மண் சில நிறங்களில் கிட்டுகிறது. செம்மண், களிமண் என்ற பெயர்களைக் காண்க. கூர்மை நெருக்கம் என்றும் பொருள் உள்ளன.
மஞ்சள் காயுமுன் அரத்தை போன்ற உருவில் உள்ளது. அரத்தை கொஞ்சம் சிவப்பு நிறமாக இருக்கும். மஞ்சள் காய்ந்தபின் கட்டியாகி, மங்கலப் பொருளாகவும் பயன்பட்டு, குழம்பு வைப்பதற்கும் பயன்படுகிற நிலையில் அதன் நிறம் காய்ந்த சிலவகை மண்ணை ஒத்ததாகவே உள்ளது. மண்ணினோடு நெருங்கிய நிறம்தான்.
மஞ்சைக் காணி என்ற சொல் மஞ்சட்காணி என்பதற்கு ஈடாக வழங்கும், மஞ்சள்நீர்ப் புத்திரன் என்பதுதான் மஞ்சணீர்ப் புத்திரன் என்னும் சொற்றொடர்.
மண்செய் என்ற இருசொற் புணர்ப்பே மஞ்சை என்று மாறியுள்ளது.
இனி இவற்றைக் கவனியுங்கள்:
தண்செய் - தஞ்சை. காவிரியால் தண்மையாக்கப்பட்ட நிலம்.
பண்செய் > பஞ்சை: பண்களைப் புனைந்து வாழ்ந்தோர், யாரேனும் ஒரு செல்வம் உடையவனையே அண்டி வாழவேண்டிய நிலை பிற்காலத்திலும் அவர்களுக்கு ஏற்பட்டது, ஆகையால் அவர்கள் "பஞ்சை" என்று குறிக்கப்பட்டு பணம் பொருள் இல்லாதவர்களாய்த் தாழ்ந்தனர். சில ஆய்வாளர்கள் பஞ்சைப் போல் பறப்பவர்கள் ஆனார்கள் ஆதலால் என்று ஒப்பிட்டு விளக்கினர், ஆகவே அது சரி இது சரியில்லை என்று ஊகித்து வாதம் விளைக்காமல் இதை இருபிறப்பிச் சொல் என்று கிடத்துக.
கஞ்செய் > கஞ்சை: இது கடுமையானதாகச் செய்யப்பட்டது என்னும் பொருளில் கடுஞ்செய் > ( வல்லெழுத்து டுகரத்தை நீக்கி ) கஞ்செய் என்று வந்து பின் கஞ்சை என்றானது. செய் என்பது சை ஆவதற்கு இதிலும் ஓர் விதியமைப்பைக் காணலாம்.
விண்+ செய் > விஞ்செய் > விஞ்சை. ( விஞ்சையர் - விண்ணோர்)
ஊஞ்சல்: = ஓரிடத்தில் ஊன்றிக்கொண்டு முன்சென்றும் பின்சென்றும் வருவதுதான் ஊன் + செல் > ஊஞ்சல். உன் என்பது முன்னிருப்பவனைக் குறிப்பதுபோலவே முன் இருப்பதனையும் குறிக்கும், உ என்ற சுட்டடிச் சொல் ஆகும், ஊங்கு என்பது மீறிய என்று பொருள்படும் " அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை, அதை மறத்தலின் ஊங்கில்லை கேடு" என்பதும் காண்க. ஊ என்பது சுட்டுச்சொல்லே ஆகும், உன் என்பதன் முன் வடிவம் ஊன் என்பதுதான் என்று முன்னரே ஆய்வாளரால் தெளிவுசெய்யப்பட்டதே ஆகும்.
ஊன் செல்> ஊஞ்சல்.
ஆகவே மஞ்சள் என்பது மண்செய்> என்பதில் விளைந்து வந்த சொல்லே ஆகும்,
அள் என்பது அடுத்திருத்தல் என்று பொருள்தரும் அடிச்சொல். நெருக்கம் காட்டுவது.
மஞ்சள் என்ற உயர்சொல்லை யாரும் இதுவரை விளக்கியதாகத் தெரியவில்லை,
இதுவே முடிபு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்