வியாழன், 31 ஆகஸ்ட், 2023

இமயம் வென்ற தமிழரசன் ( சொல்லமைப்புடன்)

 தமிழிலக்கியத்திற் புகழப்படும்  வேண்மாள் நல்லினி  என்பவள் ஒரு  குறுநில மன்னனின் மகள்.  இக் குறுநில  ஆட்சியாளர்கள்  "வேள்" எனற பட்டத்தினர் ஆதலின்,  வேளின் மகள்  "வேண்மாள்"  எனப்பட்டாள்.  வருமொழி  " மா  "  என்ற எழுத்தின்முன்  வேள் என்ற சொல்லின்  ஈற்று " ள் "  என்பது "ண்" என்று மாறும்.  இதைப்போலவே  கேள்+ மாள்"  என்பது  கேண்மாள் என்று திரியும்.

நல்லாள்  என்பதும்  நல்லினி என்பதும் ஒருபொருளனவே.  நல்லினி  ஒரு பெண்ணின்  ( இளவரசியின்)  பெயராக வருகிறது.   நல்+ இன் + இ = நல்லினி. பெண் குழந்தைக்கு இது நல்ல தமிழ்ப்பெயர்.

இமயவரம்பன் என்ற அரசன்,  வடதிசைச் சென்று போர்புரிந்து  வெற்றிகள் பெற்று  அப்பட்டப்பெயரைச் சூட்டிக் கொண்டான்.   இமயவரம்பன் என்பது ஒரு காரணப் பட்டப்பெயர்.  இமயமலைகளை எல்லையாகக் கொண்டு ஆண்ட பெருமைக்கு உரியோன் என்பது பொருள். தமிழ்  மலையாளமாக மாறாமுன் இவன் இருந்தான்.  இது  சங்ககாலம்.

அவன் வில் கொடி இலாஞ்சனையை  இமயத்தில் ஒரு  நீர்வீழ்ச்சி  உள்ள இடத்தினருகில் பொறித்தான்.  இவ்விடம் எங்கு என்று அறியப்படவில்லை.

இலாஞ்சனை என்ற சொல்:

இல்  -   இலக்கு,  குறி  அல்லது குறியீடு,

வேலை முடிந்தபின் ஒருவன்  எங்குச் செல்கிறானோ  அது  இல்>  இல் + கு >  இலக்கு.   அகரம் சாரியை. அல்லது இடைநிலை.  அ -  அங்கு.  கு-  சேர்விடம் என்று பொருள் விரிக்கலாம்.  இல் என்பது வீடு என்றும் பொருள்.  ஆனால் இலாஞ்சனை என்ற சொல்லில் இந்தப் பொருளில்லை.

ஆகும் ,  இது இடைக்குறைந்து  ஆம்  என்றாகும்.

தன்  -  தனது.  தன் -  சன்,    இங்கு சன் என்று திரிந்தது.  த என்பது ச ஆகும்.

இல் +  ஆம் + சன் + ஐ =  இலாஞ்சனை.

இவ்வாறு பல சொற்கள் திரிந்துள்ளன.  பழைய இடுகைகளிலிருந்து மேலும்  குறித்துக்கொள்க.

தம்தம் >  சம் தம் > சந்தம்.


சந்தம் >  சத்தம்  (  வலித்தல் விகாரம் ).

மெல்லெழுத்து வல்லெழுத்தானது.

மேலும் திரிந்து  அது சப்தம்  ஆனது.

இவன் ஆரியரை வணக்கினான்.  இவர்கள் பேரிசை  ஆரியர்கள்.  இந்த இசைவாணர்கள்  திரண்டு அவனை எதிர்த்தனர்.  அவர்களை அவன் முறியடித்தான்.   ஆர் இயர் என்றால்  வாத்தியம் வாசித்தவர்கள் மட்டுமல்லர், மரியாதைக் குரியவர்களாய் முன் இருந்தவர்கள். அவர்கள் எதிர்த்தனர்.  வெள்ளைக்காரன் புனைந்துரைத்த  ஆரியர்  அல்லர்.   Aryan Invasion Theory and  Aryan Migration Theory இரண்டும்  "தியரி"கள்  (  தெரிவியல்கள்)  தாம்.  அரசன் யவனர்களையும் பிடித்து ஒடுக்கினான்.  இந்த யவனர் அங்குப்  பணி புரிந்தவர்கள்.


பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ

நெய்யைத் தலையில் பெய்து ( ஊற்றி ) அவ்விடத்தைக் கைப்பற்றினான். பண்டை உலகில் தண்டனை வகைகள் பலவிதமாய் இருந்தன,  Read history of punishments in the ancient world and Middle Ages

இப்பாடலை இங்குக் கண்டுகொள்க

: https://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_99.html


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

உலகினுக்கு "சந்திராயன்" தந்த இஸ்ரோ

 அறிஞர்பலர்  ஆங்குள்ளார்  ஆர்ந்துழைக்கும்

சிறியபாட்  டாளிபலர்  நிதிநிறுவாகப்

பெருந்தொழிலோ  ரிடையேழை  மக்கள்பல்லோர்

அறிவியலார் அவணுண்டோ என்பார்க்கெல்லாம்

அறியவைக்கும் பெருவியப்பாய் அமைந்ததொன்றே

அழகுநிலா வெற்றிகொண்ட சந்திராயன்தான்;

உரியமுறைச் செயல்திறனால் அமைத்தனுப்பி

உலகுபோற்ற நிலவாய்ந்தோர்  கழகமிசுரோ.


தாமரிதின்  முயன்றறிந்த  நுணுக்கம்தன்னைத்

தாரணிக்குத் தருதற்கும் தயங்கும்பல்லோர்

யாமெவணும் காண்கின்ற  உலகில்ஒப்பில்

சாதனையே  செய்கழகம் இசுரோவென்போம்;

தாம்தமித்துத் துணையணையா  அடைந்தமேன்மைத்

தனிச்செயலார் இசுரோவின் கலைமேற்கொண்டு,

தேமதுரம் உலகுக்குத் தரும்பரதம்தான்

தேசமெனத்  திகழ்தக்கத் தீதில்லாதார்.


அரும்பொருள்:

ஆங்குள்ளார்   -  அங்கே உள்ளார்

ஆர்ந்து உழைக்கும் - நிறைவாக உழைக்கும்

நிறுவாகம் - நிர்வாகம்  ( நிறுவு,  வினைச்சொல்)

இசுரோ- இந்தியாவின் விண்வெளி ஆய்வுக் கழகம்

யாமெவணும் -  யாம் எவணும் -  யாம் எங்கும்

அறிவியலார் -  விஞ்ஞானிகள்

நிலவாய்ந்தோர்  -  சந்திரனை ஆய்வு செய்த நிறைவு  அறிவினர்

தனிச்செயலார் -  தனியாகப் பாடுபட்டுச் செய்து  முடித்தோர்

துணை அணையா -  மனம் வலிமை குன்றிப் பிறரை  நாடாத

கலை - கல்வி, ஞானம்.

பரதம்  -  பாரதம்,  இந்தியா.

பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர்தங் குலக்கொடி
என்பது மணிமேகலை, பதிகத்திலுள்ள வரி.

தேமதுரம்  - தேன்போலும்  இனிய  

சொன்மூலம் அறிக.

திகழ்தக்க - திகழ்வதற்குத் தகுந்த 

மெய்ப்பு:  பின்னர்

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கோலுதல், கோலிவருதல். அடிகோலுதல்.

கோலுதல் என்ற சொல்லையும் அதன் பல்வேறு பொருட்சாயல்களையும் அறிந்து இன்புறுவோம்.  

பண்டைக் காலங்களில் ஒருவன் ஒன்றை இன்னொருவனிட மிருந்து  வேண்டு மென்று எண்ணினால், அதைச் சுற்றுவட்டத்தி லிருந்துகொண்டு கேட்பான். கேட்பவன் சண்டைக்கு வருகிறானா அல்லது வேறு எதுவும் ஒரு காரணத்திற்காக வருகிறானா என்று தெரியாதநிலையில் இது முதன்மையான கேள்வியாகும்   இணங்கிவாழ்தல் முதலிய ஆகுநெறிகளைக் கண்டுகொண்டபின் இந்த நிலையில் தளர்வு ஏற்பட்டிருக்கும்.  ஆகவே கோலிநிற்றல், கோலிவர நிற்றல், அடிகோலுதல் முதலிய சொற்கள் அன்று தெரிவித்த பொருளும் இன்று நாமறியும் பொருளும் சற்று வேறுபடுமென்பது உணரத்தக்கது ஆகும்.  வாங்குதல் என்ற சொல்லும் வளைந்து நின்று பெறுதல் என்றுதான் பொருள்படும்.  அடிக்கவந்தவன் தான் நிமிர்வு காட்டுவான் என்பது அறிக.  இருநூற்றாண்டுகளின் முன் ஆய்வாளர்கள் இவ்வளவு ஆழமாகச் சொற்களை உணர்ந்துகொள்ள முற்படவில்லை. "  வாங்குவில் ( தடக்கை வானவர் மருமான்" ) என்ற இலக்கியத் தொடர்,  வளைந்த வில் என்று பொருள்படுவது காண்க.   வாங்கரிவாளென்ற சொல், வளைவான அரிவாள் என்று பொருள்தருவது,  இற்றைநாளில்  வாங்கு என்ற சொல்லிலிருந்து  வளைவுக்  கருத்து ஓரளவு அகன்றுவிட்டது.   ஆகாரம்  (ஆ)  என்பது ஏகாரமாகவும் திரியும், எடுத்துக்காட்டு:  வாங்குதல் -  வேங்குதல். வா என்னும் எழுத்தும் வளைந்தே உள்ளது.  இதற்குள் நாம் செல்லவில்லை.

அணையின் மூலமாக நீர்வரவு ஒழுங்குசெய்தலை  "அணைகோலுதல்"  என்ற வழக்கு உண்டென்று தெரிகிறது.  வெள்ளத்தை எதிர்ச்செறித்தல் என்பது ஏற்கத் தக்கது என்பர்.

அடிகோலுதல் -  அடிப்படைகளைத் தயார் செய்துகொண்டு ஒன்றைத் தொடங்குதலை அடிகோலுதல் எனலாம்.

நாலு திருடர்களும் கோலிவர நின்றார்கள் எனில்,  சூழ்ந்து நின்றார்கள் என்று பொருள்.

கோலுதல் என்பதே பின் கோருதல் என்று திரிந்தது. கோருதலாவது கேட்டுப்பெற முனைதல்.  எ-டு:  சம்பளப்பாக்கியைக் கோருதல்.  ஓர் ஆடவனின் நேசத்தை விழைதலையும்  " கோருதல்"  என்னலாம் என்பது,   " பாரினிலே என் கோரிக்கையே பலித்தது இந்நாளே"  என்ற  கவி இலட்சுமணதாசின் பாடலிலிருந்து தெரிகிறது.  கோருகை என்பது கோரிக்கை என்று  திரிந்தது. வேடத்தினால் மறைந்துகொண்டு ஆடுதலை  வேடிக்கை என்றனர்.  வேய் வேடு   என்பன தொடர்புடையன.  வேடுகட்டுதல்என்பது பானைவாய் கட்டுதல்.    மனிதன்  இவ்வாறு கட்டிக்கொள்ளுதல்  வேடம் ஆனது. பறவைகளைப் பிடிப்பவன் இவ்வாறு தன்னை மறைத்துக்கொண்டு பிடிப்பதால்  அவனும் வேடன் எனப்பட்டான்.  வேய் இடு அல்லது வேய் உடு என்பனவற்றின் திரிபு இவை.  நாயை வைத்து வேட்டையாடுகிறவன்  நாயிடு அல்லது நாயுடு என்று பிறர்கூறியதும்  காண்க. மாடு வளர்த்தல் போல் நாய் பழக்குதலும் வேட்டை யாடுதலும் செய்தோர்  முதலுடையவர்கள் ஆயினர்.  வேய் இடு திரிந்து அல்லது குறுகி வேடு  ஆகும்.  டு என்பது வினை ஆக்க விகுதி என்பது முன்னர்க் கூறப்பட்டது,   கோரி இருக்கை >  கோரிக்கை எனக் குறுகும்.  வேடு இடுகை > வேடிடுகை > வேடிக்கை.    வேடு இடுக்கை > வேடிக்கை என்று திரிதல் கூடும்,  அதாவது வேடு இடுக்கிக்கொள்ளுதல்.  இடுக்கு +  ஐ > இடுக்கை.

கோலி வருதல் என்பதோ இப்போது அருகியே வழங்குகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.