சனி, 31 மார்ச், 2018

திட்டம் தீட்டு



இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சொல்லைப் பற்றிச் சற்றுத் தெளிவாக அறிந்துகொள்வோம்.

நம் முன் இருக்கும் சொல் “திட்டம்” என்பது. ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க அந்தத் தொண்டு நிறுவனத்திடம் “திட்டம்” எதுவும் இல்லை என்று ஒரு வாக்கியம், நம் கவனத்தை ஈர்க்கிறது. “திட்டம் தீட்டினால்தானே இருக்கும்” என்றொருவர் சொல்கிறார்.

ஆம்.  திட்டம் என்பது தீட்டப்படுவது.  திட்டம் போடுவது என்ற வழக்கும் உள்ளது.
திட்டம் தீட்டு.

தீட்டு என்பதே வினைச்சொல். திட்டம் என்பது இவ்வினையினின்று பிறந்த சொல்.
தீட்டுதல் > தீட்டு+அம் = திட்டம்.

அம் விகுதி சேர்ந்து சொல் அமைவது இயல்புதான். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது:  தீட்டு என்ற வினை, அம் என்ற விகுதியை எதிர்கொள்ளும்போது  திட்டு என்று குறுகி அப்புறம் விகுதியை ஏற்கிறது.

இங்கு சொல் என்பது தீட்டு என்ற வினைதான். அது திட்டு என்று விகுதி ஏற்பதற்காக உருமாறும்போது அந்த  இடைமாற்ற உருவினை ஒரு சொல்லாக ஏற்பதில்லை.  ஆகவே விளக்கத்தின்பொருட்டு அதனை பிறைக்கோடுகளுக்குள் போடலாம்.

தீட்டுதல்:   தீட்டு+ அம் =  (திட்டு+அம்) > திட்டம் என்று காட்டவேண்டும்.

கருவில் வளரும் குழந்தை,  அதன் வெவ்வேறு வளர்ச்சி வடிவங்களில் ஒரு கால் தவளை போலவும் இன்னொரு கால் வாலுடனும் இருக்கிறது.  அவையெல்லாம் எப்படி குழந்தையின் வடிவங்கள் என்று நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லையோ  அதுபோலவே இதுவும். சொற்கள் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளைக் கடந்து பின் முழுச்சொல் ஆகலாம்.

தீட்டு என்ற வினையிலிருந்து முதனிலை குறுகி அமைந்த பின் விகுதி பெற்று அமைந்ததே திட்டம் என்ற சொல்.

இதுபோல முதனிலை திரிந்து விகுதி பெற்ற இன்னொரு சொல்: சவம் என்பது.
சா(தல்)  >  சா(வு)+ அம் =  சாவம் >  சவம். இங்கும் முதனிலை குறுகி விகுதி ஏற்றது
.
சா+அம் என்று காட்டி, இடையில் ஒரு வகர உடம்படு மெய் தோன்றிற்று எனினும்  அதுவுமது. ஆகவே வுகரம் இடப்பட்டு விளக்கம் தரப்படினும் அஃதே என்`க.

இங்கு உணர்த்த முனைவது சா என்பதினின்று அமைந்ததே சவம் என்னும் சொல். மற்றவற்றைப் பேசி நேரம் கடத்த நம் பண்டிதர்கள் உள்ளனர்.

இனிச் சா+வ்+அம் = சவம் எனினும் ஒக்கும்.

முதனிலை குறுகிய சொல்லுக்கு இன்னொன்று எ-டு:  தோண்டு -  தொண்டை. ஐ விகுதி.

ஆனால் தீட்டு+அம் > திட்டம் என்பதில் டுகரத்தில் ஏறிநின்ற உகரம்1 கெட்டு,  தீட்+ட்+அம் = திட்டம் எனக் குறுகிப் பிறந்தது சொல்.  தமிழில் தீட் என்பது சொல் அன்று.  பிறமொழிக்கு ஏலும். தமிழில் அது ஓர் இடைவடிவம் ஆம்.

குறிப்பு: 

1இங்கு கள்ளப்புகவர் ஏற்றிய பிசகு கண்டுபிடித்துத்
திருத்தப்பட்டது. 

வேறு மாற்றங்கள் காணின் தெரிவிக்கவும்,


வெள்ளி, 30 மார்ச், 2018

அந்தஸ்து , அஸ்திவாரம்

தழுக்குதல்  என்பது ஒரு  பழந்தமிழ்ச் சொல். இது  ஒருவன் வாழ்வில் வளம்பெற்று   உயர்வதையும்  குறிக்கும்.  இதன்  அடிச்சோல் "தழு " என்பது.
அம் =  அழகிய.
தழு =  வளமும் உயர்வும்.  (வினைச்சொல்).
து :   விகுதி.
அந்தழுத்து >  அந்தஸ்து.  
இதில் ஓர் எழுத்து : ஸ் என்பது இடப்பட்டது.  அது ழுகரத்துக்குப் பதிலாக.
ழகர வருக்கங்களுக்கு வேற்றொலிகள் நுழைக்கப்படுவது இயல்பான அயற்றிரிபு 
ஆகும்.
இன்னோர் எடுத்துக்காட்டு:
அழுத்திவார்தல் :  அழுத்திவாரம் >  அஸ்திவாரம்.
அஸ்தி வாரம் இடும் இடத்தில் அழுத்திவாரவேண்டும்.  அதுவே கருத்துக்
சொல்லமைப்புக்குக் காரணமும் ஆகும். 

அந்தஸ்து என்பதற்கு மற்றோர் முடிபும் கூறுதல்  அமையும்.

அம் -  அழகிய;
தகம் - தகு+ அம்;  அதாவது தகுதி.
அம்+தகம்+து =  அந்தகத்து > அந்தஸ்து.
அதாவது அழகிய தகவு உடைய நிலை.

எங்கனமாயினும் இது தமிழிலிருந்து தோன்றித் திரிந்த சொல் என்பது
தெளிவு.

ழு அல்லது க வுக்குப் பதில் ஸ்.  அவ்வளவுதான் திரிபு.





நடுதலும் நாடும்.



நடுதல் என்ற சொல்லை முன் ஆய்ந்துள்ளோம். இன்று அதே சொல்லை வேறோரு கோணத்தில் சிந்தித்து அறிவோம். (நாடு என்ற சொல்லின் தொடர்பில்.)

விதை நடுகிறவன் என்ன செய்கிறான்?  விதையை ஓர் இடத்தில் ( மண்ணில் ) நட்டுவைக்கிறான். அதாவது புதைத்துவைக்கிறான்.  

ஆகவே நடுதல் என்பது முழுமையாகவோ பாதியாகவோ மண்ணில் செலுத்துதல் ஆகும்.

நடுதல் என்பது நள் என்ற அடியினின்று வருகிறது.

நள் > நடு.

ஒன்றில் ஒன்று புகுவது அல்லது உட்செல்வதுதான் நடுதல். இங்கு நடுதலில் மனிதன் விதையை உட்செலுத்துகிறான்.  ( action through human agency).

நாடாது நட்டலிற் கேடில்லை என்பார் திருவள்ளுவ நாயனார்.  நடு+ அல் = நட்டல்.  அதே நடு என்ற சொல்தான் நட்டல் என்னும் நட்பையும் குறிக்கிறது.  விதை மண்ணில் நடப்படுதல்போல்  அன்பு உள்ளத்தில் நடப்படுகிறது.

நள் என்பது முன்வடிவம்.

நள்+ தல் = நட்டல்;   ள்+ = .
நடு + அல் = நட்டல். டகரம் இரட்டிப்பு.

இனி நள் அடியிலிருந்து:
நள் + பு =  நட்பு.  (வல்லெழுத்துத்  திரிபு).
நள் + பு =  நண்பு. (மெல்லெழுத்துத் திரிபு).

இருவகையிலும் அமையும்.
நட்பு > நட்பினர்.   நண்பு > நண்பர்.
நண்பர் என்பது இடைக்குறைந்து நபர் என்றுமாகி,  ஓர் ஆள் என்ற பொருளில் இப்போது வழங்குகிறது. 


சில கட்சிக்காரர்கள் அந்தத் தோழர் இந்தத் தோழர் என்று குறிப்பிடுவது போன்றதே நபர் என்பதும்.

ஆள் என்ற சொல் ஆட்சிசெய்வோன் என்ற பொருளில் வழங்காமல் ஒரு மனிதன் என்று வழங்குவது போலவே நபர் என்பதும் நட்பு என்ற பொருளழுத்தம் உடைய சொல்லாய் இல்லாமற் போய்விட்டது.  இவை வழக்கில் மக்கள் ஏற்படுத்திய திரிபுகள்.

நட்டு நிற்றலே நட்பு.  குடியிருத்தலும் அப்படியே ஆகும்.  நிரந்தரமாக எங்கே மக்கள் தங்குகிறார்களோ (தங்களை நட்டுக்  கொள்கிறார்களோ ) அதுவே நாடு ஆகும்.   மக்கள் அங்கே நட்டு நிற்கிறார்கள்; நட்டு நடக்கிறார்கள்;  நட்டு வாழ்கிறார்கள்.  நட்டிருப்பதே நிரந்தரமாகத் தங்குதல்.

நட்ட விதை எப்படி மண்ணில் ஓர் இடத்தில் தங்கி விட்டதோ அப்படியே மனிதனும்.

