வெள்ளி, 31 மார்ச், 2023

பேரப்பிள்ளைகள் அருகில் வேண்டும் [updated]

வெண்பா

 யாரேதாம்  நீரென்ற  போதிலுமே  உந்தம்நற்

பேரப்பிள்  ளைகளை  நீங்கியே  ---- ஓரிடத்தும்

நிற்பீரோ  கண்மூடி  நித்திரை  கொள்வீரோ

கற்பீரோ  பாடம்  புதிது.



பொருள்:

எத்தனை அகவை ஆகிவிட்ட யாராக இருந்தாலும்,  உம்  பேரப்பிள்ளைகளை நீங்கி,  இன்னோரிடத்திற் சென்று தங்கி,  உம்மால் நித்திரை அல்லது உறக்கம் கொள்வதும்  கடினமே.  அவர்கள் அருகிலிருக்கவேண்டும்.  அது  உம் உடற்பயிற்சிக்காகத் தங்குவதானாலுமே.  இதுவே இக்கவிதை சொல்வது.

கலித்தாழிசை.

வீட்டுக்குப் போக  விரும்பிய  பாட்டிதனை

நாட்டுக்கு நல்ல மருத்துவர் விட்டிடாமல்

காட்டுக்குப் போவென்றோ கழறினார் பாவமரக்

கூட்டுக்குள் போவென்ற கொள்கை நலமாமே.









paatti maraNam










திங்கள், 27 மார்ச், 2023

நமஸ்காரம் என்பது.

 காரம்  இல்லை என்று உணவு கொள்ளுங்காலை ஒருவர் சொன்னால், அதற்கு  உறைப்பு  அல்லது மிளகாய் போதவில்லை என்பது பொருள் என்று எடுத்துக்கொள்ளலாம்.   நமஸ்காரம் என்ற சொல்லுவோமானால் அதில் வரும் காரம் என்ற சொல்லுக்கு  யாரும் மிளகாச்சுவை என்று கொள்வதில்லை.  காரம் என்பது  இங்கு தமிழால் பொருள்சொல்லும் போது,  நிறைவு என்று பொருள்கொள்ளவேண்டும்..  தமிழ் என்ற சொல்லுக்கு  கிருபானந்த வாரியார் சாமி நூறு அர்த்தங்கள் சொன்னதுபோல,  காரம் என்பதற்குப்   ஆசிரியர் பலர் பல்வேறு பொருண்மைப் பொதிவுகளை வெளிக்கொணர்ந்திருந்தாலும்  இதற்கு யாம் கூறுவது  இஃது பொருள்:

காரம் என்பது  உண்மையில் கு+ ஆரம் என்ற இருசொற் புணர்வினிடையிற் பிரித்தகாலை வெளிப்போந்த சொல்:  ( metanalysis)..

இது எப்படிப்பட்ட சொல்லமைவு என்றால்,  குருவிக்காரன் என்ற சொல்லில் வரும் காரன் என்பது போல்,  சொல்லிணைப்பில் தோன்றுவது:

குருவிக்கு அவர்   .  அவர் என்பதும் அர் என்பதும்  ஒருபொருளன.  ஆர் என்ற நெடின்முதல்  வடிவமும்  அதுவே.

குருவிக்கு  ஆர் >   குருவிக்கார் >  குருவிக்கார்.

ஆர் கொஞ்சகாலம் அப்படி வழங்கிவிட்டால், அது சொல்லமைப்பில் இணைந்துவிட்டபடியால்,   உயர்திணைப்பலர்பால் வடிவம் என்பதை மனம் மறந்துவிடும்.  அதன்பால் அன் என்ற  ஆண்பால் ஒருமை வடிவினைக் கொண்டுசேர்த்து,  

குருவிக்காரன்  என்ற சொல்லைப் படைக்கும்.

இது எண்மயக்கத்தால்  (  உயர்திணை,  பலர்பாலில் ஒருமை கலந்து மயங்கிய சொல்).   வழுவமைதி எனக்கோடற்பாலது.  

இந்த மாதிரியெல்லாம் விளக்குவதைக் குறைத்துக்கொண்டு, அது சமத்கிருதம் என்றோ,  உருது கலந்தது என்றோ கூறி வாயை அடைப்பது  நல்ல உத்தியாகும்.

இதை வாக்கியமாகக் கூறின்,   "குருவிக்கு வணிகர் அவர்/ அவன்"    என்பதாம். முன்பின் அறியாதவனை,  அவர் என்றாலும் அவன் என்றாலும் வேறுபாடில்லை.

இவைபோலும் சொற்களில்,  சுட்டுச்சொற்கள் (  அர், ஆர், அவர்,  அவன், இன்னும்பலவும் )  தத்தம் சிறப்புப் பொருளிழந்து இணைந்தன  என்று சொல்வது  இனி இலக்கணமாதல்  சிறப்பாகும்.

'நலத்தின் நன்னிறைவு'  என்பதே  நம்ஸ்காரம் என்பது  உணர்ந்துகொள்க.

நலத்தினால் ஆர்தல்( நிறைதல்) >  நலக்கார்தல்  ( நலத்துக்கு  ஆர்தல் ) 

நலம்>  நலமோ >  நமோ.  ( நமோநம)  இடைக்குறைச்சொல்.  இடைக்குறை மீமிசை.

நலமதற்காரம்  >  நமற்காரம் >  நமஸ்காரம்.

வடவெழுத்தை ஒருவிவிட்டால் அது முன்னிருந்த தமிழாகிவிடும்  என்றார் தொல்காப்பியனார்.  (  வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ).  சொல்லதிகாரம்.

இவைபற்றிய முற்கூற்றுகளையும் படித்து மகிழ்க.

https://sivamaalaa.blogspot.com/2021/10/blog-post_16.html   நம், நமோ முதலியவை.

https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_9.html

நமோஸ்துதே   ( நலம் ஓதுகிறோம் எனபது.)

நலம் ஓதுதே > நமோதுதே  ( லகரம் குறந்தது) > நமோஸ்துதே.

வட ஒலியை ஒருவினால் ( எடுத்துவிட்டால்)  மீண்டும் ஓத்துதே -  ஓதுதே வந்துவிடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.



 

திங்கள், 20 மார்ச், 2023

இரும்பிலும் உண்ண நினைக்கும் எறும்பு

 இந்தக் கவிதை,  இன்று உருப்பெற்றதுதான்.  ஓர் வெள்ளுருக்குக் கரண்டியில் ( stainless steel spoon )   ஓடிக்கொண்டிருந்த எறும்பைக் கண்டு கவிதை எழுந்தது.  அதன் நிலைக்கு இரங்கியதே காரணம்.  கவிதை கடினமற்ற பதங்களில் அமைந்த படியால்,  விளக்கம் விரிக்கவேண்டாம் என்று நினைக்கின்றோம்.


வடையின் மணமிருக்கு ---  ஆனால்

வடையைக் காணவில்லை;

தடயம்  அறிஎறும்பு  ----  கரண்டியில்

தள்ளாடி அலைகிறதே!


வடையின் துணுக்கொன்றையே ---எறும்பும்

அடையக் கொடுத்திடுவாய்.

கடைக்கு வடைவாங்கவே ----  பாவம்

கட்டெறும்  பேறிடுமோ?


எல்லா உயிருடனும் ----  தம்பி 

இயலும்  நண்புகொள்வாய்,

இல்லை  எனா உலகில் ---  எறும்பும்

ஏற்றம் காணட்டுமே.


எவ்வுயிர்  என்றாலுமே  ----  துன்பம்

ஏறி   வருந்துகையில்,

இவ்வுயிர் எனதுமட்டும் ---- மகிழ்ந்தே

இருந்திடல்  பொருந்துவதோ..


------  சிவமாலா. 


கொடுத்த சிறு  துகளை  இழுத்துக்கொண்டு அந்த எறும்பு

நகர்ந்து நகர்ந்து காணாமற்  போய்விட்டது  ஆனந்தமே.


ஆனந்தம் :  ஆக நன்று >   ஆ நன் து அம் >  ஆனந்தம்.

நன்று =  நன் + து.



சனி, 11 மார்ச், 2023

பண்டை அரசர்கள் தமிழை எப்படிப் பயன்படுத்தினர்

 தமிழ்நாட்டுக்கு அப்பால் வாழ்ந்த அரசர்கள்  தங்களுக்கு முக்கியமான நேரங்களில் தமிழை எப்படிப் பயன்படுத்திச் சொற்களை அமைத்துக்கொண்டனர்  என அறிந்துகொள்வது,  ஒரு தனிக்கலை ஆகும். தமிழ் மட்டுமின்றி,  பிறமொழிகளும் அங்ஙனம் பயன்பட்டுள்ளன.  அமைக்கும் சொல் செவிக்கினியதாய் இருக்கவேண்டும்.  அதுவே இதில் முன்மையாக (முதலாவதாக) கவனிக்கப்பட்டுள்ளது. 

எடுத்துக்காட்டாக,  வங்காளத்தில்  அமைந்திருந்த பெரிய வீடுகளுக்கு ஒரு பெயரிட வேண்டி  நேர்ந்தது.   வங்காளம் என்ற சொல்லையே எடுத்துத் திரித்து, வெள்ளையர்கள்  " பங்களோ"  என்ற சொல்லினைப் படைத்தனர்.  இது பின் தமிழ்மொழிக்குள் வந்து " பங்களா" என்று திரிந்தது.  இதேபோல் வங்காளிப் பெண்கள் அணிந்திருந்த கைவளைக்கு  "பாங்கள்ஸ்"  என்ற பெயரிட்டனர். வெள்ளைக்காரப் பெண்கள் கைவளை அணிவதில்லை ஆகையால்,  ஆங்கிலத்தில்  அப்போது அதற்குப் பெயரில்லை.  இப்போது சிலர் அணிந்துகொள்வதுண்டு.  ( இப்போது இரஷ்யப் பெண்களே சிலர் இந்துக்களாய் உள்ளனர் ).

அங்குமிங்கும் சொற்கள் பலவற்றைத் தேடி அலையாமல் "பெங்கால்" என்ற சொல்லையே மேற்கொண்டு இப்பொருட்களுக்குப்  பெயரிட்டது அறிவுடைமையும்  சொற்சிரமத்தை* எளிதில் தீர்த்துக்கொண்டமையும்  ஆகும்.

குப்த அரசர்கள் தங்கள் ஆட்சியை நிறுவிய போது,  அவர்கள் அரசத் தலைமுறைத் தொடருக்கு  ஒரு பெயர் வைக்க நினைத்தனர்.  அந்தத் தொடர் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது தலையாய நோக்கமாகும்.  அதையே சொற்பொருளாகக் கொண்டு பரம்பரைக்குப் பெயராக்கிக்கொண்டனர்.

தன் காப்பு  >  காப்பு தன் ( முறைமாற்று அமைப்பு)  >  காப்த >  குப்த..

இப்படி அகர முதலானவை,  உகர முதலாய்  அமைவதுண்டு.

அம்மா >  உம்மா >  உமா  (  உமாதேவி )

இதழ் >  அதழ். அல்லது  இதழ் > அதழ்.  ( அதரம் என்ற இடுகையை வாசிக்கவும்).

(  உதடு என்றால்   உது + அடு ( முன்னாக அடுத்தடுத்து இருப்பது )

மற்ற இடுகைகளிலும்  காணலாம்.

அங்க்லோ >  இங்கிலாந்து.

அப்ரஹாம் >  இப்ராகிம்.



---------------------------------------------------------------------

வேறு திரிபுகள்.

*சிறு + அம் + அம் >  சிரமம். சொல்லமைப்பில்  றகரம்  ரகரமாய்த் திரியும்.

 அமைந்துள்ள சிறுதொல்லைகள்   என்பது பொருள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திங்கள், 6 மார்ச், 2023

முதலைக்கு உணவூட்டி முற்றுப்புள்ளி வைக்காதீர்.


முதலை பாடுவதுபோல:-

 

பசிக்குணவும் எனக்கிங்கே இல்லை என்றால் ---  உன்

பரிவினாலே  அடங்கிடுமோ  என்றன்  வேட்கை?

புசிக்கின்றேன் இப்பொழுதே நானும் உன்னை! -- இப்

புவனத்திலே  பொறுப்பேன் நானோ  அல்லேன்.


உணவுக்கே  எனைத்தவிக்கச் செய்தாய்  நீயே----  நீ

உண்டுறங்கி  நெளிவெடுக்க  நானோ நிற்பேன்   

இணைக்கிங்கே  அணைதந்து  சாய்ந்திருப்  பாய் ----  வீணாய்

இடைவெளியில் கடைத்தரமாய் ஓய்வேன் நானோ?.


என்று கத்திக்கொண்டு  அந்த முதலை  அவனைக் கடித்துக்  குதறியது.  ஆற்றுவிலங்காயினும்  காட்டுவிலங்காயினும்  அன்பருளால் உணவூட்டுவீராயின்,  நீங்கள் மேற்கொண்ட கடைப்பிடியில் வழுவுதல் ஒருபோதும் ஆகாது  . நீங்களே அதற்கு உணவு  ஆகிவிடுவீர்கள்.


இதற்குரிய செய்தித் துணுக்கைக் கீழே படித்து இன்புறுக.


சொடுக்கவும்:


Man attacked by alligator right on his doorstep - The Independent News


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



வியாழன், 2 மார்ச், 2023

அமெரிக்கத் தேர்தல் ( கண்டெடுத்த கவிதை)

 இது  அமெரிக்கத் தேர்தலைப் பற்றிய  பாடல். ஹிலரி கிளின்டன் நின்றபோது வடிக்கப்பட்டது.  இவர் வரவேண்டுமா என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்கவேண்டும்.  வந்தால் பெண்மையைப் போற்றுவதாகும் என்பதையே இப்பாடல் கூறுகிறது.  (


(அறுசீர் விருத்தம்)


தோயுற மக்கள் கொள்ளும்

துலையிலாத் தேர்தல் கண்டீர்.


பெண்மணி ஒரு வேட்   பாளர்,

பீடுடைச் செல்வர் மற்றார்.

தண்ணுறு பொழிவு செய்து

தகவினை அறிவித் தார்கள்.

ஒண்பெறு  மிகுதி  வாக்கில்

ஓங்கிட நிற்பார் யாரோ?

பெண்மிகை என்றால் ஞாலம்

பெருமையில் மிளிரும் அன்றே!


தோயுற  -   மிகுந்த ஈடுபாடு கொண்டு

துலையிலா -  ஒப்புமை இல்லாத


பீடுடை  -   பெரிய

செல்வர் -  பணக்காரர்

தண்ணுறு -  குளிர்ந்த

பொழிவு  -  சொற்பொழிவு.  

தகவு  -   தகுதிகள்

ஒண்பெறு  - ஒளி மிக்க

ஓங்கிட -   வெற்றி பெற்று 

பெண்மிகை -  பெண்ணே அதிகம் வாங்கினால்

பெருமை -  பெண்களுக்குப் பெருமை விளைத்தல்

அன்றே  -   ஆகுமே. (  அல்லவோ என்பதுபோல், இது ஒருமை)


இத்தேர்தல் முடிவுக்குமுன் பாடிய பாடல்.

சீமான் வெற்றிபெறவில்லையே! காரணம்?



காட்சிச் சிறப்பாகப் பேசும் சீமான் வெற்றி பெறவில்லை.பாவம் அவர் எதுவும் கொடுக்கவில்லை. அதுதான் காரணம். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு திட்டம் வைத்திருப்பார். வாக்கு யாருக்கு என்பதில் மக்கள் ஒரு திட்டம் வைத்திருப்பார்கள். அது காசு வேண்டும் என்பது. இந்தத் திட்டங்கள் பொருந்தாத நில்லையில் வெற்றி  கைவசமாவதில்லை. அதைத்தான் இக்கவிதை கூறுகிறது. இந்தத் திட்டங்களை இவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

நோக்கங்களையும் திட்டங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டுமா என்பது அவர்கள் பாடு. நாம் கூறும் காரணம் சரியானதன்று என்று ஏற்படும் போது, 
அதைத் தள்ளுபடி செய்துவிட வேண்டியதுதான்.

எண்சீர் விருத்தம்.

யாருக்கும் யாதொன்றும் தாரா விட்டால்

யார்வந்து போடுவரோ  தேர்தல் வாக்கு

போருக்குப் போவதுபோல் குதித்தெ ழுந்து

போற்றுதற்குப் பற்பலவே  புகன்ற போதும்

பாருக்குள் கைதட்டல் பயனொன் றில்லை

பழக்கமுண்டு பரம்பரையாய் இறைஞ்சி வாங்கி!

நாருக்கு மணம்வேண்டின் பூவைப் பற்று

பூவுக்குள் புழுநின்றால் மறைந்து போகும்.


புகன்ற  -  பேசிய

போற்றுதற்கு  - புகழ்வதற்கு

பாருக்குள்- உலகில் 

இறைஞ்சி  -  கெஞ்சி

பற்று -- பற்றிக்கொள்

மறைந்து போகும்  -  ஊர்ந்து எங்காவது போய்விடும்




நார் என்பவர் வேட்பாளர். அவர் சொல்லென்னும் பூவைப் பொழிகிறார் மக்கள் மேல். அதற்குள் இலஞ்சம் என்னும் புழுவிருந்தால் அந்த நாடுகளில் தெரிவ தில்லை.  யார் வெற்றிபெற வேண்டுமென்பது மக்களுக்கு உரியது ஆகும்.

 அதை இக்கவிதை சொல்லவில்லை.  கொடாமையால்  தோல்வி என்பதுதான்..

புதன், 1 மார்ச், 2023

துர்க்கையம்மன் கருணை







துர்க்கையம்மன்


பாட்டு:


இரக்கத்து   அன்னை எழில்திருக்   கருணை

பரக்கப் பயன் தரு பாயருள்  பொருநை

கரக்கு  மனமிலாக்  கனிவுடன் அணைத்து

சிறக்க   வாழ்தரும்  செம்மலர்க்  கையள்


இரக்கத்து   -   ரட்சம் பெருகிய;  அன்னை --  தாய்

எழில்  திருக்கருணை --  அதுவும் எழிலும் திருவும்  பொருந்திய கருணை 

பரக்கப் பயன் தரு  பாயருள்  பொருநை---   விரிவான பயன்களைத் தரும் பொருநை   ஆறு போல் பாய்வதும்  ஆகும்; 

கரக்கு மனமிலா --  அதை எண்ணத்தாலும் மறைப்பதே  இல்லையாகிய,

கனிவுடன்  -  அன்புடன்  , அணைத்து  -  ஏற்றுக்கொண்டு,   

சிறக்க   வாழ்தரும்  -   சிறந்த வாழ்வை அருளும்  , 

செம்மலர்க்  கையள் -  அழகிய செம்மலர்களை ஏந்தி நிற்கும் கையுடையாள்.


மகிழ்வீர்

மெய்ப்பு  பின்