வீட்டிலும் நாட்டிலும் வேலைகள் செய்து
விரிவாரி ஞாலம் தெரிவேற்றம் செய்தார்தம்
பாட்டை உணர்ந்தோர் பயன்கருதி ஏத்திய
நாட்டினர் கொண்டாடும் மேதினமே இன்று,
வருகநன் மக்காள் பெருகுபுகழ் அன்னார்
சருகென்றும் எண்ணா துருகி வணங்குவம்.
அன்னவரால் இந்நகரம் தூய்மை அடைந்தது.
அன்னவரால் ஞாலம் அலங்கோல மேதவிர்ந்து
இன்னரும் நல்லிடமாய் இங்கு ஒளிர்ந்த(து.)
உழைப்போரை எப்போதும் ஓங்குயர்ந் தோராய்
இமைப்போதும் மாறாமல் ஏற்றியே போற்றுவீர்.
நம்மிறைவன் நல்லவர் என்றன்னார் போற்றுகிறான்,
தம்மை உணர்ந்தவரே தாரணி தானுணர்ந்தார்.
வேலைகள் செய்வோர்க் கியாதே இயன்றது
மூலையில் வைத்தொளிக்கா மூதறிவால் ஈந்திடுவீர்.
வேலனும் வேலைசெய் வள்ளி வரித்திட்டான்,
ஞாலம் பயனுற நல்லதை இன்றுசெய்வீர்
கூலமோ சேலையா தேனும் கொடுத்திடுவீர்.
நாளும் நலம்பெறுவோம் நாம்.
உழைப்பார்க் உரித்தாம்நல் வாழ்த்து, பணியால்
பிழைப்பார்க்காம் ஏற்றம் இனி.