புதன், 21 டிசம்பர், 2022

எதேச்சை

 இன்று பேச்சில் வரும் "எதேச்சை(யாக)"   என்ற சொல்லை அறிவோம்.

இதில் வரும் " இச்சை " என்ற சொல்,  இங்கு விளக்கப் பட்டுள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_88.html

இதில் வரும் இ என்பது ஓர் சுட்டடிச் சொல்.  இங்கு என்பது இதன் சொல்லமைப்புப்  பொருள்.  இதன் பொருண்மை யாதெனின், இங்குள்ள ஒன்றன்மேல் மனத்தை இட்டு,  அதன்மேல் கவிந்திருத்தல் என்பதாகும். மனத்தொடர்பு உட்படுத்தாத  விடத்து  ,  இங்கு வைத்தல் என்பது இதன் பொருள்.

இ >  இ+ சை >  இச்சை.   சை என்பது தொழிற்பெயர் விகுதி.

இ என்பதிலிருந்து அமைந்த  வினைச்சொல்தான்,   இ > இடுதல் என்பது.

இச்சை என்பது  இ >  இ+ சை ( விகுதி )  .>  இச்சை.

இதனை:  இடுதல்:  இடு+ சை >  இடுச்சை > (  இடைக்குறைந்து  "இச்சை"  என்றும் காட்டலாம்.).

இதில் வேறுபாடு ஒன்றுமில்லை. ஒன்றைச் சுட்டடியிலிருந்து விளக்கினோம்.  மற்றொன்றை வினைச்சொல்லிலிருந்து விளக்கினோம்..   இடு என்ற சொல்லில் டு என்பது வினையாக்க விகுதி.   அ > அடு என்பதிலும் டு விகுதியே ஆகும்.  

இன்னோர் எடுத்துக்காட்டு:

ப என்ற ஓரெழுத்துச் சொல்லின் பொருள், ஒன்று நிலத்துடன் படர்வாக இருத்தல் (lying flat)  என்பதாம்.   படிந்திருக்கக் காணப்படுவது.   ஒரு மனிதன் படுத்திருக்கையில் நிலத்துடன் படிந்துள்ளான்.  ப>  பலகை என்பதில்,  மரம் அல்லது அதனால் அமைந்து நிலத்துடன் படிவான வகையில் இருப்பதைக் குறிக்கிறது.  பலகை என்பது பரப்புடைய  வெட்டப்பட்ட மரமாதலின்   :  பர > பரகை > பலகை என்று அறியப்படுதல் எளிமையான வழி. மற்றும் ல- ர அல்லது மாற்றீட்டுத்  திரிபு என்பது தெளிவு. நிலத்தைச் சமன்படுத்தல், "பரம்படித்தல்"  எனப்படுதலும் காண்க.  பர> பரம்பு.  பு விகுதி.  

இவற்றால்,  எப்படியாவது இட்டவண்ணம் ஒன்றைச் செய்தல், " எதேச்சை" யாகச் செய்தல் எனப்பட்டதன் பொருத்தத்தை அறியலாம். 

எதாவது ஒருவழியில் "எடுத்துச்செய்தல்" எனினும்  ஒக்கும். எதாவது ஒருவழியில் "எடுத்துக்கொள்ளுதல்."   எது+ எடுச்சை  > எதேச்சை..

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்

செவ்வாய், 20 டிசம்பர், 2022

பன்றி - சொல்லமைப்பு, பாடலுடன்.

 அழகிய வெள்ளைப் பன்றி

அருகினில் வந்தார் தம்மை, 

இளகிய  நெஞ்சன் யானென்

றினிமைசேர் பார்வை காட்டி

பழகிடும் அன்பால் காணீர்.

"பசிக்கெனக்  குண்ணத் தாரீர்

விளைத்திடும்  எதுவும் ஏற்பேன்,

வேற்றுமை இல்லேன்" என்னும்.


"தவிக்கின்ற பசி-ப  ரிந்து

தருவிரே  உங்கள் கையால்,

அவித்தது பச்சை என்றும்

ஒதுக்குவ  தில்லை கண்டீர்

ஒழிக்கின்ற  ஊணொன்  றில்லை

உயிர்வதை ஒதுக்கி விட்டேன்,

பழிக்கின்ற செயல்கள் இல்லேன்

பரிந்துதா  பம்செய் வீரே!"  



பல்+ தி >  பன் தி >  பன்றி. வலிமையான பல்லுடைய விலங்கு.  ( சொல்லமைப்பு)

இ(ன்) + து >  இன்று.  ஒப்பிட்டு அறிந்துகொள்ளவும்.

எ(ன்) + து  இது கன்னடத்தில்  எந்து என்று வரும்.    தமிழில்: என  என்று பொருள்.

வினை எச்சம்:  செல்+ து >  சென்று.    சென்று வந்தான் என்பதில் அறிக.

எல்லா உயிர்களின்மேலும் அன்பு காட்டுதல் நம் கடமை. எதையும் வதைத்தல் ஆகாது.

இந்தப் பன்றியின் வாழ்விடம்  ஃபூஜி மலை,  ஜப்பான்( யப்பான்)  .  வெளிநாட்டு வருகையாளர்கட்குக் காட்சி கொடுக்கும் ( பாவப்பட்ட) பன்றி.  அங்கேயே உணவை வாங்கி அதற்கு ஊட்டலாம்.  வெகு தூய்மையாக  வளர்க்கிறார்கள். சுற்றி வரும் பயணிகள் சுத்தக் குறைவை பன்றிக்கு ஏற்றிவிடாமல் காத்துக்கொண்டால் போதுமே!  அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

பரிந்து தாபம் செய்தல் - பரிதாபம் காட்டுதல்.

விளைத்திடும் -  உண்டாக்கும் (உணவுவகை)

வேற்றுமை இல் -  எல்லா உணவும் கொள்ளுதல்.

பரிந்து -  இரங்கி

ஊண் - உணவு.

பரிந்து தாபம்  ---- இரங்கி அன்புகாட்டுதல்.

தருவிரே -  தருவீரே, முன்னிலைப் பன்மை:  இர். ஈர்.  தருவிர் - தருவீர்.

இவ்விடுகையில் சில எழுத்துகள் மாறிவிட்டன. மீண்டும்  இடுகை சரிசெய்யப்பட்டது,

மாறியது ஏனென்று தெரியவில்லை.

வரைவுத்திரை ( compose mode) மாறியிருந்தது.


படம்:  திரு.குமரன் பிள்ளை.

,மெய்ப்பு மீண்டும் பார்வை பெறும்.

சனி, 17 டிசம்பர், 2022

மரம், மரத்துப்போவது, மரி, மடி, மரணம், இன்னும் தொடர்பின ( பதிவுவரும்)

 


ஒரு காலத்தில் மக்கள்  மரங்கட்கு மனிதனைப் போல் "புலன்கள்" இல்லை என்று நினைத்தனர்.ஆனால் அன்றிருந்த தமிழர்களில் சிந்தனைத் தெளிவு ( தொல்காப்பினாரைப் போல் )  உள்ளோர் எல்லாப் புலன்களும் இல்லாவிட்டாலும் ஒரு புலன், இரண்டு புலன் என்று சில புலன் களாவது சிலவற்றுக்கு இருந்தன என்பதை உணர்ந்துகொண்டு, ஓரறிவு  , ஈரறிவு என்றெல்லாம் வகைப்படுத்தினர்.

உயிரோடு இருந்த ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவன் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறுகிறோம்.  இறப்பு என்பது "கடைசி" நிலையை அம்மனிதன் அடைந்துவிட்டான்"  என்பதுதான்.  இறுதல் என்றால் இறுதிநிலை என்பதே ஆகும்.

இறுதல் -வினைச்சொல்.  பொருள்:  முடிதல்.

இறு என்ற வினையிலிருந்து  " இற "  என்ற சொல் தோன்றியது. 

இறு - இறுதல்.

இற  ( இறு + அ )  > இறத்தல்.    இங்கு,  "அ"   என்பது ஒரு சுட்டடி எழுத்து அல்லது  சொல்'.  " அ " 

இதுபோலும்,  இன்னொன்று கூற வேண்டுமானால்,   கட என்பதைக் கூறலாம்.  எதையும் கடந்து செல்ல, முயற்சி  தேவைப்படும்.  முயற்சி என்பது ஒரு கடினச் செயல் ஆகும்.   இஃது  கடு > கட   ( கடு>  கடு+ அ > கட).  இங்கு கடு என்பது கடினநிலையைக் குறித்தது. ஓர் ஆற்றையோ மலையையோ கடந்து  செல்ல, மிக்க முயற்சி தேவைப்படும்.

ஒரு வீட்டில் மகனாய் வளர்ந்தவன் இன்னொரு வீட்டில் மணவினைக்குப்  பின் செல்கிறான் என்றால்,  அந்தப் "புக்ககத்தை" மருவுகிறான்.  ஆகவே மருமகன் ஆகிறான். ஆகவே  மன்பதைச் சூழலில் அவன் ஓர் மாறுதலை  ஏற்றுக்கொள்கிறான்.

பழங்காலத்தில்,   மரு என்ற சொல்லும்  மறு என்ற சொல்லும்  பொருண்மையால் அணிமையில்தான் இருந்தன.  ( பொருள் தொலைவு இல்லை).  ரகர றகர வேறுபாடுகள் இன்றிப் பழங்க்காலத்தில் வழங்கிய சொற்கள் பலவிருந்தன.  இவற்றைக் கூறும் இலக்கண நூல்களும் இருந்தன.

கடு என்பது கட என்றானது போலவே,  மரு என்ற அடிச்சொல்லும் மர என்று மாறியது.

புலனுணர்வு மாறிய நிலையில்,  " மரத்தல் " என்ற சொல் புலன் மாற்றமடைந்த நிலையை உணர்த்தியது.  :  கால் மரத்துப் போயிற்று,   கை மரத்துப் போயிற்று என்று அறிவித்தனர். வேறு புலன் நிலை,  அல்லது புலன் மாற்ற நிலை என்று பொருள்பட்டது.   ஆகவே  மரு,    மரு என்பதன் பொருள்தொடர்பினை அறிக.

மரம் என்ற சொல்லின் பொருள் இப்போது தெளிவு  ஆகிவிடும்.  மரு+ அம் > மரம் என்பது உணர்வற்ற நிலையில் உள்ள பொருள் என்பதே ஆகும்.

(  உயிர்கள் பல  தம் ஐம்புலன்களும் ஒரே சமயத்தில் இயங்கும் நிலையில் உள்ளன.   ஆனால் நிலைத்திணை உயிரிகள் பல இந்த நிலையினின்று மாறிச் சில புலன்களே இயங்குதற் குரியனவாய் உள்ளன. எடுத்துக்காட்டாக, தொட்டாற்சிணுக்கி என்பது. தன் ஊற்றுணர்வு மட்டும் இயங்குவதான நிலையில் உள்ளது. ஜகதீச சந்திரபோஸ்  போன்ற அறிவியலார் தங்கள் ஆய்வின் மூலம்,  செடிகள் இசையையும் அறிந்துகொள்ளும் தன்மை உடையன என்று காட்டினார்.  பாம்பு முதலியவை,  கண்ணும் செவியும் ஒன்றாக இருப்பதனைக் காட்டுகின்றன. நாய்கள் மிகுந்த மோப்ப உணர்வினை வெளிப்படுத்துகின்றன. அதன்மூலமே தம் இயமானனை அறிந்துகொள்கின்றன. ஆகையால், இவற்றின் 'மருவுநிலை' ஆய்ந்து காணத்தக்கவை. மனிதன் நீங்கிய மற்றவெல்லாமும் ஒருநிலைப்பட்டன என்று சொல்வதற்கில்லை.

நில செடிகொடிகள் வெட்டுப்பட்டாலும் ஒட்டிவளர்கின்றன.  ஒடித்து நட்டாலும் வளர்ந்துவிடுகின்றன. வாழைமரம் வாழையடி வாழையாய் வாழ்கிறது  மனித உடல் வெட்டுப்பட, பிழைக்காமல் இறந்தொழிகிறது.

மரு >  மரி   ( மர்+இ )  அல்லது மரு+ இ..

மரி >  மரி+ அண் + அம்  >  மரணம். ( மருவிய அண்மை நிலை )

மரி + அகம் >  ,மாரகம்  (முதனிலை நீண்டு விகுதி பெறல்)

மரணி > மரணித்தல் ,   மரி > மரித்தல்.

இவை எல்லாம் மருவுதல் என்னும் அடிப்படைக் கருத்துடைய சொற்கள்.


மடி >  மரி  ( போலி)

இல் > இறு திரிபு அறிக.

ஒப்பீடு:  நல் > நறு என்பதும் அறிக.



மேலும் அறிய:   

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_13.html


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்


17122022 :பதிவேற்றம் செய்யப்படும் .... மீண்டும் வருக

இடுகை: முற்றும்