அக்கினி என்ற சொல்லை மொழிநூலறிஞர்கள் கவனித்து விளக்கம் வரைந்துள்ளனர். நாம் இங்கே நம் ஆய்வின்படி வெளிபோந்த பொருளைக் கூறுவோம். அக்கினி என்பது தமிழ் நிலைக்களத்தினின்று எழுந்த சொல் என்பது அவர்கள் விண்டதாகும். சிலர் அது சமத்கிருதம் என்றாலும் அது மந்திரமொழி புழங்கியவர்கள் முதலில் அமைத்து வழங்கியது என்ற கருத்தைச் சொல்வதாக உள்ளது. தீயை ஒளிக்குப் பயன்படுத்தினாலும் அதை பொருளழித்தலுக்கும் பண்டை மாந்தன் பயன்படுத்தியுள்ளான். பற்றவைத்த எதுவும் எரிந்து எரிய எரியக் குறைந்து பின் இல்லாததாகிவிடும். சாம்பல் முதலியன சிறிது கிட்டும். இதன் குறைத்தல் தன்மை கருதியே " அக்கினி" என்றனர். அஃகுதல் - குறைத்தல், அளவு குறுகுதல்.
பெயர்கள் என்ன என்ன காரணங்களுக்காக உண்டாயின என்பதை ஆராய்ந்தாலே புலப்படும். எடுத்துக்காட்டாக, கரடி என்ற விலங்கின் பெயர், அவ்விலங்கு கருப்பு நிறத்ததாய் இருத்தலினால் வந்த பெயர். ஆனால் சிங்கம் என்ற இன்னொரு விலங்கின பெயர், அது காலம் செல்லச்செல்ல அருகி வந்தமையினால் வந்த பெயர். தமிழ்நாட்டிலும் சுற்றுவட்டங்களிலும் உள்ள காடுகளில் காணக்கிட்டாத ஒரு விலங்கு. சிங்கிவரும் விலங்கு. சிங்குதல் என்றால் குறைந்துவருதல். சிங்கு+ அம் = சிங்கம். இப்பெயர் பின்னர் மற்ற மொழிகளுக்கும் பரவிற்று. ஏனைப் பாகத மொழிகளிலும் பெயர்கள் இருந்திருக்கலாம். காலக்கடப்பினால் அவை மறக்கப்பட்டு ஒழிந்திருக்கலாம். தமிழ்ப்பெயர்கள் நீண்டகாலமாக எழுத்திலும் நினைப்பிலும் இருந்துவந்தமையால், நாம் சிங்கம் என்று பெயர் சொல்ல, தாம் வழங்கிய பழைய விலங்குப் பெயரை நினைவு கூர்ந்து வழங்க முடியாமல், அவர்கள் தமிழ்ப் பெயர்களை வழங்கி அவை எங்கும் பயன்பாடு கண்டுள்ளன. நம் சொற்கள் பரந்து வழங்கியமை, நம் மக்கள் பலவிடங்கட்கும் சென்று வந்தமையை - விரிந்த உலகத் தொடர்பினை - காட்டுகிறது. சில மொழிகளில் வேற்றிடங்களிலிருந்து வந்த பொருட்களுக்கு அவர்கள் சொந்தப் பெயர்கள் வைத்து வழங்குகிறார்கள். தொலைப்பேசி என்ற பொருளுக்குச் சீன மொழியில் அவர்கள் சொந்தப் பெயர் உள்ளது. "ரேடியோ கிராம்" என்பதற்குத் தமிழில் சொந்தப்பெயர் ஏற்பட்டு அது அன்றாட வழக்குக்கு அல்லது பயன்பாட்டுக்கு வருமுன் ரேடியோ கிராம் என்னும் கருவியே அன்றாடப் பயன்பாட்டிலிருந்து அகன்றுவிட்டது அறிக. "மின்பதிவிசை" என்று அதற்கிடப்பட்ட தமிழ்ப்பெயரைத் தேடிக்கண்டுபிடித்தாலும் இப்போது அது வரலாற்று ஆய்வு செய்வது போலவே இருக்கும்.
மேலும் பற்ற வைத்த பொருள் சுருங்கி க் கரிந்து எரிந்து சாம்பலாகிறது. இச்சுருக்கமும் குறைதலே. நீரும் வற்றிவிடுகிறது.
இப்போது சொல்லைக் கவனிப்போம்.
அஃகுதல் - குறைதல்.
அஃகு+ இன் + இ - அஃகினி > அக்கினி.
தேவநேயனார் இதை எவ்வாறு விளக்கினார் என்பதை அவர்தம் நூலில் கண்டுகொள்க.
தொடக்கத்தில், மூட்டிய தீ அல்லது நெருப்பு அணைந்துவிடாமல் இருக்கவேண்டுமென்பதை மனிதன் உணர்ந்தான். அது அணைந்துவிட்டால், அதை மீண்டும் உண்டாக்குவது சற்றுக் கடினம். பல வழிகளில் முயன்று அதை மீண்டும் மூட்டவேண்டியுள்ளது
ஆதலால் பழங்காலத்தோர், மூட்டிய தீயை அணைந்துவிடாமல் காக்க, சிலரை நேமிக்கவேண்டியிருந்தது. இவர்கள் தீயை "உயிருடன்" வைத்துக்கொண்டனர். இவர்கள் தீயை ஒத்தெரித்தனர். ஓர் இரவு முழுதும் வேண்டுமெனின், அந்நேரத்தை ஒத்தெரித்தனர்.
இவர்கள் அஃகினியொத்தெரிகள். இது "அக்னிஹோத்திரி" என்று திரிந்தது.
நெருப்பை அணைந்துவிடாமல் வைத்திருத்தல் ஒரு போற்றத்தக்க தொழிலானது.
அக்கினி என்ற பெயரே தீ பிற பொருளுக்குச் செய்யவியன்ற நன்மை - தீமைகளை அடிப்படையாக வைத்து எழுந்த பெயர். தீ தீபமாகித் தீமைகளை குறைக்கும் அல்லது ஒழிக்கும் என்பதனாலும், மேற்குறித்தபடி பிறபொருட்களுக்கு மீள்வு இல்லாத மாற்றங்களை விளைக்கவல்லது என்பதனாலும் எழுந்த பெயர். அஃகுதல் - பொருண்மை: குறைதல் என்பது அதற்குப் பொருத்தம் மிகவுடைய வினைச்சொல்லாகும் என்பது காண்க. இதனைச் சுருக்கமாகக் கூறினோம். விரித்துக்கொள்க. அக்கினி என்றபெயர் ஓர் எறிபடைக்கு இடப்பட்டிருப்பதும் இச்சிந்தனையினாலேதான்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்