புதன், 28 பிப்ரவரி, 2018

முற்காலத்தில் பெண்ணாதிக்கம்.

மிக்கப் பழங்காலத்தில் பெண்களே குமுகத்தில் ( சமுகத்தில்) குடும்பங்களுக்கும்  வெளியுலகிலும் பல அமைப்புகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தலைமை தாங்கினார்கள் என்று மனிதவளர்ச்சி நூலார் கண்டுபிடித்துக் கூறுவதுண்டு. எனினும் சில இனத்தார் ஆண்கள் தலைமையில் இயங்கினர் என்று தெரிகிறது.

கழிந்த காலத்தில் யாது நடந்தது என்று கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதன்று.  இன்று நாம் சில ஆய்வுகளை மேற்கொள்ளுவோம்.

இன்றைத் தமிழில் ஆள் என்ற சொல்லுக்கு பால்பாகுபாடு கூறமுடியவில்லை. இதற்குக் காரணம்,  ஆள் என்பது ஆணாகவும் இருக்கலாம்; பெண்ணாகவும் இருக்கலாம்.  ஆள் என்பது ஒரு பொதுப்பால் சொல்.  பொதுப்பால் என்பது தமிழ் இலக்கணப் பாகுபாடு அன்று.  ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்பனவே இலக்கணக் குறியீடுகள்.

ஆள் என்பது இற்றை வழக்கில் பாலறி கிளவி அன்று எனினும் அதற்கு மாறாக அது பெண்பால் விகுதியாக தமிழ்மொழியில் வழங்குகிறது:

அவள் வந்தாள்.
கவிதா சென்றாள்

இந்த வாக்கியங்களில் வரும் வினைமுற்றுக்களில் ஆள் என்பது பெண்பால்
குறிக்கவருவதைக் காணலாம்.

தனிச்சொல்லாக வரும்போது ஒரு மனிதப்பிறவியைக் குறிக்கும் இந்தச்சொல் விகுதியாக வரும்போதுமட்டும் எப்படிப் பெண்பால் குறிக்கவருகிறது?  இதை நீங்கள் சிந்தித்ததுண்டா?

பொதுப்பாலாக வரும் ஆள் என்னும் சொல்,  வினைச்சொல்லாக வருகையில் மட்டும் எப்படி ஆட்சிசெய்தல் என்ற பொருளில் வருகிறது?  ஆள், ஆள்தல், ஆளுகை, ஆளுமை, ஆட்சி என்பவற்றில் முற்றிலும் மாறுபட்ட பொருளில் அன்றோ வருகிறது?

இப்போது விடையத்திற்கு வருவோம்.  ஆள் என்பதன் பொருள் ஆள்தல் என்பதுதான்.  பெண்ணே குமுகத்தில் ஆட்சி செய்தாள். ஆகவே வந்தாள் கண்டாள் முதலியவற்றில் ஒருவிதப் பணிவுடன்`தான் பெண்ணைக் குறித்தனர்.

வந்தாள் என்றால் ஆள்கிறவள் வந்தாள் என்பதே பொருள்.

பணிவுடன் தொடங்கிய இந்த வழக்கு, இந்நாளில் பொருள் இழிவு கண்டது. வந்தாள் என்பது பணிவுக்குறைவாகிவிட்டது,

நாற்றம் என்ற சொல் இனிய மணம் என்று பொருள்பட்டு இன்று தீயவீச்சம் என்று பொருள்பட்டதுபோலவே ஒரு பொருள் இழிவே இதுவும்.

இங்கனம் பொருளிழிவுகண்ட பதங்கள் மொழியில் பல.

ஆள்பவள் வந்தாள் என்று பொருள்பட்ட இந்தவழக்கு, மரியாதையற்றதாகக்
கருதப்பட்டது மொழியிலும் வழக்கிலும் ஏற்பட்ட மாற்றம்.  ஆள் என்பது இன்றும் மேலாண்மையையே குறிப்பதால்,  வந்தாள் என்பது மேன்மைக்குரிய பெண் வந்தமையையே குறிக்கும்.

ஆள் என்பது பெண்ணுக்குரிய சொல்லாகவும் விகுதியாகவும் பயன்பட்டபின்பு, ஆடவர்களுக்கு ஒரு சொல் தேவைப்பட்டது.

அது ஆள் என்ற சொல்லிலிருந்தே வந்தது.

ஆள் > ஆண் என்று அமைந்தது.

அதாவது முன் காலத்திலேயே பெண்ணுக்கு வந்த ஆள் என்பதிலிருந்துதான்
ஆண்மகனும் தன்னைக் குறிக்கும் சொல்லைப் பெற்றுக்கொண்டான்.

ளகரம் ணகரம் ஆகுமா?  ஆகுமே. பல திரிபுகளைக் காட்டலாம். எனினும்
ஒன்றுபோதும்.  உண் என்பது தின்பது குடலுக்குள் செல்வதைக் குறிக்கிறது. இது உள் என்ற சொல்லின் திரிபு ஆகும்.  உள்>  உண்.  உணவை உள்ளிடுவதே  உண்பது ஆகும்.  உள் என்பது புணர்ச்சித் திரிபிலும் உண் என்றாகும். உள்+ நாக்கு= உண்ணாக்கு என்று காணலாம்.  ஆகவே மொழியில் ளகரமும் ணகரமும் நன்`கு தொடர்புபட்டவை ஆகும்.

ஆள் என்பதிலிருந்து திரிந்துவிட்ட ஆண் என்பது, பிற்கால ஆட்சியைக் குறிக்கிறது.  இது, பெண் ஆட்சி முந்தியது என்பதையே காட்டுகிறது.

அறிந்து இவ்வரலாறுகளை நமக்குக் காட்டும் தமிழ்மொழியைக் கொண்டாடுவோம்.


திங்கள், 26 பிப்ரவரி, 2018

கைலாசம் சொல்லும் பொருளும்



இன்று கைலாசம் என்ற சொல்லினை அறிந்துகொள்வோம்.

கைலாசம் என்ற சொல்லொலியை ஒத்த பிறமொழியின் ஒலிப்பு கைலாஷ் என்பதாகும் என்பது நீங்கள் அறிந்ததே.  கைலாஷ் என்பதற்குப் பிறமொழியின் வழிச்சென்று அடிச்சொற்கள் கண்டுபிடித்துப் பொருள்விளக்குதல் நீங்கள் கேட்டிருத்தல் கூடும்.

இதைத் தமிழின் வழிச்சென்று இன்று பொருள்விளக்குவோம்.

கை+ லாசம் என்று இதனைப் பிரித்தல் வேண்டும்.

இச்சொல்லில் லாசம் என்பதனை முதலில் எடுத்துக்கொள்ளலாம்.

இச்சொல் லாயம் என்றும் வழங்கும். இதில் உள்ள சகரமானது யகரமாய் வருவது சகர யகரப் போலி. தேயம் > தேசம் எனல் போல. லா என்பது தமிழில் முதலெழுத்தாக வருவதில்லை.  ஆகவே இது தமிழாயின்,  இலாயம் என்றே இருந்திருத்தல் கூடுமாதலால்,  இலாயம் என்பதனையே மேற்கொள்வோம்.

இலாயம் என்பது இல்+ ஆயம்.

இல்+ஆயம் என்பது புணரின் இல்லாயம் என்றன்றோ வருதல் வேண்டும்
எனின்,  அதுவும் இடைக்குறைந்து இலாயம் என வருதல் இலக்கணத்தின்கண் உளதாதலின், இதனால் ஆயதொரு வேறுபாடின்மை
அறிக.

இல் = இல்லம்;

ஆயம் =  ஆய்+ அம்:   இது ஆக அமைந்தது   என்று வாக்கிய நிலையை அடையும்.  ஆய் -  ஆதல் என்பதன் வினை எச்சம்;  அம் என்பது விகுதி என்று வகைப்படுத்தினும் இழுக்கொன்றுமில்லை.

ஆய் அமைந்தது என்ற பொருள் அப்போதும் வெளிப்படும்.

எனவே இல்லமாய் அமைந்தது என்பதே பொருள்.

கை என்பது  பக்கத்திலேயே இருப்பது என்று பொருள்படும்.  வெகுதொலைவு எங்கும் செல்லாமல் அருகிலே அமைந்துள்ள ( இல்லம்).

உலகனைத்தும் ஆண்டவனுக்கு இல்லம்தான்.  கடவுள் ஓரிடத்தில் ஒடுங்கிவிடும் நிலையினன் அல்லன்.  எனினும் மனிதனின் கருத்தில் கடவுளுக்கும் ஓர் உறையுள் இருக்கவேண்டும். அவர் நாமிருக்கும் இடத்தில் கண்ணுக்குத் தெரியவில்லை ஆகையால்,  வேறோர் இடத்தில் இருக்கிறார், என்று மனிதன் எண்ணுவது இயல்பு. அதுவே அவருடைய இல்லம். என்னுள்ளே இறைவரும் (இறைவனும்) உள்ளார் என்பதானது ஞான நிலை. கைலாசம் என்பது அந்நிலையில் தோன்றிய சொல் அன்று. இயல்பான சொல் ஆகும்.

கை =  அருகிலமைந்த

இல் ஆயம் = இல்லம் ஆவது.

இப்படி இச்சொல்லும் தமிழில் பொருள்தருகிறது.

அவர் இல்லம் ஒரு மலைப்பக்கமாய் உள்ளது என்பர்.  கைலாய மலை.

இதுவே இச்சொல்லின் தமிழ்ப்பொருள்.

அறிந்து மகிழ்வோம்.

பிழைத்திருத்தம் பின் செய்யப்படும்.

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

அழகறுவை மறு ஆக்க மருந்துகள்: COSMETIC SURGERY




இளமை அகல்தல் முதுமை அடைதல்
உலகத் தியற்கை உயிர்கள் அனைத்தும்
கடந்து செலற்குரித் தாகும் அமைப்பே;
பறந்திட ஒண்ணாப் பறவையாய் விட்டால்
இருந்திடப் பார்க்கும் வழிதனைக் காண்க.
அழகறு வைமறு  ஆக்க மருந்து
பழகிப் பயன்பெற முற்படல் இன்னல்.
உடல்தாங்  கிடுதல் இயலா நிலையில்
உயிரிழந் தோரும் பலருளர் என்பரே;
ஆதலின் கொள்வீர் கவனம்
சாதலை வீணிலே மேவுதல் நீங்கவே.

சனி, 24 பிப்ரவரி, 2018

ஸ்ரீதேவி - இரங்கல் Demise of Sridevi Superstar Actress



துடிப்புடன் திரைதனில் தோன்றிச்  சுவைஞரை
நடிப்பதன் அழகில் கவர்ந்தநட்  சத்திரம்
நெடித்தலொன் றிலாத உழைப்பினர் தாமுமே
பிடித்தமே லிடத்தினைப் பெயரா திருந்தவர்.

மூவா அகவையில் முன்னிறப் பெய்திசீ
தேவி உலகினைத் தேம்பிட வைத்தனர்
ஆவி அமைதியை அடைக குடும்பமும்
மேவு துயர்க்கினி இரங்குமெம் நெஞ்சமே.

 அரும்பொருள்:

சுவைஞர்  = இரசிகர்கள்.
நெடித்தல் =  காலம் கடத்துதல். செய்வதைச்
செய்ய நாட்கடத்துதல்.
பெயராது = இழந்துவிடாமல்.
மேலிடம் = அந்தஸ்து

மூவா அகவை = மூப்பு அடையாத (இள) வயது
இறப்பெய்தி -  மரணமடைந்து.
முன்னிறப்பு -  அகால மரணம்
தேம்புதல் -  கலங்குதல்.
மேவு துயர் -  அடைந்த துக்கம்

ஸ்ரீ

  

பரிசுகள் பெறுவதில் ஆபத்து....



போர்களிலே தாம்குண்டு போடுவார்கள் இங்கென்ன
புதுமணத் தம்பதிகள் நாமே! - இந்தப்
பூதலத்தில் நாமிணைந்தோம் காதலினால் கட்டுண்டோம்
ஏதினியே  வாழ்வில்  இன்னல்?  

என்றபடி போகமிழை புத்தம்புது  இல்லமதில்
இருந்தபடி எக்காளம் இட்டு -- அங்கு
வந்தபரி சுப்பொருள்கள் வாரியிட் டுப்பிரித்தார்
வன்`குண்டே வெடித்த தங்கே

மணமகற்கு வந்துற்ற மாதுயரை என்சொல்வோம்
மரித்துவிடப் பெண்ணும் ஆங்கு --- உயிர்
பிணத்திற்குப் பக்கலிலே காயம்பெரி தாய்ப்பட்டு
பிழைப்பாளோ என்ன   வீழ்ந்தாள்

மணத்திற்கு  வாங்காதீர்  மகிழ்ச்சியால் எப்பரிசும்
மாநிலமே வீணர் வாழும்---- ஒரு
குணத்திற்கு வாழாத  கூழ்க்கலமே ஆயிற்றே
குற்றநெறி உற்றழிந்     ததே.. 
 



இரத்தம் தொடர்புடைய சொற்கள்




இரத்தம் என்று நாம் வழங்கும் சொல் பேச்சில்  ரத்தம் என்றே வழங்குகிறது.  இது அமைந்த  காலத்தில் அது அரத்தம் என்று இருந்தது.  அப்படி இருந்த சொல் வழக்கில் தலையை இழந்து  ரத்தம் ஆனது.  ஏன் அப்படி என்றால் எல்லாம் பேச்சில் வெளியிடும் ஒலிகளை மக்கள் சிக்கனப் படுத்திக்கொண்டதுதான் காரணம்.  

இப்படித் தலையைக் கொய்துவிட்டு ஒரு சொல்லைப் பயன்படுத்துவது ஆசிரியனுக்கு வேண்டுமானால் தவறாகத் தெரியலாம். உண்மையில் சொல்தலையை வைத்துக்கொண்டே பேசி மக்கள் அடைந்த நன்மை ஒன்றுமில்லை.  அதை கொய்துவிடுதலால் அவர்கள் அடைந்த நட்டமும் ஏதுமில்லை. அரத்தம் என்பது என்ன வேலையைப் பேச்சில் முடிக்கிறதோ அதே வேலையை ரத்தம் என்ற சொல்லும் முடித்துவைக்கிறது.  பல சமயங்களில் ரத்தம் என்பது உண்மையில் அரத்தம் என்றே ஒலிக்கப்படுதல் வேண்டுமென்பதைப் பேசுவோன் உணர்ந்திருப்பதுகூட இல்லை. 

ஒரு சொல் ஓர் ஆய்வாளனுக்குத் தவறாகத் தெரிந்தாலும் பெரும்பாலான மக்கள் அதை விரும்பிப் பயன்படுத்துவராயின்,  அச்சொல் ஆட்சிபெற்றுவிட்ட சொல் ஆகிவிடும்;  அதை வழக்கிலிருந்து விரட்டிவிட எந்தக் கொம்பனாலும் முடிவதில்லை.

அரத்தம் என்பதே அமைந்த சொல். இதன் அடி அர் என்பது சிவப்பு என்று பொருள்படுவது.  அரக்கு, அரத்தை முதலியனவும் செம்மையே.  அரனும் சிவ > சிவப்பு -  சிவனே ஆவான்.  இர் என்ற அடி கறுப்பு நிறம் குறிப்பது. இதிலிருந்து தோன்றியவை: இருள். இரா. இராத்திரி. இரவு என இன்ன பிற சொற்கள்.  இருள் நிறமுடையோன் என்று பொருள்தரும் இராமன் என்பதும் இர் என்பதனடிப் பிறந்த சொல்லே ஆகும். இர் ஆம் அன் = இருள் (நிறம்)ஆகும் அவன் என்பதாம். இவை பிறமொழிகளிற் சென்று வேறு பொருளை அடைந்திருக்கலாம்.   பொருள் சொல்லுக்குப் புலவர்களாலும் ஊட்டப்படுவதும்   உண்டு.      அழகுடையதாய் வேறுபொருள் ஊட்டப்படலாம்.  நாம் தடுக்கவியலாது.  யாராவது ஒரு பெரும்புலவன் கூறினால் மக்கள் அவன்கால்கள் தொழுது பின் செல்வர்.

அரத்தம் என்ற சொல் அமைந்த காலத்தில் அரத்தகம் என்ற சொல்லும் அமைந்தது.   அர்+ அத்து+ அகம் என்று புணர்த்தப்பட்டுச் சொல் அமைந்தது.  எம் செவிகட்கு இது இனிமையான சொல்லாகவே தெரிகிறது.  இது வழக்குப் பெற வில்லை என்று தெரிகிறது. அரத்தகம் என்றால் உள்ளே சிவப்பாய் இருப்பது என்று பொருள்விரியும்.  சொல் அழகுள்ளதே.

அத்து என்ற இடைநிலை இல்லாமல் அர்+அகம்=  ஆரகம் என்று முதனிலை நீண்டு ஒரு சொல்,  அரத்தத்ததைக் குறிக்க எழுந்தது.   இதை இப்போது தாளிகைகளில் அல்லது நூல்களில் எதிர்கொள்ளமுடிவதில்லை.

குருதி என்ற சொல் மட்டும்  எழுத்தாளரிடையே  வழக்கில் வந்துள்ளது.