செவ்வாய், 30 செப்டம்பர், 2025

பூவராகம்

இது திருமாலின் ஓர் அவதாரத்தைக் குறிக்கும் சொல்.  இதனைச் சமஸ்கிருதம் என்றாலும் தமிழ் என்றாலும்  காணப்படும் வேறுபாடு ஒன்றுமில்லை. எம்மொழிக்கு உரித்தாயினும் இதன் மூலச்சொற்கள் தமிழே  ஆகும்,  அவற்றை இங்குக் காண்போம்.

பூ வர ஆகும் என்பதே  பூவராகம் என்று ஒருசொல் ஆனது.  பூமியே அதன்  உருவாகி வந்த கொம்புகளாக இருத்தல் என்பதே பொருள்.  பூ வர அல்லது உருக்கொள்வதற்கு  ஆக்கம் தருவது  பூமி.  இந்தச் சொல்லைப் படைத்தவன் ஒரு தோட்டத்தில் இருந்துகொண்டு இதனை அமைத்திருக்கிறான் என்பது இச்சொல்லிலிருந்து நாம் அறிந்துகொள்வதாகும்.

பூ என்ற சொல்லிற்குச் செடியினின்று தோன்றியது என்பது பொருள். செடி பூமியிலிருந்து தோன்றியதாகின்றது.  பூமி என்றால்  (1) தோன்றியாதாகின நிலம் என்றும், (2) நிலைத்திணையையும் உயிரினங்களையும் தோற்றுவித்ததாகிய நிலம் என்றும் பொருள் கூறலாம்.   நில் > நிலம் :  நிற்பதற்கான இடம் தருவது என்று பொருள்.  தரை :  தரு> தரை.  நிற்பிடமும் வாழ்விடமும் தருவது என்று பொருள்.  இந்தச் சொல் பிறமொழிகளிலும் ஊடுருவியுள்ளது  நமது கொடை. மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பூமியானது தோற்றமடைந்த ஒரு பெரும் பந்து ஆகும்.  பூத்தல் என்றால்  அழகான தோற்றம் தருதல்.  இம் என்றால் இங்கு என்பதன் சுருக்கம்.  பூ இம் இ >  பூமி, இகரம் தொகுந்தது.  ம் என்ற மெய்யின் ஒலி வெளிவர இ முன் வந்து உதவி செய்கின்றது. மகர ஒற்றில் இகரம் முன்வந்தாலன்றி ஒலி வெளிப்படாது. இ இறுதியை விகுதி எனின் ஒக்கும்.  பூ என்பது முதனிலைத் தொழிற்பெயர். விகுதி இன்றி பகுதி மட்டுமே நின்று பெயராவது.

இனி வராகம் என்பது பன்றியாய் வந்து மாலானது என்று பொருளும் கூறலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 29 செப்டம்பர், 2025

பொருள் என்ற சொல்லின் தோற்றம்.

 அர்த்த சாத்திரம்  ( சாஸ்திரம்) என்பதைத் தமிழில் ''பொருள்புரி நூல்'' என்பர். பொருள்நூல் என்பதைப்  பொருணூல்  என்றும் புணர்த்தி எழுதலாம். (ள்+நூ-- ணூ என்று வரும்.)  இந்தப் பெயரில் சாணக்கிய(ன்) என்போர் சமஸ்கிருதத்தில்  அர்த்தசாத்திரம் என்ற நூலை இயற்றினார் என்பது அறிந்ததே.

அறுத்த என்ற வினையெச்சத்தைத்தான்  அர்த்த என்று சமஸ்கிருதத்தில்  சொல்வர். பாதி என்பது பகுதி  என்பதன் திரிபு என்றாலும்  இதன் அமைப்புப்பொருள் பகுக்கப்பட்டது  என்பதுதான். வழக்கில் சரிபாதியைக் குறிக்கின்றது.  அறுத்த என்பதும் பகுக்கப்பட்டது என்பதே ;  ஆனால் தமிழில்போல் வடமொழியில் பாதியைக் குறிக்கிறது. இருமொழிகட்கு மிடையில் உள்ள பொருளமைப்பு ஒற்றுமையை இது காட்டுகிறது.

பொரு என்பது  சொல்லின் ஒரு  முதன்மைப் பகுதி  ஆகும். பொருள்  அறியவியலாத வாயொலி  ஒரு வெற்றொலிதான். இதைச் சொல் என்று பெரும்பாலும் குறிப்பதில்லை.  பெரும்பாலான மொழிகள் ஒலிவடிவம் வரிவடிவம் என இரண்டு வடிவங்களும் உடையவை. ஒலிவடிவம் மட்டும் உள்ள மொழிகளும் ஆய்வறிஞர்களால் அறியப்பட்டுள்ளன.

பொரு ( பொர்)  என்பது   ஓர் அடிச்சொல். இது உள் விகுதி பெற்று பொருள் என்று ஆகிறது.   பொர் - பொரு என்ற அடியிலிருந்து வரும் இன்னொரு சொல் பொருந்து என்பது. இச்சொல்லிலிருந்து பொருள் என்பதன் அறிகிடப்பினைத் தெரிந்துகொள்கிறோம்.  சொல்லுடன் பொருந்தி நிற்பதே பொருள்  என்று அறியப்படுகின்றது.  சொல் எதைக் குறிக்கிறது என்பதைப்  பொருந்தி நிற்பதான பொருள் நமக்கு அறிவிக்கின்றது.

செதிள்போலப் பிரியும் மேற்படிவைப் பொருக்கு என்கின்றோம். இதுவும் பொருந்தியிருந்தது  என்பதைக் குறிக்கும் சொல்.

இவ்வாறே நீங்களே தொடர்புடைய சொற்களை அறிந்துகொள்ளலாம். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


_-----_-----------------------------


ethereal.  எத்தி ரியல்

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

வராகனெடை --- வராகனிடை.

 வருவதற்கான எடை என்பதற்கு நிறுத்தெடுத்த பின்பு  அது கொடுக்கப்படவேண்டியவனுக்குச் சென்றுசேரவேண்டியதைக் குறிப்பதாகும். அதுவரைக்கும் அந்தத் தராசுவில் உள்ள எடை போற்றப்படும்.  இது பொன்னின் .எடையையும் காட்டும்.

வராகன் என்பது தங்கவராகனையும் குறித்த சொல்.  தங்கம் என்பது ஒரு காலத்தில் நாணயமாகவும்  வழங்கியது.

தங்க வணிகம் புரிதலில் தங்கம் மென்மேலும் வரவு பெறுவதே  தங்க+ வரு+ ஆகம்  என்பதாகும். ஆகு+ அம் >  ஆகம். இது பொருளோடு  சொல்லிறுதியாய் வருதல் இதன் சிறப்பு. ஆகி அமைதல் என்பது ஆகம் என்பது அறிக.  தங்க இருப்பு போதலை  விட வருதலே தொழிற் சிறப்பு.

வரு ஆகம் என்பது வராகம் என்றமைந்தபின் வராகன் என்று திரிந்தது அம் என்ற இறுதி  அன் என்று திரிதல்.  அதன்பின் எடை எனல் இணைய, வராகனெடை ஆயிற்று.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை






----------------------------------------------------------------------------------------------------------------


திரிபு ( நினைவுக்குறிப்பு)

தேய்வடை > தேவடை


வியாழன், 25 செப்டம்பர், 2025

தேவடி(யார்) தாய் > தா என்பன

 தனக்குத் தெரியாத ஒன்று சரியாக நடைபெறுகிறது என்று முடிவு கொள்ளும் மனத்திடம் எளிதில் அமையாமையால்,  தேவர்கட்கு அடியார்களாக இருக்கும் பெண்டிர் சரியான நடப்பு உடையவர்கள் என்று முடிவு செய்யும் திடமனம்  ஒருவற்கு ஏற்படுவதில்லை. அதனால் தேவரடியார் என்ற சொற்கு நல்ல பொருண்மை ஏற்படவில்லை.

இதிலிருந்து தேவடியாள் என்ற சொல் ஏற்பட்டது.  அது இழிபொருளை சொல்லுக்கு ஏற்றியது,

தேவு என்ற சொல்லே தேய்வு என்பதன் இடைக்குறையிலிருந்து ஏற்பட்டது.  மரங்களின் உராய்வு தீப்பற்றுவதாலும் தீயானது பிற்காலத்து வணக்கம்  பெற்றமையாலும் தேய்வு> தேவு என்ற சொல் தெய்வத்தன்மை,  இறைவன் என்பவற்றைக் குறிக்க எழுந்தது.  தேவு என்ற சொல்லோ தமிழிற் றோன்றிய சொல்லே ஆகும்.

தேய்வு அடை என்ற சொல்  தேய்வடை> தேவடை என்று திரிந்தமையும் உணர்க. நாணய எழுத்துக்கள் தேய்ந்தபின் அந்நாணயங்கள் தேவடை என்று குறிக்கப்பட்டன.  சாய் என்ற வினை சா என்று யகர மெய் இழந்த இன்னொரு வினையாய் அமைந்தமையும் கண்டுகொள்க. தாய் என்ற சொல்லும் பெயர்களில் தா என்ற நிற்றல்,  தேவ(த்)தாய் >  தேவதா என்று குறைந்தமையும் கண்டுகொள்க. பெண்பெயர்களில் தாய் என்பது தா என்றே முடிந்து ,  வனிதைத் தாய் என்பது வனிதா என்று பெயராகும். புனிதத் தாய் >  புனிதத்தா> புனிதா என்றாகும். பல்திரிபு மொழிகள் தனிமொழிகளான பின் இவற்றின் தொடர்புகள் மறைந்தன.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிவுரிமை


திங்கள், 22 செப்டம்பர், 2025

ஆவிடை , ஆவுடை, தொடர்புடைய சொற்கள்

 ஆ தொடக்கச் சொற்கள் பற்றி கணினி  23000 மேற்பட்ட உள்ளீடுகளின்  இருப்பினைக் காட்டினும்  அவற்றின் வரிசையையும் பொருட்களையும்  தேடுபொறிகள் காட்டத் திணறுகின்றன. ஆ என்பதற்குப்  பசு என்பது பொருள்.  ஆவின்பால் என்றால் பசுவின் பால்.

ஆ வுடையார் என்பதுதான்  ஆவிடையார் என்று திரிந்துவிட்டது என்று தமிழாசிரியர் சொல்வர். இதுவே  ஆவடையார் என்று திரிந்தது என்றும் கூறுவர்.

மாடு என்பதற்குச் செல்வம் என்று பொருளிருப்பதுபோல,  ஆ என்பதும் ஆக்கம் என்று பொருள்தரும் என்ற விளக்கம் உள்ளது.  ஆக்கம்,  செல்வம் என்பன ஒரு பொருளன. ஆ என்பது முதனிலைப் பெயராகச் செல்வம் என்று பொருள்தர வல்லது.  ஆவுடையார் என்பது செல்வம்  உடையார் என்று,  பசுவினை உடையவர் என்றும் பொருள்தரும்.

ஆ அடையார் என்பது  ஆவடையார்  என்றாம்  எனின்,  ஆ என்ற செல்வம் அடையார் என்னும் செல்வம் அடையமாட்டார் என்று எதிர்மறைப் பொருள் தரும்  என்பது சொல்லப்படுவதில்லை.

விடை என்பது கோழி என்ற பொருளும் உடையது.  ஆனால் எருது என்ற பொருளும் உள்ளது இச்சொல்.  ஆவிடை என்னும் போது இவற்றை உட்படுத்துவது இல்லை.

இங்கு கவனிக்க வேண்டியது சொல்லின் திரிபுகளே. மூலம் தமிழே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

சனி, 20 செப்டம்பர், 2025

புத்தகம் - புஸ்தகம், பொத்தகம் > பொஸ்தகம் வடிவங்கள்

 இப்போது  எழுபத்தைந்து ஆண்டுகளின் முன் இந்தச் சொற்களை எப்படி உச்சரித்தார்கள் என்பது நினைவிலுள்ள படியினால்  இவற்றின் இன்றை வடிவங்களுடன் ஒப்பீடு செய்வது எளிதாக உள்ளது.  ஆகவே இந்நுகர்வின் பயனாக உணர்தல் எளிமையாகி  விடுகின்றது.

பொத்தகம் என்றால்  ஓர் ஒரத்தில் பொத்தலிட்டு  நூலை அல்லது கயிற்றைக் கொண்டு சேர்த்துக் கட்டி,  எழுதுவதற்குப் பயன்படுத்திய தாள்கட்டு அல்லது ஏட்டுக்கட்டு என்றுதான் பொருள். பொத்து அகம் என்றால்  பொத்துவிட்டு அகப்படுத்திய ஏட்டுக்கட்டு.  இது புலவர் புனைவான சொல் அன்று. இந்தச் சொல் பேச்சு வழக்கில் ஏற்பட்டதுதான்.  இது பின்பு  புஸ்தகம் என்று  மாறிற்று;  பொஸ்தகம் என்றும் பேசக் கேட்டுள்ளோம்.

எல்லாச் சொற்களுக்கும் சமஸ்கிருத்ததிலிருந்துதாம்  வந்திருத்தல் வேண்டும் என்னும் எண்ணத்தினால்  புஸ்தகம் அல்லது பொஸ்தகம் என்று சொல்வது சரியென்று எண்ணியதும் அறிகிறோம். எனினும் அதுவும் உள்நாட்டு மொழியே ஆதலினாலும்  சொல்லிலும் பொருளிலும் தமிழினோடு நெருங்கிய மொழி ஆதலினாலும்  சமஸ்கிருதம் எனிலும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.  இங்கு அது தமிழென்றே கொள்ளப்படும்.

பொத்து அகம் அல்லது பொத்தகம் எனின்  பொத்தலினால் கட்டப்பெற்று அகப்படுத்தப்படும் ஏடுகள் என்பது சரியாகவே வரும்.  பொகரத்தில் தொடங்குவது ''நாகரிகம்'' அற்றது என்ற எண்ணத்தினால்  புத்தகம் என்று திருத்தி யிருந்தாலும்,   இத்திரிபு ஏற்புடைத்ததே,  ஒலியியல் முறையில்.  இதில் நாகரிகமின்மை ஒன்றும் இலது.

இவ்வெல்லா வடிவங்களும் அகரவரிசை உடையோர்க்கு எட்டியுள்ளன.

செருமானிய மொழியில் பொக் என்பதே  மூலமாகக் காட்டப்பெறுகிறது.   புக்கு என்பது பழந்தமிழில் ''புகுந்து''  என்று பொருள்படும்.  காகிதக் கட்டினுள்  நூல் புகுந்து அல்லது புக்கு. கட்டாகின்ற படியினால் இது தமிழினோடு ஒத்த வடிவமே ஆகும்.  பளிக்கறை புக்க காதை என்றால் பளிங்கு அறையினுள் புகுந்ததைச் சொல்கின்ற கதைப்பாட்டு என்று  பொருள்.

பொத்தகம்>  பொத்து :  துளையிடப்பட்டு;  அ -   அத்துளையிலே ;  கு -  இணைத்துச் சேர்க்கப்பட்டு;  அம் -    அமைவது அல்லது அமைக்கப்படுவது.  கு என்பதன் பொருள்  சேர்தல் என்பது.   சென்னைக்கு =  சென்னையை அடைதல் அல்லது சேர்தல் எனல் பொருளாதல் கண்டுகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

சந்தித்தல் என்னும் சொல் - தமிழ்.

 சந்தித்தல் என்ற சொல்லை இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

அண்டுபடுதல் என்பது  அண்டையில்  அல்லது பக்கத்தில் இருத்தல் என்ற பொருளுடைய சொல்.  அண்டுதல்  என்றால்  பக்கத்தில் இருத்தல்.

எண்டா  அண்டா என்ற ஐரோப்பிய முற்காலச் சொற்களிலிருந்து  வரும் இக்காலச் சொற்கள் (ஐரோப்பியம்)  வரை,  இந்தத் தமிழின் '' அண்டு'' என்ற சொல்லுடன் தொடர்பு உடையனதாம்.  அண்டை என்பது  ''அண்டு(தல்)  என்ற சொல்லுடன் அணுக்கத் தொடர்பினது ஆகும்.  

ஒப்பீடு:

அண்டு (த) > and. (E)

அடு(த்தல்)> ed (Latin).

i.e. -  id est.  = அதாவது .

et cetera short form etc.   et is also and.  அடு.

சந்து  என்பது துவாரம்.

துவைத்தல் - துளைத்தல்.  துவைத்தல் மேலிட்டால் துளை தோன்றும்.

துளை> துளை ஆரம் >  (துளாரம் ) > துவாரம்.  [ தொடர்பு கண்டுகொள்க]

அண்டுபடுதல் என்பது போலும் ஒரு சொல்லே அண்+தி+ தல்.   இது அண்தித்தல்>  சண்தித்தல்> சந்தித்தல் என்று  திரிந்துள்ளது.  ஒருவனை அல்லது ஒன்றைச் சந்தித்தலாவது  அண்டுதல் அல்லது அடுத்துச் செல்லுதல்.   

எதிர்கொள்ளுதல் என்பதும் அடுத்துச்செல்லுதலே  ஆகும்.

இவ்வாறு இதை அறிய இது தமிழ்ச்சொல்லே  ஆகும்.  சமஸ்கிருதம் என்று இதனைக் கூறியது தமிழின் சாயல்மொழியே அதுவென்று உணராத காலத்திலாகும். அதனை இந்தோ ஐரோப்பியம் என்றது அதனோடு உறவு கொண்டாடி, இந்தியா என்னும் நாட்டுக்கு அவர்களும் உரிமை உள்ளவர்கள் என்று கோருவதற்கே  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


சனி, 13 செப்டம்பர், 2025

கச்சா ( எண்ணெய்) என்ற சொல்

 இன்று கச்சா என்ற சொல்லை ஆய்ந்தறிவோம்.

சில அரைத்த திரவப்பொருள்களில் அடர்த்தியான பாகம்,  மேலாக உறைந்து  அல்லது திணுங்கிப் படிந்திருக்கும்.  அதன் கீழ்  திணுக்கமற்ற நீர்ப்பொருள் இருக்கும்.  அரைத்துவைத்த நீர்ப்பொருள் மறந்து விடப்பட்ட நிலையிலும் திரவத்தில் ஏற்படும் மாற்றங்ளால் இத்தகைய கடிய படர்வு மேலெழுந்து நிற்பதுண்டு.  பாலைக் காய்ச்சி வைத்துச் சரியான முறையில் தயிருக்கு உறைவு பெறாத பொழுதும் இவ்வாறு மேற்படிவு காணப்படுவதுண்டு.

கல்லெண்ணெய் என்னும் பெட்ரோல்  எடுக்குமிடங்களில் முதலில் எடுக்கப்படும் எண்ணெய்  தூய்மை அற்றதாக இருக்கும்.  

கச்சா என்ற சொல்லில்  கச என்ற சொல் அடியாக இருக்கிறது. இது கச என்றும் மாறவல்லது. கச என்பது கய என்றும் மாறவல்லது.  கயக்கால் என்பது  ஊற்றுக்கண் என்னும் பொருளதாய் உள்ளது. கயம் என்ற சொல்  குளம் என்றும் பொருள்படுகிறது.

கச்சா என்பது  ஆ விகுதி பெற்று ஊற்று என்னும்  பொருளதாகிறது .  கசடு என்பது .  தூய்மை அற்ற நிலைக்குப் பொருத்தமான சொல்.  சரியானதன்று  என்று அறியக் கிடக்கின்றது.  

கசிதல் என்ற சொல்  சிற்றளவில் வடிதலைக் குறிக்கிறது.  கசி> கச்சி> கச்சா என்று மாறக்கூடிய சொல் இது. இவை எல்லாம்  தொடர்புடைய சொற்கள்.

கச்சா என்பது தூய்தாக்கத்திற்கு முந்திய நிலையைக் குறித்தது பொருத்தமே ஆகும்.

இனிக் கடு உச்சம் என்ற சொற்கள் இணைந்து கட்டுச்சம் என்று வந்தால் இது இடைக்குறைந்து  கடுச்சம்>  கச்சம்>  கச்சா என்றாகும். மிக்கத் திணுக்கமான மென்மையாக்க வேண்டிய எண்ணெய்,  கச்சம்>  கச்சா என்றாகும். இஃது இன்னோர்  அமைப்பு ஆகும்.  இச்சொல் பலபிறப்பு உடைத்து என்க.

கச்சா என்பது தமிழ்ச்சொல் ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை உடையது



வெள்ளி, 12 செப்டம்பர், 2025

அதிருஷ்டம் என்பதன் தமிழ்மூலம்

 அதிருஷ்டம்  என்ற சொல் எப்படிப்  புனைவுண்டது என்று இன்று தெரிந்துகொள்வோம்.

திருஷ்டம் என்ற ''வடசொல்''  தெருள் என்று வழங்கிற்று.   இதன் அடி,  தெர் என்பதுதான். 

தெர் >  தெரி.

தெர் + உள் >  தெருள்.   உள் என்பது ஒரு விகுதி.  கடவுள் என்பதிற்போல   : ( கட + உள்).  இயவுள் என்பதிலும் உள் விகுதி இருக்கிறது.    ஆ + உள் >  ஆயுள் என்பதில் உள் விகுதி என்று பொருள்.  ''  ஆகிவிட்ட ( ஓடிவிட்ட)  காலம்'' என்பது பொருள். வேறு பொருண்மைகளும் பொருத்தப்படலாம்.  

தெருள் என்று சொல் அமைந்தபின்பு,  இது வினைச்சொல்லாய் ''  தெருளுதல்''  என்ற வடிவில் காட்டப்பெறுகிறது.  தன்வினை பிறவினை வடிவங்கள் எனின், தெருளுதல்.  தெருட்டுதல்  என்று  வரும்.  தெருள்வித்தல் என்பதும் ஏற்புடையதே ஆகும்.

இனி, தெருட்டு (வினைப்பகுதி), தெருட்டு+ அம் >  தெருட்டம்,   தெருட்டம்>  திருட்டம் >  திருஷ்டம்,  (திருஷ்டாந்தம்) என்பன காண்க.  திருட்டம் என்று  திரிந்தது  திருஷ்டம் என்று மாறாவிடில்  ஏற்புடைய வடிவமாகாமை காண்க.  இதுபோல்வதே கஷ்டம் என்ற சொல்லும்.  கட்டு+ அம் > கட்டம் என்பதனோடு கடு+ அம் > கஷ்டம்  என்பதை ஒப்பிட்டு அறிந்துகொள்க.  கண்ணால் பார்த்து வரும் ஊறு,  கண்திட்டி,  இதுவும் திருஷ்டி என்று மாறியது சொல்லிணக்கத்தின் பொருட்டு. திருட்டி என்பதில் ருகரம் நீக்கியது திருட்டு என்ற சொல்லினோடு அதற்கிருந்த அணிமையை விலக்குதற்பொருட்டு. ருகரத்தை வைத்துக்கொண்டு ட் என்னும் டகர ஒற்றை நீக்கி ஷ்  இட்டு வேறுவிதமாக வேறுபடுத்தினர்.   இதற்கு வடவொலி உதவியது என்னலாம்.  இதில் கருத்துவேற்றுமை இருக்கக்கூடும்.

அதிருஷ்டம் என்பதில்  அதி என்பது முன்னொட்டு.   திருஷ்டம் என்பது சொல். அதி திருஷ்டம்  வெகுவிளக்கமாக வந்த ஒரு இலாபம்  அல்லது  வரவு என்று  பொருளுரைக்க. நேரல் வழிகளில்  வாராதது என்று கூறினும் ஒக்கும்.  நேரல்வழி எனின் நேர்மை அல்லாத வழி.

தெருள் > தெருட்டம் என்பது இப்போது வழங்கவில்லை.  ( தெருட்டு+ அம்).  அம் விகுதி இணைக்க  தெருட்டம் என்பது  தானே போதரும் .  வேண்டின் மீளுருச்செய்க.

தெருள் என்ற சொல் பிற வட்டங்களில் வளம் சேர்த்தது காண்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது. 



செவ்வாய், 9 செப்டம்பர், 2025

சமரசம் - பல்நோக்குப் பொருண்மை

 சமரசம் என்ற சொல்லைத் தமிழிலிருந்து  ஆய்வு செய்வோம்.

சமரசம் என்பதற்குக் கூறப்படும் பொருள்களாவன:  1  ஒன்றிப்பு,  2 தொகையாக விருத்தல்  3  வேறுபடாமை  4  ஒற்றுமை 5 நடுநிலைமை  6 இணக்கப்போக்கு  என்று பலவாறு கூறலாம்.  இவற்றின்கண்  உள்ள சிறப்புப் பொருள் ஒவ்வொன்றும் இச்சொல்லைக் கையாள்கின்ற நுட்பமுறையால் வேறுபடக் கூடும்.

இதன் பகவுகள்  சமம் என்பதும்   இரசம் என்பதும்  என்றும்  சொல்வர்.  ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் சாறுதான்  ரசம் எனப்படுகிறது.  சுவை என்ற சொல்லைப் போலவே இரசம் என்னும் சொல்லும் திடப்பொருட் சுவை மட்டுமேயன்றி  மனம்சார் பண்பினால் ஏற்படும் சுவையையும்  காட்டற்கு அமையும் என்பதறிக.   

சமரசம் என்பதை  '' ஒத்த சாறுண்மை''  என்று  அல்லது  சாற்றொப்புமை என்று தனித்தமிழில் பெயர்த்துக் கூறலாம். இங்குத் திடப்பொருள்  சாராத மனப்பொருள் விளக்கத்திற்கு  சற்றொப்புமை என்பது பொருந்தவும் கூடும்.

இரசம் என்பது வடிகட்டி இறுத்து எடுக்கப்படும் நீர்ப்பொருள்  என்னலாம்.  இறுத்து அசைத்து எடுக்கப்படுவது என்பதே இதன் பொருள்.  இறு+ அசை+ அம்> இறசம் என்பதே  இரசம் என்றானது. இதனை அசைத்து இறுத்து என்று முறைமாற்றிக் கொள்க. றகரம் ரகரமாக மாற,  அசை என்பதிலுள்ள ஐகாரம் குறுகி  அகரமாகி,  சகர என்று நிற்க.  ச்+ அ > ச;  சொல்லானது  இற்+ அச் + அம் என்று புணர்ந்து,  இறசம்  ஆகி,  சொல்லாக்கத்தில் றகர வருக்கங்கள் ரகர வருக்கங்களாகி வருவன என்பதால்,  இரசம்  ஆனபின்  தலையிழந்து  ரசம் ஆயிற்று என்பதை  அறிந்துகொள்க.  இத்தலை இழப்பு,  அரங்கசாமி என்பது  ரங்கசாமி என்பதுபோல  ஆனதே ஆகும்.

சம இறசம்  என்பதே அன்றி  ,   சம அரசம் என்பதும்  இவ்வாறு கொள்ளத்தக்கது ஆகும்.  சமமான இரு அரசுகளின் ஒன்றுகூடுதலை  சமரசம் என்பதும் ஒக்குமென்க.  சம இரை, சம உரை என்பவற்றை எல்லாம்  இங்கனம்  பொருத்தலாம்.  இவற்றுக்கேற்ப விளக்கமும்  முன்வைக்கலாம்.

இரு அரசுகள் ஒத்த பலம் உடையவர்களாயின் இவ்விருவரிடையிலும் சண்டைகள் பெரும்பாலும் நிகழா என்பதை அறிக.  சண்டையிடுவது வெற்றிக்கு.  இல்லாமல் ஒழிவது திண்ணமாயின் அதற்குச் சண்டையிடாமல் ஒற்றுமை பேணுதலே சிறந்தது 

சமரசம் என்ற தமிழ்ச்சொல் பலநோக்குப் பொருண்மை உடைய சொல் என்பதை உணர்ந்து போற்றிக்கொள்க.

தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவில் தோன்றி வளர்ந்த மொழிகள்  என்பதால் இவற்றில் இதை எதுவென்றாலும் ஒக்குமென்று முடிக்க.

இவற்றை வேறுபடுத்தியுரைப்பாரும் உளர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை உடையது.


வெள்ளி, 5 செப்டம்பர், 2025

படனை > பஜனை

 இந்தச் சொல் பழங்காலத்தில்  படனம் என்று  இருந்தது.  பின்னர் இது படன அல்லது பஜன  ஆகிப் பஜனை என்று  எழுதப்பட்டு இன்றும் இவ்வாறே வழங்கி வருகிறது.

சாவு என்ற சொல்லுடன் தொடர்புடைய சவம் என்ற சொல் பிணத்தைக் குறிப்பது.

சா> சா+ அம் >  சவம் என்று  குறுகி விகுதி பெற்றுத் தொழிற்பெயராவது காண்க.

தாள் என்ற சொல்லிலிருந்து வருகிற சொல் அம் விகுதி பெற்றுத் தளம் என்று குறுகி  அமைகிறது.    வா என்ற சொல்லினின்று  வந்தான் வருகிறான் என்ற சொற்களும்  வகரமாகக் குறுகிவிட்டன.  இது தமிழ்மொழியில் இயல்பு  ஆகும்.

இதுபோலவே படனம் என்ற சொல்லும்.  பாடு+ அன்+ அம் >  பாடனம்> படனம் என்று குறுகும்.

படனம் > பஜன > பஜனை.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்

பகிர்வுரிமை உள்ளது

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

ரவை என்ற சொல். ( துப்பாக்கியின் ரவை).

 இச்சொல்லினை இன்று  ஆய்வு செய்வோம்.

சுழல் துப்பாக்கிகளில் ரவைகளென்னும் தோட்டாக்களை வைப்பதற்குத் துவாரத்துடன் கூடிய சுழலி இருக்கும்.  சுழலியின் துவாரத்தில் வைப்பதற்குரிய தோட்டாக்காக்கள் ரவைகள் எனப்படும்.

இருக்கும்படியாக வைப்பதுதான் இரு + அ + வை > இரவை ஆகும்.   இச்சொல் பின்னாளில் தன் இகரத்தை இழந்து  ''ரவை' ' என்று மட்டும் வழங்கியது.

இரவை என்பதில்  இரு என்பது சொல்லின் பகுதி.  அகரம் இடைநிலை.  வை என்ற இறுதியே விகுதி ஆகும்.

தோட்டில் இருப்பது இரு அ வை > இரவை. ( ரவை).  தோடு > தோட்டா  ( தோடு+ ஆ)   எனவும் படும்.   ஆ என்பதும்  ஒரு விகுதி.    நில் > நிலா எனக்காண்க.  பல சுளைகள் உள்ள பழம் பலா  ( பல் + ஆ).    தோடு> தோட்டா.  இங்கு டகரம் இரட்டித்தது,  இவ்வாறு இரட்டித்தல் வினையிலும் பெயரிலும் நிகழும்.   பாடு> பாட்டு என்பது அறிக.  காடு> காட்டா என்ற சொற்புணர்ச்சியும் காண்க.  இது காடு+ ஆ என்பதுதான்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை.