வெள்ளி, 30 ஏப்ரல், 2021

பிரபலம் - சொல் பிரபலமானது

[IF you are a visitor and by an error get into an  edit or compose page,   please leave the page without intentionally or accidentally (on touch screen devices)  making any changes to the text.  Thank you] 


பிரபலம் என்ற சொல்லைப்பற்றிச் சிறிது சிந்தனை செய்வோம். 

ஒருவன் தான் வாழும் வீட்டுக்குள் என்னதான் அதிகாரம் அல்லது மேலாண்மை செலுத்தினாலும் அவன் பிரபலம் அடைந்துவிட்டான் என்று யாரும் சொல்வதில்லை. ஒரு வீட்டுக்குள் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால், அந்த ஐந்துபேருக்கும் அவன் தெரியாதவனாக இருக்கமுடியாது.   வதியும் அனைவருக்கும் அவன்  தெரிந்தவனானாலும் அவனை யாரும் பிரபலம் என்று கூறும் தகுதியை அவன் அடைந்துவிடமாட்டான்.

பிரபலமாவது வீட்டுக்கு வெளியில்தான்.  வீட்டுக்கு வெளியில்  அவனைப் பலரும் அறிந்து வைத்திருந்தனர் என்றால் அவன் சற்று பிரபலமானவன் எனலாம்.

புறத்தே பலரும் அறிந்தவன் அவன்.

இதே வாக்கியத்தைச் செயப்பாட்டு வினைகொண்டு முடிப்பதானால் -  புறத்தே பலராலும் அறியப்பட்டவன் அவன்.

எப்படிச் சொன்னாலும் அதுவே ஆகும்.

புற  -   புறத்தே -   வெளியில்;

பல  -   பலராலும்;  அல்லது பலரும்;

அம்  - இது அமைவு அல்லது அமைப்பு என்பதைக் காட்டும் ஒரு சொல்லீறு அல்லது விகுதி.

விகுதி என்பது சொல்லின் மிகுதி.   விகுதி <>மிகுதி.  வகர மகரப் போலி. இதற்கு மற்றோர் உதாரணம்:  விஞ்சு  -மிஞ்சு. இதுபற்றிய மேலும் சில தெரிப்புகட்கு  முன்வந்த இடுகைகளைப்   பார்க்கலாம்.

[ தெரிப்பு -  explanation ]

அமையும் சொல்லை   நீட்டி  அமைப்பது  விகுதி. ( suffix)

பிரபலம் என்பது  "புறப்பலம்"தான்   என்பது பொருளமைப்பால் தெளிவாகுகிறது. புற என்பதைப் பிர என மாற்றி,  வல்லெழுத்து  "(ப்)"  மிக்கு நிற்றலைக் களைந்து,  இச்சொல்  அமைந்துள்ளது.

இதேபோலும்  "பிறர் அறிமுகம்" என்பதைப்   பொருளாகக் கொண்ட வேறு சில சொற்களும் உள்ளன.   புகழ் என்பதொன்றாம். பலராலும் பாராட்டப்  பெறுவதே  புகழ்.   இசை என்ற சொல்லுக்குப்  பாட்டு,  வாத்தியம், இவற்றின் கலப்பு என்ற பொருளினும் மேம்பட்ட உள்ளுறைவு  உள்ளது.  அது யாதெனின்,  கவிகளால்  பாட்டில்  புகழப்படும் தன்மை.  அதுவும் வெறுமனே யன்றி,   ஈதலால் (  பொருள் வழங்கும்  தன்மையால்,  தரும காரியங்களால் )  வருவது ஆகும். இதை நாயனார்:

"ஈதல் இசைபட வாழ்தல்,  அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு"

என்று வரையறவு செய்தார்.  இசை என்பது தகுந்த   பிறர்க்கு வழங்கி அதனால் கவிகளால் பாடப்பெற்றுப்  பலராலும் போற்றப்பட்ட நிலை. 

பிறவிப்  பயன்  என்று  வேறொன்றும் தேடவேண்டாம்.   அறச்செயல்களில் ஈடுபட்டுப்   பாட்டுப் பெற்றுப்   பிறரால்  அறியப்படுதல்  என்பதே  ஒருவற்கு  அடையத் தக்கது  ஆகும்.

பிரபலம் என்ற சொற்கோவையில் இவ்வளவு நுட்பம் இல்லை என்றாலும் அது  ஏதோ ஒரு காரணத்துக்காக "வீட்டுக்கு வெளியில் பலராலும் அறியப்படுதல்" என்ற இயல்பான பொருளைத் தருகிறது.  இக்காரணம் பெரிதும் நன்மை சார்ந்ததே என்பது சொல்லாமலே தெள்கும்  என்பது திண்ணிதாம்.

தெள்கும் -  தெளிவாகும்.

புற என்பது பிற என்றானதில் வியப்பில்லை.  புறக்கட்டு என்பதை பிறக்கட்டு என்பது பேச்சுமொழி.  " வீட்டுக்குப் பிறக்கட்டு"  என்பர். பிற என்பது பிர என்றானது என்று கோடலும் கூடுமாயினும் அஃது  " வேறு பல"  என்று பொருள்தருவதால் யாம் அதை உகக்கவில்லை. அப்பொருள்தான் பொருத்தம் என்று நீங்கள் கருதினால்  அவ்வாறே  கொள்வதில் பெரிய முரண்பாடு ஒன்றுமில்லை என்று முடிப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்புபின்.

இந்த இடுகையில் இட்டபின் சில மாற்றங்கள்

காணப்பட்டன. அவை இப்போது திருத்தம் பெற்றுள்ளன.

மீண்டும்  இது  கண்காணிக்கப்படும்.

Editor's note:  Original restored.





வியாழன், 29 ஏப்ரல், 2021

ட - ர போலி: கடைதலைப்பாடம்

 பாடம் பண்ணிக்கொள்வதில் சில வகைகள் உள்ளன. ஆனால் இப்புதிய ஊழியில் எதையும் மனப்பாடம் அல்லது மனனம் செய்துகொள்வதை மாணவர்கள் விரும்புவதில்லை. ஒன்றைப் படித்து நல்லபடியாக அதை  உணர்ந்துகொண்டால் மனப்பாடம் செய்யவேண்டியதில்லை என்று ஆசிரியர்கள் சிலர் வழிகாட்டுவதுண்டு. யார் எதைச் சொன்னபோதிலும் எமக்கு மனப்பாடம் செய்து ஒன்றைக் கற்றறிவதில் எந்த மறுப்பும் இருப்பதில்லை.

எமக்குத் தெரிந்த  சீன மாணவர் ஒருவர்,  சட்டத் தேர்வுக்குத் தம்மைத் தயார் செய்துகொண்டிருந்தார். கடைசி ஆண்டுத் தேர்வில் உள்ள நான்கு பாடத்துறைகளுக்கும் ஒரு துறைக்கு  20  கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து  இவற்றுள் எந்தக் கேள்விகள் வந்தாலும் பதில் எழுதுவதற்கு அணியமானார்.  எனவே 4 (20)  -  80  கேள்விக்கான பதில்கள் மனப்பாடம்..  மூன்றாண்டுகள் தேர்வுகளுக்கும்  3(80) :  240 கேள்விகளுக்கான பதில்கள் மனனம் ஆனது.  ஏனென்றால்  கல்விக்கு எதிரி மறதிதான். எதையும் படித்து அப்புறம் மறந்துவிட்டால்  அந்த மறப்பானது உங்களை வாசிக்காதவருக்குச் சமமாக்கிவிடும்.  இவ்வாறு கற்பதில் மிகுந்த உழைப்பு தேவைப்படும்.

சில அடிப்படைகளை மனனம் செய்யவே வேண்டும். எடுத்ததற்கெல்லாம் புத்தகதைப் பார்க்க இயலாமை ஏற்படலாம். இவ்வாறு கூறவே, சொல்லாய்வுகளில் எந்த எழுத்து எதுவாகத் திரியும் என்பதை மனப்பாடமாக்கிக் கொள்வது இன்றியமையாதது.  அப்போதுதான் ஒரு புலமையின் அடித்தளம் ஏற்படும்.  தனித்தமிழாய்ந்த மறைமலையடிகளார்க்கு தொல்காப்பியம் முழுதும் மனப்பாடமென்றும் ஒவ்வொரு நூற்பாவிலும் அடிக்கு எத்தனை எழுத்துக்கள் என்பதும் அவர் கூறுவார் என்றும் பிற  புலவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம்.  திரு.வி.க அவர்கள் பெரியபுராணம் மனப்பாடம் என்பது மட்டுமன்று,   அதற்கே  அவர் உரையாசிரியரும்  ஆவார்.  சுவாமி கிருபானந்த  வாரியாருக்கு  எண்ணிறந்த பாடல்கள் மனப்பாடம். மேடையில் பாடிப்  பொருள் கூறும் புலமை உடையவர். ஒரு மேடையில் பாரதிதாசன் தலைமையில்  தமிழ் என்பதற்கு  நூறு பொருள் கூறி  அசத்தினார்.  இசையறிஞர்களும் பல அடிப்படைகளை மனனம் செய்யவேண்டி யுள்ளது.

இன்று கடைதலைப்பாடம் என்ற சொற்றொடரை அறிந்துகொள்வோம். ஒன்றைக் கடைசிவரியில் தொடங்கி  முதல்வரிவரைப்  பிறழாமல் சொல்ல இயல்வதே   "கடைதலைப்பாடமாகும்".   இதைத் தலைகீழ்ப்பாடமென்றும் சொல்வார்கள். இப்படிச் சிலவற்றையாவது மனனம் செய்துகொள்வது நல்லது.

கடைதலைப்பாடம்  என்பது   "கரைதலைப்பாடம்"  என்றும் திரியும்.   கடை என்றால் கடைசி.   நிலத்தின்  கடைப்பாகத்தில்  கடலை அல்லது ஏரியை ஒட்டிய பகுதியே கரை என்று சொல்கிறோம். கடை > கரை  ஆனது.

இனி,  கரை என்பதன் ஐகாரமும்   தலை என்பதன்  ஐகாரமும் வீழ்ந்து,   கரைதலை என்பது கரதல என்றும் வரும்.  இந்நிலையில் தல என்பது அம் விகுதி பெற்று  தலம் என்றுமாகும்.  தலம் என்பதற்கு மூலம் தலை என்ற சொல்லே ஆகும்.  ஐகாரம் வீழ்வது  ஐகாரக் குறுக்கம் என்று தொல்காப்பியம் சொல்லும்.  பல இலக்கண  நூல்களும் இது கூறும்.    " கரதல" என்பதில் இரு ஐகாரங்கள் வீழ்ந்தன.( நிற்க,   உயிர்முன்  இரு என்பது ஈர் என்று திரிதலை யாம் எளிதாக்கும் பொருட்டுப்  பின்பற்றவில்லை).

கடை என்பதன் டைகாரம் ரைகாரமானதன்றோ.  இது டகர ரகரப் பரிமாற்று. மடி என்பது மரி என்று திரிந்ததும் காண்க.

அடு  (  அடுத்தல் )  என்பது  அரு என்றுமாம்.  என்றாலும்  அரு என்பது வினையாம் பொழுது   ஒரு குகரச் சாரியை பெற்று  அருகு  >  அருகுதல் என்று வரும்.  உண்மையில்  அரு > அருமை என்றால்  அது சிறப்புநிலையை அடுத்துவிட்டது என்றே பொருளாகும்.

நம் உருவம்,பல உள்ளுறுப்புகளைக் கொண்டுள்ளது,  அல்லது உடுத்தி உள்ளது.  எனவே,   உடு>  உரு என்பதன் தொடர்பினைக் கண்டுகொள்க.

மடுத்தல் என்பதற்கு  இணைதல் என்ற   பொருளும் உளது.   மருவுதல் என்பதற்கும் இப்பொருள்  இருக்கிறது.  எனவே,   மடு >  மரு என்பதன் தொடர்பு கண்டுகொள்க.  இதில் வேறுபட்டது  என்னவென்றால்   மருவு  என்பதில் வரும் வுகர வினையாக்க விகுதி மடுத்தல் என்பதில்  வரவில்லை.   இது ஒரு விகுதி பற்றிய வேறுபாடுதான்.   அடிச்சொல்லில் ஒன்றும்   குழப்பமில்லை.

[வேறுபாட்டுக்கு வித்தியாசம் என்று சொல்வதுமுண்டு.   உண்மையில் வித்தியாசம் என்பது விரிந்து சென்று  பேதமாவது என்ற பொருளதே.  விரி> விரித்தியாயம்>  வித்தியாயம்>  வித்தியாசம் என்றானதே   ஆகும்.    யகர சகரப்   போலியைக் கண்டுகொள்க.  விரித்தி  என்பது வித்தி ஆனது  இடைக்குறை.]

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


புதன், 28 ஏப்ரல், 2021

கடை என்ற சொல்

 இன்று கடை என்னும் சொல்லைஅறிவோம்.   கடை  என்பது சாமான்கள் விற்கும் கடையையும்  குறிக்கும்.  இறுதி என்றபொருளும் அதற்கு உள்ளது."கடைக் குட்டிப்பையன் "  என்ற வழக்கு, இறுதியாய்ப்  பிறந்தவனைக் குறிக்கிறது.

கடை என்பது தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களில் காணக்கிடைக்கும். "  மூன்றலங்கடையே"  -மூன்றும் அல்லாத  விடத்து  என்று வரும்.  கடை என்பதற்கு இங்கு இடம் என்பதே  பொருள்.

இடம் என்பது இடு+ அம் என்ற வினைப்பகுதியும் அம் விகுதியும் பெற்றமைந்தது.  ஒன்றை ஓரிடத்து இடுகிறோமென்றால் அதுதான் அதற்கு இடம்.

கடை என்பது கடந்து செல்லுதல் என்ற பொருளுடைய கட (கடத்தல்) என்பதில் அமைந்தது.  ஓரிடத்தைக் கடக்க அங்கு இடம் இருக்கவேண்டும் ஆதலால்  அது  இடப்பொருளை அடைகின்றது.  இருத்தலானாலும் இடுவதானாலும் கடப்பதானாலும் எல்லாம் இடமே.  அதற்கடுத்து, ஓரிடத்தைக் கடந்தபின் கடந்த இடம்போல் பிறிதில்லையானால் அதுவே கடைசி ஆகிறது.   ஆகவே  கடை ஆனது கடைசியும் ஆகும்.

கட  - கடத்தல்.

கட + ஐ= கடை.   இங்கு ஐ என்பது விகுதி.

கடை +  சி =கடைசி.   இங்கு சி என்பது விகுதிமேல்விகுதி.இடையில் இருக்கும் விகுதியை இடைநிலை எனினும் ஒக்கும்.

கடையேழுவள்ளல்கள்-  இதில் கடைசியாக எண்ணப்பட்ட ஏழு வள்ளன்மார் என்பது பொருள்.

கடை  என்பது  தெலுங்கில் மிகுதியாய் வழங்கும்.

தலை என்பதும் இடப்பொருளதே.   இது தலம் என்று அம் விகுதி பெற்றும் வரும்.ஸ்தலம் என்று மெருகும் பெறும்.  தலை என ஐ விகுதியும் இதற்குண்டு.  அடிச்சொல் தல்  என்பது.

அறிக  மகிழ்க

கவசம் அணிக.

மனித இடைவெளியும் காத்தல் வேண்டும்.

மெய்ப்பு பின்னர்