புதன், 26 நவம்பர், 2025

சாதுரியம்

 சாதுரியம் என்ற சொல்லிற் புதைந்துள்ளன காண்போம். 

இதன் பொருள்,   நிதானம், நினைவு, பின் தொடர்தல், பாவனை, கிரகித்தல் என்று கூறுவார்,  அகரவரிசை செய்த  அறிஞர்  கதிரைவேற்பிள்ளை.

சாதுக்கள் என்போர்,  பெரும்பாலும் சிந்தனைகளில் ஈடுபடுவோர். அதாவது கைவேலைகளில் ஈடுபடுவோர் அல்லர். மனத்தில் தோன்றும் சிந்தனைகளே இவர்கள் மக்களுக்குத் தருவன ஆகையால்,  இவர்களுக்கு உரியன சிந்தனைகளே. இவர்கள் பிறருக்குச் செயலாற்ற  உதவுவனவும் அவையேயாம்.

சாதுக்களுக்கு உரியன >  சாது + உரியன >  சாது உரியம் > சாதுரியம்.

நிதானம் தவறாமை,  நினைவுகளில் ஆழ்ந்திருத்தல், சிந்தனைகளை மேலானவையாய்க் கொள்ளுதல்,  பாவித்துரைத்தல்,  மனத்தில் வைத்தல் என்று விரித்தல் கூடும்.

யோகக் கலையில் தன்னை இறந்தவன்போல் பாவித்து  ஆசனம் கொள்ளுதலும் ஒன்றாகும்.  இது சவாசனம் எனப்படும். செத்த பொருள்போல் கிடப்பதால் சா- சாதல் எய்தியவர் போல்,  து -  தொடர்பவர். சாதல் என்ற சொல்,  இறந்தோனைக் குறிக்கையில், சவம் என்றாகும்.  சாவு+ அம் > சவம்,  முதனிலை நெடில் குறுகி சா- ச என்று குறிலாகித் தொழிற்பெயர் ஆயிற்று.  தோண்டு> தொண்டை என்பது இன்னொன்று. இவ்வாறு முதனிலைக் குறுக்கத்தை யாம் பலகாலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.  ''வாய்'' இடமென்றும் பொருள்.  அம் விகுதி வர வயம் ஆகும். வாய்> வயம்.  ஓர் இடத்திலிருத்தலே வயப்படுதல்.  இவ்வாறு சிந்தித்து அறிந்துகொள்க. இதுவும் முதனிலைக் குறுக்காய் ஆன தொழிற்பெயர்.

இறந்தோன்போல் கிடக்கையிலும் சிறந்தோனாய்ச் சிந்தனைகளுடன் இருப்பவர் சாது.

து என்பது அஃறிணை விகுதி.  சாது - செத்தது (போல்). ஒப்புமையில் உண்டான சொல்லாக்கம். ஒப்புமையால் உருப்பெற்ற சொற்கள் பல.  பழைய இடுகைகளை ஆய்ந்து பட்டியலிட்டுக் கொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





கருத்துகள் இல்லை: