திவ்வியம் என்ற இனிய சொல்லைக் காண்போம்.
திவ்வியம் என்றால் என்ன என்று கேட்டால், கேட்டவனுக்கு திவ்வியமான ஒன்று என்ற பதில்வருமானால், முன்னினும் தானறிந்து கொண்டது ஒன்றுமில்லை என்றுதான் கேட்டவன் நினைப்பான். இப்போது தி + இயம் > திவ்வியம் என்று புணர்த்திச் சொல்லை உருவாக்கிக் காட்டினாலும், தி என்பது எதைக் குறிக்கிறது மீண்டும் கேட்கத் தோன்றும்.
தித்தி என்ற சொல்லில் தி என்பது இனியது என்னும் பொருளதாய் உள்ளது. இதைத் தீந்தமிழ் என்ற சொல்லின்மூலம் அறிந்துகொள்வோம். தீம்பூ என்ற சொல்லில் பூ என்றால் வினைப்பகுதியாக வந்து முதனிலைத் தொழிற்பெயராக நின்று '' தோன்றிய ஒன்று'' என்று பொருடரும். (பொருள்தரும்). பூ என்பது நறுமணத் தொடர்புடையது என்பதால் தீம்பூ என்பதற்கு வாசனை என்று பொருள் சொல்லவேண்டும். தீந்தமிழ் என்றால் இனிய தமிழ் என்பது பொருள். இதைத் தீத்தமிழ் எனலாகாது. வலிமிகின் கெடுபொருண்மை உடையதாகிறது.
ஆனால் தீம்பு என்பது தீமை என்று பொருள்படுகிறது. ஆகவே இங்குக் கவனம் தேவையாகிறது. தீயது என்பது இனியது என்றும் பொருள்தருவது. ஆனால் இற்றை வழக்கில் கெட்டது என்று பொருள்கொள்ளவேண்டும். தீயம் என்றால் இனிமை உடையது என்பதாகும். தீயம் என்பது இடைக்குறைந்து தீம் என்று வருகிறபோது இனிது என்பதே பொருள்.
தீவிய என்றால் இனியது என்பதே. இது குறுகி, திவ்விய என்றால் அதுவே பொருள். இனிமைப் பொருளதான தீயளி என்பது பசுங்காய் என்றாகும். தீவு என்பது நன்மைப் பொருள் தந்து , தீவாம் வாழ்வு என்றால் இனிய வாழ்வு என்றுதான் பொருள்.
இப்ப்டி முயன்று பொருளறிந்து கொள்வதினும், சுருக்கமாகத் திவ்வியம் என்பதை அறிந்துகொண்டுவிடலாம்.
திருவியம் ( திரு+ இயம் ) > திருவியம்> தி( ரு )வியம் > திவ்வியம்.
திருவமைந்து நிற்பது, இனிமையானது, மிக்க உயர்வானது. இடைக்குறைச் சொல்.
மூலச்சொல் எது என்பது தானே புரிந்துகொள்ளத் தக்க விளக்கம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.