புதன், 8 மே, 2024

கோவிந்தன் கோயிந்தன் சொல்

 தெய்வப்பெயராகிய கோவிந்தன் என்பதையும்  கோயிந்தன் என்பதையும் இன்று ஆய்ந்தறிந்து கொள்வோம். 

பல்வேறு இந்திய மொழிகளில் இது சில திரிபுகளை அடைந்து வழங்கும். கோவின்ட, கோபின்ட, கோபின்ட். கோவின்ட் என்பன சில திரிபுகள். பகரத்துக்கு வகரம் வருவது பல மொழிகளிலும் காணப்படும் திரிபுவகை. இந்தத் திரிபுகள் சொல்லில் எந்தக் கருதத்தக்க  பொருள் மாற்றத்தையும் உணடாக்கிவிடவில்லை.

கோவிந்தன் என்றால் மாடுகள் மேய்ப்பவன் என்ற பொருள் தரப்படுகிறது.  கண்ணன் அல்லது கிருஷ்ணன் இளமையில் மாடுமேய்க்கும் வேலையைப் பார்த்ததனால் இப்பெயர் பெற்றான் என்பர். ஆனால் கண்ணன், கிருஷ்ணன் என்ற பெயர்கள் அவன் நீல அல்லது கருப்பு நிறத்தினன் என்பதனால் ஏற்பட்டது என்பர். மாடுகள் மேய்ப்பவன் என்ற  பொருள் தமிழுக்கும் ஏற்புடையதே.

கோ + இன் + து  + அன்

கோ = மாடு(கள்)

இன் - உடைமை காட்டும் இடைச்சொல். உருபாகவும் வருவது.

து -  இடைநிலை.

ஆண்பால் விகுதி.

ஆகவே மாடுகளை உடையோன் என்பது பொருளாகிறது.

இவ்வாறு பிரிக்காமல் வேறு விதாமாகப் பிரித்து இன்னும் சிறந்த பொருள் கிட்டுகிறதா என்று பார்க்கலாம்.  ஏனென்றால் நெடுங்காலமாகப் பலவாறு பிரித்த சொல்தான் இது. தன் என்ற தமிழ்ச்சொல்லே இறுதியில் நிற்பதாகக் கருதி,  தன் கோக்களே (  மாடுகளே) தான் மேய்த்தவை என்ற பொருள் விளங்குபடியாகத் தன் என்ற சொல்லே இறுதி என்று முடிக்கலாம்,  எல்லாச் சொற்களுமே ஒரு விகுதியில்தான் முடிதல் வேண்டும் என்று எந்த இலக்கணமும் விதிக்கவில்லை. எனவே தன் என்பது தன்னைக் குறிப்பதாக, அதாவது பரமாத்மாவைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இதன் பொருள் என்னவென்றால் பரமாத்மா தன் பற்றர்களுக்குத் தானே வழிகாட்டி ஆகிறான் என்பதுதான். மாடுகள் என்பவை பற்றுடன் தன்னில் வந்து சேர்ந்தோர் ஆவர். இவ்வாறு அணியியற் பொருளிருக்கின்ற படியால் தன் என்று விடுதலும் சிறப்பே ஆகும். பற்றர்களைப் பின்னர் பெண்காளாக்கியது ஏனென்றால் பற்றின் ஆழத்தை வெளிக்கொணர்வதற்காகத் தான்.  ஆகவே மாடு பெண்கள் என்பவை எல்லாம் பற்றின் திறமும் இறைவனின் ஏற்பினையும் காட்டுவதே நோக்கமாகும்.

கோயிந்தன் என்றும் கோவிந்தன் என்றும் யகரம் வகரம் ஆகிய இரு உடம்படுமெய்களும் வரும், இவற்றுள் பிறமொழிகள் வகரத்தையே தேர்ந்தெடுத்துக்கொண்டு உள்ளன.

இன் என்பதற்கு இனிமை என்ற பொருளை எடுத்தால்  கோக்களுக்கு இனியவன் கண்ணன்;  கண்ணனுக்கு இனியவை கோக்கள் என்று இன் என்பது ஒரு நடுநாயகமாய் ஆய்விடும் சொல்லாகிவிடும்.  இது தமிழால் மட்டுமே வரும் பொருள் . இது வெகுமானிக்கத் தக்கதாகும்.

இடையனும் மாடுகளும் என்னும் பொருள்மரபு பிற மதங்களிலும் பரவி நலம் விளைத்துள்ள கருத்தியல் ஆகும்.  இதற்காக நாம் மகிழ்ச்சி அடையலாம்

கருநிறத்தோனாகிய கடவுள் கண்ணன், வடநாட்டில் கொண்டாடப் பட்டாலும் ஒரு காலத்தில் தமிழர் நாவலந்தீவு முழுமையும் பரவியிருந்தனர் என்பதைக் காட்டும் அடையாளமாகக் கருதுவதற்குக் காரணமுள்ளதென்பதை அறிக .

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.





கருத்துகள் இல்லை: