வியாழன், 11 ஜூலை, 2024

துல் தல் அடிச்சொற்கள் பொருண்மை--- தலை என்பது என்ன?

வருதல், போதல் என்பவைபோல் வினைச்சொற்களுடன் கூடி, தல் என்பது வினைச்சொல்லின் விளைந்த பெயர்களைக் குறிக்க  ஆளப்பெறுகின்றது. இதிலிருந்து மண்டையைக் குறிக்கும் தலை என்ற சொல்லும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்பெயர் எப்படி வந்தது என்று அறியவேண்டியுள்ளது. 

தலை என்ற உறுப்பையும் குறிக்கும் சொல்லுக்கு எது மூலச்சொல் என்று இன்று அறிந்துகொள்வோம். இதற்கு வேறு பொருண்மைகளும்  பயன்பாடுகளும் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே. இச்சொல்லிலிருந்து பிற சொற்களும் தோன்றியுள்ளன. எ-டு: தலையாரி, தலைச்சன்(பிள்ளை)  என்பவைபோல,  இவையும் நீங்கள் அறிந்துவைத்துள்ளவைதாம்.

சுட்டடிச் சொல் அமைப்பின்படி, தல் என்பது தலை என்பதன் அடிச்சொல். அடிச்சொல்லுக்கு ஒரு மூலம் இருக்கவேண்டும், இந்த மூலமான சொல்: துல் என்பதுதான்.

துல் என்ற அடிக்கு என்ன பொருள் என்பதை அறியவேண்டும். இதன் பொருளாவன:

சரியானது;  ஒப்புமை, எதிர், திட்டமுள்ளது, குறையில்லாதது; மறைப்பு இல்லாமை; தடையில்லாமை; இடமாய் இருப்பது அல்லது இருக்க இடம்தருவது; இணைப்பொருள்: உள்ளடங்காமல் தள்ளி இருப்பது,    முழுமை அல்லது எல்லாம் அடங்கியிருப்பது .

எல்லாம் இங்கு சொல்லிவிடவில்லை. இங்கு அகப்பட்டுச் சொல்லப்படாத பொருட்சாயல்களும் இருக்குமென்று கொள்க.

துல் என்ற அடியிலிருந்தே தல் என்பது ஏற்பட்டது.  ஆகவே வருதல் போதல் என்பன போலும் சொற்களில் இவற்றுள் ஒன்றில் உடன்பட்டுப் பொருள்தரும் விகுதியாகும்.  

இனி, து + அல் > தல் என்பதை உணர்ந்து,  இதுவே  (தல் ) உண்மையாகும், அல்லாதவை இதில் அடங்கா என்ற பொருளும் பெறப்படும்.  எனவே, அடங்கியவை, அடங்காதவை என இருபாற்கும் தல் என்பது பொதுவாகும் என்பதையும் அறிக.

காட்டாக,  தலைவன் என்ற சொல்லில் தொண்டன் உள்ளடங்கமாட்டான். அவன் அடங்கினானாகில் தலைமை என்பது ஏற்கப்படாமல் முடியும். அதுதான் சரியென்றாலும்,  தொண்டன் இல்லாமல் தலைவன் இல்லை என்பதும் உண்மை. ஆகவே, அடிச்சொல்லில் இடம் நோக்கியே தல், தலை என்பதற்கும் பொருள் இணங்குறுமாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.  முன் பொருள் துல்> தல் என்ற திரிபிலும் பின் பொருள் து+ அல் என்ற திரிபிலும் அல்லது திரிபமைதியிலும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு நோக்கிப் பகுத்தறிகையில்,  தல் > தலை என்பதன் பொருள் தெரிகிறது.  தலை என்றால் யாவரும் அறிய வெளியில் அறியப்பட்டு, உள்ளிலும் கீழிலும் அடங்காதது என்று பொருள். இது மனிதன் தலைக்கும் என்றும் தலைமை(த் தன்மை)க்கும்  பொருந்திவரும் என்பது அறிக. இச்சொல்லின் நுண்பொருள் தெளிவானது என்று அறிக.

ஆகவே தலை என்ற சொல்லும் தல் என்ற இடைச்சொல்லும் ஒருசேர உணர்விக்கப்பட்டன. ஆனால் புரிதல் மெதுவாக வரும் . இதைப் பலமுறை படித்தறியவேண்டும். அதுவும் வெவ்வேறு வேளைகளில் சென்றறிக.

தலை

இயல்பு நிலையில் மறைப்பு இல்லாத இடத்திலமைந்த உறுப்பு என்று இதை வரையறை ( define ) செய்தால் பொருண்மை வெளிப்படும். திருடனோ தூங்குபவனோ, குடைபிடிப்பவனோ  மறைத்துக்கொள்வான், ஆனால் இயல்பு நிலையில் மறைப்பில்லாத உறுப்பு என்பது பொருள்.  மறைப்பில்லாத, யாவரும் அறிந்த இடமும் தலை எனப்படும். எடுத்துக்காட்டு: தலையாலங்கானம்.  தலைச்சங்கோடு. குளித்தலை.

ஐ விகுதி உயர்வுப் பொருளது. தலைக்குப் பொருந்துவது ஆகும். தல் + ஐ > தலை  ஆதல்  காண்க.  ஐ மேலிருப்பதையும் உணர்த்தும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 


கருத்துகள் இல்லை: