புதன், 20 நவம்பர், 2024

பாறை என்ற சொல்.

 கல் ஒரு மலையாய்ச் சற்று உயரமாய் வளர்ந்துள்ளது, என்னுடன் வந்தவர்கள் இது கல்லுமலை என்றனர். யாம் ஒரு கவிதை வடிக்குங்கால் கல்லுமலை என்பது சொல்லில் நீட்சிகாட்டுகிறது என்று நினைத்தால் அதை வெட்டி ஒட்டிக் கன்மலை என்று சொல்லிவிடலாம். அப்போது ல் என்ற ஒற்று ன் என்று மாறிவிடும். படிப்பவர்க்கு நூல்களிலிருந்து ஆதார மேற்கோள்கள் ஏன் காட்டவில்லை என்று கேட்கலாம்.  இது  ஆனா ஆவன்னா மாதிரி அடிப்படையானது. இதற்கு ஆதாரங்கள் காட்டப்படா. பலரும் அறிந்திராத ஒன்றைச் சொன்னால் அதற்கு ஆதாரம் காட்டுவதுதான் முறை. கற்போருக்கு அது உதவியாய் இருக்கும்.   எதற்கும் ஒரு கரட்டுவரைப் புத்தகத்தில் தொகுத்து எழுதிவைத்துக்கொள்ளுங்கள். இது போலும் விதிகளை நினைவுக்குக் கொணர இத் தொகுப்புகள் உதவும். ஒரு பாறைமலை, உடைந்து பெரிய துண்டாகிவிட்டால் அதைப் பாறை என்றுதான் சொல்கிறோம். பாறை என்ற சொல் வந்த விதம் அறிவோம்.
பெரும் மலைக்கல், பகுந்து அறுபட்டு  ஒரு பெருந்துண்டாகி உருண்டு கீழே விழுகிறது.  பகு என்பது நீண்டு பா என்று ஆகும்.  இதைப் பாதி என்ற சொல்லில் நீங்கள் காணலாம்.  இந்தப் பாதி அறுபட்டது என்பதைக் காட்ட,  பா+ அறு + ஐ  என்ற இறுதி இரண்டும் ( சொல்லும் விகுதியும்) இணைக்கப்படுகின்றன. அறு என்பது ஆறு என்று நீண்டு ஐ  பெற்று ஆறை ஆகின்றது. பா+ ஆறை > பாறை ஆகும்.  சடைவாறுதல் என்பது போலுமே இச்சொல்.   ஆறை என்பது முதனிலை நீண்டு ஐ விகுதி பெற்றது. நதி குறிக்கும்  ஆறு என்ற  சொல்லும் நிலத்தை இரு கூறாக அறுத்துக்கொண்டு நீர் ஓடுதலையே குறிக்கிறது.  ஆறு என்பது அறுத்தல்.

பாளம் என்ற சொல்லின் பகுதியும் பாள் என்பதே.  பாறை என்பதன் உட்கருத்து பகு என்பதானால்  இதைப் பாள் என்பதிலிருந்து விளக்கிவிடலாம்.  பாள் > பாறு> பாறை என்று எளிதாய் முடிபுகொள்ளும். பாளக்கட்டி, பனிப்பாளம் என்ற வழக்குச்சொற்களைக் காண்க.

துள் > துளி,  துள் > தூள் > தூறு, தூறுதல் என்பவற்றை நோக்குக.

குள் > குட்டை;  குள் > குறு> கூறு  ( கூறுபோடுதல்).

பாறுதல் -  அழித்தல் என்பது பெறுபொருள் ஆகும். பலவாறு பகுபட்ட பொருள் தன் நிலையழிதலால். நிலை என்பது முன்னிருந்த நிலை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை: