சனி, 30 செப்டம்பர், 2023

ஆண் என்ற சொல்லமைப்பு.

இப்போது  " ஆண்"  என்னும் சொல்லை அறிந்துகொள்வோம்.   அதாவது நாம் இச்சொல் எப்படித் தமிழில் அமைந்தது என்று தெரிந்துகொள்ள முனைகிறோம்.  மற்ற விளக்கங்களை எழுதப் பலர் உள்ளனர்.  இன்னொருவர் சரியாக அமைப்பினை விளக்கியிருந்தால் அதையே மீண்டும் எழுதவேண்டியதில்லை.  அதைப் படித்தே அறிந்துகொள்ளட்டும்.  தமிழின் இனிமை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகவே எழுத முனைவதால் மறு அயற்பதிவுகள்  இங்கு இடம்பெற மாட்டா.   மாறுபடின் எழுதப்படும்.

ஆண் :இதன் அடிச்சொல்  அண் என்பது.

அண் >  அணுகு என்ற ஒரு வினைச்சொல் போதுமானது.   இதே பொருளினைத் தரும் வேறு வடிவங்களைச் சொல்ல வேண்டியதில்லை.  சுருக்கம் கருதித் தவிர்ப்போம்

அண்  என்பது முதல் நீண்டு,   ஆண் என்றாகும்.   அதாவது பெண்ணை அணுகுபவன்.  தமிழனின் கலையாக்கச் சாரங்களும்  இதையே ஏற்புடையது என்று கொள்ளும் என்று அறிக.

சுடு என்பது முதல் நீண்டு,  சூடு ஆகி தொழிற்பெயரானது போல  அதே பாணியில் அமைந்ததே இச்சொல்.  அண் :  அணுகு  ( வினையாக்கச் சொல் ),    அண் -   ஆண். ( அணுகும்  வகையினன் அல்லது வகையினது  என்பது).

ஒளி குறிக்கும்  ஒள் -  ஒண்  என்ற அடிகள்.  ஓண் என்று நீண்டு,  பின் அம் விகுதி பெற்று ஓணம் என்ற நட்சத்திர  ( உடு)ப்  பெயரானது.  [ நக்கத்திரம் ].  ஒரு பகுதி ஆண் என்ற திரிபினை ஒத்தது காண்க. இது பின் திருவென் அடைமொழி ஏற்றது. இதிற் பிறந்தோர் நற்குணமுடையோராய் இருப்பார்கள்.

ஆங்கிலச் சொல்  male என்பது  maris என்பதிலிருந்து வந்ததென்பர். ( Genitive case). இது  "ஆண்மை "  உள்ளது என்று பொருள் படுவதாகச் சொல்லப்படும். என்றாலும் இது மருவுதல் என்ற தமிழ்ச்சொல்லுடன் தொடர்புடையதாகக் காட்டப்பெறுதலும் கூடும்.   மரிஸ் >  மருவு.  வு என்பது வினையாக்கம்.  பிள்ளைப் பேற்றுக்குரிய மறுபாதி உடலுடையது அல்லது "உடலன்."  பெண்மையை மருவும் பாதி.

Man என்பதும்  மாந்தன் என்பதிலுள்ள  மான் என்பதனுடன் ஒப்புடைமை தெரிவிக்கும் சொல்.  மன்> மன்+து+ அன் >  முதல் நீண்டு, மாந்தன்,   மன்+தன் > மனிதன், (மன்+ இ+  து + அன்).  இ, து என்பன இடைநிலைகள்.  அடிச்சொல் மன் என்பதே.  மன்னுதல் -  நிலைபெறுதல்.  மான்  (மேன்) என்பது இருபொருட் சொல் என்பது நீங்கள் அறிந்தது ஆகும்.

மனிதன் மண்ணிலிருந்து வந்தவன் என்ற கருத்துக்கும் மனிதன் என்பது பொருத்தமான சொல்லே ஆகும்.   மண் >  மன்.   மண்ணே நிலைபெற்றது.  0னகரம்  ணகரமாகும்.  எ-டு:  அணுகுதல் என்பதிலிருந்து,  அண்>  அன் >  அன்பு. இங்கு பு என்பது விகுதி.   அணுக்கமே அன்பின் வெளிப்பாடு.

மேன் (மான்) என்பது பெண்ணையும் குறிக்கும்.  சர்ச்சில் கூறியதுபோல்,  "Man embraces  ( includes) woman".  பல சட்டவரைவுகளில்  person என்ற சொல்லைக் காணலாம். இது உண்மையில் முகமறைப்பு  (mask) என்று பொருள்தந்த சொல்லினின்று பொருள்திரிந்து வந்த சொல் என்பர். (also see dramatis personae).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


வெள்ளி, 29 செப்டம்பர், 2023

பாதுகை - இரண்டு ஆவது.

 பகு என்ற வினைச்சொல்,   குகரம் இழந்து,  பா  என்றாகும்.  இதற்கு நேராக ஒரு திரிபினைக் காட்டாமல் விளக்கலாம்.  ஒரு புல்தரையில் மனிதர்கள் ஒரே தடத்தில் நடக்கிறார்கள்.  அந்த இடத்தில் புல் இல்லாமை உண்டாகிறது.  இதன் விளைவு,  நடுவில் ஒரு பாதை வந்துவிடுகிறது. இதை நாம் அறிந்து கொள்கிறோம். அப்பால் இருபுறமும் பகுதலால்,  நடுவில் உள்ளது பாதை எனப்படுகிறது.

இந்தச் சொல் அமைந்த அடிநாளில் பகுதை என்றிருந்திருக்கலாம்.  இதிலுள்ள பகு என்பது பா என்று திரிந்துவிட்டது.  பகுதை என்று ஒரு சொல் இருந்ததா என்பதை இப்போது அறுதியிடமுடியாது. எந்த மொழியானாலும் பழையன கழிந்திடுதல் நடைமுறை. பழையன பாதுகாக்கப்பட்டிருந்தால் அதற்கு எழுத்து மொழியின்  நிலைக்கப்பிடித்தல் காரணமாகவேண்டும்.  எழுத்துக்கள் மிகுதி காலமும் ஏற்படாமல் கழிந்த மொழிகளில்,  என்ன உறுதி  என்றால்,  தொடக்க காலச் சொற்களை அறிந்து அறிவுறுத்தல் என்பது முற்றும் முயற்கொம்பே  ஆகும்.

செந்தமிழ் நீண்ட இலக்கிய வரலாறு உடைய மொழி என்றாலும்,  செந்தமிழும் நாப்பழக்கம் என்பதும் உண்மையன்றோ?   ஆகவே பகு என்பது  பா என்று கு என்ற வினையாக்க விகுதியை இழந்ததா?  அல்லது பா என்பதுதான் பகு என்று குறுக்கமடைந்ததா என்பது ஆய்வுக்குரியது.  அதை இங்கு ஆராயவில்லை. இதை ஆராயமலே,  பகு என்பதும் பா என்பதும் திரிபுகள் என்று நிறுத்துவதே போதுமானது. விடுபாடுகளும் நல்ல உத்திகளாகலாம்.

இன்னும் சில கேள்விகள் எழலாம்.  அவை நிற்க.

பகுதல்,  பகுத்தல் என்பவை  என்ற  இரண்டும் பொதுவாகப் பா என்ற திரிபினை அடையத் தக்கவை.

பாதைக்கு இரு மருங்கு என்று இரண்டு ஆதலே போல,  பாதுகையும் இரண்டு உருப்படிகளாகவே  வேண்டும்.   இதுவும் பகுதுகை அல்லது பகுத்துகை என்றே தோன்றிப்  பகு என்பது பா என்றாகிப்  பாதுகை என்றாகியிருக்கும்.  ஒரு சோடியாகவே இருக்கும்.  இதை விளக்கமலே  பாதுகையின் மூலம் பகு அல்லது பா என்றே முடிவு செய்துவிடலாம். 

துகை என்பது தொகையாகவோ அன்றி  து + கை (இடைநிலை மற்றும் விகுதி) யாகவோ இருக்கட்டும்.

பா - இருபகுதிகளாகி  துகை - ஒன்றாக அணியப்படுவதனால்  பகு, பா என்பனவே  அடிச்சொற்கள்.  அக்காரணங்களை நாம் அலசவேண்டியதில்லை. தொகை - துகை  திரிபு.  அதாவது பகுதொகை -  பாதுகை  ஆனதென்பது.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்.




திங்கள், 25 செப்டம்பர், 2023

காசநோயும் பெயரும்

 காசநோய் காரணமாக இவ்வுலக வாழ்வைக் கடந்து சென்றுவிட்டவர்கள் பலர். இவர்களிற் பெரும்பான்மையோர் பல்வேறு துறைகளில் நற்சேவை புரிந்துகொண்டிருந்தவர்கள். பலர் இனிய கானங்கள் பாடி நம்மை மெய்ம்மறக்கச் செய்யும் திறனுடையார். இத்துணை இனிய குரலுக்குரியோரையும் இளமையிலே கொன்று விட்டதே இந்நோய் என்று மனம் கவல்கின்றோம்.  இன்னும் பல திறலோர் மடிந்துள்ளனர்.  உலக உடல்நலத் துறை நிறுவனம் இதிற் கவனம் செலுத்திவருகின்றமை அறிந்து நாம் ஆறுதலடைகிறோம். செல்வமுடையாரும் சிறந்த மருத்துவ அறிஞர்களும் இதற்கு ஏதேனும் செய்வார்கள் என்று நம்புவோம்.

திரிபுகள் இல்லாத மொழிகள் இல்லை என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.  எடுத்துக்காட்டாக,  ஜீசஸ் கிரைஸ்ட் என்ற ஆங்கிலம், ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வகையில் திரித்து வழங்கப்படுகிறது.  இது ஜீசஸ் கிரைஸ்ட் என்று பலுக்க இயலாமை காரணமாக இவ்வாறு மாறிவிடுகிறது என்று சொல்லலாம் என்றாலும் மனிதர் எல்லோரும் இவ்வாறு நாவொலி எழுப்பும் திறனற்றவர்கள் என்பது  அவ்வளவு பொருத்தமுடைய காரணியாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு மொழியிலும் ஓர் ஒலிமரபு  உள்ளது.  தாங்கு என்பது தமிழுக்குப் பொருத்தமென்றால்  அதேசொல்லுக்கு ஈடான மரபுவழியில்  : "தாங்" என்று வெட்டுற நிறுத்துவதே  சீன மொழிக்கு பொருத்தமான ஒலிப்பு  ஆகும்.  இஃது ஒலிப்புக்கு மட்டுமே,  பொருள் எதுவாகவுமிருக்கலாம்.  ஏசு கிறிஸ்து என்பது,    ஹேஸு  க்றிஸ்டோ  என்றால்தான் தகலோக் மொழிக்குப் பொருத்தமான ஒலிப்பு முறையாகிறது.  சீனமொழியில் இது ஜேஸு  ஜிடு  : அதாவது ஏசுவானவர் நம் பாக்கியத்தால் (நற்பேற்றினால்)  நம் முன் தோன்ற நாம் அவரைத் தமிழில் "  ஏசு அவர்களே"  என்று பணிய,  நம் பக்கத்தில் நிற்கும் சீனர் "யே சூ ஜி டூ "  என்றுதான்  மொழிந்தாடுவார்.  முகம்மது நபி அவர்களுக்கு முவம்மர் என்றும் மாமூட் என்றும் அரபு  அல்லாத பிற திரிபுகள் உள்ளன.  டேவிட் என்பது டாவுட் ஆக,  ஏப்ரஹாம் என்பது இப்ராகிம்  ஆகிவிடுகிறது.  டேவிட் மார்ஷல்  என்ற பெயர்,  சீனமொழியில் தாஹ்வே  மார்சியாவ்  என்றாகிவிடுகிறது.  சோலமன் என்பது சுலைமான்  ஆகிவிடும்.  சோலமன் என்பது தமிழ்நாட்டில் சாலமன் என்றாகிறது.  இத்தகைய மாறாட்ட ஒலிப்புகளால்  புடு ஜெயில் என்பது புது ஜெயிலா பழைய ஜெயிலா (சிறை) என்று தெரியவில்லை.  மாசிலாமணி என்பதில் மா சி  என்பது சீனமொழியில் குதிரை  செத்துவிட்டது என்று பொருள்தருவதால்,  சரியில்லை  எனவே,  மணி என்றே அழைக்கப்பட்டார்.

காசம் என்ற சொல்லை,  காய நோய் என்பதன் திரிபு என்பது ஏற்கத்தக்கதாகலாம் .  காய என்பது காச என்றாகும்.  இந்த நோயில் காய்ச்சல் வருமாம்.   ஆனாலும் இருமல் மூலம் இரத்தக் கசிவு இருப்பதால்,  கசி+  அம் > காசம்  என்பதன் திரிபு என்பது பொருந்துவதாகும்.  இது படி+ அம் = பாடம் என்பதுபோலவே.  நடி+ அகம் என்பது நாடகம் என்பதாவது போலவுமாம்.   முதனிலை திரிந்து தொழிற்பெயர் ஆன சொல்.  முதனிலை திரிவதாவது படு> பாடு,  சுடு> சூடு என்பது போல.  ஆடுறு தேறலாவது அட்ட தேறல்.  ஆடுறல், சமையலுற்றது என்பதாகும்.. மசிக்கப்பட்ட அரைப்பு,  மசாலை.  ( மசாலா). மசிக்கப்படுவதால் ஆனது.  மசி+ஆல். இவற்றுள் வினை இறுதி இகரம் கெட்டது.

மதி அம் > மாதம் > மாசம்  ( த: ச திரிபு).  இங்கும் இகரம் கெட்டது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்