சனி, 29 நவம்பர், 2025

திவ்வியம் என்பதன் தமிழ் மூலச்சொல்.

 திவ்வியம் என்ற இனிய சொல்லைக் காண்போம்.

திவ்வியம் என்றால் என்ன என்று கேட்டால்,  கேட்டவனுக்கு  திவ்வியமான ஒன்று என்ற பதில்வருமானால்,  முன்னினும் தானறிந்து கொண்டது ஒன்றுமில்லை என்றுதான் கேட்டவன் நினைப்பான். இப்போது  தி + இயம் >  திவ்வியம் என்று புணர்த்திச் சொல்லை உருவாக்கிக்  காட்டினாலும்,  தி என்பது எதைக் குறிக்கிறது மீண்டும் கேட்கத் தோன்றும்.

தித்தி என்ற சொல்லில் தி  என்பது இனியது என்னும் பொருளதாய் உள்ளது. இதைத் தீந்தமிழ்  என்ற சொல்லின்மூலம்  அறிந்துகொள்வோம்.  தீம்பூ என்ற சொல்லில்  பூ என்றால் வினைப்பகுதியாக வந்து முதனிலைத் தொழிற்பெயராக நின்று  '' தோன்றிய ஒன்று''  என்று பொருடரும். (பொருள்தரும்).  பூ என்பது நறுமணத் தொடர்புடையது என்பதால் தீம்பூ என்பதற்கு  வாசனை என்று பொருள் சொல்லவேண்டும். தீந்தமிழ் என்றால் இனிய தமிழ் என்பது பொருள்.  இதைத் தீத்தமிழ் எனலாகாது. வலிமிகின் கெடுபொருண்மை உடையதாகிறது.

ஆனால் தீம்பு என்பது  தீமை என்று பொருள்படுகிறது.  ஆகவே இங்குக் கவனம் தேவையாகிறது.  தீயது என்பது இனியது என்றும் பொருள்தருவது.  ஆனால் இற்றை வழக்கில் கெட்டது என்று பொருள்கொள்ளவேண்டும்.  தீயம் என்றால் இனிமை உடையது என்பதாகும்.  தீயம் என்பது இடைக்குறைந்து தீம் என்று வருகிறபோது இனிது என்பதே பொருள்.

தீவிய என்றால் இனியது என்பதே.  இது குறுகி,  திவ்விய என்றால் அதுவே பொருள். இனிமைப் பொருளதான தீயளி என்பது பசுங்காய் என்றாகும். தீவு என்பது நன்மைப் பொருள் தந்து , தீவாம் வாழ்வு என்றால் இனிய வாழ்வு என்றுதான் பொருள்.

இப்ப்டி முயன்று பொருளறிந்து கொள்வதினும்,  சுருக்கமாகத் திவ்வியம் என்பதை அறிந்துகொண்டுவிடலாம்.

திருவியம் ( திரு+ இயம் ) >   திருவியம்> தி( ரு )வியம் > திவ்வியம்.

திருவமைந்து நிற்பது,  இனிமையானது,  மிக்க உயர்வானது. இடைக்குறைச் சொல்.

மூலச்சொல் எது என்பது தானே புரிந்துகொள்ளத் தக்க விளக்கம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.









புதன், 26 நவம்பர், 2025

சாதுரியம்

 சாதுரியம் என்ற சொல்லிற் புதைந்துள்ளன காண்போம். 

இதன் பொருள்,   நிதானம், நினைவு, பின் தொடர்தல், பாவனை, கிரகித்தல் என்று கூறுவார்,  அகரவரிசை செய்த  அறிஞர்  கதிரைவேற்பிள்ளை.

சாதுக்கள் என்போர்,  பெரும்பாலும் சிந்தனைகளில் ஈடுபடுவோர். அதாவது கைவேலைகளில் ஈடுபடுவோர் அல்லர். மனத்தில் தோன்றும் சிந்தனைகளே இவர்கள் மக்களுக்குத் தருவன ஆகையால்,  இவர்களுக்கு உரியன சிந்தனைகளே. இவர்கள் பிறருக்குச் செயலாற்ற  உதவுவனவும் அவையேயாம்.

சாதுக்களுக்கு உரியன >  சாது + உரியன >  சாது உரியம் > சாதுரியம்.

நிதானம் தவறாமை,  நினைவுகளில் ஆழ்ந்திருத்தல், சிந்தனைகளை மேலானவையாய்க் கொள்ளுதல்,  பாவித்துரைத்தல்,  மனத்தில் வைத்தல் என்று விரித்தல் கூடும்.

யோகக் கலையில் தன்னை இறந்தவன்போல் பாவித்து  ஆசனம் கொள்ளுதலும் ஒன்றாகும்.  இது சவாசனம் எனப்படும். செத்த பொருள்போல் கிடப்பதால் சா- சாதல் எய்தியவர் போல்,  து -  தொடர்பவர். சாதல் என்ற சொல்,  இறந்தோனைக் குறிக்கையில், சவம் என்றாகும்.  சாவு+ அம் > சவம்,  முதனிலை நெடில் குறுகி சா- ச என்று குறிலாகித் தொழிற்பெயர் ஆயிற்று.  தோண்டு> தொண்டை என்பது இன்னொன்று. இவ்வாறு முதனிலைக் குறுக்கத்தை யாம் பலகாலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.  ''வாய்'' இடமென்றும் பொருள்.  அம் விகுதி வர வயம் ஆகும். வாய்> வயம்.  ஓர் இடத்திலிருத்தலே வயப்படுதல்.  இவ்வாறு சிந்தித்து அறிந்துகொள்க. இதுவும் முதனிலைக் குறுக்காய் ஆன தொழிற்பெயர்.

இறந்தோன்போல் கிடக்கையிலும் சிறந்தோனாய்ச் சிந்தனைகளுடன் இருப்பவர் சாது.

து என்பது அஃறிணை விகுதி.  சாது - செத்தது (போல்). ஒப்புமையில் உண்டான சொல்லாக்கம். ஒப்புமையால் உருப்பெற்ற சொற்கள் பல.  பழைய இடுகைகளை ஆய்ந்து பட்டியலிட்டுக் கொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





திங்கள், 24 நவம்பர், 2025

அம்மாள் என்ற வடிவம் தவறன்று

 மகள் >  மாள்.

அம்மகள் என்பது  வழக்கிறந்த வடிவம்.  இது அவர்கள் என்பதுபோலும் சுட்டு,

அம்மகள் >  அம்மாள்.

கோகிலா  அம்மகள்  >  கோகிலா அம்மாள்  ( திரிபு)

இவ்வாறுதான் இது இறுதி ளகர ஒற்றைப் பெறுகிறது.

அம்மாள் என்று ளகர ஒற்றுடன் முடிந்த பெருமைச்சொல் வருவது சரியே.

பெருமகன் என்பது பெருமான், பெம்மான் என்றும் திரியும்.

அம்மை > அம்மா.  இது உண்மையில் விளிவடிவத்தில் அம்மா ஆகிறது.

இதற்கு இறுதியில்  ளகர ஒற்று வராது,  வரவில்லை.  கூப்பிடும் சொற்களில் ள் 

வந்தால் ஒலித்தடை ஏற்படும்.  இது ஒலியியலுக்கு ஒவ்வாமை காண்க.

ஒலித்தடையாவது பலுக்குங்கால் நாவிற்கு ஏற்படும் தடை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


பகிர்வுரிமை

சனி, 22 நவம்பர், 2025

இமாலய வெற்றி - இமாலயம்

 இமாலய வெற்றி என்று கூறுவதுண்டு.

இதை இவ்வாறு பிரித்தறிக.

இ -  இது;  மா - பெரிய;  ஆல்  ( அகல் என்பதன் திரிபு) - அகன்ற; அய - அடைந்த அல்லது அருகிலான.

இந்த அய என்பது  இரண்டு மூலச்சொற்களின் இணைப்பு.  அ என்பது அருகில் அல்லது அயலில் என்பதற்கும் மூலம்.  அங்கு என்பதற்கும் மூலமாகும்.  அ அ என்பது அய என்று வந்ததில் யகர உடம்படுமெய் வந்தது.  

மா+ அகல்+ அ+ அ ,  அகல்> ஆல் என்று திரியும்.

மா+ ஆல் > மால் என்று,  ஆ கெட்டது அல்லது வீழ்ந்தது.  இது மக+ அன் > மகன் என்று அ வீழ்ந்தது போலுமே. வகர உடம்படு மெய் வரவில்லை.  மக அன்> மான் என்றுமாகும். பகு> பகுதி> பாதி, காண்க. ககர வருக்கம் வர முதல் நீளுதல். அதியமான், புத்திமான். பெருமகன் > பெருமான். தொகு+ஐ>  தோகை. தொகை என்றுமாகும். பகு+ ஐ>  பாகை.

சொல்லாக்கப் புணர்ச்சி வேறு.  முழுச்சொற்கள் புணர்ச்சி வேறு. இவ்விரண்டிலும் ஒற்றுமைகளும் உண்டு,  வேறுபாடுகளும் உண்டு.

இமைய ஆலய என்ற சொற்களின் இணைப்பு எனினும் ஒன்றே.  இதை விரிவாக மேலே கூறியுள்ளோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை


வியாழன், 20 நவம்பர், 2025

சகோதரம், சகோதரன், சகோதரி தமிழ்மூலம்.

 தலைப்பில் கண்ட சொற்களை இன்று ஆய்ந்து அறிந்து கொள்வோம்.

அகர வருக்க முதலாயின சொற்கள் சகர வருக்க முதலாய்  ஆகித் திரியும் என்பதைச் சொற்களை ஆய்வோன்  அறிந்திருக்க வேண்டும்.  இக்கருத்துக்கு ஆசிரியர்கள் பெரும்பாலும் காட்டும் உதாரணம் :  அமணர்> சமணர்  என்ற சொல்தான்.  அடுத்தடுத்து மண் குழைத்து இறுக்கமாகச் செய்யப்படுவது  அடு> சடு> சட்டு>  சட்டி   என்போம்.   அடு> சடு>  சடு+ இ>  சட்டி என்று சுருங்கக் கூறிவிடலாம்.  பொருள்விளக்கம் தானும் முன்செய்தபடியே  செய்தல் கூடும்.

அகம் என்பது உள் என்று பொருள்தருவது.  மேற்கூறிய விதியின்படியே,  அகம் என்பது சகம்  ஆகும்.  சகோதரர்கள் தமக்குள் ஒத்தவர்கள்.  ஒருதாய் உடைமையால் பிள்ளைப்  பருவத்திலிருந்து வளர்ந்தவர்கள்.  ஒரு வீட்டில் வாழ்ந்து வளர்ந்தவர்கள் என்றும் விளக்கினும் இழுக்கில்லை.  அக > சக என்றாகிறது.   சக + ஒ >  சகொ >  சகோ என்று திரித்தாலும்  சகோ என்றாகும்.  ஒ+இயம் > ஓவியம் என்ற இன் தமிழ்ச் சொல்லையும் கண்டுகொள்க.  உண்மைப் பொருளை  ஒத்து இருப்பதுதான் ஓவியம்.   ஓ+ அம் > ஓவம் என்றுமாகும் என்றறிக.

அக+ ஓ .>  அகோ>  சகோ.   தரு + அன் >  தரன். தரப்பட்டவன்,  அதாவது தாயினால் தரப்பட்டவன். பிள்ளைகளைத் தருவதனால்தான்,  தா> தாய் என்ற சொல்லும் பொருள் சிறக்கிறது.

சகோதரி என்பது பெண்பால் எனல் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ்வாறு சுருங்கச் சொல்வதால் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.


 

புதன், 19 நவம்பர், 2025

வயிறு - சொல்லும் பொருளும்.

 வயிறு என்றால் இறுதியில் வைக்கப்பட்டது என்று பொருள்.  முன் காலத்திலே இச்சொல் அமைந்து நெடுங்காலமாக வழங்கி வருகிறது.  

வை  -    வைக்கப்பட்டது. இந்தப் பகவு,  வ்+ ஐ என்ற ஈரெழுத்துக்களால்  ஆனதாம். இங்கு வை என்பது நெடில்.  குறுகி  வ என்று நின்றது.

இறு  என்பது இறுதி என்ற பொருளது.   இறுதல் என்ற வினை, விகுதி பெறாமல் பகுதி மட்டுமே பகவாக நின்றது.  இறு என்றபடி.

வ+ இறு >  வயிறு  ஆனது.   யகர ஒற்று,  இரு பகவுகளையும் உடம்படுத்துகிறது,  அதாவது இணைக்கின்றது.

உதரம்  என்பது வயிற்றுக்கு இன்னொரு பெயர்.  இது உது + அரு+ அம் என்ற மூன்று பகவுகளைக் கொண்டு ஆன சொல்.

உ - என்றால் முன்.  து என்ற விகுதி இணைந்து உது -  முன்னிருப்பது என்ற பொருளில் வரும்.  நீ > உன் என்ற சொல்லில் உன் என்பது முன்னிருப்பவனுக்குப் பதிற்பெயர் ( pronoun).[ in the possessive case]. இது  ஊன்> உன் என்று குறுகிற்று என்று இலக்கணியர் உரைப்பர். நீ என்ற சொல், நீங்கற் பொருளது ஆகும்.  தன்னின் நீங்கி நிற்பவன் என்று பொருள்.'' உன்னில்'' முதுகுக்கு அருகில் இருப்பதால்  '' அரு'' என்ற  பகவு வந்தது.  ஆகவே உன்னில் முதுகுக்கு அருகில்  அமைந்தது   அரிய பல உள்ளுறுப்புகளைக் கொண்டிருக்கும் இடம் என்று பொருளுரைத்தல் கூடும்.  இவ் வுதரம் என்ற சொல் ஒரு காலத்தில் வழக்கில் இருந்து பின் வழக்குக் குன்றியிருக்கலாம்.

'' உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்''  என்ற மனோன்மணீயம் வழக்கினைக் கண்டுகொள்க.  உது அரு என்னாமல் உ+ தரு என்றும் விளக்கலாம்.  இஃது '' முன் வைக்கப்பட்டது''  என்று பொருள்படும். 

ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகளை உடைய சொல் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


திங்கள், 17 நவம்பர், 2025

கேதாரம் இராகம். சொல்லமைப்பு

 கேதாரம் என்பது 29-வது மேளகர்த்தா இராகம் என்பர்.  இது ஆரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதனால்,  இந்த ஒழுங்குமாற்றம்  ''கேடு'' என்ற சொல்லால் அறியப்படுகிறது.  தமிழ் இலக்கணத்திலும் விடுபாடுகளைக் கேடு, கெட்டது என்ற சொற்களால்தாம் குறிப்பிடுவர்.  எடுத்துக்காட்டாக என்னில் என்ற சொல்  எனில் என்று வரின்,  னகர ஒற்றுக் கெட்டது என்று சொல்வர். எதையும் விடாமல் தொகுக்க முடியாதாகையினால், இதைக் கெடு என்ற வினை சரியாகவே குறிக்கிறது.  தொகை (தொகுத்தல்) என்பதும் அது. புலவர்கள் பாடியவை பல இருந்திருக்கலாம்.  நானூறு பாட்டுகள் தாம் வேண்டின் பலவற்றை விடவேண்டியதாகிறது.  பல நூறுகளை விட்டிருக்கலாம்.  இல்லாவிட்டால் தொகுக்கமுடியாது.  எட்டுத்தொகை நூல்கள் அவ்வாறு தொகுக்கப்பட்டவைதாம். ஆனால் விடப்பட்டவை கெட்டவை என்பது பொருளன்று. விடுபாடு என்பதே இங்குப் பொருளாகும்.

கேடு+ தாரம் >  கே+ தாரம் >  கேதாரம்.

தரு+ அம் > தாரம்,  அதாவது விடற்பாலவற்றை விட்டு மிஞ்சியவை தருதல். இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

கேது என்பது ஒரு நிழற்கிரகம். ஒளி கெட்டமையால்,  கேடு+ து > கேது எனப் பெயர் ஏற்பட்டது.  கேடு என்ற முழுச்சொல்லில் டுகரம் விடுபாடு ஆனதனால், இதை இலக்கணத்தில் கடைக்குறை என்பர்.

இதுபோலும் எழுத்துக் கெட்ட செற்களை,  பழைய இடுகைகளைப் படித்துப் பட்டியலிட்டுக் கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை 





















புதன், 12 நவம்பர், 2025

சிலாகித்தல் என்பதன் தமிழ் மூலம்

 

சிலாகித்தல் என்றால் என்ன?

இன்று சிலாகித்தல் என்ற சொல்லெழுந்த வகையை  அறிந்துகொள்வோம். இஃது இன்னும் வழக்கில் உள்ள சொல்லாம்.

அறிதற்கு எளிமையானதே இது.

இதனைச் "சில  ஆகுதல்" என்ற தொடர்கொண்டு  அறிக.

இந்தச் சொல்லiைப் படைத்தவர்,   ஆகுதல்  என்ற செந்தமிழ் வடிவினைக்
கையிலெடுத்து  ஆகி என்று வினை எச்சமாக்குகிறார்.

அப்புறம்  அதில்  -தல் என்னும் தொழிற்பெயர் விகுதியை  இணைக்கிறார்.

இணைக்க  "ஆகித்தல்"  என்ற வடிவம் கைவரப்பெறுகிறார்.

இது  "ஓது" என்ற சொல்லை  "ஓதி"  என்று எச்சமாக்கி அப்புறம்  -தல் விகுதி இணைத்து ஓதித்தல் என்று தொழிற் பெயர் ஆக்கியது போலுமே. இதை  "ஆமோதித்தல்" என்பதில் வர அறிந்து மகிழ்வீர்.

அந்தக் காலத்தில் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்துப் புலவோர் இது கண்டு மகிழார் எனினும்  புதுமை விழைவார் யாதுதான் செய்வது.  கூடுதலான எதிர்ப்பு வரின் பிறமொழி என்று மழுப்பிட வேண்டியதே.


எச்சத்தினின்று வினைபுனைதல் பாலி முதலிய பிற மொழிகளிற் காணக் கிடைப்பதே.

சில வழிகளில் புகழ்தல்   என்பது சிலாகித்தல் என்பதான புதுப்புனைவுக்குப்  பொருள்  ஆயிற்று.  புகழே ஆக்கம்.  மற்றென்ன உண்டு மானிடற்கு?  இசைபட வாழ்தலே ஊதியமென்றார் வள்ளுவனார்.  சிலாகித்தலுமது.

ஞாயிறு, 9 நவம்பர், 2025

வினோதம் ( விநோதம்) சொல்

 வினோதம் என்னும் சொல் தோற்றம்.

இதற்கு இன்னொரு சொல் வேண்டின்,  ''விசித்திரம்''  என்று சொல்லலாம். 

இச்சொல்லுடன்,   நோடு(தல்) என்றொரு சொல்லையும் ஒப்பிடலாம் என்றாலும், இச்சொல் இப்போது கிடைக்கவில்லை. ஆனால் நோட்டம் என்ற சொல் கிட்டுகின்றது.  ஆடு> ஆட்டம் என்பதுபோல்  நோடு> நோட்டம் இருக்கவேண்டுமே.  இச்சொல் ( நோடு) வழங்கிய நூல் கிடைக்கவில்லை.  நீங்கள் நூல்கள் வைத்திருந்தால், அவற்றில் கிடைக்கிறதா என்று பாருங்கள்.  ஆனால் நோண்டுதல் என்ற சொல் கிட்டுகின்றது.  நோண்டி நோண்டிக் கேட்கிறான் என்று வாய்ப்பேச்சில் வரும்.  நோண்டு என்ற வினை இடைக்குறைந்தால் நோடு என்றாகும்.  என்னில்> எனில் என்று குறுகுவது போலும் இது வருகிறது.

புதிராக இருத்தல் என்பதும் ஓரளவு ஒருபொருளினதாய் இருக்கலாம்.

ஒன்றைப் பெரிதாக எண்ணுவீரானால் இயல்பு கடந்ததாகக் கருதப்படுமானால் அதை வினோதம் என்னலாம்.   வியன்  என்ற சொல் வின் என்று இடைக்குறைந்து,  ஓது+ அம்> ஓதம் என்று வந்து,  வின்+ஓதம் > வினோதம் ஆகிறது. வியன் - பெரிது என்பது.  விரிநீர் வியனுலகம் என்பது குறளில் வரும் தொடர். விண் இன்று  பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி என்பது காண்க.

நோட்டம் செய்வோனை நோட்டக்காரன் என்றும் சொல்வதால் நோட்டம் என்ற சொல்லுக்கு வினை நோடு என்பது பெறப்படுகிறது. இது நோட்டன் என்ற சொல்லைக் கவனிக்கத் தூண்டுகிறது.  நோட்டை ( நொட்டை)  என்பதும் பேச்சில் உள்ளது. இயல்பாக ஒன்றைக் கருதாமல் பேசுவது இதன் பொருளாகத் தெரிகிறது. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

புதன், 5 நவம்பர், 2025

அடு(ச்) சரம் - அட்சரம்.

 தமிழுக்கும்  ''வடமொழி''க்கும் உள்ள அணுக்கத் தொடர்பினை அறிந்துகொள்ள அட்சரம் என்ற சொல்லும் சான்று பகரும்..  இதில் எனக்கு ஓர் ஐயப்பாடும் இல்லை,

எழுத்துக்களை உண்டாக்கிய பின்  இலக்கண ஆசிரியர்கள் இவ் வெழுத்துக்களின் தொகுப்புக்கு ஒரு பெயர் வைத்தனர்.  சில விதிகளின்படி எழுத்துக்கள்  சரமாக  அடுக்கிவைக்கப் பட்டன.  இந்த விதிகளை இன்னொரு நாள் காண்போம்.  சமஸ்கிருதத்துக்கு இந்த வேலையைச் செய்த பெரும்புலவர் பாணினி என்பவர்.

சரம் என்ற சொல் முறையாக என்று பொருள் தரும்.   அடு என்பது  அடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.

அடு  சரம் >  அடுசரம் ,  இதில்  அடு என்பதை அட் என்று குறுக்கியது மட்டுமே இங்குச்  சொல்லமைப்பு.   அடு சரம் >  அட்சரம்  ஆகியது,   இது இவரின் சிறந்த சொல்லாக்கத் திறனை எடுத்தியம்புகிறது என்பது தெளிவு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை