திங்கள், 30 செப்டம்பர், 2019

உந்தியும் சூரியகாந்தியும்.

உந்தி என்ற பதம் கொப்பூழ் என்று பொருள்படும்.  சூரியகாந்தி என்பது ஒரு மலர் என்பது நீங்கள் அறிந்ததே. இரண்டிற்கும் ஏதும் பொருள் தொடர்பு
இருப்பதாக யாரும் கூறார்.

சூரிய காந்தி என்ற சொல்லை விளக்கிய இடுகையில் காந்தி என சொல் காண்+தி என்று அமைவுற்றது என்று காட்டினோம். ஆனால் இதற்கு எடுத்துகாட்டு ஏதும் தரவில்லை.

இப்போது ஒன்று காட்டுவோம்.

குழந்தை கருவில் உள்ளபோது அது தன் உணவைத் தாயிடமிருந்தே கொப்பூழ் மூலம் பெறுகிறது. கொப்புழ் தொப்பூழ் எனவும்படும்.

குழந்தை உண்பது கொப்பூழால் ஆதலின் அது  உண்+தி =  உந்தி எனபட்டது. இங்கு கவனிக்கவேண்டியது  ண்+தி  = ந்தி என்பதே.

உணவு குறிக்க வருவது : உண்+தி= உண்டி. அதே சொல்லும்  விகுதியும் இருவேறு விளைவுகளை உண்டாக்குவது இயல்பேயாகும்.

அறிவீர் மகிழ்வீர்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

பரிகாசம்

பரிகாசம் என்பதைப் பேச்சில் பரியாசம் என்பதுண்டு.

இச்சொல்லில் இரு துண்டுகள் உள. இவற்றை வினையாகக் காட்டினால் வருமாறு :

பரிதல்.
காய்தல்.

இவற்றை  உவத்தல் (பரிதல் )  , வெறுத்தல் (காய்தல்) என்று வேறு பதங்களால் தெளிவிக்கலாம்.

காய்தல் என்ற சொல்  அம் விகுதி பெற்றுக்  காயம் என்றாகி  ய - ச திரிபு விதிப்படி காசம் என்றாகும்.

பரிகாசமாவது பரிந்து காய்தல். அல்லது (இவ்விரண்டனுள்) ஒன்றைச் செய்வதுபோல்இன்னொன்றைச் செய்தல்.

பரிதலும் காய்தலும் தமிழ்.

இதுதான் சுருக்க விளக்கம்..

வியாழன், 26 செப்டம்பர், 2019

நாகர் என்போர் யார்

நாகர் என்று இன்று குறிப்பிடப் படுவோர் யாரென்று நாம் அறிந்துள்ளோமா
என்று திட்டவட்டமாய்க் கூறுவதற்கில்லை.

இற்றைக்கு நாகாலந்து  என்னும் மாநிலத்தில் உள்ளோரே நாகர்கள் என்று கூறுதல் ஒரு நல்ல பதில்தான்.

ஆனால் மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் இவர்கள் கடலில் இருந்த ஒரு மலையில் வாழ்ந்தவர்களாகக் குறிக்கிறார்.

இம்மலை நாகாலாந்திலுள்ள மலையாகத் தெரியவில்லை.  ஆகவே அந்த நாகரும் இந்த நாகாலாந்து நாகரும் ஓரே வகை என்று கூறுவதற்கில்லை. சிலர்  நக்கசாரணர் நாகருள் ஓர் உட்பிரிவினர் என்பர். இதிலும்  தெளிவில்லை.

நக்கசாரணர் நாகர் எனல் உம்மைத் தொகையாகவும்  இருக்கலாம்.

நக்கசாரணர் என்பதற்கு எம் விளக்கம் இது.  வாசித்துக்கொள்ளுங்கள்.

இவர்கள் உடலில் நல்ல நிறமுடையோராய் இருந்தனர்.   ஆதலால்   " நக்க சாரணர் "  எனப்பட்டனர்.  நகுதல் :  ஒளி வீசுதல்.  Gregarious people with good skin colour என்பதே நக்க சாரணர் என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பு.  ஒளிவீசும் நட்சத்திரங்கள் உண்மையில் நக்கத்திரங்களே.  இருளில் நகுவன அவை.  புகு >  புக்க; நகு > நக்க; தகு > தக்க; பகு > பக்க.

22.5.2019.  இடுகை.


இனி   நாகர் என்ற சொல்லைப் பார்ப்போம்:


நகுதல்:   ஓளிவீசுதல்.

நகு+ அர் =  நாகர்.   ஒளி வீசும் நிறத்தினர்.

இது முதனிலை நீண்டு பெயரானது.

நகு  >  நக்க.   பெயரெச்சம்.   ( ஒளிவீசுகின்ற )

நக்கசாரணர்.


இவற்றை அடுத்து வேறு கோணத்தில் பார்ப்போம்.  மீ ண்டும் சந்திப்போம்.