திங்கள், 20 மே, 2024

பாசு என்ற தமிழ்ச்சொல் எதைக் குறிக்கும்?

 பாசு என்றால் அது பசுமை, செழிப்பு, ஊதியம் தரும் விளைபயிர் என வரும் பொருளியல் மேம்பாட்டுக்குரிய நன்மைகளைக் குறிப்பது. ஒருவனுக்கு ஆணவம் எப்போது வருகிறதென்றால்  அவன் ஒரு நிலத்தில் பயிரிட்டுத் தன் ஊதியத்தை அடைபவனாயிருந்தால்  எல்லாம் செல்வப்பெருக்காக மாறிவிடும் காலத்திலேதான் வருகிறது.  அவனடைந்த பசுமையிலிருந்தே அவனுக்கு ஆணவம் முதலிய மதங்களும் ஏற்படுவதால்,  அது உண்மையில் பசுமை அவனுக்குப் பதிந்து பொருட்பெறுமானமாக மாறிவிட்டமைதான்  ஆகவே சமயத்தில் இது   பாசுபதம் எனப்படுகிறது. பசுமைப்பதிவு எனப் பொருள்தரும் இது: அதிலிருந்து புறப்படும் குணம் ஆணவம் என்றோ அதை அடக்குதல் என்றோ வழக்காற்றுக்கு ஏற்பப் பொருண்மை பொருத்தும் என்றறிக.

பசுமைதருவோன் பசுபதி  ஆகிறான்.  அவன் இறைவன்.

ஆவென்னும் மாடும், பசுமையைத் தரும் பொருள். அதனால் அது வேளாண் மன்பதைகளில் பெரிதும் போற்றப்படுகிறது.  பசுமை தரும் வளர்ப்புஎன்ற பொருளில்  ஆவென்பது பசுவெனப்பட்டது.  பசு  என்பதை பஷு என்பது மெருகூட்டலே.

பசுமை விலங்கு என்ற பொருளில் ஆ என்பது தமிழ்ச்சொல்.

பசு என்பது முதனிலைப்  பெயர், அதாவது விகுதியற்றது.

பசு> பாசு என்ற வடிவம்,  முதனிலை நீண்டு அமைந்த பெயர்.

பாசுபதம் என்பது கூட்டுச்சொல

இவற்றின் வழக்காற்றுப் பொருண்மையை சமய நூல்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.  ஆனால் இவை தமிழ்மூலச் சொற்கள்.

பூசைமொழியில் ஏற்றவாறு பசுவை பஷு என்று சொல்லிக் கேட்போரைப் பரவசப் படுத்திக்கொள்வது பூசாரியின் உரிமை.  கேட்பவரின் இன்பம்.   இத்தகையவை பூசை மொழிக்கே உரிய ஒலிநடை.  இது தமிழில் தொல்காப்பினாரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன்மூலம் ஒலி வேறுபடுவதுடன், வேற்றுமொழி போலும் தோற்றமும் உண்டாகிவிடுவதைத் தொல்காப்பியனார் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர் ஒலிமெருகூட்டல் புறம்பானவை என்று கண்டு, அவ்வாறு பாதிப்புற்ற சொற்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருதலையே விரும்பினார்.  தொல்காப்பியனார் காப்பியக் குடியில் தோன்றிய பிராமணர் என்ப.  காப்பியம் என்பது சாத்திரம் என்பதனோடு ஏறத்தாழ ஒத்த பொருளுடையதாகும். 

இதற்கு  ( பாசு ) வேறு விளக்கம் தருவாரும் உளர்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்/


கருத்துகள் இல்லை: