ஞாயிறு, 26 மே, 2024

சொல் நீளுதலும் குறுகுதலும். எ-டு: சுடு> சூடு

 குறிலான ஓர் எழுத்தில் தொடங்கிய வினைச்சொல்  நீண்டு அமைந்தபின் பெயர்ச்சொல் ஆகிவிடுகிறது.  இது மிக்க இயல்பான சொல்லாக்க நிகழ்வுதான்.

சுடு : இது ஏவல் வினை. இதில் சு(கரம்) நீண்டு  சூடு என்றாகி, ஒரு பொருளைக் குறிக்கின்றது.  அந்தப் பொருள் உற்றறி பொருள். அதாவது கண்ணால் காணமுடிவதில்லை.

மேல் குறித்தது ஒரு வகை.  இவ்வாறு நீண்டபின்பு,  அது ஒரு விகுதி பெற்று, இன்னொரு பொருளைக் குறிக்கலாம். விகுதி என்றால் சொல்லின் மிகுதி. எடுத்துக்காட்டாக, சூடன் என்ற சொல். இது சூடம் என்றும் வரும். சூடமும் சூடு பெற்று எரியும் பொருள்தான்.  ஆகவே வெகு பொருத்தமாகிவிட்டது.

சூடு+ அம் > சூடம்.

சூடம் என்பது இயற்கையாவும் செயற்கையாகவும் "உருப்பத்தி"  செய்யப்பெறும் ஒரு வாசனைப்பொருள்.

சொற்கள் நீண்டு பெயராய் அமையாமல், சுருங்கியும் அமையும்.  எடுத்துக்காட்டு:

சா(தல் ) >  சா(வ்)+அம் >  சவம்.

தோண்டு(தல்) >  தொண்டை.

ஒரு நீண்ட தோடு அல்லது குழாய்,  வாயிலிருந்து குடலுக்குச் செல்வது.

தோண்டுதல், கடைதல் போன்ற வினைகளிலிருந்து உறுப்புப் பெயர்களும் விலங்குப் பெயர்களும் அமைந்துள்ளன.  எடுத்துக்காட்டு:

வினைகள்:  தோண்டு(தல்),  கடை(தல்)

தோண்டு  >  தொண்டை  ( மேலே காண்க).

கடை >  கட> கட+அம் >  கஜம்.  (யானை.  கடையப்பெற்றது போன்ற முகமுள்ள விலங்கு).  இது சங்கதச்சொல்.

நெரு> நரு > நரி.

ஒப்பீடு:  நரு> நருள். ( மக்கள்கூட்டம்).

மிக நெருக்கமாக வாழும் விலங்கு. இச்சொல் வேறுமாதிரியாய்த் திரிந்தது.

நா > நாய்.  ( இச்சொல் நீளாமல் குறுகாமல் அமைந்தது.)

நாவைத் தொங்கவிடும் விலங்கு,

சங்கதம் என்பது சமஸ்கிருதம்.  பூசைமொழியாய் உள்ளது. நாம் நாட்டினரே இதையும் உண்டாக்கினர். இந்தியா எங்கும் பரவி வழக்குப்பெற்றுள்ள மொழி. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 27052024 1849

கருத்துகள் இல்லை: