவிய   இன்காட்சி  ஒத்தவொன்று
மெத்தக் கவின்விளைப்ப தின்று.


இமைபூக்க  = பார்க்க;  பொலிவு = அழகு; புலர்வது = உதயமாவது
இன்று = இல்லை. கவின் - அழகு.

நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பூமியின் உதயத்தின் அழகை காட்டுகின்றன. இதை இப்பாடல் எடுத்துச் சொல்கின்றது.

பூமி உதயம்  

moon and sky,



வானம் இலாநிலவு வண்ணம் இலாஓவம்
நீலம்  தரித்தே நிலைக்குமவள் --- காலமெலாம்
எத்துணை நல்லழகி என்றாலும் வானுடனே
ஒத்தணைய நின்றால் உயர்வு.

ஓவம் =  ஓவியம் ; நீலம் -= வானத்தின் நீலநிறம் ;  ஒத்தணய  - ஒன்றுபட்டு; இது  வானத்தை 1நிலவின் காதற் கணவனாய்க் கற்பனை செய்தது .

cauliflower


காலிபிளவர் என்பது நாம் சமைத்துண்ணும் ஒருவகைக் காய்கறியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்.
இது ஸ்காட்லாந்துச்சொல் " கோலே", ஜெர்மானிய "கோல் ஸ்லா" இலத்தீன் காலிஸ் முதலியவற்றுடன் தொடர்பு உள்ளதென்பர். இதன் அடிப்படைச் சொற்பொருள் கால்- கோல் (stem, stalk. stick) , பூ ஆகியவை என்பர்.

தமிழில் கால் - கோல் என்பவை நீட்சி குறிக்கும் சொற்கள். கால் > காலி எனின் " காலை உடையது" என்று பொருளுரைக்கலாம்.

இந்தக் கால்கள், காலிபிளவரில் ஒன்றுக்கு ஒன்று பிளவு பட்டு நிற்பவை. பிளவு >பிளவர். இது ப்லோரா (flora) என்ற இலத்தீன் சொல் எனப்படுகிறது. பிளவுறு என்பதும் பிளவுர்> பிளவர் என்று திரியலாம். அல்லது அர் என்பது சொல்லீறு என்று விடுத்துவிடலாம்.

பூக்களும் மொட்டு பிளந்து வருபவையே ஆகும். பிளவர் என்பதும் நன்கு ஆராயத்தக்கதாம்.

தமிழ் ஒரு மூலமொழி என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பல இலக்கம் சொற்களை ஆய்ந்து ஆய்ந்து இதனை விளக்கலாம்,

காலிபிளவர் என்பது தமிழென்று நிறுவுதல் நோக்கமன்று. We just want to refer to the Tamil roots of the Latin language.

விநாயகர்


vinAyakan

விநாயகர் பிற்காலத்தில் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுள் என்று ஆய்வாளர்கள் கூறுவர். விநாயகன் என்ற சொல்லும் வி+ நாயகன் என்று பிரிக்கப்பட்டு, சமஸ்கிருதச் சொல் என்று சொல்லப்படும்.
இனித் தமிழிலும் இதற்குப் பொருள் கூறுவதுண்டு,

வினை + ஆயகன், அதாவது வினைகளை ஆய்ந்து அவற்றை ஒதுக்குபவன் என்பதாம். வினை என்பதில் உள்ள "ஐ" கெட்டுப் புணர்ந்ததென்பர். ஆய் = ஆய்தல். அகம் - அகன்.

ஆயகன் - ஆய்  அகன் :  இது வினைத்தொகை.

இனி வி நாயகன் என்று பிரித்துப் பொருள்  கண்டாலும்  வி  என்பது விழுமிய என்பதன் குறுக்கமே. நாயக என்பது நயத்தல் (விரும்புதல் ) என்பதனடியாகப் பிறந்த சொல்லே என்பதுண்டு . இதற்கு  விளக்கம் தேவைப்பட்டால் எழுதுவோம்.  

ஆபாசம்


ஆபாசம் "green speech or conduct "

பச்சையாக நடத்தல், பச்சையாகப் பேசுதல்.


பச்சை, பாசி, பாசம் (பாசம் பிடித்திருப்பது). பாசிலை, பச்சூன், பச்சிலை, பச்சோலை, பச்சைப்பெருமாள், பச்செனல், பாசிமணி, பாசிப்பயறு, பசுத்தல், பைங்கிளி, பசுங்கிளி, பசும்பால் (பச்சைப் பால்), பசலை -- என்று பச்சை குறிக்கும் அல்லது நிறத்தோடு தொடர்புகொண்ட சொற்கள் பல

பகரத் தொடக்கத்துச் சொல், பா என்று நீண்டும், பசு-, பை- என்று திரிந்தும் நிற்பதை மேலே கண்டுகொள்ளலாம்.

இடக்கரானவற்றைப் பேசுங்கால், அவற்றை அடக்கிப் பேசாதவன், "பச்சையாகப் பேசுகிறான்" என்பது வழக்கு.

பாசம் என்பது பச்சை குறித்தது.

இனி, பாசம் என்பது ஆபாசம் என்று ஆகாரம் பெற்று பச்சையாகப் பேசுதலை, அல்லது நடந்துகொள்ளுதலைக் குறிக்கும்.

தொல்காப்பியர் காலத்தில் வானைக் குறிக்கும் காயம் என்பது, ஆகாயம் என்றும் ஆகாசம் என்றும் திரிந்தாற்போல.

ஆகாயம் - காயம் ஆவது.

ஆபாசம் - இடக்கரடக்கல் இல்லாதது. பச்சை ஆவது.

ஆபாசம் குறிக்கும் சமஸ்கிருதச் சொற்கள், அனார்ய, அசப்த என்பன.

how the moon helped lovers


காட்டில் காணமற் போன காதலளைக் கண்டுபிடிக்க உதவிய மதியை இப்பாடல்  புகழ்கிறது.


இருங்கானுட் சென்றோன்  இருளில் மறைந்தான்
உறங்காது உறைந்தாள் தலைவி---சுணங்கா(து)
ஒளியால் வழிகாட்டி ஒன்றுபட நேர்வித்(து)
அளியால் அணிசெய் மதி.

அளி -  அருள் , அணி - அழகு 

திங்கள், 18 பிப்ரவரி, 2013

சென்றவிடம் எங்கோ-?

தீபாவளிக்கு நண்பர் சின்னக்கண்ணன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அவருக்கு இந்த வெண்பா"

பெரியகண்ணன் பேர்புகழ்தீ பாவளி நாளில்
சிறியகண்ணன் சென்றவிடம் எங்கோ-- நறியதேன்
ஒத்த தமிழ்ப்பாடல் ஒன்றிவண் தந்தவரும்
மெத்தப் புகழ்ச்சிபெறல் விட்டு.

இருபொருள்:

தந்தவரும் -- தந்து+அவரும், தந்தவர் +உம்.

கணினிக் கோளாறு சமாளிக்கும் முறை


கணிணியில் கோளாறினால் சில வேளைகளில் நாமேழுதுவது தொலைந்துவிடுகிறது! இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.  இந்த வெண்பாக்கள் தோன்றின.



தாளில் எழுதிப்பின் தன்மடி மீதுவைத்துத்
தோளின் சுமைஇறக்கு மாபோலே---மீளவுமே
தட்டச்சு செய்தாலே தான் தொலையா நிற்றலுறும்
விட்டச்சம் வீற்றிருக்க லாம்.

(பொருள்:  தான்தொலையா நிற்றலுறும்  -  தான் தொலையாமல் நிற்கும். விட்டச்சம்  - அச்சம் விட்டு என்று முறைமாற்றிப் பொருள்கொள்க.  )

திருத்தம் திறப்படுத்தும் காலை அழிந்தே
உறுத்தி உளைச்சல் உளத்தே -- கருத்திழந்தேன்
தூங்கி அதன்பின் தொடங்கவிலை இன்னுமே
ஆங்கிருப்பின் ஈங்களித்தல் அன்பு.

(இது இணையதளத்தில் அதைப்படித்தவர்கள் வைத்திருந்தால் தந்துதவும்படி  வேண்டுகிறது.
 ஆங்கு = அங்கு ;  ஈங்கு = இங்கு 
உறுத்தி உளைச்சல் உளத்தே -   உளத்தே  உளைச்சல் உறுத்தி  என்று முறைமாற்றுக, )