திங்கள், 6 அக்டோபர், 2025

துப்பு என்னும் வழக்குச் சொல் மற்றும் இலக்கியச் சொல்

 துப்பு என்பது '' பல்பொருள் ஒருசொல்.''  இதன் பொருள்களில் உளவு, உளவாளி என்றும் பொருள் உள்ளது.  இது மனிதனைக் குறிக்கும்போது, உளவன் என்று அன் விகுதி பெற்றும் வருதலை உடையதாம்.  

இது அகம் என்னும் சொல்லுடன் சேர்ந்து துப்பகம் என்றுமாகும்.  துப்பு, அ , கு அம் என்னும் பகவுகளை இணைத்து உண்டான சொல்.  அகம் என்பதை சொற்பகவாய்க் கொள்ளாமல் விகுதி மற்றும் இடைநிலைப் பகவுகளாகக் கொண்டு,   அ -  அங்கு, கு - சேர்ந்து அல்லது கூடி, மற்றும் அம் - அமைதல் பொருளதான விகுதி என்றும் கொண்டு,  அங்கு சேர்ந்து அமைவது என்று பொருள்கூற, அது வழக்கில் உண்ணும்போது சோற்றில் முன்னர் ஊற்றப்படுவதான நெய்யைக் குறித்தது என்று கொள்ளல் அதன் வழக்குப் பொருளுடன் சரியாகின்றது. 

துப்பன் என்பது ஆற்றல்லுள்ள மனிதனைக் குறித்தது.   து என்பது முற்செலவு குறிக்கும் சொல்லாகையால், எதிலும்  முன்செல்பவன் வலியோன் என்று பொருள்பயந்து நிற்கிறது. அரசன் செல்லுமுன் முன்சென்று அறிந்து வருவோன் ஒற்றனாதலின், அது ஒற்றனையும் குறிக்கும் சொல்.

துப்புரவு என்னும் சொல்லிலும் துப்பு உள்ளது.  துப்பு, உரு, அ, வு என்பன பகவுகள்.  வு என்பது விகுதி.  துப்பு - முன்னர், உரு -  தெளிவாகி, அ என்பது அங்கு என்று குறிப்பது.  ஆகவே, எல்லாவற்றிலும் முன்னர் அங்கு நிற்பது என்றால் அது தூய்மைதான்.  தூய்மை என்ற சொல்லுமே முன்வரு தன்மையையே குறித்து எழுந்த சொல்தான்.  ஆகவே கருத்தொற்றுமை உள்ளது காண்க. பண்டைத் தமிழர் தூய்மையை வெகுவாகக் கொண்டாடியது இதிலிருந்து தெரிகின்றது.

துப்புரவு என்ற சொல் துப்பரவு என்றும் வரும்,  அரவு என்பது அருமை என்று கொள்க. அரு+மை > அருமை;  அரு+ வு > அரவு.  ரு என்பதிலுள்ள இறுதி உகரம் ரகரமாயிற்று,  இது திரிபு.   தூய்மையே அருமையானது என்பது இதன் சொல்லமைப்புப் பொருளாகிறது.

துப்பற்றவன் என்றால்  முன் நிற்கும் தகுதி அற்றவன் என்று கொள்க.

அரக்கு  என்பதும் பொருள். இன்னும் இச்சொல்லின் பொருளை அகரவரிசைகளில் முழுமையாக அறிந்துகொள்க.  எல்லாம் முன்மை காட்டும் பொருட்களே  ஆகும். "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" என்னும் குறளும் காண்க.

துப்புதல் என்ற வினை முன் கொணர்ந்து எச்சிலை உமிழ்தல் என்ற பொருளுடன் அறியப்படுகிறது.  ஆகவே து என்பதற்கு முற்செலவே பொருள். உமிழ் என்ற சொல்லிலும் உ என்ற உகரத்திற்கு முன் என்பதே பொருள்.

இவ்வாறு அறிய இதன் பொருண்மை எளிதாகிவிடுதல் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





கருத்துகள் இல்லை: