முன்வந்த இடுகை இங்கு உள்ளது.
https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_24.html
மேற்கண்ட இடுகையில் குந்தாணி என்ற சொல்லை ஆய்வு செய்யும்படி நேயர்களைக் கேட்டிருந்தோம். இதுவரை யாரும் எதையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இப்போது நாம் அதைக் கவனித்து அறிவோம்.
குந்தாணி என்பதில் குந்து என்பது முன் நிற்கும் சொல். இது கு + து என்ற இரண்டு உள்ளீடுகளை உடையது.
கு என்பது சேர்விடம் குறிக்கும் சிறுசொல். அமெரிக்காவிற்கு என்பதில் அது உருபாக வருகிறது. ஆனால் குந்து என்பதில் அஃது இடம் குறிக்கிறது.
கு எனில் இடத்தில் என்று பொருள்.
து என்பது வினையாக்க விகுதியாய் வந்துள்ளது.
முழுப்பொருள் இடத்தில் இரு என்பதே.
ஓரிடத்தில் வன்மையுடன் சென்று சேர்தல் சற்றே மென்மையுடன் சென்று சேர்தல் என்று சேர்தல் இருவகைப்படும். வன்மையுடன் சேர்தலைக் குறிக்க, வல்லெழுத்து சேர்க்கப்படும். கு + து > குத்து என்று. து என்பது வல்லெழுத்தே என்றாலும், குது என்றால் அது மெதுவடைந்துவிடுகிறது. குத்து என்று தகர ஒற்று நுழைந்தால்தான் வன்மை மேல்வருகிறது. கையால் குத்துதல், நெல்குத்துதல் குச்சி குத்துதல் முதலியவற்றில் வன்மை உள்ளது.
சற்று மென்மையுடன் சென்று சேர்தலே குந்துதல். இந்த மென்செயல் குறிக்க, சொல்லும் நகர ஒற்று ( ந் ) பெற்று ஒருவாறு வன்மை குன்றுகிறது. குத்துதல் என்ற செயல்வன்மை குந்துதலில் இல்லை. ஆனால் இரண்டும் சென்றடைவினையே குறிக்க எழுந்த சொற்கள்.
ந் என்பது மெல்லினம். மென்மை குறிக்க, மிக்கப் பொருத்தமாகிறது.
நெல்லைக் குத்துவது உரலுக்குள் ஓர் உலக்கை அல்லது தடி. அது நெல்மேல் சற்றே மென்மைப்படவே குத்தப்படுவதால், அது அவ்வேலையை நல்லபடி அறிந்தோரால் கையாளப்படுகிறது என்று சொல்லவேண்டும். இந்தக் கையாளுதலைக் குறிக்க, ஆள் என்ற சொல் அடுத்து வைக்கப்படுகின்றது.
அதன்பின் இடைநிலையும் விகுதியும். இடைநிலையான ந் என்ற ஒற்றும் முடிவாக இ என்ற இ'றுதிநிலையும் வைக்கப்பட்டுள்ளன. எல்லாம் இணைக்க,
குந்து + ஆள் + ந் + இ = குந்தாணி ஆகின்றது.
ஓட்டுநர் என்ற சொல்லில் ந் + அர் வந்ததுபோலவே, இங்கு ந்+ இ வருகிறது.
அறிக. மகிழ்க.