இப்போது நள்> நடு> நாடு என்பதன் பொருளைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

நடுதலாவது நிரந்தரமாய் இருத்தல். விதையும் இருக்கும்; நட்பும் ஒருவன்பால் இருக்கும்; மக்களும் பெருவாரியாக ஓரிடத்தில் இருப்பர். எல்லாம் நள்! நள்! நள்!
நடு என்பது முதனிலை நீண்டு நாடு என்று அமையும்.

முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

இனி நளிதல் என்ற வினையும் நள் என்பதன் வெளிப்பாடே.  நளிதல் என்பது பரத்தல் என்றும் பொருள்தரும். இப்போது:

நள் > நளி;
நள் > நடு.
நள் > நடு  > நாடு.

மக்கள் நட்டுக்கொண்டு வாழிடம்;  ஒரு பரந்த இடம்.

நள் என்பதன் பல்வேறு பொருட்சாயல்களைப்
புரிந்துகொண்டு இன்புறுக.



   

வியாழன், 29 மார்ச், 2018

மோடியும் அமித்ஷாவும் கர்நாடகாவில்....



இவ்விரண்டு இன்னிசை வெண்பாக்களும் கர்நாடகா மாநிலத் தேர்தல்கள் பற்றியவை.  மோடியாரின் வாய்ப்புகள் மாடிபோல் உயர்ந்து நிற்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன.  அவை மோடி மந்திரம் (மேஜிக்) என்`கின்றன. தேர்தல் முடிவுகட்கு ஆர்வமுடன் காத்திருப்போம்.  நல்ல முடிவாகட்டும் .

இன்னிசை வெண்பாக்கள்.


மோடி அமிட்சா மொழிமந்  திரங்களே
கூடி உவப்புடனே கோடியாய் வாக்குகள்
வந்து குவிந்திடுமோ வைகுவம் ஆர்வமுடன்
செந்தண் முடிவாக்கும் சீர். 1


அரசகுல ஆள்வொழிந் தாலும் அகலா
முரசுகளை நன்றாய் முழக்கிவரும் கட்சிகள்
தந்தைதாய் பாட்டன் தருகோலால் ஆங்கமைதல்
நந்தா நடப்பாமோ நாடு.
      2

அருஞ்சொற்பொருள்:

பாட்டு 1 

மொழி = பேசுகின்ற; பரப்புரை செய்கின்ற. 

மந்திரம் -  மக்களிடம் ஏற்பட்டுள்ள ஒருவித மாயமயக்கு.

கூடி -   ஒன்றாகி.
இருதலைவர்களின் இணைதிறனைக் குறிக்கிறது.
உவப்பு -  மகிழ்ச்சி.
வைகுவம் -  காத்திருப்போம்.
செந்தண் -  சிறந்த.
முடிவு ஆக்கும் - முடிவுகளை உண்டாக்கும்.

பாட்டு 2

ஆள்வு -  ஆட்சிமுறை
அகலா = அரசர்கள் பதவியேற்கும் முறையினின்று
விலகாத;
தருகோலால் =  தருகின்ற ஆட்சி முறையால்.
ஆங்கு அமைதல் -  அவ்வாறு ( ஆட்சி) அமைதல்.
நந்தா -  கெட்டுப்போகாத; நீங்காத.
நடப்பு ஆமோ = நிகழ்வும் ஆகுமோ.
நாடு -  சிந்தனை செய்க.

புதன், 28 மார்ச், 2018

சிவமாலா வலைத்தளமோ ஓட வில்லை....!


சிவமாலா  வலைத்தளமோ ஓட வில்லை
செய்தனரே அதுவென்ன? வாட வில்லை
இவண்மீண்டும் வருகின்றேன் பாடலொன்றைப்
புனைந்துங்கள் முன்வைத்தேன்  தேடு முன்னே
கவண்வைத்துக் குருவியைப்போல் சிக்க வைத்துக்
காட்டுக்குள் போட்டாலும் கடுகி வந்து
கவிமாலை சொல்லாய்வு கவினு ரைகள்
கனிவோடு தரமுருகன் அருளே செய்வான். 

இது 23.3.2018ல் எழுதப்பட்டது.  வலைத்தளம் வசப்பட்டது
போல் தோன்றினாலும் எதையும் பதிவேற்றம் செய்ய
முடியவில்லை. இந்தப் பாடலை மட்டும் சேமித்து வைத்து
வேறோர் இடத்துக்கு அனுப்பி இப்போது மீட்டெடுத்தோம்.
அந்தத் தடையை நினைவு கூர்வது நல்ல அறிகுறியா 
என்று தீர்மானிக்க இயலவில்லை. எழுதப்பட்டதைப்
படித்து மகிழுங்கள்.

பல காரணங்களால் அவ்வப்போது தடைகள்
ஏற்பட்டுக்கொண்டுதாம்  உள்ளன. என்றாலும்
தொடர்வோம்.

நம் வலைத்தளத்தைத் தேடினால் வேறு தளங்களுக்கு
மாற்றிவிடுதலும் நடக்கிறது.  இத்தளம் இல்லை என்றும்
அறிவிப்பு வருகிறது. கவலை வேண்டாம்.

ை நிகழ்ந்து இன்னொரு நாட்டில்.

காமி ( காட்டு) மற்றும் காமி (அன்புக்குரியாள்)



பிறவினைச் சொற்களில் ஏற்படுந்  திரிபுகள்


காண் என்பதன் பிறவினை காண்பி  என்பது.  இதை நம் இலக்கண நூல்கள் விளக்கும்.  செய் என்னும் வினையோவெனின் செய்வி என்று பிறவினை வடிவு கொள்ளும்.  ~தல் என்னும் தொழிற்பெயர் விகுதியைச் சேர்த்தால் காண்பித்தல்,  செய்வித்தல் என அமையும்.

செய்வி, காண்பி, செய்வித்தல் காண்பித்தல் போன்றவற்றைத் தனிச்சொற்களாய் நாம் கொள்வதில்லை.  செய், காண் என்ற சொற்களையே சொற்களென்`கிறோம்.  மற்றவை இச்சொற்களின் பிறவினை வடிவங்கள் என்`கிறோம்.  செய்வித்தல் போன்ற சில வடிவங்களை அகராதிகளும் பெரும்பாலும் தருவதில்லை.

காண்பித்தல் என்பது பேச்சுமொழியில்காமிஎன்று வருகிறது. காமி என்பது  அகரவரிசையில் இப்பொருளில் இடப்படுவதில்லை.
காமி, சத்தியபாமா, கதவைத் திற வாஎன்ற நாடகப் பாட்டில் காமி என்பது காமத்துக்குரிய பெண்ணைக் குறிக்கிறது.  கலகம் மூலம், காமினி மூலம்  என்ற மலையாளப்பாட்டிலும்  காமினி என்பது காமி என்ற பொருளிலேதான் வருகிறது.

காமம்> காமி > காமினி.

காமி  (காட்டு என்ற பொருளில் ) என்பதை   முறைப்படி அமைந்த சொல்லாய்த் தமிழாசிரியர் ஏற்றுக்கொள்வதில்லை.  

சிவகாமி என்பதில் சிவனின் இணை என்ற பொருளில் காமி என்பது சரியாக வருகிறது.
காமி என்பது அன்புக்கும் அணைப்பிற்கும் உரிய பெண் என்று தனித்து நின்றும் பொருளுணர்த்தும். ஆனால் பேச்சு வழக்கில் காண்மி, காண்பி என்பவற்றுடன் சென்று மலைவு தருகிறது.  காமினி என்பது இன்+இ என்ற இறுதிகளைப் பெற்று இவ்விலக்கலிலிருந்து தப்பிவிடுகிறது.

ஒருமித்தல் என்ற பிறவினையில் மி என்ற இறுதிநிலை  வந்து, நல்ல சொல்லாகிறது.  நிறுமித்தல் ( நிருமித்தல்) என்ற சொல்லிலும் தடைக்கற்கள் இல்லை.  நேர்மித்தல் ( நேமித்தல் ) என்பதிலும் பிறவினையமைப்பு நன்றாகவே உள்ளது. ( நியமித்தல் என்பது இன்னொன்று).   சேர்மித்தல் ( சேமித்தல்) என்பதும் நன்று.

காமி(த்தல்) என்ற பேச்சு வழக்குச் சொல்லை காண்மித்தல் என்று திருத்தமாக எழுதியிருப்பின்  அல்லது பேசியிருப்பின்  இடர் ஏதுமில்லை. அது காண்பித்தல் போலவே ஏற்றுக்கொள்ளத்தக்க உரு உடையதாகிவிடும், இடையில் நிற்கும் ணகர மெய்யை ஒலிக்க இயலாத காரணத்தால் காண்மி என்பதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. காண்பி என்பதும் அதே காரணத்தால் உரையாடல்களில் அருகிவிடுகிறது.

காண்மானம் என்ற பேச்சுச்சொல்,  எழுத்தில் வருவதில்லை.  "ஓரு காமானமா அதெ சொல்லுவாரு" என்று செவிகளில் வந்தேறும்.  அகராதிகளில் இல்லை.  எடுத்துக்காட்டு என்ற பொருளில் இது கையாளப்படுகிறது. இதிலும் ணகர ஒற்று மறைந்துவிடுகிறது. காண்மானம் என்பதில் இலக்கணத் தெற்று ஏதுமில்லை. 


(பிழைத்திருத்தம் பின்.)