வியாழன், 30 ஜூலை, 2015

manthiram pilli and chUniyam

பில்லி  சூன்யம் என்பவற்றை நம்பாதவர்கள்  பலர்.

நம்பி நாடிச் செல்வோரும் உளர்,

ஆசிரியர் மறைமலை யடிகள் தம்  மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி என்ற நூலில் இவற்றை நன்கு விளக்கியுள்ளார்/

இணையத்தில் இந்த நூல் கிட்டுமா என்று தெரியவில்லை.  நீங்கள் தேடிப் பார்க்கலாம் .

விவேகாநந்தரும்   இதை நன்கு விரித்துரை செய்துள்ளார்.  மந்திரம் என்பது கருத்து அலைகளை ஏற்படுத்தித்  தான் விரும்பிய விளைவுகளை நிலை நிறுத்துதல் என்பது போல் அவர் விளக்குகிறார். காந்தி முதலிய பெருமான்கள்  அல்லது மகான்கள் இதனை நன்கு பயன்படுத்தியுள்ளனர்,  காந்தியடிகள்  இறைமேன்மை தங்கிய  குரு  யோகானந்த அடிகளிடம் இறை நேயத் தொடக்கம் ( தீட்சை)  பெற்றவர்.


இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

Hexes and Curses - How do they work

By Nita Hickok (c)2005

www.astralhealer.com/news/50/85/books.htm

இதில் உண்மை இருக்குமா என்பதை உங்ககளுக்கு நீங்கள்தாம் முடிவு செய்து கொள்ள   வேண்டும் .



Notes:
--------------------------------------------------------------------------------
தீட்டுதல் - தீட்சை (தீட்+ சை) என்பன ஆய்வுக்குரியன.

தீட்சையிடுகையில்  நெற்றியில் தீட்டப்படும்.   initiation.

மொச்சை ( மொத்தமாக அல்லது) சற்று பெரிதாக உள்ள பயறு வகை.

மொ  >  மொத்தம்.  மொ  > மொச்சை. (சை: விகுதி). குடி + சை  = குடிசை,  இங்கு வலி மிகவில்லை.

You may compare the parallel formation of words.

திங்கள், 27 ஜூலை, 2015

அறிவியற் பேரறிஞர் அப்துல் கலாம் condolences

அறிவியற்  பேரறிஞர்  அப்துல் கலாம்  இந்தியா   ஷில்லோங்க்கில்   காலமானார் .  ஆழ்ந்த இரங்கல்.

அறிவியற் சாதனை  அன்புகெழு  உள்ளம்
புரிவியலால் வென்றோன் புவியை ----- கருவில்
திருவமைந்த தீந்தமிழன் தேன்போல் தெளிந்த
பொருவிலாப் பேச்சினனைப் போற்று.

புரிவியல் -  practice as opposed to theory,
பொருவிலா -  ஒப்பிலா


இராமே  சுவரம்   இராமபற்  றாரோ
டுறாமக்  களையும்   ஒருபரிசால்  உய்க்க ,
கலாமைக் கொடுத்த  கலைசேர்    புரட்சி
நிலாவானும் தந்ததற்  கொப்பு .

இராம பற்றாரோடு :   இராம பக்தரோடு.
இராமப் பக்தர் என்று எழுதார் ஆதலின்  இராமப் பற்றார் என்று  அமைக்கவில்லை . வழக்கு நோக்கியது 
உறா  மக்களையும் :  இராமரைப்  பின்பற்றா மக்களையும் .
உய்க்க :  முன் செலுத்த 
கொடுத்த :  ஆண்டவன்  அல்லது  இராமேசுவரம்  தந்த 
நிலா வானும் :  வானம் நிலாவினை 

வானம்  நிலவைப் பரிசாகத் தந்ததுபோல,  இராமேசுவரம் என்ற  இப்புகழ் பெற்ற தலம்  இராம பற்றர்களுக்கும்  அல்லாதாருக்கும் சேர்த்து  ஒன்றாக  ஒரு பரிசைத் தந்தது.. யாவரையும்  உய்க்க  அது தந்த பரிசு  " கலாம்"  என்னும்  மாமேதையாம். என்றபடி.


கனிவுமனம்  இனியமுகம் பனிகுளிர்ந்த நகையே
துணிவுபெறும் தொனியில்வரும் நனிசிறந்த குரலே
பணியிலுறும் அணியினொடு  கணிதவறாப் புரிவே
இனியுலகில் நினைவில்பிற  நனவில்வரல் உறுமோ

துணிவு பெறும் -  கேட்போர் துணிச்சல் பெறும்படியக .
நனி =  நல்ல.
நகையே -  சிரிப்பே
பணியிலுறும்  அணி  -  வேலையில்  ஈடுபடும்  அவர்தம்  குழுவினர்.
கணிதவறா -   கணிப்பில்  தவறாத  (. துணைக்கோளம் ,  ஏவுகணை  முதலியன செய்து  மேல் எழுப்ப, கணக்கு  நன்கு  போடவேண்டும்.  தவறக்கூடாது.  இதில் கலாம்  வல்லவர். )
புரிவே -  செயல் புரிதலே.
இனியுலகில் நினைவில் :   இனி அவர் நம் நினைவிலேயே  வாழ்பவர்.
பிற  -  மற்றபடி.
நனவில் வரல் உறுமோ -  உண்மை வாழ்வில் மீண்டு வந்து தோன்றுதல் கூடுமோ  என்றவாறு.


















வியாழன், 23 ஜூலை, 2015

பிரிவுஇன்று ஆயின் நன்மை

அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவுஇன்று  ஆயின் நன்மைமன்  தில்ல
குறும்பொறை தடை இய நெடுந்தாள் வேங்கைப்
பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக்
கல்பொருது இரங்கும் கதழ்வீழ் அருவி
நிலங்கொள் பாம்பின் இழிதரும்
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே!

இந்தக் குறுந்தொகை பாடலை(134)ப் பாடிய சிறந்த புலவர் சங்கத்துச் சான்றோராகிய    கோவேங்கைப் பெருங்கதவனார். ஆவார்.    இவர்பாடல் குறுந்தொகையில் ஒன்றே உள்ளது. பாடல் இனிமையாக உள்ளது.   இவர் பெயர் இயற்பெயராய்த் தெரியவில்லை.   பாடலில் வேங்கை என்ற சொல்லும் கத  என்ற ஈரெழுத்துக்களும்  வருகின்றன.

இங்கு வந்துள்ள "அம்ம"  என்பது விளித்தல் அல்லது  கவனத்தை ஈர்க்க அழைத்தற்  பொருட்டு.  தலைவி பேசுவது தோழியிடமாயினும் உரிய பணிவுடனேதான் அவள் பேசத்தொடங்குகிறாள்.   பேசத் தொடங்குமுன்  வாழ்த்தித் தொடங்குவது நம்மனோர் பண்டை வழக்கம் , "வாழி " என்கிறாள்.  தோழி  மூத்தவள் என்பது தெரிகிறது.  நம்மோடு என்ற சொல், தோழியையும் ஒருவகையில் உட்படுத்திச் சொல்வதுபோல் உள்ளது.    தலைவியின்  நலனில் தோழியும் அக்கறை யுடையாள் என்பது புலனாகிறது,

பிரிவு இன்று ஆயின் நன்றுமன்!:---   தலைவன் பிரிந்து போகாதவனாய் இருந்திருப்பானாகில் அது நன்றே அல்லது வேறில்லை.  தில்ல என்பது பாட்டில் இசை  நிறைவுக்காக வரும் அசை.   இது விருப்பம் குறிப்பது  என்றும் கூறுவதுண்டு.  அப்பொருள் கொள்ளின் ,  "விரும்பத் தக்கதுமாகும் " என்று  சேர்த்துக்கொள்ளலாம். தில்லை -  சிவனாருடைய விருப்பமான இருப்பிடம் என்பது காண்க. தில் > தில்ல ;  தில் > தில்லை .

குறும்பொறை -  சிறிய கற்கள்.  தடைஇய  -  தடித்த அல்லது பருத்த.  வேங்கை மரம்  நெடிய தாளினை உடையது  என்பதை, "நெடுந்தாள் வேங்கை"  என்றார்.
பூவுடை -  பூக்களையுடைய.   அலங்கு -   அசைகின்ற.   சினை -  இங்கு கொம்பு
என்று பொருள்.   புலம்பத் தாக்கி -   பூக்கள் உதிர்ந்துபோம்படியாக  அருவி நீர்
அசைத்துத் தாக்குகிறது . தலைவியின் நிலையும் இதுதானே.  அவள் மனத்துப் பூத்திருந்த இன்பப் பூக்களெல்லாம் உதிர்ந்து  விட்டனவே.

புலம்பு  -  தனிமை . (தொல் ).  புலம்புதல் :   தனிமையிற் பிதற்றுதல்.

அருவி கற்களுடன் பொருதி   (மோதி)  கீழே வேகமாய்ப் பாய்கிறது.  பேரொலி எழுப்பிக்கொண்டு!
எங்கிருந்தோ ஓடிவந்த நீர்,  அருவியாய், அந்த வேங்கைக் கொம்பைத் தாக்கிவிட்டுப் புலம்ப வைத்துவிட்டு, பாம்பு போல நெடிதாய்ச் சென்று வீழ்ந்து விட்டதே!   வலிமைசேர் வேங்கை மரம்  போல அவள்  குடும்பம் ,  அதிலொரு கொம்புதான்  அவள்.  பூத்திருந்த கொம்பு.   இனி அருவி மேலேறி வருதலில்லை. இனியும் நீர் வரத்து இருந்தாலும் கொம்புக்கு  அதிலொன்றும் இல்லை நாட்டம். பிரிவால் துன்பமாகி விட்டபின் எல்லாம் முடிந்துவிட்டது.

நிலை நில்லாத காதலனை சென்றுவீழ்  அருவிக்கே ஒப்பு வைக்கவேண்டும்.

பிரிவு இன்று :   இங்கு இன்று என்பது இல்லை  என்னும் பொருளில் வந்தது.

இல் +  து:   இன்று.   இன்றை மொழியில் ,  இன்று என்பது இல்லாதது  என்று நீட்டிச் சொல்லப்படும்.  பிற்காலத் தமிழில் இப்படிச் சொற்கள் பல நீண்டன.  இல் + து  ->  இற்று>  இன்று  என்பதில்    வல்லினம் மெல்லினம் ஆயிற்று. (மெலித்தல் விகாரம் ,)

இன் + து = இன்று  என்றும் வரும்.  இது  today என்று பொருள்தரும்.

அடிச்சொற்கள் வெவ்வேறாம்.

பாடலை நன்கு சுவைக்கவேண்டும்.

wanted to write more..  Will edit later. Enjoy this for the moment.

புதன், 22 ஜூலை, 2015

Indian parliament

நாம் எழுத  முனைவதைத் தடுப்பதற்குப் புதிய வழி,  சில விளம்பரங்களை அனுப்பித் திரையை  மறைத்துவிடுதல். அம்மம்ம, இவைகளை விலக்குவதே பெரும் போராட்டமாகிவிட்டது.  என் செய்வது!  நம் உலாவியும் வீழ்ச்சி அடைந்ததால்,  இதனை மறு நிறுவ வேண்டியதாயிற்று.

இந்திய  நாடாளுமன்றம் கூடியும் ஒழுங்காக வேலைகளைச் செய்யமுடியாமையால்,  ஒருநாளைக்கு எத்தனையோ கோடி (18 கோடி?)  நட்டமாம்.   பல ஏழைகளுக்குக்  கஞ்சி யாவது  ஊற்றியிருக்கலாம் . சற்று  நடு நிலையுடன் செயல்பட்டு,  கட்சிகள்  நல்லது யாதேனும் செய்திருக்கலாகாதா?

திங்கள், 20 ஜூலை, 2015

Speech Tamil and some considerations.

குமரி கண்டத்துத் தமிழர் எங்ஙனம் தமிழைப் பேசினரோ,  நம் எழுத்துத் தமிழ் அங்ஙனம் அமையப்பெற்றிருந்தாலும் நம்  பேச்சுத் தமிழ் அப்படி இல்லை. ஒருவேளை இற்றைத் தமிழர் குமரிக்குப் புறத்தே உள்ள நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின்  வழியினரோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலகின் பல மொழிகளில் பேச்சும் எழுத்தும் ஒரு மாதிரியாய் இருக்க, தமிழில் மட்டும் ஏன் பேச்சு மொழி வேறுபடுகிறது? ஆறு, மலை, தொலைவு  இவைகளாற்  பிரிவுண்டு கிடந்ததனால் இங்ஙனம் வேறுபாடுகள் முளைத்துவிட்டன என்னலாம்.இது குமரிக்குப் புறத்து வாழ்ந்தோருக்கும் பொருந்திவரும் காரணமேயாகும்.

கடல்கோளில் பாண்டியனும் சிலருமே பிழைத்தனர் என்பர். தொன்னுல்கள் பலவும் அழிந்தன. அவற்றுள் அடங்கிய பொருள்களின் சுருக்கம் தேவைப்பட்டதனாலேயே தொன்மை காக்க தொல்காப்பியம் இயற்றப்பட்டது  என்பது பொருந்திவரும் காரணமாகும்.  தொல்+காப்பு+ இயம் என்பதும் பொருத்தமான பெயர்.  வரலாற்றைச் சுட்டுகிறது.

இழவு என்பதை எழவு, எளவு என்பதுதான் பேச்சுத் தமிழ். குமரித் தமிழர் இழவு என்றே பேசியிருப்பர். எளவு ஏதும் அவர்கள் அறியாததே.

இழவுஎன்பது இழ+ வு என்று பிரியும்.   இது இயல்பாய்ப் புணர்ந்த பகுதியும் விகுதியும் ஆம்.    ஆனால் உழவு என்பதை இப்படிப் பிரிக்க முடிவதில்லை.  உழ என்பது சொல்லின் பகுதியன்று.  உழு என்பதே பகுதி.  உழு+ வு = உழவு.  இதில் ழு  என்பதில் உள்ள உ கெட்டு (மறைந்து)  அதற்குப் பதிலாக ஓர்  அ தோன்றியது. ஆகவே கெடுதலும் தோன்றலும் ஆகிய விகாரங்கள் அல்லது திரிபுகள் இதில் உள்ளன. விழவு (விழா) என்ற சொல்லிலோ,  ஐகாரம் கெட்டு அகரம் தோன்றியது.  விழை> (விழ்+ ஐ )>  (விழ்+அ) > விழ+வு, ( விகுதி ) >   விழவு என்று காட்டலும்  ஆம் .  எனினும் விழ் என்பது பகுதியன்று. அது தெளிவித்தற்பொருட்டுக் காட்டப்பெறும் புனைப்பகுதியாகும்.
இதை விழை> விழைவு> விழவு   ( ஐகாரக் குறுக்கம்) என்றும் உரைக்கலாம்.  விழா என்பதிலும் விழை> விழா என்க.  ஆ என்பது விகுதி.  கல்+ ஆ = கலா. (கற்றல் கருத்து இது).  கல்> கலை.  

நல்லன கற்றல்போல் தீயனவும் கற்றுக்கொள்வது காண்கிறோம்.   கல்+ இ = கால்+இ =  காலி.  கல் என்ற வினைப்பகுதி,  முதனிலை நீண்டு கால் ஆகி, இகர விகுதி பெற்றுக் காலி ஆயிற்று. தீயன கற்றுக்கொண்டவன் என்பது.
இதையும் காலாடி என்பதையும்  "காலாடு போழ்தில்" என்ற நாலடி மூலம்,  விளக்கலாம்.  எப்படிப் பார்த்தாலும் இவை தமிழ்ச்சொற்களே. 

வெள்ளி, 17 ஜூலை, 2015

Tribal girl attracts politicians who lost balance!

அதிகாரி ஏனை அரசியல் மேலோர்
மதியோ(டு)  உடுக்கள்போல் கூடிப் ---- பதிவானார்
குற்றக் குறிப்பேட்டில் கோதில் சிறுமிதனைப்
பற்றிமா   னம்கெடவே பாய்ந்து

(மதியோடும் உடுக்கள்போல் என்பது வஞ்சப் புகழ்ச்சி. கூடிப் பின் கெடுசெயலில் ஈடுபட்டதனால்.)


http://www.thehindu.com/news/national/other-states/minor-tribal-girl-molested-in-chhattisgarh-politicians-held/article7434698.ece?ref=sliderNews.

Minor tribal girl molested, politicians held


This happens in a place where so many things await their honorable attention and action......

"prohitham" word formation.

புரோகிதர்   என்ற  சொல்  தமிழென்று தமிழாசிரியர் ஒருப்படார்.

எனினும் இது மந்திரங்கள் மூலம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகக் கருதப் பட்டோருக்கு  அதன் காரணமாக ஏற்பட்ட பெயரென்று  ஆய்வாளர் கருதியுள்ளனர்.  1

 காப்பு  என்று பொருள்படும் தமிழ் மூலச்சொல் " புர" (புரத்தல்)  என்பதாம்.  இதிலிருந்து   ( புர+ ஊக(ம்)+ இது+அம் = புரோகிதம் ஆகும். " புரத்தல் அல்லது காத்தல் என்னும்  ஊகம்"  ஏற்படுத்தித்  தரும் வினை."

மந்திரங்கள்  எதிரான செயல்களையும் மாறுபடும் எதிர் மந்திரங்களையும் தடுப்பனவாக  நம்புவர் அல்லது ஊகம் செய்வர்.  (presumed to protect the person for whom the priest acts.)

இச்சொல்லும் தமிழ் அடிச்சொல்லிலிருந்து திரிக்கப்பட்டதென்றே   இதனால் அறிகிறோம்.ஊ பின் ஓ ஆகிற்று.

சமஸ்கிருதப் பண்டிதர்  கூறுவது --
purohita placed foremost or in front , charged , commissioned , appointed ; m. one holding a charge or commission

இதில் புரோ என்பது "முன்"   என்று பொருள்படும் என்பர்.  hita :  placed.
( நிறுத்தப் பட்டது )  ( one appointed to handle (thus a priest)  )


நம் கருத்து:
ஹித  என்பது இ என்று தொடங்குவதால்  இது என்ற தமிழின் திரிபாக இருக்கலாம் .  இங்கு வைத்தல் என்னும் பொருளில் வருகிறது.  இது + அ . >  இத > ஹித .  இவற்றுடன் இடு (place)  என்பதை ஒப்பிடலாம்.  இடுதல் .   புரோ என்பது புற என்பதன் திரிபு.

புறத்தே இடப்படுவது அல்லது இடப்படுபவர் .

cf:  படி (தல் )  :  பதி(தல் ,)   ட - த .

அடிக்குறிப்பு
1 தொல்காப்பியத்துள் ஆரியக் கலப்பா ?  -  வித்துவான் ச குமாரசாமி ஆச்சார்யார்,  M .A.,  (1955-56)    செ . செல்வி 

This post has been edited.

செவ்வாய், 14 ஜூலை, 2015

MAS எண்ணாயிரவர் இழப்பர் வேலையை

எண்ணா  யிரவர்  இழப்பர் வேலையை
இரக்கத்திற்   குரியர் இவர்கள் அல்லரோ?
பன்னாட்   டுக்கும் பறந்து திரும்பிய
பணிசிற மலேசிய வானூர்  திகளே
இன்னா  ளிலும்இனி எந்நா  ளிலுமே
இயங்கும் பாதைகள் வறங்கூர் வளத்தினால்
குறைந்திடும்; அளவில் தொலைவில் என்றனர்.
இழப்பீடு என்பதே இருந்த போதிலும்
குழம்பி நிற்பவர் உழைப்பை இழந்தவர்!
ஊதியம் இன்றி  யாதுதான் செய்வர்.
மீண்டும் மலர்க   வாழ்வு!
தீண்டிய  துன்பம் யாண்டும் விலகவே.

http://says.com/my/news/more-than-8-000-people-will-be-losing-their-jobs-in-upcoming-mas-lay-off


புதுக் கவிதையாய் எழுத முற்பட்டு  ஆசிரியம்போல் ஆகிவிட்டது....படித்துக் கண்ணீரில்  பங்குகொள்ளுங்கள்.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

tamil word for nail cutter

நகம் என்பது தமிழன்று என்பாருளர், இச்சொல் தமிழிலும் வழங்குகிறது. சமஸ்கிருத அகரவரிசைகளிலும் உள்ளதாகும், உகிர் என்பது இதற்கான
தமிழ்ச்சொல் ஆகும்.

நகம் வெட்டும் கருவியை நகம்வெட்டி என்னலாம் முன் இதை நகவுளி என்று குறித்தனர் என்று தெரிகிறது. நகவுளியை பெரும்பாலும் மயிர்வினைஞர்களே வைத்திருந்தனர் என்று அறிகிறோம் நகம்வெட்டி நகவுளியினின்றும் வேறுபட்டது  போலும்  ---   அதாவது உருவிலும் வெட்டும் திறனிலும் .

நகங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதிலும் திருமணம் ஏனைக் கொண்டாட்டங்களின் போது வண்ணம் பூசிக்கொள்வதிலும் பெண்கள் ஈடுபாடு உடையோர் ஆவர்.

நகுதல் - ஒளிவீசுதல் என்ற பொருளும் உள்ளது. நகு+அம் = நகம். வண்ணம் பூசப்பெற்ற உகிர். ஒளிவீசுவது. நகு+ ஐ = நகை என்பதும் காண்க. ஒளியுடைய பொன் அணிகலன்



நகுதல் -  ஒளிவீசுதலென்பதால் இதிலிருந்து பிறந்த "நகம்" முதல்முதல் பூசப்பெற்ற அல்லது வண்ணமூட்டப்பெற்ற  நகத்தையே குறித்து, பின்னர்  பொருள்விரிந்து பொதுவாய் அனைத்து நகங்களையும் குறித்தது. வண்ணமூட்டிய உகிரென்ற தன் சிறப்புப்பொருளை இழந்தே அதன் பொருட்பயன்பாடு விரிந்தது. நகுதல் - ஒளிவீசுதல் என்ற பொருளிலேயே "நக்கத்திரம்" (> நட்சத்திரம்) என்பதும் அமைந்துள்ளது கவனிக்கற்பாலது.


பல தமிழ்ச்சொற்கள் போல இச்சொல்லும் சமஸ்கிருதமுதல் இந்தோ ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் புகுந்து உலக சேவை செய்துகொண்டுள்ளது.  ஒவ்வொரு மொழியிலும் புகுங்கால் சொல் திரியும்

Angl. Sax. {naegel} ; Eng. {nail} ; Germ. {Nagel}.].

நககுட்ட:

நகக்குட்ட என்ற சமஸ்கிருதச்சொல், நகத்தைக் குட்டையாக வெட்டும்  சேவையாளனைக் குறிக்கும்.  முடிதிருத்துநனே இந்தச் சேவையையும் செய்தான். ஆகவே இறுதியில் இச்சொல் முடிதிருத்துவோனைக் குறிக்கலாயிற்று.  "நகக்குட்ட" என்னும் சமஸ்கிருதம்,  நகம் குட்டையாக்குவோன்  என்ற தமிழின் குறைவடிவமே என்பது சொல்லாமலே விளங்கும்.


நகத்தில் இலக்கித்தல் என்பதிலிருந்து "நகலேக"  (nail painting)  என்ற சமஸ்கிருதச்சொல் அமைந்தது. இலக்கித்தல் என்றால் நகத்தில் பூசுதல் அல்லது எழுதுதல். இலக்கி = எழுது; இல : இழு: எழு.  ல> ழ  ஒப்பு நோக்குக: பழம் : பலம்..


சனி, 11 ஜூலை, 2015

புலித்தோல் போர்த்திய .....

புதுக்கவிதை 


புலித்தோல் போர்த்திய ஆவும்
புல்லைப் போய் மேய்ந்ததோ
நிலை கொள்ள முடியா ஆழ நீர்
நீர் ஏன் அதில் போய் இறங்கினீர்
நலமான வெள்ளங்கி அணிமேலோன்
நைந்துபோன கெடு நடத்தை கொள்வதோ
குலமாத ரொடுகுடும்பம் கொள்ளலாம்
குறுக்கின்பம் தடுக்குமோர் திடமிலார் 

https://sg.news.yahoo.com/ex-prelate-hospitalized-ahead-trial-sex-abuse-porn-071336980.html

வெள்ளி, 10 ஜூலை, 2015

எவையேனும் விளம்பரங்கள் தோன்றினால்.......

இந்த வலைப்பூவில் நாம் எந்த விளம்பரத்தையும் இணைக்கவோ வெளியிடவோ  இல்லை.எவையேனும்  விளம்பரங்கள் தோன்றினால் அவை எமக்கு அறிமுகம் இல்லாத நபர்களால் வெளியிடப்படுபவை .  அவற்றுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை. கடவுச்சொல் இல்லாமல் எங்ஙனம்  உள்புகுந்தனர்  என்பதை அறியவில்லை.  எம் இடுகைகளில் சில பிழைகளையும் உண்டாக்குகின்றனர்  என்பது தெளிவு.

கடவுச் சொல்லை மாற்றலாம்.  அதையும் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்களே!

இவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளோம்.  

புதன், 8 ஜூலை, 2015

News Reports

கால்மணி நேரம் கழிப்பதற்கு---- கைக்
காசினை  வீசியே தாளிகை வாங்கினால்
மேல்மண்டை  மேனிஎன்  கால்கள்வரை --- கவலை  
மேல்வந்து  சூழுது கடலலை போலவே.


கவலையில் காலம் கழிப்பதற்கு   ---- நாம்
கண்டு பிடித்தவை  காகித நாளிதழ்
உலவிகள் தந்திட்ட  செய்திகளைப் ----- பார்த்தால்
ஒருபடி    மேலென்றே சொல்வது  கூடுமோ

Note:  Browser became  unstable
 upon pasting this poem  and we could not preview.  It has been reinstalled from a different restore point. We do not know why..... Anyway enjoy this poem....Sorry about it. 

செவ்வாய், 7 ஜூலை, 2015

Levels of dispute resolution

வென்றால் என்ன அண்ணே!
விதிமுறைகட்கு கட்டுப் படுக முன்னே!--- இல்லையேல்
உண்டான பட்டம் உயர்நிலை அனைத்தும்--- 
இன்றில்லை என்றன்றோ ஆகிவிடும்
நீதிமன்றத் தீர்ப்பு ---  சில வேளை 
குற்றவாளிக்குச் குடைச்சல் 
தருமாப்போல 
மூதறிவுச் செயலவை உறுப்பினரும்---- நல்ல
வேதனை தரும் முடிவுகளை மேற்கொள்வர்.
அதற்குச் சான்றாவது இதுவேதான் காணீரோ! 


Mayweather stripped of title he won in Pacquiao fight


https://sg.sports.yahoo.com/news/mayweather-stripped-title-won-pacquiao-fight-005956406--box.html

I am no fan of boxing.  But:  Observe that dispute resolution comes in at so many levels, and at the apex are the law courts.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

Sage Narada

நாரத முனிவரை இன்று நமக்குள்ள வேலைப்பளுவின் காரணமாக மறந்துவிடுகிறோம்.  அவர் நினைவு பழங்கதைகளைக் கேட்டாலே மீண்டு வருகிறது. வீணையை வைத்துக்கொண்டு இனிமையாக இசைபாடி, நன்கு பேசிப் பிறரை மடக்கக் கூடியவராகவே அவர் கதைகளில் வரலாறு வருகிறது.

சங்கதப் புலவர்கள் அவர் பெயர் மனிதனைக் குறிக்கும்  "நர(ன்)" என்பதிலிருந்து  வருவதாகச் சொல்லுவர். அவர் நடத்தும் வாதங்களைக் கேட்கையில்,  நரன் என்பதிலிருந்து அவருக்குப் பெயர் வந்தது  என்பது பொருத்தமாக இல்லை.  நாம் அனைவருமே நரர்கள் தாம்.

நாவினாலே யாரையும் அறுத்துப் பேசி மடக்குபவர் என்ற பொருளில் நா+றதர் >  நாரதர்  எனில் சரியாய் இருக்கும்.

றதர் என்பதைப் பார்ப்போம்.

அறு+ அதர் =  அறதர் =  அறுக்கும் வழி.
அதர் =  வழி.
நாவினால் அறுத்துப் பேசும் வழி அறிந்த கலைஞர்.

அறதர் என்பது தலையிழந்து றதர் > ரதர் ஆனது.

அரங்கன் > ரங்கன் ஆனதுபோல.

நா+அறு+அதர்= நாவறுதர் > நாறதர் >நாரதர் என்று தமிழ் முறைப்படி காணலாம்.

இது ஏனை இந்தோ ஐரோப்பியத்தில் இல்லாத சொல்

அது+ அர் என்ற பின்னொட்டுகள் அத(ர்) என்று வந்தன என்னினும் அமையும்.


நாவை ரதமாக உடையவர் எனினும் ஏற்புடைத்தே.  தச + ரதர் = தசரதர் என்பதுபோல நா+ரதர் = நாரதர்.

கடக இராசி :Crab and its qualities

கடக இராசியில் பிறந்தவர்கள்  துணிச்சலும் திடமனமும் உடையவர்கள் என்று கணியர்கள் (சோதிடர்கள்) கூறுவர்.  திடமும் திறமும் உடையாரை எளிதில்  கடந்துவிட இயலாதன்றோ?

நண்டு என்ற  உயிரி,  கடினமான ஓட்டினுள் வாழ்கிறது.   ஓடு கடினமானது;  அந்தக் கடு வெளி  ஓட்டின்  அகத்து (உள்ளே)  அது வாழ்கிறது.  எத்துணை கடின ஓடாயினும் அதை மடக்கிப் பிடித்து மனிதன் உண்டுவிடுகிறான் என்றாலும்,  இதனால் ஓடு கடுமை என்பதும் அகத்தே நண்டு வாழ்கிறதென்பதும் மறுத்தற்கொண்ணாத உண்மைகளே.

கடு+  அகம் = கடகம்.

இங்ஙனம் நண்டுக்கு மற்றொரு பெயர் அமைந்தது.  இது மிக்கப் பொருத்தமாய் அமைந்த பெயராகும்.

கட + அகம் :  வென்று உட்புக அரியது என்றும் பொருள்.

கடம்:  <  கட.

இதனை வேங்கடம் என்ற சொல்லுடன் வைத்து நோக்குக.

கடத்தல் - வெல்லுதல் என்றும் பொருள்படும்.

கடக  இராசி 

வியாழன், 2 ஜூலை, 2015

போருக்குப் புறப்படுமுன் .........

அரசன் ஒருவன்  போருக்குப்     புறப்பட எண்ணுகின்றான்.  அவன் என்ன செய்யவேண்டும்?  இதற்கான விடை யாரும் அறிந்ததுதானே! "போருக்குப் புறப்படுங்கள் " என்று உரத்த குரலில் கட்டளையிடவேண்டும். திரைப்படங்களில் அப்படித்தான் காட்டுவார்கள். காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்குக் கட்டளை யிட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

சிறந்த போர்க்கலை மன்னர்கள், பல முன்னேற்பாடுகளைச் செய்தார்கள். அதிலொன்று படைகளைப் பலவிதத்திலும் தயார்ப்படுத்துவது. அதில் ஒரு "விதம்": வரிசையறிந்து படையுறுப்பினர்களுக்கு விழுமிய பொருள்பல வழங்கிச் சிறப்பிப்பது.

முன் போரில் பல வெற்றிச் செயல்கள் புரிந்து தன் நாட்டுப் பற்றையும் அரசுப் பற்றையும் மெய்ப்பித்தவர்களுக்குச் செயல்தகுதிக்கேற்பப் பொருள்வழங்க வேண்டும்.  இதைத்தான் "வரிசையறிந்து" என்று சொன்னோம்.
பொருளுடன் பட்டம், பதவி முதலியவும் வரும்.

மறவர் சிலருக்குக் குதிரைகள் கிடைத்தன.  வேறு சிலருக்கு யானைகள்.
நிலங்கள் பரிசாகப் பெற்றோரும் உண்டு. இன்னும் சிலருக்குப் பொன்னும் மணியும். இப்படிப் போருக்குமுன் அளிக்கும் நிகழ்வுக்குத்  "தலையளி" என்றனர். அளிக்கும் மருத நிலத்துக்குத் "தண்ணடை" என்று பெயர்.

இதைக்கூறும் பாடலைத்  தும்பைத்திணை, தும்பை அரவத் துறை என்று வகைப்படுத்துவார்கள்.

பொன் புனைந்த கழலடியோன் 
தன்படையைத் தலையளித்தன்று.

என்பது கொளு. தலையளித்தன்று = தலையளித்தது .( புறப் பொருள் வெண்பாமாலை .)

சிவ பெருமானே முப்புரம் எரிக்கப்  ( போருக்குப்) புறப்படுமுன் புறப்பொருள் இலக்கணப் படி செய்வன செய்துதான் புறப்பட்டாராம்.    

அத்தகு சிறப்பு உடையது தமிழனின் புறப்பொருள் இலக்கணம். (என்பர் புலவர் )