வியாழன், 23 நவம்பர், 2017

சவுரியம் தமிழா?



இன்று சவுரியம் (சௌரியம்)  என்ற பேச்சுவழக்குச் சொல்லைப் பற்றிச் சிந்தித்து ஒரு முடிவை எட்டுவோம்.

இது பேச்சு வழக்கில் அசைத்து விலக்கிவிடமுடியாத வலிமை பெற்றதாக உள்ளது என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.

நலம் என்ற சொல் ஓரளவு பரவியுள்ளது.
உகந்த உடல்நிலை என்று பொருள்படும் சுகம் என்பது இன்னும் வழங்கிவருகிறது.

உகத்தல்:   உக > சுக > சுகம். அகர வருக்கத் தொடக்கத்துச் சொற்கள் சகர வருக்கமாக வரும் என்பது முன்னர் எம் இடுகைகளில் தெளிவுபடுத்தப்பட்டது. அங்கனம் திரிந்ததே சுகம் என்ற சொல்லும்.

இப்போது சவுரியம் என்ற பேச்சுச் சொல்லுக்கு வருவோம்.

சவுங்குதல் என்பது மனம் தளர்தல். இது  தமிழ் வினைச்சொல்.

மனம்தளர்தல் இல்லாத நிலையே, நலமான நிலையாகும்.  உடல் தளருமாயின் மனமும் தளர்தல் தெளிவு,

சவுங்கு+ அரு+ இயம் = சவுகு+ அரு + இயம் > சவுகரியம் ஆகும்.
ஆக சவுகரியமாய் இருக்கிறேன் எனில் மனத்தளர்ச்சி இல்லாத நலத்துடன் இருக்கிறேன் என்பது.

சவுகரியம் என்பது சவுரியம் என்று திரிந்தது. இது சௌரியம் என்றும் எழுதப்பெற்றது.

சவுங்கு என்பதில் ஒரு ஙகர ஒற்று மறைத்த்து அன்றோ.  இதற்கு ஓர் உதாரணம்:

இலங்கு > இலகு என்பது காண்க.  இலகுதல் = ஒளிர்தல்.
அதுவேபோல் சவுங்கு > சவுகு.

சவுங்குதல் என்பது சவுத்தல் என்றும் திரியும். சவுத்தல் என்றால் அலுத்தல், இளைத்தல், குறைதல், மெலிதல், மதிப்பு அல்லது விலை குறைதல் ஆகிய பொருள்களை உள்ளடக்கும்.

இனி, சவு + அரு+ இயம் = சவுரியம் என்றும் காட்டினாலும் இளைப்பரிய நிலை குறிக்கும் என்பதைக் கண்டுகொள்க.

சவு > சவுத்தல்.
சவு + கு = சவுங்கு.  கு என்பது வினையாக்க விகுதி.
சவுங்கு >  சவுகு என்பது ஙகர ஒற்று விலக்கப்பட்ட சொல். மூலச்சொல் சவு என்பதே. விகுதி விலக்கம் பெரிதன்று.

இச்சொல் சவு+ அரு+ இயம் = சவரியம் என்று  வராமல் சவுரியம் என்று
வுகரத்தை இருத்திக்கொண்டதே தமிழறிஞர் தடுமாற்றுக்குக் காரணம். ஆனால் இது சவுகரியம் என்பதில் இல்லை.  சவுகரியம் > சவுரியம் என்று ககரம் வீழ்ந்தது என்றும்  கொள்ளலாம். இது பேச்சுச் சொல் ஆதலின் மக்கள் விழைந்தபடியே அமைந்தது என் க. சவுரியம் என்பது அவர்கள்  விழைந்த வடிவம்.

சவரியம் > சவுரியம் எனத் திரிதலும் கொள்க.

அறிந்து மகிழ்வீர்.


கருத்துகள் இல்லை: