சனி, 2 ஆகஸ்ட், 2025

பத்து, நூறு, ஆயிரம் முதல் தசம், சதம் என்பன வரை

 தலைப்பில் கண்ட பத்து, நூறு, தசம், சதம் என்பவை பற்றி அறிந்துகொள்வோம்.

தசைத்தல் என்றால் ''பற்றிப் பிடித்தல்''  என்று சொல்லலாம்.  பிடித்தல் என்பதும் பற்றுதல் என்பதும் ஒரு பொருளன ஆயினும் விளக்கத்தின் பொருட்டு இங்கு இணைத்துக் கூறப்பட்டன.  பல்+ து > பத்து என்பதும் பற்றிக்கொள்ளுதல் என்ற  பொருளுடையதே.  ஒன்றுமுதல் எண்கள் ஒன்றை ஒன்று பற்றிப்  பெரிதாகி,  ( ஒன்றாகி என்பதால் பெரியனவாகி என்று கூறவில்லை.  )  உண்டான எண்ணேதான் தசம் என்பது. பத்து என்பதும் அதுவே.  இவை ஒரே கருத்துடையனவாக உள்ளபடியால்  கருத்தியல் ஒற்றுமை இவ்விரண்டு எண்களுள்ளும் காணப்படுகிறது.  இதுபோலப் பல சொற்களில் கருத்துகள் ஒன்றாய் உள்ளமை எம் இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது கண்டுகொள்க.

தசம் என்ற சொல்லை அமைத்தபின், சதம் என்ற சொல்லை அமைப்பதில் அவர்கள் அதிக முயற்சி மேற்கொள்வதைத் தவிர்த்தனர்.  எழுத்துக்களை மாற்றிப்போட்டு,  சதம் என்ற நூறு குறிக்கும் சொல் மேற்கொள்ளப்பட்டது.

தசம் >  சதம் :  இது எழுத்து முறைமாற்றுப் புனைவு என்று பெயர்பெறும்.

சிறிதானது பெரியதாவதுதான்  தசைத்தல் அல்லது கொழுத்தல்.  இவை ஒருவகைப் பெரிதாதல் என்றாலும்  சிலவிடங்களிலே பயன்பாடு உடையது.  கழுதை கொழுத்தது எனலாம்;  ஆனால் மரம் கொழுத்தது என்று பேசுவதைக் கேட்டதில்லை. எங்காவது யாராவது பேசியிருக்கலாம். தசைத்தல் என்பதும் அத்தகையதே  ஆம்.  ஆனால் கொழு என்ற சொல் கொள் என்பதிலிருந்து திரிந்ததுதான்.  முன் இல்லாத சதைப்பிடிப்பு இப்போது ஏற்படுவதை இது குறிக்கும்.  முன் இல்லாத ஒன்றினை இப்போது ''கொள்வதால்''  அல்லது உள்ளடக்குவதால்  கொள் > கொழு என்பது பொருத்தமான சொல்லமைப்பே ஆகும், இதன்மூலம்  சதம்  தசம் என்பன தெளிவாகின்றன.

ஆயிரம் அமைத்த காலத்தில் அதுவே பெரிய எண்ணாய் இருந்தது.  ஆகப் பெரியது என்ற பொருளில்,  ஆய் + இரு   =  ஆகப் பெரியது என்ற பொருளில் அதை அமைத்தனர். இரு என்றால் பெரிது என்றும் பொருள்.

இதையும் வாசித்தறியுங்கள்:

https://sivamaalaa.blogspot.com/2023/01/blog-post_4.html  இங்கு ஏகாதசி என்னும் சொல்லை விளக்குமுகத்தான் யாம் சொல்லமைப்புகள் சிலவற்றை விளக்கியுள்ளோம்.  தொடர்புடைய கருத்துகள் இவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.



கருத்துகள் இல்லை: