புதன், 29 மே, 2024

மழலைச் செல்வம்

 மழலைமொழி மிழற்றுகவின் குழந்தைச் செல்வம்

மாநிலமேல் போலுமொரு கிடையாப் பேறே;

இழந்துபெறும் பலவுளவே உலகின் மீதில்

இதையடையும் செவிகட்கோ சிதைவு  மில்லை;

உழந்துமிரு கண்விழித்து மடுத்த போதும்

உயிர்மகிழும் உளமகிழும் மகிழ்வே யாண்டும்;

விழுந்துயிலும் கலைந்தெழுந்து கேட்ட ஞான்றும்

வேறொன்றும் வேண்டாள்தாய் மழலை வேண்டும்.


பொருள்:

மிழற்று கவின் - நிரம்பாத அரைகுறை நாக்குத் திரும்பாத பேச்சின் அழகு.

கிடையாப் பேறு -  கிடைக்காத பாக்கியம்

இழந்து பெறும் -  இருப்பதும் இழப்பதுமான செல்வம்,

இதை அடையும் - மழலை அடையும் (செவிகட்கு குறைவு இல்லை}

சிதைவு - கெடுதல்.

வேறொன்றும் - மழலை தவிர மற்றவை.

யாண்டும் - எப்போதும்.

மடுத்தபோதும் - செவி நிறையக் கேட்ட போதும்

மடுத்த - மழலையைக் கேட்ட

உழந்து - துன்புற்று.

விழுந்துயில் - தூங்கி விழும் தூக்கம்

ஞான்றும்-- பொழுதும்




செவ்வாய், 28 மே, 2024

ரிக் வேதம். வாமதேவன் மண்டலம் 4 சொல்

 நான்கு  வேதங்களிலும் ரிக் வேதம் என்பதே முதல் என்று சொல்லப்படுகிறது. எனினும் இது தேடிச் சேர்க்கப்பட்ட மிக்கப் பண்டை நாட்களில் இவற்றைச் சேகரித்த புலவர் எங்கெங்கு தேடி வெற்றிபெற்று கிடைத்தவற்றை இணைத்து ஒரு நூலாக்கினார் என்று தெரியவில்லை.  அவர் அறிந்திருந்தவற்றை மட்டுமே இணைத்து ஒரு மனப்பாடக் கோவையாக ஆக்கி அவரிடம் பயின்றவர்களிடம் மனப்பாடம் செய்வித்தார் என்பதே நடைபெற்றதாக இருக்கலாம். இந்தப் பழங்காலத்தில் இப்போது உள்ளதுபோல் வசதிகள் இல்லை. வேறு குழுவினர் அறிந்திருந்த மனப்பாடங்கள் இவரை எட்டாமற் போயிருந்தால் அது இவர் குறையன்று.  நாடெங்கும் பயின்றோர் அறிந்தவை எல்லாம் இதில் அடங்கிவிட்டதென்று கூறுவதற்கில்லை.  பல பாராயணங்கள் விடுபட்டிருக்கக் கூடும், இன்று தொலைந்திருக்கவும் கூடும்.

சரி, இல்லாமற் போனவற்றுக்கு என்ன செய்ய இயலும்.  நான் காவது மண்டலத்தை இயற்றியவர் வாமதேவர் என்னும் முனி.  இவர் பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம்.

வாமதேவர் என்பதில் தேவர் என்பது தமிழிலும் உள்ள சொல்தான். இங்கு "வாம" என்பதை மட்டும் விளக்குவோம்,

இவர் பெயர் வாழ்மாதேவர் என்பது,  இதில்  ழ் இடைக்குறைந்து வாமா என்றானது.  பின்பு  வாமா என்பதும் வாம என்பதும் ஒரு   பெரியவேறுபாடு என்று எண்ணுவதற்கில்லை.  இதற்குப் பல விளக்கங்கள் உள்ளன.  வந்தான், வாங்க என்று எண்ணற்ற அடிச்சொல் மாற்றங்கள் உள்ளன.  கண் என்பது பெயரிலும் காண் என்று வினையிலும் மாற்றங்கள் உள்ளன. உலகில் பல மொழிகளில் குறில் நெடில் இல்லை,

இவர் பெயர் தமிழிலிருந்து போந்தது ஆகும்.

வாழ் மா தேவர் > வாமதேவர்

இன்னும்  பல பெயர்களை ஆய்வு செய்வோம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்



ஞாயிறு, 26 மே, 2024

சொல் நீளுதலும் குறுகுதலும். எ-டு: சுடு> சூடு

 குறிலான ஓர் எழுத்தில் தொடங்கிய வினைச்சொல்  நீண்டு அமைந்தபின் பெயர்ச்சொல் ஆகிவிடுகிறது.  இது மிக்க இயல்பான சொல்லாக்க நிகழ்வுதான்.

சுடு : இது ஏவல் வினை. இதில் சு(கரம்) நீண்டு  சூடு என்றாகி, ஒரு பொருளைக் குறிக்கின்றது.  அந்தப் பொருள் உற்றறி பொருள். அதாவது கண்ணால் காணமுடிவதில்லை.

மேல் குறித்தது ஒரு வகை.  இவ்வாறு நீண்டபின்பு,  அது ஒரு விகுதி பெற்று, இன்னொரு பொருளைக் குறிக்கலாம். விகுதி என்றால் சொல்லின் மிகுதி. எடுத்துக்காட்டாக, சூடன் என்ற சொல். இது சூடம் என்றும் வரும். சூடமும் சூடு பெற்று எரியும் பொருள்தான்.  ஆகவே வெகு பொருத்தமாகிவிட்டது.

சூடு+ அம் > சூடம்.

சூடம் என்பது இயற்கையாவும் செயற்கையாகவும் "உருப்பத்தி"  செய்யப்பெறும் ஒரு வாசனைப்பொருள்.

சொற்கள் நீண்டு பெயராய் அமையாமல், சுருங்கியும் அமையும்.  எடுத்துக்காட்டு:

சா(தல் ) >  சா(வ்)+அம் >  சவம்.

தோண்டு(தல்) >  தொண்டை.

ஒரு நீண்ட தோடு அல்லது குழாய்,  வாயிலிருந்து குடலுக்குச் செல்வது.

தோண்டுதல், கடைதல் போன்ற வினைகளிலிருந்து உறுப்புப் பெயர்களும் விலங்குப் பெயர்களும் அமைந்துள்ளன.  எடுத்துக்காட்டு:

வினைகள்:  தோண்டு(தல்),  கடை(தல்)

தோண்டு  >  தொண்டை  ( மேலே காண்க).

கடை >  கட> கட+அம் >  கஜம்.  (யானை.  கடையப்பெற்றது போன்ற முகமுள்ள விலங்கு).  இது சங்கதச்சொல்.

நெரு> நரு > நரி.

ஒப்பீடு:  நரு> நருள். ( மக்கள்கூட்டம்).

மிக நெருக்கமாக வாழும் விலங்கு. இச்சொல் வேறுமாதிரியாய்த் திரிந்தது.

நா > நாய்.  ( இச்சொல் நீளாமல் குறுகாமல் அமைந்தது.)

நாவைத் தொங்கவிடும் விலங்கு,

சங்கதம் என்பது சமஸ்கிருதம்.  பூசைமொழியாய் உள்ளது. நாம் நாட்டினரே இதையும் உண்டாக்கினர். இந்தியா எங்கும் பரவி வழக்குப்பெற்றுள்ள மொழி. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 27052024 1849