சு விகுதி வந்த சில சொற்களை இப்போது நினைவுகூர்தல் நலமாகும். பரிதல் என்பது அன்பு காட்டுதல் என்றும் பொருள்தரும். பரிவு, பரிந்துரை முதலிய சொற்களில் வரும் பரி என்னும் சொல்லை நீங்கள் மறந்திருத்தல் எவ்வாறு?
பரிசு என்ற சு விகுதி பெற்ற சொல்லும் பரிதல் வினையடிப்படையில் உண்டானதே.
சிசு என்ற சொல் தமிழ்ப் பேச்சு வழக்கில் உள்ள சிறுசு என்பதன் றுகரம் வீழ்ந்த இடைக்குறைச்சொல். சிலர் சிறிசு என்றும் சொல்வதுண்டு.
விகுதி என்பதற்கு இறுதிநிலை என்றும் சொல்வர். சொல்லை மிகுத்துப் பொருளைப் பெருக்கிக் காட்டுவதே விகுதி. மிகுதி - விகுதி : இதில் மி - வி போலி இருத்தலை உணரலாம். மிஞ்சு - விஞ்சு : போலியே இதுவும். மிகுதி என்ற சொல் பொதுப்பொருளில் வர, விகுதி என்பது சொல்லின் நீட்டத்துக்கு மட்டும் வழங்குவதாயிற்று.
இன்னொரு சு விகுதிச் சொல்: காசு என்பது. மனிதன் காத்துப் போற்றிப் பயன்பெறுவதனால் கா(த்தல்) > காசு ஆயிற்று. சற்றுக் கரிய நிறம் குறிக்கும் மா என்ற சொல்லினின்று மா+சு ( மாசு) என்ற சொல்லும் அமைந்தது காணலாம். " ு " வினையாக்க விகுதியாகவும் வரும், எடுத்துக்காட்டு: கூசு (கூசுதல்), பேசு ( பேசுதல் ).
ஆசு என்ற சொல் உள்ளமைந்த சொற்கள் பல. இதற்குப் பற்றுக்கோடு என்றும் பொருள். ஆசு எனின் பற்றிக்கொள்ளுதல் ஆகும்.
ஆசு + இரு + அம் + அம். = ஆசிரமம்.
ஆசு - இரு என்பவற்றின் ஈற்று உகரங்கள் கெட்டன.
இச்சொல் இரண்டு அம் ஈற்றில் வந்து முற்றிற்று.. இடையில் உள்ள அம் என்பதைச சொல்லாக்க இடைநிலை என்றும் சொல்லலாம். அன்றி, இரட்டை விகுதி எனினும் பேதமில்லை.
யாரும் பற்றி(க்கொண்டு) இருக்கும் இடமே ஆசிரமம். அனாதை ஆசிரமம் என்பது காண்க.
இவ்வழக்குச் சொல் பிறமொழிகளிலும் வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.
சொல்லவும் எழுதவும் பல உண்டு எனினும் சுருங்கச் சொல்லி முடித்தல் கருதி நிறுத்துவோம். அறிக மகிழ்க.
தட்டச்சு பிறழ்வுகள் பின் கவனம்பெறும்.